articles

img

ஒரு கார்ப்பரேட் ஜீவி ஓலமிடுகிறது....

பிரதமர் நரேந்திரமோடி மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரைநிகழ்த்தும்போது, போராடும் விவசாயிகளை ‘போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்’ என்று பொருள்படும் விதத்தில் ‘அந்தோலன் ஜீவி’ என்றும், ‘அந்நிய அழிவு சித்தாந்தத்தால்’ (Foreign Destructive Idealogy) வழிநடத்தப்படுபவர்கள் என்றும் கூறினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையின் அம்சங்கள்:

பிரதமருக்கு எதிராக  நாடு முழுவதும் கிளர்ந்தெழுக!
விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுதல், சி2+50 சதவீத உயர்வுடன் சட்டரீதியான உத்தரவாதத்துடனான குறைந்தபட்ச ஆதார விலை, மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு, மாசு அவசரச்சட்டத்தில் உள்ள விவசாயிகள் விரோத சட்டப்பிரிவுகள் விலக்கிக்கொள்ளப்படுதல் ஆகியவை உட்பட தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை திரும்ப மாட்டார்கள்.பிரதமர், விவசாயிகளை இழிவுபடுத்தியிருப்பதற்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் பிரதமரின் கூற்றுக்கு எதிராக கண்டன இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அனைத்துக் கிளைகளையும், விவசாயிகளையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

                                        ******************

விவசாயிகளுக்கு அவமதிப்பு

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதற்கு பிரதமரே முழுமையாகப் பொறுப்பானவர். இவர் வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் திரும்பப் பெற வேண்டும். பாஜக-வின் 2014 தேர்தல்அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்திட்ட உறுதிமொழியான, சி2+50 சதவீதத்துடனான குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்திட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி  போராடும் விவசாயிகளை ‘போராட்டத்தால்ஜீவிப்பவர்கள்’ (‘அந்தோலன் ஜீவி’) என்று இழிவுபடுத்தியிருப்பதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. அவர்இக்கூற்றை உடனடியாக திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் இவ்வாறு இழிவுபடுத்தும் விதத்தில் உரைநிகழ்த்தியமைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.இத்தகைய அவமதிப்பு, ‘கார்ப்பரேட் ஜீவி’ (Corporate Jeevi)யிடமிருந்து வந்திருக்கிறது. பிரதமர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கம்பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமைத்தனத்திற்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய சுதந்திரப் போராட்டத்தில் எந்தக் காலத்திலும் அதன் ஓர் அங்கமாக இருந்ததில்லை.நாட்டிலுள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் இந்த நாட்டின் குடிமகன்என்ற முறையில் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள கிளர்ச்சி செய்யும்உரிமையின்கீழ் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உரிமை பெற்றிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகப் போராடும் விவசாயிகள் மீது அவதூறு சேற்றை அள்ளிவீசுவதற்கு, பிரதமர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயிகளை அவமதித்திடும் பிரதமரின் இக்கூற்றைக் கண்டித்திடஅனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் மற்றும் வெகுஜன வர்க்க ஸ்தாபனங்களும் முன்வர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. விவசாயிகள் சங்கங்கள் தாங்கள்போராடுவதற்கான காரணத்தைச் சுட்டிக்காட்ட இயலாமல் இருக்கின்றனஎன்று பிரதமர் கூறியிருக்கிறார். இது, விவசாயிகள் போராட்டத்தை அவமதித்திடும் இழிவான சூழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.  விவசாய நெருக்கடி கடுமையாகி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம்,விவசாயம் செய்வதன்மூலம் விவசாயப் பயிர்களுக்குப் போதிய அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததும் அதன் காரணமாக விவசாயிகள் கடன்வலைக்குள் மாட்டிக்கொள்வதுமேயாகும்.

                                                   **********************

விவசாயிகள் போராட்டத்திற்கு பிரதமரே முழுப்பொறுப்பு

நாட்டிலுள்ள விவசாயிகளில் 86 சதவீதத்தினர் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்களே ஆவார்கள். அவர்கள் சந்தைக்குச் செல்லும்போது மிகவும் கடுமையாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் விவசாயத்தையே கைவிட்டுவிட்டு, புலம் பெயர் தொழிலாளர்கள் சேனையில் இணைவதற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.நாங்கள், பிரதமருக்கும் பாஜகவிற்கும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். அவர்கள் தங்களுடைய 2014 தேர்தல் அறிக்கையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி சி2+50 சதவீதம் என்கிற விதத்தில் உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தார்கள். தங்கள் சொந்த உறுதிமொழியையே அமல்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் இந்திய விவசாயத்தையும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பையும் கார்ப்பரேட்டுகளிடம் சரண் செய்திருக்கிறது.

விவசாயிகள், நாடு முழுவதும் அனைத்துப் பயிர்களுக்கும் அரசாங்கம் சட்டரீதியான உத்தரவாதத்துடன் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர், கடந்த ஏழு ஆண்டு காலமாக, தாங்கள் அளித்த உறுதிமொழியை மீறிவருவதன்மூலம், இப்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு அவரே முழுப் பொறுப்புமாவார்.பிரதமர் நாடாளுமன்றத்தில் திங்கள் கிழமையன்று ஆற்றிய உரையிலிருந்து அவர்கள் எந்த அளவிற்கு அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தின்கீழ் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதன் காரணமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதும் நன்கு தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.  பிரதமர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும், மக்களுக்கு விரோதமாகவும் மூன்று வேளாண் சட்டங்களை உயர்த்திப்பிடித்து பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இவ்வாறு இவர் பேசுவதற்கு முன்னால் எந்தவொரு விவசாய சங்கத்தையோ அல்லது மாநில அரசாங்கத்தையோ அல்லது நாடாளுமன்றத்தையே கூட கலந்தாலோசித்திடவில்லை.

;