articles

img

செய்திக்குப் பின்னால்...ஏசுராஜனும்... காலிபிளவரும்....

நாட்டில் நடக்கக் கூடிய விவசாயிகள் போராட்டம், சிறு குறு தொழில்கள் தங்கள் நலனை பாதுகாப்பதற்காக நடத்தக்கூடிய போராட்டம் ஆகியன பற்றிய செய்திகளும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறித்த செய்திகளும் ஊடகங்களில் அன்றாடம் வெளியாகின்றன.

சிறுதொழில் முனைவோர் தற்கொலை
சமீபத்தில் கோவை மாநகருக்குச் சென்றபோது பீளமேடு பகுதியில்  தற்கொலை செய்துகொண்ட சிறு தொழில் முனைவோர் ஏசுராஜின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.கடந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அவர் சொந்தமாக லேத் பட்டறை தொடங்கினார். சில மாதங்களிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தினால், முற்றாக தொழில் முடங்கியது. இதனால் ஏதுமறியாமல் திகைப்புக்கு ஆளான அவர், மீண்டும் தொழிலை தொடங்கியபோதுகச்சா பொருட்களின் விலை உயர்வு மற்றும் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைமை காரணமாக மனம் நொந்து போனார். லேத் பட்டறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி, மகன், மகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

சாலையில் கொட்டப்பட்ட காலிபிளவர் 
உத்தரப்பிரதேசத்தில், காலிபிளவர் விளைவித்த விவசாயி ஒருவர்,  மார்க்கெட்டிங் கமிட்டிக்கு தனது விளைபொருளை எடுத்துச் சென்றபோது, கிலோ வெறும் ரூ.1 என விலை கொடுப்பதாக கூறியுள்ளனர் வியாபாரிகள். சாகுபடிக்கு செய்த செலவு ரூ.8 ஆயிரம், வண்டிக்கு கொடுத்த வாடகை ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் செலவு செய்த அவர், தன் வசம் இருந்த ஆயிரம் கிலோ காலி பிளவரையும் சாலையில் கொட்டிவிட்டு வீடு திரும்பினார். கடன் வாங்கி விவசாயம் செய்த அவரின் குடும்பத்தார் இப்போது விவசாய கூலிகளாக ஆகியுள்ளனர்.

எத்தனையெத்தனை பாதிப்புகள்...  
2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது. சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து சில மாதங்களில் சமாளித்து எழுந்து நிற்க முயற்சித்த இந்த நிறுவனங்களின் மீது ஜி.எஸ்.டி வரித்திட்டம் பேரிடியாக இறங்கியது. கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பிரதமர் அறிவித்த ஊரடங்கு, முற்றாக இத்தொழில்களை முடக்கிப்போட்டது. இப்படிப்பட்ட சூழலில் ஜி.எஸ்.டி வரி முறையை மாற்ற வேண்டும் என்றும், சிறு/குறு/நடுத்தர தொழில்களை பாதுகாத்திட மத்திய அரசு நிதி ஒதுக்குவதுடன் அதற்கான திட்டத்தை உருவாக்கி முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.மத்திய அரசு 3 கோடி சிறு/குறு தொழில்களுக்கு கடன் உதவி செய்வதாக அறிவித்தது. நாட்டில் மொத்தம் உள்ள 7 கோடி நிறுவனங்களில் மீதமுள்ள 4 கோடி  நிறுவனங்கள் என்ன செய்வது?. இதைப் பற்றியெல்லாம் மோடி அரசுக்கு கவலை இல்லை. நாட்டில் உள்ள சிறு/குறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் 60 சதவீதம் தருகின்றன. ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிப்பைச் செய்கின்றன. நெருக்கடி மேல் நெருக்கடி என்ற நிலையில் பெரும்பான்மையான தொழில் முனைவோர், தங்கள் தொழில்களை தொடர முடியாதநிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இதுதான் ஏசுராஜின் தற்கொலை உட்பட துயரச் செய்திகளுக்கான காரணம்.சிறு/குறு/நடுத்தர தொழில்களை பாதுகாக்க விரும்பாத மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடி கோடியாக சலுகைகளைக் கொட்டித் தருகிறது.

ரூ.13 லட்சம் கோடி எப்படி வந்தது? 
பெரும்பான்மையான சிறு/குறு நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்கள் சொத்து ரூ.13 லட்சம் கோடிகள் அதிகரித்துள்ளது.மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற வராக்கடன் ரூ. 9 லட்சம் கோடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுசமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் கொழுத்த லாபம் ஈட்டிவரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்றுவிட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்த அரசு யாருக்கானது என்ற கேள்விதான் எழுகிறது.

பெரும் முதலாளிகளும் பிற முதலாளிகளும் 
மத்திய அரசு கடைப்பிடித்துவரும் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவே இருந்துவரும் சூழலில், சிறு/குறு/நடுத்தர தொழில்களோ எந்த உதவியும் கிடைக்காமல் நெருக்கடிகளில் தள்ளப்படுகின்றன. இதனால் பெரும் முதலாளி அல்லாத பிற முதலாளிகள்,  பெருமுதலாளிகளுக்கு ஆதரவான அரசின்கொள்கைக்கு எதிராக கொதிப்படைந்துள்ளனர். பாஜக தலைமையிலான அரசுக்கு எதிரான அணிச் சேர்க்கையில் இவர்கள் முக்கியமான பகுதியாக மாறியுள்ளனர். இத்தகையவர்களின் சிறு-குறு,நடுத்தரத் தொழில்களைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்து வருகிறது. 

