articles

img

தடுப்பூசி தட்டுப்பாட்டின் பின்னணி என்ன?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகட்டும், கொரோனா ஊரடங்கு அறிவிப்பாகட்டும், எதையும் கால அவகாசமே வழங்காமல், திடீரென முரட்டுத்தனமாக அறிவித்து நாட்டு மக்களை இம்சை செய்வதுதான் பிரதமர் மோடியின் பாணி. இப்போதைய சூழலில், பிரதமர் மோடியை விமர்சித்து உலகம் முழுவதிலும் இருந்து விமர்சனக் கணைகள் வருகின்றன. மருத்துவமனைகள் ஆக்சிஜன் வேண்டி நீதிமன்றப் படியேறும் சூழலிலும் இந்தியாவின் பிரதமர் ஏன் பொறுப்பில்லாமல் தேர்தல் பிரச்சாரம் நடத்தினார்? ஜனவரி 16 அன்றே தொடங்கிய இந்தியாவின் கோவிட் தடுப்பூசி திட்டம் ஏன் மூன்று மாதங்கள் கடந்தும் ஆமைவேகத்தில் நகர்கிறது? தடுப்பூசி உற்பத்தியில் உலகிலேயேமுன்னணி வகிக்கும் இந்தியாவால் ஏன் தன்னுடைய நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இரு சதவிகிதத்தினருக்குக் கூட முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசிகள் போட முடியவில்லை?-  இப்படி உலகம் முழுவதிலும் இருந்து விமர்சனக் கணைகள் வரும் சூழலில் சும்மா இருப்பாரா நமது பிரதமர்? கடந்த ஏப்ரல் 19 அன்று மற்றுமொரு அவசர கோல அறிவிப்பை வெளியிட்டார்.

‘மே 1 முதல் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசிக் கம்பெனிகள் 50 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசாங்கத்திற்கும், மீதம் 50 சதவிகித தடுப்பூசிகளை மாநில அரசாங்கங்களுக்கும், தனியார்களுக்கும் விற்க வேண்டும். தனியார் தடுப்பூசி கம்பெனிகளே விலையை நிர்ணயிக்கலாம்’ என்று புதிய தடுப்பூசிக் கொள்கையை வெளியிட்டார்.

கொரோனாவை தடுக்கும் எண்ணம் மோடிக்கு இருக்கிறதா? 
இப்போதைக்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போட வழியில்லை. பிரதமரின் அறிவிப்பு வெளியான ஏப்ரல் 19 வரையில் இந்தியாவில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை வெறும் 12.7 கோடிதான். ஜூலைக்குள் 50 கோடி ஊசிகள் என்ற மத்திய அரசாங்கத்தின் இலக்கை எட்டுவோமா என்பதே சந்தேகம்.உச்சபட்சக் கொடுமையாக, நாட்டில் மிகப் பிரம்மாண்டமான 7 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்கள் இருந்தும், மத்திய அரசாங்கம் அவற்றையெல்லாம் விடுத்து, தடுப்பூசி உற்பத்தியை முழுக்க முழுக்க இரண்டே இரண்டு தனியார் கம்பெனிகளிடம் மட்டுமே ஒப்படைத்திருக்கிறது. அவைமாதத்திற்கு 9 கோடி ஊசிகள் என்ற வேகத்தில் தயாரித்தால்கூட என்றைக்கு நாம் 18 வயது நிரம்பிய 60 சதவிகித மக்கள்தொகைக்கு தடுப்பூசி போடுவது? கோவிட் நோயைக் கட்டுப்படுத்துவது?

கடுமையான நிதிநெருக்கடியைச் சந்தித்து வரும் மாநிலங்கள் மீது திடுதிப்பென தடுப்பூசிச் சுமையை ஏற்றி வைப்பது எவ்வகையில் நியாயம்? இதில் அந்த மருந்துக் கம்பனிகள் வேறு, மத்திய அரசாங்கத்துக்கு ஒரு விலை, மாநில அரசாங்கத்துக்கு ஒரு விலை என்று இரண்டு விலைகளை நிர்ணயித்திருக்கின்றன. வெளிச்சந்தையில் எங்களுடைய ஊசி ஒன்றின் விலை 600 ரூபாய் என ஒரு நிறுவனமும், 1200 ரூபாய் என மற்றொரு நிறுவனமும் விலை நிர்ணயித்துள்ளன.

