articles

img

கழிப்பறையின் அவசியத்தை சமூகம் உணர்ந்துள்ளதா? - ஜி.ராணி

சமையலறை ஒரு பெண்ணுக்கு அவசியம் என்று கருதுகிற சமூகம் கழிப்பறை தான் அத்தியாவசியம் என்ற அவசியத்தை உணர்ந்து உள்ளதா ? இல்லை என்றே சொல்லலாம். கடந்த சில நாட்களுக்கு முன்ன சிதம்பரத்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் கழிப்பறை இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட சோக நிகழ்ச்சி நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாமல் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் எந்த அளவு கொடுமையான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கழிப்பறை, நகரங்களில் மிக மிக அவசியமான ஒன்றாக மாறி விட்டாலும் கிராமங்களில் இன்னும் தொடரும் அவலமாகத்தான் இருக்கின்றது. காடுகள், கண்மாய்கள், முட்புதர்கள், வயல்கள் என தேடித்தான் செல்ல வேண்டி இருக்கிறது. இதுபோன்ற இடங்கள் நோய்க்கூறுகளை உள்வாங்கும் இடமாக மாறி விட்டன. சில நேரங்களில் பாம்புகளின் ரூபத்தில் மரணத்தையும், ஆண் மன விகாரங்களின் வெளிப்பாடாக பாலியல் வல்லுறவு போன்ற ஆபத்தான செயல்களும் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு இளம் பெண்கள் வீட்டில் கழிப்பறை இல்லாததால் இருட்டிய பின் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற போது நடைபெற்ற பாலியல் வல்லுறவு  சம்பவத்தை நாடு மறந்திருக்காது. இதுமட்டு மல்லாமல் 12 வயதை எட்டிப் பிடிக்கும் பெண் குழந்தைகள் பருவமடையும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம். பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றவர்கள் மாலை வீடு திரும்பும் வரை  சிறுநீர் கழிக்காமல் இருப்பது, தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்காதது என பலவும் இருக்கத்தானே செய்கின்றது.

சமீபத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகா நடித்த ராட்சசி என்ற திரைப்படத்தில் ஒரு  காட்சி வரும். அரசு பள்ளிக்கூடங்களில் சரியான கழிப்பறை வசதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி பெற்றோர்களிடம் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், பெண்கள் வசதிக்காக சுகாதார மான முறையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கோவில் உண்டியலில் பணம் செலுத்தும் நீங்கள் பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்காக அதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்யுங்கள் என்று  கேட்பார். அப்போது பெற்றோரில் ஒருவர் கோவிலுக் காக பணத்தை உண்டியலில் போடுவதும் கழிப்பறை கள் உதவி செய்வதும் ஒன்றா என்று கேட்பார். உடனே ஜோதிகா கோவிலை விட இதுபோன்ற சுகாதார மான விஷயங்களுக்கு செய்யும் உதவி மேலானது என்றும் நீங்கள் செய்யும் இந்த உதவியால் கோவில் கர்ப்பகிரகம் மட்டுமல்ல பள்ளிக்கூட கக்கூஸ் கூட மணக்கும் என்றும் அழகாக சொல்லுவார். இந்த  நிகழ்ச்சி என்பது ஏதோ சினிமா துறைக்கு மட்டும்  சொல்லக் கூடிய செய்தியாக பார்க்காமல் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் சுகாதார வசதி  இல்லாமல் எத்தனை சிரமங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல சாட்சியாகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டில் கழிப்பறை  கட்டித்தராத கணவரை விவாகரத்து செய்வதற்காக அங்குள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குடும்ப  வன்முறை உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சூழ்நிலை களில் மட்டுமே இந்திய சட்டம் விவாகரத்திற்கு அனு மதி அளிக்கும். ஆனால் கழிப்பறை இல்லாதற்காக விவாகரத்து வழங்குவது இதுவே முதன்முறையாகும். இயற்கை உபாதைகளுக்கு திறந்த வெளியை பயன்படுத்த கட்டாயமாக்குவது ஒருவிதமான சித்தரவதை ஆகும். புகையிலை, மதுவுக்கும், செல்போனுக்கும் அதிக அளவு பணம் செலவழிக்கும் நாம் குடும்ப மரியாதையை காப்பாற்ற கழிப்பறை கட்ட விரும்புவதில்லை என தனது தீர்ப்பில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் நாளிதழில் கூறியுள்ளது. “உறுதிக்கும் தூய்மைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்களால் மட்டுமே சுயாட்சி யை கொண்டுவர முடியும் “”என்று காந்தியடிகள் கூறினார். ஏனெனில் சுகாதாரமற்ற சூழல் இருந்தால் சிலருக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி ஏழைகளையும் பாதிக்க செய்யும் என்றார். மேலும்  சுகாதாரமற்ற சூழ்நிலைகள் ஏழைகளிடம் இருக்கும் உடல் பலம் மற்றும் மன வலிமையை எடுத்து விடும்  என்றார். இப்படி சொன்ன காந்தியடிகள் பிறந்த நாளில் தான் ஒன்றிய அரசாங்கத்தால் 2014ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இரண்டு பகுதிகளாக இந்த திட்டம் செயல்படும் என பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. 

