articles

img

ஒரு நிஜமாவது சொல் அரசே...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்று ஒரு திரைப்பாடல் உண்டு. ஒரு போன் காலே போதும் என்கிறார் பிரதமர் மோடி. “புதிய வேளாண் சட்டம் குறித்த பிரச்சனையை அரசு திறந்த மனதுடன் அணுகுகிறது.... பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால்போதும்”என்று மோடி இப்போது கூறுகிறார். பிரதமர் இதைஉளப்பூர்வமாக சொல்கிறாரா? 

உழவர்களின் கிளர்ச்சி தில்லியின் எல்லைப்புறங்களில் நவம்பர் 26ல் துவங்கியது. பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு நிபந்தனை விதித்தது. “விவசாயிகள் எந்த பிரச்சனையும் செய்யாமல் தில்லி புராரி மைதானம் போய்விட்டால் அவர்களுடன் பேசலாம்” என்று மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா நவம்பர் 28ல் கூறினார். விவசாயிகள் இதனை ஏற்கவில்லை. கடும் குளிர் மிகுந்த இரவுகளின் தாழ்வாரத்தில் வெள்ளை மழையாக கொட்டிய பனித்துளிகளினூடே மலர்ச்சியான கண்களை ஏந்தி விடிய விடிய உட்கார்ந்து  விவசாயிகள் போராட துவங்கினர். தில்லியில் வெள்ளமென திரண்ட விவசாயிகளின் பிரவாகப் பெருக்கு மத்திய அரசை ஆட்டி அசைத்தது. பேச்சுவார்த்தைக்கு இறங்கினர்.

பேச்சுவார்த்தை இடையே பல மேடை நாடகங்கள் நடந்தன. 50 சதவீதம் தீர்வு எட்டப்பட்டதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் ஒருமுறை கூறினார். 5 சதவீதம் கூட தீர்வு காணப்படவில்லை என அப்போதே போராடும் சங்கங்கள் குமுறின. அதற்குள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு கண்டதாகவும் பெரும்பான்மை சங்கங்கள் திருப்தியோடு ஏற்றுக்கொண்டதாகவும் விருந்துண்ட களைப்போடு ஏப்பம் விட்டுக்கொண்டே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. ஒத்துக்கொண்டதாக அவர்கள் கூறிய ஒரு சங்கம் பாரதிய கிசான் யூனியன்(பானு) ஆகும்.“உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலால் திருப்தி அடைந்த நாங்கள் சாலையிலிருந்து வெளியேற முடிவு செய்தோம்... எனினும் இதன் மூலம் எங்கள் போராட்டம் முற்றுப்பெற்றதாக அர்த்தம் இல்லை” என்று அந்த அமைப்பு கூறியது. உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று இந்த அமைப்பு வீடு திரும்ப உறுதி அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் ஏ.பி. சிங் என்ற வழக்கறிஞர் கூறினார்.

ஒரு தீபாவளிக்கு ஜெமினியின் கல்யாண பரிசு படம் ரிலீசாகி இருக்கலாம். ஒவ்வொரு தீபாவளிக்கும் அதே படத்தை புது ரிலீஸ் என்றா போஸ்டர் ஒட்டுவார்கள்? மீண்டும்இதே சங்கம் போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டதாக 26-01-2021ல் சொல்லப்பட்டது. குடியரசு நாள் பேரணி வன்முறையை ஏற்காமல் பாரதிய கிசான் யூனியன்(பானு) விலகிக்கொள்கிறதாம். சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெறாத சில குழுக்கள் வெளியேறுவதாக இப்போதும் சொல்லிக் கொள்கின்றன. மோடி அரசு உழவர்களின் கிளர்ச்சியை பலகீனப்படுத்த எத்தனிக்கிறது.குடியரசு தின நாளில் தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமரியாதையால் ஒட்டு மொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் ஆழ்ந்ததாக பிரதமர் கூறுகிறார். இந்த அவமானத்தின் கர்த்தாக்கள் யார் ? குடியரசு தின கொடியேற்று விழா முடிந்து பிரதமர் அகன்ற ஒரு மணி நேரத்தில் அதே செங்கோட்டையின் கதவுகளை விசாலமாக திறந்தது யார்? குவி மாடங்களில் ஏறி சிலரை கொடி ஏற்ற விட்டது யார் ?ஒரு துணைக்கண்டத்தின் தலைநகரான தில்லியில் வரலாற்றுப் பெட்டகமான செங்கோட்டை நடுக்காட்டின் பாழடைந்த அனாதை பங்களாவாக பாதுகாப்பின்றி போனது எப்படி? ஜனவரி 26ல் தில்லியில் ஒரு விபரீதம் நடக்கலாம் என்று சொல்லும் அளவில் வானில் சாம்பல் நிற மேகங்கள் கருத்தன.

கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் ஜனவரி 26ல் விவசாயிகள் பேரணி நடக்கும் என விவசாய ஒருங்கிணைப்பு குழு ஒரு மாதத்திற்கு முன்பே கூறியது. இது குறித்துமத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் கூறியதாவது: “...தில்லிக்குள் அதுவும் குடியரசு தினத்தில் 5000பேர் நுழைய முற்படுவது சட்டவிரோதம்... குடியரசு தினத்தில் ஒரு லட்சம் பேர் தலைநகருக்குள் எங்கு செல்வார்கள் என தெரியவில்லை...காலிஸ்தான் தீவிரவாதிகள் தில்லிக்குள் ஊடுருவி உள்ளனர். இதற்கான பிரமாண பத்திரத்தை உளவுப்பிரிவு அறிக்கையுடன் சமர்ப்பிப்பேன்” என்று அவர் கூறினார். இந்திய விவசாயிகளை தூண்டுவது சீனா, மாவோயிஸ்டுகள், பாகிஸ்தான், அர்பன் நக்சலைட், அல்ட்ரா லெப்ட்என மத்திய அமைச்சர் கிரி ராக்கிவ் முதல் குஜராத் மாநில துணை முதல்வர் நிதிர் படேல் வரை கூறினர். (இதை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் அவர்களுக்கு தனியே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.) 

தில்லி காவல்துறையின் உளவுப் பிரிவு சிறப்பு ஆணையர் தீபேந்திர பதக் கூறியதாவது: “பேரணியில் குழப்பம் விளைவிக்க பாகிஸ்தான் சதி செய்கிறது. இதற்காக ஜனவரி13 முதல் ஜனவரி 18க்குள் 300 போலி டுவிட்டர் கணக்குகள்துவங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தவறான தகவல் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி நடக்கிறது.”இதேபோல் குறிப்பிட வேண்டிய நிகழ்வு இந்துத்துவா பெண் தீவிரவாதியான ராகினி திவாரியின் உரையாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வடகிழக்கு தில்லியில் ஜாபராபாத் என்ற இடம் முக்கியத்துவம் பெற்றது. 23-03-2020ல் பாஜக தலைவர் கபில்மிஸ்ரா  அங்கு பேசினார். 50 மண்டைகள் உருண்டன. மதக்கலவர ஜூவாலைகள் கனன்றன. விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக இன்னொரு ஜாபராபாத் டிசம்பர் 17ல் உருவாகும் என ராகினி திவாரி பேசினார். இதேபோல் சிங்குஎல்லைப் பகுதியில் 21-01-2021 இரவில் ஒரு முகமூடி அணிந்த மர்ம நபர் பிடிபட்டார். 2 பெண்கள் உள்பட 10 பேர் போராட்டக் களத்தில் நுழைந்ததாகவும் போராட்டத்தை சீர்குலைக்க வன்முறை பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர்கூறினார். 26-01-2021 பேரணி நடக்காமல் தடுக்க 24-01-2021 அன்று நான்கு தலைவர்களை கொல்ல திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார். இந்த நபரை விவசாயிகள் தில்லிபோலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தம் கருத்தை பின்வருமாறு கூறினார்: 

...யாருடைய ரத்தத்தையும் எங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பவில்லை... (மத்திய அரசின் வழக்கறிஞரிடம்)... நீங்கள் இந்த பிரச்சனையை வலுவாக கையாள்வதாக நாங்கள் பார்க்கவில்லை.

