articles

img

யோகி அரசின் மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை....

லவ் ஜிஹாத் எனும் சொல்லாடலை இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாக பயன்படுத்திவருகின்றனர். நம் மண்ணின் கலாச்சாரத்தை தாங்கள் மட்டுமே காப்பாற்றப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டு , அதையொட்டி, நடக்கும் மதம் ,சாதி, மொழி, கடந்த திருமணங்களை கண்டாலே இவர்களுக்கு பெருவெறுப்பு. தங்கள் மதத்தில் இருக்கும் இரு பாலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கொடுங்குற்றம் என்பதால் பல வன்முறைகளை இந்தியா முழுதும் செய்தனர்.செய்து வருகின்றனர். அதை இன்று சட்ட வடிவமாககொணர்ந்து மக்களை மேலும் துண்டாட நினைக்கின்றனர். இதைத் தொடர்ந்து மதமாற்று தடை சட்டம், மதமறுப்புதிருமணங்களை எதிர்த்து உத்தரப் பிரதேசம், கர்நாடக(பரிசோதனைக் களங்கள்) மாநிலங்களில் அரசியலமைப்புச்சட்டம் அளித்துள்ள பல உரிமைகளை மறுதலிக்கும் வேலைகளை இந்த அரசு செய்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் ஒரு உளுத்துப் போன சட்ட முன்வடிவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. 

விதிமீறலே அரசியலாக 
இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒரு அவசரச் சட்டம்அல்லது முன்வரைவை கொண்டு வருவதற்கு ஏராளமான விதிமுறைகளை சொல்லியுள்ளது. அதாவது ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபேரவை மற்றும் மேலவைநடப்பில் இல்லாத பட்சத்திலும், குறிப்பிட்ட அம்மாநிலம் அல்லது பிரதேசம் ஒரு பெரும் சிக்கலில், பேராபத்தில் இருந்தாலும், புறச்சூழல் கட்டாயமாக நெருக்கடி நேரத்தில் மக்களை காப்பதற்காக , தேவை கருதி, அம்மாநில ஆளுநர்ஒரு அவசரச் சட்டத்தை முன்மொழியலாம். இந்த மூன்றும் இல்லாத போதேஅவசரச்  சட்டங்கள் தேவைக்கேற்ப கொண்டு வர வாய்ப்புள்ளது. பொதுவாக சுதந்திர இந்தியாவில் இது போன்ற அவசரச் சட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன. மறைமுகமாகவோ, ரகசியமாகவோ, எந்தசட்டமும், எக்காரணமும் இன்றி கொண்டு வருவதை குற்றம்என குடியரசு சட்டம் சொல்கிறது. அதே போல மக்களின் பார்வைக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் கவனத்திற்கும் இது போன்ற அவசரச் சட்டங்கள் தகவலுக்காகவும், விவாதிப்பதற்காகவும் வைக்கப்பட வேண்டும். ஆனால் நடப்பது என்ன? அப்பட்டமான, முறையற்ற, விதிமீறல், இப்படி கொண்டு வரும் சட்டங்களில் ஏதாவது சிக்கல் இருக்குமாயின், அதில் உச்சநீதிமன்றம் கூட தலையிட வாய்ப்புள்ளது. இப்படி அனைத்து உரிமைகளும் இருக்கும்நம் நாட்டின் ஆட்சியாளர்களே அனைத்துச் சட்டங்களையும் மீறுபவர்களாக இருக்கும் போது என்ன செய்வது? 

உத்தரப்பிரதேச அவசரச் சட்டம் 
தேசியவாத மேன்மை பேசி, கலாச்சார காவலர்களாக தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் இந்துத்துவ சக்திகள், மதம் மாறி நடைபெறும் திருமணங்களால் தங்கள் அரசியலுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தும், சிறுபான்மை மக்கள் மீதான தன்னுடைய அதிகாரத்தை இறுக்கமாக்கிக் கொள்ளவும், பல சட்டங்களை அமல்படுத்திட தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியே உபி யில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்று திருமண தடைச் சட்டம்.  மதம் மாறி திருமணம் செய்து கொள்வோரை ஏதேனும் ஒரு வகையில் தண்டிப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம்இயற்றி, அதன் வழியாக ஒரு அச்சுறுத்தலை உருவாக்குவதே அடிப்படை நோக்கம். கட்டாயமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களின் மீது நிலைகளை பொறுத்து, நடவடிக்கை எடுப்பதை மாநில ஆளுநர் தேவைக்கேற்ப முடிவு செய்வார் என  அம்மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் சொல்கிறது. 