வேளாண் சட்டங்களின் நோக்கம்-லாபக் குவிப்பு 
தில்லியில் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் போராட்டம், உலக வரலாற்றிலேயே காணாத ஒன்றாகும். 3 வேளாண் சட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்திருப்பது எதற்காக? உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்றுவிட்டது; கொரோனா பெருந்தொற்றும் அதன் பெயரால் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையும் பொருளாதாரத்தை மென்மேலும் பாதித்துள்ளது. இத்தனைக்குப் பிறகும், பெரும் முதலாளிகளுடைய லாபக் குவிப்பில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதோடு மட்டுமல்ல; மேலும் மேலும் கூடுதல் லாபம் ஈட்டிட வழிவகுக்கவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 3 வேளாண் சட்டங்களின் மூலம், இந்தியாவின் விவசாய உற்பத்தி, இருப்பு மற்றும் சந்தை என அனைத்தையும் பெரும்  கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசென்று, அவர்கள்  லாபம் குவித்திட  புதிய வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. அதே சமயம், இந்திய விவசாயிகளின் வாழ்நிலையை மேம்படுத்த எந்த புதிய வாய்ப்பும் இதனால் உருவாகாது.மாறாக அழியும். 

கூர்மையடையும் வர்க்க மோதல் 
3 வேளாண் சட்டங்களினால் பாதிக்கப்பட்டிருப்பது, நடுத்தர, ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பணக்கார விவசாயிகளும் ஆவர். ஒட்டுமொத்த நாட்டின் உணவுப் பாதுகாப்பையே கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம், இந்த சட்டங்கள் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானவை ஆகும். 70 நாட்களுக்கும் மேல் போராட்டங்கள் நீடிக்கிறபோதிலும், சட்டத்தை திரும்பப் பெற முடியாதென்று மத்திய அரசுதொடர்ந்து அடாவடி செய்வதன் பொருள், பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வதை, என்ன விலை கொடுத்தேனும் தொடர்ந்து முன்னெடுப்போம் என்பதே ஆகும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒருபக்கம் பெருமுதலாளி வர்க்கம்,மறு பக்கத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் வர்க்கம் என போராட்டம் கூர்மையடைந்துள்ளது.  இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தீர்மானம் இவ்வாறு வரையறை செய்கிறது: 

“நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டமானது, ஒருபுறம்-சர்வதேசநிதி மூலதனத்துடன் பிணைந்து கொண்ட இந்தியப் பெரு முதலாளிகள்; மறுபுறம் - பெருவாரியான பணக்கார விவசாயிகள் உள்பட ஒட்டுமொத்தவிவசாயிகள். - இந்த இரு தரப்புக்குஇடையிலான மோதலை உருவாக்கியுள்ளது. இந்த மோதலானது, இந்தியாவின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவவர்க்க அமைப்புக்கு எதிரான தொழிலாளி வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்களின் வர்க்கப்போராட்டங்களை மேலும்தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.” 

இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் விவசாயத்தையே சார்ந்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் சுமார் 80 சதவீதம் சிறு/குறு விவசாயிகளே ஆவர். நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகளையும் சேர்த்தால் 90 சதவீதம் விவசாயிகளுக்கு எதிராக பாஜக அரசின் சட்டங்கள் அமைந்துள்ளன. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. குறைந்தபட்ச ஆதார விலையும் இல்லாத பின்னணியில், விவசாயிகள் படும் துயரம் சொல்லிமாளாது. ஒவ்வொரு நாளும்  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 28 பேர் தற்கொலை செய்து மடிகிறார்கள். அரசின் கணக்கீடுகளே இதைத் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு விவசாய நெருக்கடி தொடர்ந்துவருகிறது. இந்த சூழலில் விவசாயத்தை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்க மோடி அரசு துணிந்துள்ளது.

விவசாயமும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய சிறு/குறுந்தொழில்களும் நெருக்கடியில் இருக்கின்றன. அரசு பொதுத்துறைகள் விற்பனை ஒட்டுமொத்த தேச பொருளாதாரத்தை பெருமுதலாளிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்த்து விடும். இன்சூரன்ஸ், வங்கி துறைகளைநெருக்கடி மேகம் சூழ்ந்துள்ளது. வேகமாக அமலாக்கப்பட்டு வரும் தாராளமய பொருளாதாரக் கொள்கையால் மக்கள் மத்தியில் மலைக்கும், மடுவுக்கும் என பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருகிறது.

அனைவரும் ஒரே அணியாக....
மேற்சொன்ன துயரங்களெல்லாம் பாஜக அரசுமுன்னெடுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளின்விளைவுகளாகும். தொழிலாளர், விவசாயி, சிறு/குறு முதலாளிகள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தார் என அனைத்து தரப்பு மக்களும் ஒரே அணியாக இந்த அரசின் கொள்கைகளால் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். போராட்டக் களத்திற்கு இழுத்துவரப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்கள் ஒரே அணியாக திரள்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு வழியில் மட்டும்தான், எதேச்சதிகாரமாகவும், தானடித்த மூப்பாகவும் செயல்பட்டுவரும் மோடி அரசாங்கத்திற்கு கடிவாளம் இடுவதும் முறியடிப்பதும்  சாத்தியம்.

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன்,அரசியல் தலைமைகுழு உறுப்பினர், சிபிஐ(எம்)  

;