கோவிட் 19ன் வருகைக்கு முன், இந்தியாவின் 90% குடும்பங்கள் மாதம் 10,000 ரூபாய்க்கும் குறைவான மாத வருமானத்தையே ஈட்டி வந்தன. கோவிட் 19 வருகைக்குப் பின், 14 கோடி பேர் வேலை இழந்து, 25% இந்தியர்கள் மாதம்3000க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இந்நிலையில் முந்தைய காலங்களில் இருந்தது போல மத்திய அரசாங்கமே 100 சதவிகித தடுப்பூசிகளை வாங்கி, அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வழியில்லை; இரண்டு டோஸ்களுக்கு ஒரு தனிநபர் செலவழிக்க வேண்டிய தொகை 1200 ரூபாய், அல்லது 2400 ரூபாய் என்றால், மக்களின் நிலை என்ன ஆகும்? இந்தியஅரசாங்கத்திற்கு கோவிட்டை ஒழிக்கும் எண்ணம் இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்விதான் இன்றைக்கு உலகம்முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் கேள்விகள்
ஏப்ரல் 30 அன்று தாமாக முன்வந்து வழக்காக கோவிட்பிரச்சனையை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் 10 கேள்விகளை மத்திய அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது. அதில் ஐந்து கேள்விகள் தடுப்பூசி சம்பந்தப்பட்டவை.

1. சென்ற ஆண்டு தொடங்கி இப்போது வரை தடுப்பூசி நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது? எவ்வளவு முன்பணம் வழங்கியுள்ளது? தடுப்பூசி உருவாக்கத்தில் ஆய்வு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதிப்பங்களிப்பு என்ன?

2.மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில், தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் இணையத்தில் கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது, படிக்காதமக்களுக்கும், இணைய வசதி இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி முன்பதிவை எப்படி அரசாங்கம் உறுதி செய்யும்?

3.தடுப்பூசி பெறுவதில், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தைக் காட்டிலும் முன்னுரிமை பெறுமா?

4. மத்திய அரசாங்கம் 50% தடுப்பூசியை மட்டுமே வாங்கும்பட்சத்தில்,  தனியார் நிறுவனங்கள் வாயிலாக ‘தடுப்பூசி வினியோகத்தில் சமபங்கை’ எப்படி மத்திய அரசாங்கம் உறுதி செய்ய முடியும்?

5. காப்புரிமைச் சட்டத்தின் 92 ஆம் பிரிவைப் பயன்படுத்தி கட்டாய உரிமம் வழங்கி தடுப்பூசிகளை தயாரிப்பதைபற்றி மத்திய அரசாங்கம் பரிசீலித்ததா?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் இதுவரை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுத் துளைத்த கேள்விகளைத்தான் உச்ச நீதிமன்றமும் கேட்டிருக்கிறது. நமக்கெல்லாம் வாய் திறக்காத மத்தியஅரசாங்கம், உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்தே ஆக வேண்டும்.

7 மாபெரும் பொதுத்துறை நிறுவனங்களை ஏன் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்தவில்லை?

‘தனியார் கண்டுபிடித்த தடுப்பூசித் தொழில்நுட்பத்துக்கான உரிமங்களை தனியாரிடம் தானே வழங்கமுடியும்’ எனவும், ‘இந்தியாவின் பழமையான பொதுத்துறைதடுப்பூசி நிறுவனங்களால் தங்களுடைய பழைய கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு புதிய நோயான கோவிட் 19க்கான தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியாது, அதனால்தான் நவீனக் கட்டமைப்புகள் கொண்ட தனியாரிடம் தடுப்பூசி உற்பத்தியை வழங்கி இருக்கிறார்’ மோடி எனவும் தமிழக பாஜககாரர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் உளறிக் கொட்டுகிறார்கள்.  

முதலாவது, பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்ஸின் செயலிழப்பு செய்யப்பட்ட வைரஸ் வகைதடுப்பூசி. செயலிழப்பு செய்யப்பட்ட கொரோனா வைரஸ்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து கோவாக்ஸின் தயாரிப்பதற்காக பாரத் பயோடெக்கிடம் வழங்கியதே மத்திய அரசாங்கத்தின் புனே வைராலஜி நிறுவனம்தான். இந்த வகைத் தொழில்நுட்பம் நம்முடைய பழைய பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களில் ஏற்கனவே இருக்கும் ஒன்றுதான். எனவே, அவற்றின் உற்பத்தி யூனிட்டுகளை கோவாக்ஸின் உற்பத்திக்குத் தகுந்த மாதிரி மாற்றம் செய்து தடுப்பூசி தயாரிப்பது ஒன்றும் குதிரைக்கொம்பு அல்ல.  மேலும், பாரத் பயோடெக் நிறுவனமே தன்னுடைய பழைய யூனிட்டுகளை கோவாக்ஸின் தயாரிப்பிற்காக மாற்றம் செய்துதான் உற்பத்தி செய்கிறது. இதற்காக மத்திய அரசு 65 கோடி நிதியை அதற்கு சமீபத்தில் வழங்கி இருக்கிறது.அடுத்தது, சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட். இது எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசி. இது புதிய தொழில்நுட்பம். இதை உற்பத்தி செய்வதற்கும் சீரம் நிறுவனமே தன்னுடைய முந்தைய கட்டமைப்புகளை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.