ஊரகப் பகுதி தூய்மை இந்தியா

கிராமப்பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த அப்பகுதிகளில் வசிப்பவர்கள் எளிதாக அணுகும் வகையில் கழிப்பறை கள் கட்டித் தருவது தான் இதன் நோக்கம். ஆனால் இன்றும் பல கிராமங்களில் கழிப்பறைகள் பழைய சாமான்கள் போடும் இடங்களாக இருப்பதும் கிராமப்  பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையும் தான் இருக்கிறது . நகர்ப்பகுதிகளில் கிளீன் இந்தியா அனைத்து வீடு களிலும் கழிப்பறைகள் கட்டுவது பொது கழிப்பிடங்கள் முறையாக அமைந்திருப்பதை உறுதி செய்வது, நகரப்பகுதிகளில் திடக்கழிவுகளை மற்றும் திட்டத்தை முறையாகக் கையாள்வது உள்ளிட்டவை தான் இதன் நோக்கம். ஆனால் பெருவாரியான இடங் களில் இந்த முறை கையாளப்படுகிறதா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். குப்பைக் கூளங்கள், கழிவுகள் நிறைந்த நகரமாகவே பலவும் இருக்கின்றன. 2018 நவம்பர் நிலவரப்படி இந்தியாவில் 9 6.2 5% வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளது என அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2014 ல்3 8.7% வீடு களில் மட்டும்தான் கழிப்பறை வசதிகள் இருந்தது என்றும் தற்போது உயர்ந்துள்ளது என்றும் புள்ளி விபரங்களை கூறியிருப்பது “ஜோக்கர்” திரைப் படத்தில் வரும் காட்சிகள் போலவே இருக்கின்றது. நாடு முழுவதும் 1136 கிராமங்களில் 92 ஆயிரம் வீடுகளில் மேற்கண்ட ஆய்வு எடுக்கப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நாட்டில் 27 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்கள் தற்போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறையில் இருந்து விடுபட்டு உள்ளன என தூய்மை இந்தியா விஷன் அறிக்கை கூறுகிறது. இந்திய அரசின் பிரதான தரவு சேகரிக்கும் அமைப்பின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 2016ஆம் ஆண்டு கழிவறைகள் கிடைக்கப்பெற்ற வீடுகளில் 5% வசதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மகா ராஷ்டிரா திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடை முறையில் இருந்து விடுபட்ட மாநிலமாக அறி விக்கப்பட்டது.

அம்பலமான குஜராத் நிலைமை

அதேபோல குஜராத் மாநிலமும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லா மாநிலமாக 2017 அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தணிக்கை அறிக்கையில் 29 சதவீதம் வீடுகளில் கழிவறைகள் இல்லை எனத் தெரிகிறது. பொதுவாகவே குஜராத் மாடல் என்று சொல்லி வரும் மோடி அரசாங்கம், தொடர்ந்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும் அரசாங்கமாகத்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி வரு கிறார் என்பதற்காக ஏழைகள் வாழும் குடிசைகள் பகுதியை தெரியக்கூடாது என்பதற்காக தடுப்புச்சுவர் கட்டிய மாநிலம் குஜராத் தான். ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் செயலாளர் பரமேஸ்வரன் நாயர் தூய்மை இந்தியா திட்டத்தின் அறிக்கை வெளி யானால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பிபிசியில் கூறியுள்ளார்.