மதமாற்றுத் திருமணங்கள் கட்டாயப்படுத்தி நடைபெறுவதை காவல் துறையே தடுத்து நிறுத்திட முடியும். காரணம் ஒருவரை நிர்பந்தப்படுத்தி திருமணம் நடக்கும் பட்சத்தில், ஒரு தரப்பு நிச்சயமாக காவல் துறை உதவியை நாடும். அல்லது, பெருங்கூட்டமாக மத மாற்றம் நடைபெறுகிறது என்றால் எப்படியாவது காவல் மற்றும் அரசு துறை நிர்வாகங்களுக்கு தெரிந்து விடும். அதில் ஏதேனும் விதி மீறலோ சட்ட  மீறலோ, இருந்தால் உடனடியாக தலையிட எல்லா அதிகாரமும் இவர்களுக்கு இருக்கும். இதையெல்லாம் மீறியோ, உச்சபட்சமாகவோ, இதுவரையில் நம் நாட்டின் எந்த பகுதியிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்ததாக நமக்கு தெரியவில்லை. இந்தச் சூழலில் இது போன்ற விசயங்களை தடுக்க அவசரச் சட்டம் எதற்கு என்பதே நம் கேள்வி. இந்தச் சட்டத்தின் விதிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஏதோ இரவோடு இரவாக மக்கள் லட்சக்கணக்கில் மதம் மாறி திருமணம் செய்து கொள்வார்கள் என்பது போன்ற பிரமையை உருவாக்கி இந்தச் சட்டம் தற்காலத் தேவை என சொல்லப்படுகிறது. 

சட்டமும் அதன் தாக்கமும் 
இந்தச் சட்டத்தை ஆழமாக உள்வாங்கினாலே இதன் பாதக அம்சங்கள் நமக்கு தெரிந்துவிடும். உதாரணமாக இந்த சட்டத்தின் விதி 3 சொல்வது என்னவென்றால் ஒருவரை (ஆண்/பெண்) கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ, அதிகாரத்தை பயன்படுத்தியோ ,கள்ளத்தனமாகவோ, மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டால் அது குற்றம்எனவும், அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையும் சொல்கிறது. உதாரணமாக ஒரு இந்து கிறித்துவரை திருமணம் செய்து கொள்வதால் என்னமதமாற்றம் நடக்கிறது? திருமணம் என்பதே ஆணுக்கு 21 வயது எனவும் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே நடக்க முடியும் என சட்டம் சொல்கிறது . அப்படி இந்த வயதுகளை கடந்தாலே அவர்கள் வயது வந்தவர்கள் எனும் சட்டமும் இருக்கையில் கட்டாய மதமாற்றம் எனும் அடிப்படையே அடிபட்டுப் போகிறது. முடிவு எடுக்கக் கூடிய வயதில் கூட அவர்களை சிறுமைப்படுத்துவது போலாகும். 

சட்டத்தின் உரிமை மீறல்கள் 
 ஒரு சட்டம் இயற்றுவதால் மட்டுமே அனைத்தையும் கட்டுப்படுத்திட முடியும் என நினைப்பது நல்லதல்ல. சட்டத்தின் ஆட்சி எனும் பேரில் காவல் மற்றும் நீதி துறையின் தலையிடல் மற்றும் அத்துமீறலை யார் கண்கா
ணிப்பது? அதில் ஏற்படும் பிரச்சனைகளை யாரிடம் முறையிடுவது? ஒட்டுமொத்தமாக அனைத்துமே எதிராகஇருக்கும் போது அங்கே நீதிக்கான இடம் இருக்கப்போவதில்லை. உபியின் இந்தச் சட்டமும் இவ்வழியில் தான் இருக்கிறது. ஜனநாயகத்தின் நம்பிக்கையாக இருக்கக் கூடிய  நீதித் துறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வைப்பது எவ்வகையில் நியாயம்? 