அடுத்தது, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக். இது ஒரு டிஎன்ஏ வகை தடுப்பூசி. இது மிகமிகப் புதிய தொழில்நுட்பம். இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துவிட்டது. அதை உருவாக்கிய கேமாலயா நிறுவனம், தனியார் நிறுவனமான ரெட்டிஸ் ஆய்வகம் உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே அவற்றிடம் இருக்கும் கட்டமைப்பில் மாற்றம் செய்துதான், புத்தம் புதிய டிஎன்ஏ வகை தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். இது சாத்தியம் என்பதால்தான் கேமாலயா அவற்றிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

எனவே, புதிய வகைத் தடுப்பூசிகளைத் தரத்தில் குறையில்லாமல் தயாரிப்பதற்கு ஏற்றவாறு, ஏற்கனவே உள்ளகட்டமைப்புகளை மாற்றம் செய்து தயாரிப்பது ஒன்றும் கடினமாக காரியம் அல்ல. எனவே, அரசு கூறும் பொதுத்துறைதடுப்பூசி நிறுவனங்களின் தொழில்நுட்பம் காலாவதியானது என்பதெல்லாம் சொத்தயான வாதம்.அதுவும் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் 904 கோடி செலவில் உருவாக்கப்பட்டு புத்தம் புதிகாகப் பல ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. 150 கோடி முதலீடு செய்தாலே அதில் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும். அதைச் செய்வதற்கு எங்களிடம் பணம் இல்லை, அதனால் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டிருக்கும் பாரத் பயோடெக்கையே முதலீடு செய்ய அணுகுகிறோம் என்று வினோதமாக சொல்கிறது மத்திய அரசாங்கம்.

தடுப்பூசி ஆராய்ச்சி முதல் உற்பத்தி வரை மத்தியஅரசு செய்துள்ள நிதி ஒதுக்கீடுகள் பற்றிய முழுமையான தகவல்களை மத்திய அரசாங்கம் இதுவரை வெளிப்படையாக வெளியிடவில்லை.  விஞ்ஞானிகள் சமூகம்உள்ளிட்ட பல தரப்புகள் அரசிடம் கேட்டும் பரமரகசியமாகவேஇந்தத் தகவல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு உச்சநீதிமன்றம் அதே கேள்வியைக் கேட்டிருக்கிறது.

பல் பிடுக்கப்பட்ட  பொதுத்துறை நிறுவனங்கள்
1802 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து வந்த பெரியம்மைத் தடுப்பூசி முதன்முதலாக மும்பையின் மூன்று வயது குழந்தை ஒன்றுக்குப் போடப்பட்டது. 1850க்குப் பிறகு இந்தியாவிலேயே தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்வதற்கான தேவையை உணர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் செயல்பட்டது. 1890களில் காலரா, பிளேக்கிற்கு தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வுகளை உள்நாட்டிலேயே முடுக்கிவிட்டது. இந்த ஆய்வுகளின் விளைவாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தான்,மும்பை ஹாஃப்கின்ஸ் நிறுவனமும், இமாச்சலின் கசோலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனமும், குன்னூரில் உள்ள பாஸ்டியர் நிறுவனமும்.

