articles

img

பீமா கோரேகான் வழக்கு : யார் குற்றவாளி?

2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையைத் தூண்டியதாக பொய் வழக்கு  புனையப்பட்ட எல்கர் பரிஷத் அமைப்பின் மீதான  வழக்கில் கைது செய்யப்பட்ட வில்சன் மற்றும் பதினைந்து மனித உரிமை ஆர்வலர்களைச் சிக்க வைப்பதற்காக புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திக் கொண்ட பல கடிதங்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான ஆர்செனல் கன்சல்டிங் வெளியிட்டுள்ள அறிக்கை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மின்னணு ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அந்த நிறுவனத்தை வில்சன் பாதுகாப்புக் குழு கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று அணுகியிருந்தது. உள்ளூர் புனே காவல்துறையினரால் ஆரம்ப கட்டத்தில்விசாரிக்கப்பட்டு வந்த அந்த வழக்கு மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வீழ்ந்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் என்று முத்தரப்பு கூட்டணிஅரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 2020 ஜனவரியில் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.   வில்சனின் கணினி உட்பட கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய ஆட்சியாளர்கள் கூறி வருகின்ற ‘ஆதாரங்களை’ மட்டுமே புலனாய்வுமுகமை சார்ந்து இருப்பதால் ஆர்செனல் கன்சல்டிங் இப்போது வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.   

‘வில்சனின் மடிக்கணினியுடன் ஒத்திசைவை ஏற்படுத்திக் கொள்வதற்கு அதற்குப் பொறுப்பானவருக்கு நேரம் உட்பட விரிவான சாதகங்கள் இருந்தன. கண்காணிப்பு, குற்றம் சுமத்தும் வகையிலான ஆவணத்தை நுழைப்பது ஆகியவையே அவர்களுடைய முக்கிய  குறிக்கோள்களாக இருந்தன என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது’ என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸ்பென்சர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக தங்களிடம் வழங்கப்பட்ட பெருமளவிலான மின்னணு தரவுகள் குறித்து தங்களுடைய குழு அயராது செயல்பட்டதாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் தடயவியல் நடைமுறைக்கான மிக உயர்ந்த வரம்பை இந்த அணி அமைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

அந்த சைபர் தாக்குதலை நடத்தியவர் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட ‘மால்வேர் (தீயமென்பொருள்) உள்கட்டமைப்பு’ இருபத்திரண்டு மாதங்களாக வில்சனின் கணினியைத் தாக்கி ஒத்திசைவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வில்சனுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள், மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் ஆகியோரின் வழக்குகளிலும் தொடர்பு கொண்டிருப்பதை ஆர்செனல் எடுத்துக் காட்டியுள்ளது. ‘இதுவரையிலும் ஆர்செனல் சந்தித்து வந்திருக்கின்ற - ‘ஆதாரங்களை மாற்றுகின்ற’ - மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாக பல்வேறு அளவீடுகளின் அடிப்படையிலும், குற்றம் சுமத்தப்படுவதற்கு காரணமாக இருந்த முதலாவது மற்றும் கடைசி ஆவணங்களை நுழைத்ததற்கு இடையே மிக அதிக கால அளவை உள்ளடக்கியதாகவும் இந்த வழக்குஇருக்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- எல்கர்பரிஷத் அமைப்பின் மீதான வழக்கு, வில்சனும், கைது செய்யப்பட்ட மற்றொருவரான நாக்பூரைச் சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞரான சுரேந்திர காட்லிங்கும் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டது. வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டவர்களை இந்த வழக்கில் சிக்க வைத்த பதின்மூன்று கடிதங்கள் அவர்களுடைய கணினிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  2018 ஏப்ரல் 17 அன்று வில்சனின் வீடு சோதனை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அவரதுகணினியில் இடையீடு செய்து மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஆர்செனலின் அறிக்கை கூறுகிறது. வில்சனின் கணினியில் 2018 ஏப்ரல் 16 அன்று மாலை 4:50 மணியளவில் கடைசி மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், அடுத்தநாள் காலை ஆறு மணியளவில் அப்போதைய விசாரணைஅதிகாரி சிவாஜி பவார் உட்பட உள்ளூர் புனே காவல்துறை குழுவினர் புதுதில்லி முனிர்காவில் உள்ள வில்சனின் வீட்டிற்கு சோதனை நடத்துவதற்காகச் சென்றதாகவும் ஆர்செனல் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இதேபோன்றதொரு மின்னஞ்சல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞராக இருந்து வரும்நிஹால்சிங் ரத்தோட் என்பவருக்கும் அனுப்பப்பட்டது. குறிப்பாக வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், உரிமை பாதுகாவலர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு சைபர் தாக்குதல்களுக்கு ரத்தோட் இலக்காகியுள்ளார்.   பெகாசஸ் என்ற ஸ்பைவேரை (வேவு பார்க்கும்மென்பொருள்) பயன்படுத்தி வாட்ஸ்ஆப்பில் உள்ள வீடியோ அழைப்பைப் பயன்படுத்தி தொலைபேசியில் மால்வேரை நிறுவுகின்ற வகையில் ரத்தோட் இலக்கு வைக்கப்பட்டார். காவல்துறையின் ஒவ்வொரு குற்றப்பத்திரிகையும் புத்தம்புதிய குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்ததால், எல்கர் பரிஷத் வழக்கு எதிர்பாராத பல திருப்பங்களைக் கண்டது. முதலில் இந்த வழக்கு நகர்ப்புற நக்சல்கள் குழு பிரதமர் நரேந்திர மோடி மீது ராஜீவ் காந்தி பாணியிலான படுகொலைக்குத் திட்டமிட்டது என்ற குற்றச்சாட்டுகளுடனே தொடங்கியது. வில்சன், கேட்லிங், கல்வியாளர் ஷோமா சென், ஆர்வலர்கள் சுதிர் தவாலே, மகேஷ் ரவுத் ஆகிய ஐந்துபேர் 2018 ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்ட போது புனேகாவல்துறையால் இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

மோடியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் (ஏப்ரல் 17 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட) வில்சனின் மடிக்கணினியில் கிடைத்ததாக காவல்துறையினர் கூறினாலும், ஜூன் 6 வரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து தங்களுடைய வாதங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு பல முறை கேள்விகளை எழுப்பியுள்ளது.  வில்சனின் கணினியில் ஒத்திசைவு செய்யப்பட்ட வழியை விளக்குகின்ற ஆர்செனல் அறிக்கை, ராவ்அனுப்பிய மின்னஞ்சலுடன் ஓர் இணைப்பு ஆவணம்இருந்ததாகவும், அதைத் திறக்குமாறு வில்சன் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறது. 2016 ஜூன் 13 அன்று பிற்பகல் 3:07 மணிக்கு அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. வில்சன்அதை சில மணி நேரங்களுக்குள் திறந்து பார்த்தார். வில்சன் தன்னால் அந்த இணைப்பு ஆவணத்தை திறக்கமுடிந்தது என்று மாலை 6:16 மணிக்கு அந்த மின்னஞ்சலுக்கு பதிலளித்திருந்தார். அவரது கணினியுடன் அப்போதுதான் ஒத்திசைவு செய்யப்பட்டது என்று ஆர்செனல் அறிக்கை கூறுகிறது.    

குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்கள் வில்சனின் கணினிக்கு மறைக்கப்பட்ட கோப்புகள் மூலமாக அனுப்பப்பட்டன என்று ஆர்செனலின் கண்டுபிடிப்பு கூறுகிறது. வில்சனின் மடிக்கணினியில் மால்வேர் எவ்வாறு நிறுவப்பட்டது என்பதை விவரிக்கின்ற அந்த அறிக்கை, முதலில் “kbackup” என்ற கோப்புறை 2016 நவம்பர் 3 அன்று 00:10:07 என்ற நேரத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சிலநிமிடங்களிலேயே அது “Rbackup” ஆக மாற்றப்பட்டது என்றும் கூறுகிறது அந்த 00:40:24. “Rbackup” கோப்புறைஅதே நாளில் 16:18:49 மணிக்கு மறைக்கப்பட்ட நிலைக்குமாற்றியமைக்கப்பட்டது. கோப்புறையின் கடைசி மாற்றத்தின் நேர முத்திரை 2018 ஏப்ரல் 16 அன்று 16:50:41 மணிக்கு, அதாவது எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக வில்சனுடன் நான்கு பேர் கைது செய்யப்படுவதற்கு ஐம்பது நாட்களுக்கு முன்பாக என்றிருக்கிறது. 

சட்ட நடவடிக்கை 
வில்சன் பாதுகாப்பு குழுவிடம் இந்த அறிக்கை கிடைத்தவுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை முகமையின் பங்கு கேள்விக்குரியது என்று கூறப்பட்டுள்ள அந்த மனுவில், ‘பதிவுகளின் உண்மை அல்லது நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள அவர்கள் எந்த விருப்பமும் காட்டவில்லை என்பதையே அவர்களின் நடத்தை நிரூபிக்கிறது; மனுதாரரை (வில்சன்) கைது செய்வதிலும், அவர் மீதும், மற்றவர்கள் மீதும் வழக்குத் தொடுப்பதிலுமே அவர்கள் தீவிரமான ஆர்வத்தை காட்டியுள்ளனர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மீது குறிவைக்கப்படுவதற்கு முன்பாகவே, சமஸ்தா ஹிந்து அகாதியின் தலைவரும், இந்துத்துவா தலைவருமான மிலிந்த் எக்போட், சிவ் பிரதிஸ்தான் ஹிந்துஸ்தான் தலைவரான சம்பாஜி பைதே ஆகியோர் மீது ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித் சமூக உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கில் நகர்ப்புற நக்சல்கள் என்ற புதிய கோணத்தை புனே காவல்துறையினர் கொண்டு வந்ததும், பைதே, எக்போட் என்ற அந்த இரு பிராமணத் தலைவர்களுக்கு எதிரான விசாரணை நின்று போனது.ஆர்செனல் அறிக்கையின் கண்டுபிடிப்புகளால் இந்த வழக்கை இன்னொரு முறை ஆய்வு செய்து உண்மையான குற்றவாளிகள் மீது கவனம் செலுத்துமாறு மாநில அரசை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான பாதுகாப்புக் குழு வலியுறுத்துகிறது என்று வழக்கறிஞர் ரத்தோட் கூறுகிறார். ‘இந்துத்துவா குழுக்களாலேயே பீமாகோரேகான் வன்முறை திட்டமிடப்பட்டது. ஆரம்ப விசாரணையின் போதே பைதே, எக்போட் ஆகியோருக்கு இருந்த பங்கு தெளிவாகி இருந்தது. அப்போது பாஜக மாநில அரசின் கீழ் இருந்தபுனே காவல்துறை அந்த விசாரணையைத் தடம் புரளச்செய்து  மனித உரிமை ஆர்வலர்கள் மீது தன்னுடைய கவனத்தைச்செலுத்தியது. குறைந்தபட்சம் இப்போதாவது உண்மையான குற்றவாளிகள் விசாரிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று அவர் கூறுகிறார். 

கட்டுரையாளர் : சுகன்யா சாந்தா

நன்றி: தி வயர் இணைய இதழ்

லிங்க்  : https://thewire.in/tech/rona-wilson-elgar-parishad-letters-planted-us-firm

தமிழில் : பேரா.தா.சந்திரகுரு

;