இந்த அரசு எப்படி சட்டத்தை தன் கைக்குள் கொண்டு வருகிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம். இந்த சட்டத்தின் விதி எண் 7 என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். அதாவது மதமாற்றம் செய்து திருமணம் நடப்பதாக தகவல் ( பொய்யானது) வந்தால் கூட மாவட்ட நீதிபதியின் ஆணையின்றி கூட யார் மீது புகார் கூறப்பட்டுள்ளதோ அவர் மீது கைது நடவடிக்கைக்கான வேலைகளை காவல் துறை செய்திட முடியும்.அதே போல புகார் அளிப்பவர் , அவரின் பின்புலம் பற்றியெல்லாம் எதுவும் பரிசீலிக்க தேவையில்லை. உதாரணமாக மாற்று மதத்தைச் சார்ந்த ஒரு ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டிருந்தால் புகார் அளிப்பவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் காவல் துறையை அணுகலாம். நடவடிக்கை உறுதி. அதே போல
இதில் நடவடிக்கை எடுக்க இன்னொரு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது பெண்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்தல் ( எவ்வகையாக இருந்தாலும் ) சந்தேகப்பட்டால், புகார் தான். ஒரு ஆணும் பெண்ணும் ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது பெண்ணுக்கு பிடித்த ஒரு உணவு வகையைவாங்கிக் கொடுத்து அதை அவர்கள் இருவரும்  சாப்பிட்டுக் கொண்டு இருப்பது வேறு யாரோ ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த இளைஞன் அப்பெண்ணை கவரத்தான் செய்கிறான் என நினைத்தால் கூட புகார் மனு அளித்து அவனை மட்டுமல்லாது அவனின் பெற்றோரையும் கூடகைது செய்ய இந்த புது சட்டம் வழி சொல்கிறது. இதெல்லாம்போக பல விநோதமான  சட்ட விதிகள் இதில் உள்ளன. 

மதமாற்றம் 
இந்தச் சட்டத்தில் திருமணத்திற்காக அல்லாமல் பிறகாரணங்களுக்காக ஒருவர் மதம் மாற வேண்டும் என கருதினால், விதி 8 -ன் படி இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் வசிக்கும் மாவட்டத்தின் தலைமை நீதிபதியிடம் மனு அளித்து, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் “உண்மைத் தன்மையை”  அவ்வூரின் காவல் துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள். இவர்களின் விசாரணை எப்படி இருக்குமென ஊருக்கே தெரியும். அந்த விசாரணையின் கண்டுபிடிப்பில் நோக்கம் தவறானது, ஏற்புடையது அல்ல என காவல் துறை மாவட்ட நீதிபதியிடம் சொன்னால் அவரால் ( மனு அளித்தவர்) எதுவும் செய்ய முடியாது. அனுமதியும் மறுக்கப்படும். இது யோகி வகை சங்கியின் நியாயம். இது ஒரு புறம் இருக்க,காவல் மற்றும் நீதிபதியின் அனுமதியோடு எவ்விதஎதிர்ப்புமின்றி மதம் மாறும் பட்சத்தில், விதி 9ன் படி மீண்டும்அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல் வேண்டும். அதை மாவட்ட நீதிபதி அவருடைய அலுவலக அறிவிப்புப்பலகையில் ஒட்டி வைப்பார். அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் இருக்கும் அனைத்து விசயங்களிலும் மனுதாரர்முறைப்படி நடந்து கொள்கிறாரா என்பது உறுதியான பிறகே ஒப்புக் கொண்டதாக கணக்கில் எடுக்கப்படும். அதற்குப் பிறகு கூட அதில் யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டுமேல் முறையீடு செய்தால் விதி 12ன் படி மனுதாரர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். 

இப்படி ஒரு சட்டத்தைப் போட்டு இந்து மத கலாச்சாரத்தைகாப்போம் என ஒரு அடாவடி வேலையை பிஜேபி அரசுகள் செய்யத் துவங்கியுள்ளன. இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. யார் வேண்டுமானாலும் சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் எவ்வித ஆதாரமுமின்றி காவல்துறை யாரையும் கைது செய்யலாம். இதில் பாதிக்கப்படப்போவது ஆக பெரும்பாலும் யாரென சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒட்டு மொத்தமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள அனைத்து சட்ட உரிமைகளையும், இந்திய குடியரசை சர்வாதிகாரத்தை நோக்கி திசை திருப்பும் வேலையை இந்த பிஜேபி ஆட்சி எல்லா தளங்களிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை தடுத்திட அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்வதே இக்காலத்தின் மிக முக்கியக் கடமையாகும்.

;