ஒருவேளை ரத்த ஆறு ஓடினால் யார் பொறுப்பு ஏற்பது?ஆயினும் மத்திய அரசின் முன் எச்சரிக்கை தடபுடலாக சொல்லப்பட்டது. 141 இடங்களில் சிசிடிவி கேமரா, 5 அடுக்குபாதுகாப்பு, குடியரசு தின அணிவகுப்பு நேரமும் இடங்களும்குறைப்பு, வெளிநாட்டுத் தலைவர் பங்கேற்பு இல்லை என ஒப்பிக்கப்பட்டது. பிறகு செங்கோட்டையின் பாதுகாப்பில் எவ்வாறு துவாரம் விழுந்தது? 25-01-2021 இரவு நிகழ்ச்சிகள் சூடு பிடித்தன. ஒரு வில்லனுக்கு கதாநாயகன் மேக்கப் போடப்பட்டது. இந்த வில்லன் கிஷான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகும். தீப்சித்து, லக்பீர்சிங் சிதானா, அம்ரிக் மிக்கி போன்ற நபர்கள் இதன் அங்கம் ஆவர். விவசாயிகளின் மத்தியில் மத்திய அரசை ஒரு கை  பார்த்து விடுவோம் என்று ஆவேசமாகப் பேசினர். ஆனால் எதார்த்தம் வேறுவடிவில் இருந்தது. தீப்சித்து என்பவர் பாஜக எம்.பி ஹேமமாலினியின் மகனான நடிகர் சன்னி தியோல் (இவரும் பாஜக எம்பிதான்) என்பவரின் வலதுகரமாவார். லக்பீர் சிங் பாஜகவுக்கு உதவும் தாதா ஆவார். அம்ரிக் மிக்கி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரவேஷ் சாகிப்சிவ்வர்மாவிற்கு நெருங்கியவர் ஆவார். 

ஜனவரி 26 விவசாயிகள் பேரணியில் விவசாய ஒருங்கிணைப்பு குழுவின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத புதியதடத்தில் துணை இராணுவப்படை, காவல்துறை ஆகியோரின் பரிபூரண ஆசிகளுடன் செங்கோட்டையில் இவர்களின் குழு நுழைந்தது. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே ராதையோடு போவதுபோல் எக்காளமாக பயணித்தனர். தேசியக் கொடி பறந்த கம்பத்தில் மதத்தின் கொடியை ஏற்றினர். செங்கோட்டையின் கலைச்சின்னங்களை சேதப்படுத்தினர். இந்த துச்சாதனர்கள் தேசத்தின் கண்ணியம், மரியாதை எனும் திரௌபதையை துகிலுரிய முயன்றனர். மத்திய அரசின் ஆயுதம் ஏந்திய சீருடைப் படை செயலற்று நின்றது. மத்திய அரசு துரியோதனனாக துச்சாதனர்களை அரவணைத்தது.ஆனால் சம்பவ இடத்திற்கு விவசாய ஒருங்கிணைப்பு குழுவின் சீக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட மூத்தவர்கள் ஓடிவந்து துச்சாதனர்களை விரட்டினர். இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துவது யாதெனில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்பது மோடி அரசின் பி- டீம் அல்லது பினாமியாக இயங்கியது என்பதைதான்.

 தில்லி வீதிகளின் மறுபுறத்தில் மகிழ்ச்சி பூத்திருந்தது. கிசான் ஏக்தா ஜிந்தாபாத் (விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக), ஜெய் சவான், ஜெய் கிசான் என்ற முழக்கங்களோடு அனுமதிக்கப்பட்ட பாதையில் விவசாயிகளின் பேரணி நடந்தது.நீங்கள் எங்கள் விருந்தினர் என்று தில்லி மக்கள் அவர்களை உபசரித்தனர். உணவும் தேநீரும் வழங்கினர். ரோஜாப்பூக்களை சூட்டினர். ஆங்காங்கே மக்களும் அவர்களோடு நடந்தனர். ஊடகங்கள் இதை இருட்டடிப்புச் செய்தன. “இதுபோன்ற டிராக்டர் பேரணியை நான் பார்த்தது இல்லை. புதிய இந்தியாவை பார்த்தது போல் இருந்தது. இதை நான் வீடியோவாக பதிவு செய்து என் பேரக்குழந்தைகளுக்கு காட்டுவேன்” என்று ஓய்வு பெற்ற ஆசிரியர் அனிதா பட்வால் கூறுகிறார். 