முதல் உலகப்போரை ஒட்டிப் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றால் ஒரு கோடியே 70 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்தார்கள். இந்தக் காலத்தில் குன்னூரில் பாஸ்டியர் நிறுவனம் நெஞ்சக நோய்களுக்கான தடுப்பூசிகளில் கவனம் செலுத்தியது. ரேபீஸ் தடுப்பூசியிலும் அது பெரும்பங்காற்றி இருக்கிறது. பிற்காலத்தில் 1948ல் கிண்டியில் கிங்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள பி.சி.ஜிதடுப்பூசி ஆய்வகம் தொடங்கப்பட்டது. இந்த பொதுத்துறைநிறுவனங்கள் எல்லாம் காலங்காலமாக பெரியம்மை, பிளேக் உள்ளிட்ட கொள்ளை நோய்களை ஒழிப்பதற்கான தடுப்பூசி ஆய்விலும், தடுப்பூசி உற்பத்தியிலும் பெரும்பங்கு ஆற்றி இருக்கின்றன. அதனால் தான் 1975-ஆம் ஆண்டிற்கு மேல் ஒரு பெரியம்மை தொற்றாளரைக் கூடநாம் இதுவரைக் காணவில்லை. அந்தளவுக்கு இந்தநிறுவனங்களின் பங்களிப்புகளால் தான் நாம் இதுவரை பல நோய்களை ஒழித்துள்ளோம், கட்டுப்படுத்தியுள்ளோம். 1980க்குப் பிறகு தாராளமயக் கொள்கைப் பாதையில் பயணிக்கத் தொடங்கியதில் இருந்து அரசு நிறுவனங்களை படிப்படியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டது.

இருந்தும், 2000த்தின் பிற்பகுதி வரைகூட மத்தியஅரசின் அனைவருக்கும் தடுப்பூசி திட்டங்கள் அனைத்துக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தடுப்பூசிகளை வழங்கியது பொதுத்துறை நிறுவனங்கள் தான்.  2008 ஆம் ஆண்டில் குன்னூரில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தையும், கசோலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தையும், கிண்டியின் பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகத்தையும் மத்திய அரசாங்கம் உலக வங்கியின் தரக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்ற காரணம் காட்டி மூடியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு 2012ல் இந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

2010 ஆம் ஆண்டில் பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்கள் குறித்த ஜாவேத் சௌத்ரி ஆணையம், ‘அரசாங்கம் தனியார் தடுப்பூசி யூனிட்டுகளை ஆய்வு செய்துநெறிப்படுத்துவதற்குக் காட்ட வேண்டிய ஆர்வத்தைவிடப் பல மடங்கு ஆர்வத்தை, பொதுத்துறை நிறுவனங்களை மூடும் நோக்கிலான ஆய்வுகளில் காட்டியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. ‘பொதுத்துறை நிறுவனங்களின் பிரச்சனைகள் என உலக சுகாதார மையங்கள் சுட்டிக்காட்டியவை பெரும்பாலும் நிர்வாகத்தால் சரி செய்யக்கூடியவைதான்’ என்றும் சுட்டிக்காட்டியது.  இந்த ஆணையம் ‘விரைவில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசாங்கம் உயிர் தர வேண்டும்’ என்றும் சொன்னது. அதன் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டதுதான் செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம். 58 கோடி தடுப்பூசிகளை உருவாக்கும் திறன் கொண்ட இந்தக் கட்டமைப்பு 904 கோடி பொருட்செலவில்  உருவாக்கப்பட்டு புத்தம் புதிய நிலையிலேயே பல ஆண்டுகளாகப் பூட்டி வைத்துக்கொண்டிருக்கிறது மோடியின் மத்தியஅரசாங்கம். இது நவதாராளமயப் பாதையில் அதிவேகமாக பாஜக அரசாங்கம் பயணிப்பதன் விளைவே.   

1970 ஆம் ஆண்டில், இந்தியாவில் 19 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களும், 12 தனியார் நிறுவனங்களும் இருந்தன. இன்றைக்கு 2021 ஆம் ஆண்டில் 14 தனியார் நிறுவனங்களும், 7 அரசு நிறுவனங்களும் மட்டுமே இருக்கின்றன. 2006-2007 ஆம் ஆண்டில் அரசு தடுப்பூசி திட்டத்துக்குத் தேவையான 92% தடுப்பூசிகளை பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்கள்தான் வழங்கின. ‘இன்றைக்கு அரசு 80% தடுப்பூசிகளை தனியாரிடம் இருந்து வாங்குகிறது. அரசுப் பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களின் பற்களைப் பிடுங்கியதால் இன்றைக்கு இந்தியா250% அதிக விலையில் தனியாரிடம் தடுப்பூசி வாங்குகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் வீணாக 7 மடங்குநம்முடைய மருத்துவ பட்ஜெட் அதிகரித்துள்ளது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போதும், இந்த 7 பொதுத்துறை நிறுவனங்களையும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் பயன்படுத்தி இருந்தால், நாம் இன்றைக்கு தடுப்பூசி பற்றாக்குறையை சந்தித்திருக்க மாட்டோம். இப்போதும் தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
மக்கள் மரித்தாலும் பரவாயில்லை;

