articles

img

மோடி ஜீ சொன்னதும், சொல்லாமல் மறைத்ததும்...

அண்மையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக மத்திய அரசாங்கமே தடுப்பூசிவழங்கும் எனவும், இதற்கென மாநில அரசுகள் தனியாக நிதி அளிக்க வேண்டியதில்லை எனவும் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, “பார்த்தீர்களா, நமது பிரதமரின் தயாள குணத்தை. அவரைபுரிந்து கொள்ளாமல் வெறுமனே எப்போதுமே விமர்சிக்கிறீர்களே. இது நியாயமா..?” எனஅவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புவதோடு, ஆங்காங்கே அவரதுஅருமை பெருமைகள் குறித்தும்  பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் மக்கள்முன் தோன்றி சொன்ன விஷயத்திற்கு பாராட்டவேண்டுமெனில், அவர் சொல்லாமல் மறைத்த விஷயத்திற்கு என்ன செய்வது? இதோஅவர் சொல்லாமல் விட்ட விஷயங்கள் - அதாவது மறைக்கப்பட்ட உண்மைகள்:

பிரதமர் மோடி பதவியேற்ற ஓராண்டில் அதாவது 2015 இல் பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்ட வரியென்பது ரூ.72,000 கோடி ரூபாய்.  ஆனால் தற்போது 2020 - 21 இல்  அது ரூ.3,60,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஐந்துஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்வு. அடேயப்பா. இதுவல்லவோ அவர்கள் சொல்லும் வளர்ச்சி. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் மீதானவரியாக ரூ.35,000 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தடுப்பூசி திட்டத்திற்காக மத்திய அரசு தனது ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்த தொகையை,(ரூ.35,000 கோடியை) ஒரே மாதத்தில்மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது.  ஆனாலும் நம்புங்கள்.(!) அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்பட உள்ளதெனும் பேருண்மையை. இதுமட்டுமல்ல; கடந்த நான்கு ஆண்டுகளில் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, திரும்ப செலுத்தாமல் விட்ட பெரும் கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு அரசு அளித்த தள்ளுபடி தொகை என்ன தெரியுமா? வெறும் 2.86 லட்சம் கோடிதான். இதோ, அரசின் காருண்யத்தால் பலனடைந்த நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகளின் பட்டியல்:

வீடியோகான்    ரூ. 36,000  கோடி

டிஎப்எச்எல்     ரூ. 63,000  கோடி

பூஷன் ஸ்டீல்     ரூ. 18,000 கோடி

எஸ்ஸார் ஸ்டீல் ரூ. 19,400 கோடி

எஸ்ஸார் பவர் ரூ.  9,400 கோடி

ருச்சி சோயா     ரூ.  9,400 கோடி  

என இன்னமும் நீள்கிறது அந்த பட்டியல்.    

வாலை வெட்டி சூப் கொடுத்த கதையாக,மக்கள் சேமிப்பை சூறையாடிவிட்டு இலவசமென வெற்று ஜம்பம் அடிப்பதும், தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக கஜானாவை காலி செய்வதற்குப் பெயர் வளர்ச்சி அல்ல; கூட்டுக் களவாணித்தனம்!

கட்டுரையாளர் : ஆர்.பத்ரி

;