ஜனவரி 26 முதல் மோடி அரசின் உடல் மொழி வன்முறையாக கூர்தீட்டப்பட்டுள்ளது. மாறிமாறி வீசியகண்ணீர் புகை குண்டுகளின் காரணமாக புது மாப்பிள்ளையான விவசாயி நவ்ரீத்சிங் டிராக்டர் கவிழ்ந்து மாண்டார். அதிர்ச்சி மற்றும் காயங்களின் ரத்தப்பெருக்கே அவர் மரணத்திற்கு காரணம் என்று அவரின் உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது.  அனைத்து கட்சி காணொளி கூட்டத்தில் தில்லி போராட்டத்தில் விவசாயிகள் தவறு செய்தனர் என்று பிரதமர் பேசுகிறார். ஒரு நிஜமாவது சொல்லாதா மோடி அரசு.....அமெரிக்காவின் டிரம்பின் ஆட்சிக்கு முடிவுரை எழுதியசம்பவங்களில் ஒன்று 25-02-2020 இல் நடந்தது. ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் நிறவெறி பிடித்தகாவல்துறையால் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி மாண்டார்.

பஞ்சாப்பின் பந்தர் என்ற பர்னாலா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்கீர்சிங் மீது தில்லியின் சிங்குவின் எல்லையில் காவல்துறையின் அதேமாதிரியான தாக்குதல் நடந்தது. மேலும் அறவழியில் அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பாஜகவின் தலைவர் அமன்குமார் தலைமையில் வன்முறை வெறியாட்டம் நடந்தது. குண்டாந்தடிகளோடும் இரும்புத் தடிகளோடும் உள்ளூர்வாசிகள் என்ற பெயரில்பாஜகவினர் குருவிக் கூட்டை கலைப்பது போல் போராட்டக்கூடாரங்களை பிய்த்தெறிந்தனர்.  60 நாட்களை கடந்து 160க்கும் மேற்பட்ட உயிர்களை தந்து வெட்டவெளிகளில் போராடும் விவசாயிகளுக்கான குடிநீர் இணைப்புகளும் மின்சாரமும் இணையதள வசதிகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்புகள் அமைத்துஆணிகளை பொருத்தி இரும்பு முள்வேலிகள் அமைக்கப்படுகின்றன. இருளின் அந்தகாரத்தில் இதயத்தை தீப்பந்தமாக்கி உழவர்கள் திரள்கின்றனர். வருக என்றால் வருகின்றனர். தருக என்றால் உயிரையும் தருகின்றனர். சங்கே முழங்கு என்றால் எங்கே களம் என்கின்றனர்.

பொதி சுமப்பதில் வரலாறு  ஒட்டகம் போல் ஆற்றல் மிக்கது. 1934களில் 6000மைல் நடந்த சீன நெடும் பயணத்தில் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய செய்திகள் உண்டு. அதைப்போலவே 26-01-2021ல் நடந்த உழவர்கள் பேரணியில் காணாமல் போனதாக 29 இளைஞர்கள் தேடப்படுகின்றனர். சீனாவின் சியாங்கே சேக் ஆட்சியில் குழந்தைகள்தான் காணாமல் போனார்கள். இந்தியாவின் நரேந்திர மோடி ஆட்சியில் இளைஞர்களே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதும் வரலாற்று ஒட்டகத்தின் முதுகில் பொறிக்கப்படும். சர்வாதிகாரிகளுக்கு சியாங்கே சேக்கின் கதிதான் ஏற்படும்.

கட்டுரையாளர் : வெ.ஜீவகுமார்

;