 தனியாரின் லாபம் தான் முக்கியம்
பேரிடர் காலங்களில் காப்புரிமை சட்டத்தின் 92 ஆம் பிரிவைப் பயன்படுத்தி ஏன் நிறுவனங்களுக்குக் கட்டாயஉரிமங்கள் வழங்கி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இடதுசாரி இயக்கங்கள் மற்றும் மக்கள் அறிவியல் இயக்கத்தின்தொடர் பிரச்சாரத்தால் காப்புரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் தான் பிரிவு 92. அந்த அதிகாரத்தை இப்போது பயன்படுத்தாமல் வேறு எப்போது பயன்படுத்தப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. இந்தப் பிரிவைப் பயன்படுத்தி கட்டாய உரிமம் வழங்கும்போது, 100 சதவிகித உற்பத்தியை மத்திய அரசாங்கம் தான் வாங்கவேண்டும். அதைச் செய்வதற்கு மோடியின் மத்திய அரசாங்கத்திற்கு துளியும் விருப்பம் இல்லை. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் தன்னுடைய கடமையில் இருந்துநழுவி, மாநில அரசாங்கத்தின் தலையில் பொறுப்பைக் கட்டிவிட்டது நம்முடைய மத்திய அரசாங்கம். ‘அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி என்பது எனது நோக்கமல்ல; தனியாரின் லாப வேட்டைக்கு வழிவகுப்பதே என்னுடைய நோக்கம்’ என்கிறது மத்திய அரசாங்கம். இத்தகைய ஒருவலதுசாரி அரசுக்கு, 92 ஆம் பிரிவைப் பயன்படுத்துவதற்கும், கட்டாய உரிமத்தால் தயாரிக்கப்படும் 100 சதவிகிததடுப்பூசிகளையும் வாங்குவதற்கும் துளியும் விருப்பம் இருக்காது. 

ஒரு பெருந்தொற்றை உலகில் இருந்து ஒழிக்க, மனித சமூகத்தில் குறிப்பிட்ட சதவிதம் பேர் தடுப்பூசி போட வேண்டும்.  நாடு தழுவிய அளவில், அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி என்ற கொள்கையைத் திறம்பட வெகுசீக்கிரமாக செயல்படுத்தினால் மட்டுமே இந்தப் பெருந்தொற்றை ஒழிக்க முடியும். உலகின் ஒரே ஒரு நாடால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இது பல காலம் தொடரப் போகும் ஒரு சர்வதேசப் பிரச்சனையாகத் தான் இருக்கப்போகிறது. அதனால்தான் சர்வதேச அளவில் மோடி அரசாங்கத்தை விமர்சித்து உலகம் முழுவதுமிருந்து விமர்சனக் கணைகள் வருகின்றன.

உச்சநீதிமன்றமும், இதனால்தான், மத்திய அரசாங்கம் 50% தடுப்பூசியை மட்டுமே வாங்கும்பட்சத்தில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக ’தடுப்பூசி சமபங்கை’ எப்படி மத்திய அரசாங்கம் உறுதி செய்ய முடியும் எனக் கேட்கிறது. இதே அணுகுமுறையைக் கொண்டிருந்தால் மோடிஅரசாங்கத்தால் நிச்சயம் உறுதி செய்ய முடியாது என்பதே பதில். எனவே, மத்திய அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களையும், வாய்ப்புள்ள பல தனியார் நிறுவனங்களையும் பிரிவு 92ன் கட்டாய உரிமத்தின் கீழ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்த வேண்டும். அப்படித் தயாரிக்கப்படும் ஊசிகளில் 100 சதவீதத்தையும் மத்திய அரசாங்கமே வாங்கி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் கோரோனாவை நம்மால் ஒழிக்க முடியும்.
‘தடுப்பூசியின் விலை ஒரே விலையாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த விலை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்’ என்றுமத்திய அரசின் முன்னாள் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆம், தடுப்பூசியின் விலை பூஜ்ஜியமாக மட்டுமே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கொரோனாவை நம்மால் ஒழிக்கவே முடியாது.

கட்டுரையாளர் : நர்மதா தேவி

இந்த கட்டுரைத் தொகுப்பு 4-ஆம் பக்கத்தில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தலையங்கத்தின் கீழ் பகுதியில் கடைசி பத்தி என்ற பெயரில் உள்ளது. தோழர்கள் படிக்கும் வசதிக்காக இந்த கட்டுரைத் தொகுப்பில் ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.  

;