2015இல் இந்தியாவில் அனைத்து அரசு பள்ளி களிலும் தற்போது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி கழிப்பறைகள் இருக்கின்றன என்றார். 2018இல் வெளியான கல்வி அறிக்கை ஒன்றில் கிட்டத்தட்ட அரசு பள்ளிகளில் உள்ள 23% கழிவறைகள் உப யோகப்படுத்த முடியாதவை என குறிப்பிடப்பட்டுள்ளது .50 சதவீத கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதே உண்மை .இன்னமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் கழிப்பறைகள் இல்லாமல் எத்தனை துயர் களுக்கு உள்ளாகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் பகுதி காந்தியின் நூற்றி ஐம்பதா வது பிறந்த நாளில் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் முழுமை யாக செலவு செய்யப்பட்டதா என்பதே மிகவும் கேள்விக்குரிய நிலையில் உள்ளது. ஏனென்றால் வீடுகள்தோறும் தூய்மை இந்தியா திட்டம் உரு வாக்கப்படும், செயல்படுத்தப்படும் என்பது உண்மை யானால் ஏன் சிதம்பரத்திலுள்ள பன்னிரண்டாம் வகுப்பு  மாணவி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒருபுறம் கழிவறை கட்டுவதற்காக 12,000 ரூபாய் ஒதுக்கிவிட்டு இன்னொரு புறம் கம்பி, ஜல்லி, மணல், சிமெண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்து வதால் சாதாரணமாக கூலி வேலைக்கு செல்லும் தொழி லாளர் குடும்பத்தினரால் கூடுதலாக பணம் செல வழித்துக் கட்டமுடியாத அவல நிலைமை தொடர்கிறது. அனைத்து வீடுகளுக்கும் ஒன்றிய மாநில அரசுகள் நிதி உதவியுடன் வீட்டில் கழிப்பறை கட்ட  ரூபாய் 12,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூபாய் 7200 ஒன்றிய அரசும் ரூபாய் 400 4800 மாநில அரசும் வழங்குகின்றன. இத்திட்டம் முழுமையாக மக்களை சென்றடை யாத இந்த நிலையில் தான் 2021 அக்டோபர் இரண்டாம் தேதி மீண்டும் தூய்மை இந்தியா திட்டம்  2.0 மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு 2.0 என்ற திட்டம் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. நகரங்களை உருவாக்குதல், கழிவு நீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சிக்கு பயன்படுத்துதல், சுற்றுச் சூழல் மாசடைவைத் தடுத்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பேருந்து இலவசம் கழிப்பறைக்கு கட்டணம்

இந்நிலையில் தமிழகத்தில் இலவசமாக பேருந்துகளில் நகரப்பகுதிகளில் கிராம பகுதிகளில் பெண்கள் பயணம் செய்கின்றார்கள். ஆனால் பேருந்து நிலையங்களுக்கு வரும் பொது சிறுநீர் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறை நோக்கி சென்றால் சுகாதாரமற்ற நிலையிலும் ஐந்து ரூபாய் கொடுக்கக் கூடிய சூழ்நிலையிலும் ஐந்து ரூபாய் கொடுத்தாலும் நோய்த்தொற்றை இழுத்து வர வேண்டிய நிலையிலும்  பேருந்து நிலைய கழிப்பறைகள் இருக்கின்றன . உளுந்து பலசரக்கு சாமான்கள் என்று இலவசமாக கொடுக்கும் அரசாங்கங்கள் வீட்டிற்கு ஒரு கழிப்பறை யை இலவசமாக கட்டி கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையங்களில், அலு வலகங்களில் கழிப்பறைகளை நவீன சுகாதார முறை யில் அமைத்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் 2020 டிசம்பர் 5ஆம் தேதி காஞ்சி புரத்தில் வேளாண் விரிவாக்க மையம் விதை விற்பனை மையத்தில் பணிபுரிந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில்  விழுந்து இறந்துபோனது இன்னமும் நினைவிலிருந்து அகலவில்லை. இத்தகைய நிலைக்கு பெரும்பாலான அரசு  அலுவலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்காதே மிக முக்கியக் காரணம்.

நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் அனைத்து அரசாங்க பள்ளிகளிலும் கழிவறைகள், சுகாதாரப் பணிகளை அரசாங்கம் உடனடியாக சரி செய்திட வேண்டும் .ஏராளமான பெண் குழந்தைகளின் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். இதற்கு தமிழக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியம். கிராமப்பகுதிகளில் நகரப்பகுதிகளில் கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும், அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட பொது கழிப்பறைகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன நாயக மாதர் சங்கம் போன்ற பெண்கள் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி உள்ளன.  மோடி அரசின் தூய்மை இந்தியாவின் இரண்டாம் திட்டத்தை ஏற்கனவே உள்ள திட்டத்தைப் போல மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லாமல் பொது மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு பயனுள்ள திட்டமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சி களையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

உலகில் 420 கோடி மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறை உடன் இருக்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .அறுபத்தி ஏழு கோடியே முப்பது லட்சம் மக்கள் மலம் கழிக்க திறந்தவெளியை பயன்படுத்துவதாகவும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.3 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அவை கூறுகின்றன.  எனவே கழிப்பறையை முறையாக பயன்படுத்தி னால் மக்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்நாளில் சராசரியாக 3 ஆண்டுகள் கழிப்பறையில் கழிக்கிறார்கள். பொது கழிப்பறைகளில் கதவுகளில் ஒரு சதுர அங்குல பரப்பில் சுமார் 40 ஆயிரம் கிருமிகள் இருக்கின்றன.

மேலும் சீனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சில இடங்களில் நாய்களுக்கு கூட கழிவறைகள் உள்ளன.  மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கிய மானவை உணவு, உடை, உறைவிடம், அடுத்தபடி யாக இருப்பது சுகாதாரம் தான். ஆனால் அத்தகைய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய கழிவறைக்கு ஏனோ இன்னும் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. எனவே தனிமனிதரும் அரசாங்க மும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கட்டுரையாளர்கள்: திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

 

;