articles

img

என்ன நடக்கிறது லட்சத்தீவில்?

லட்சத்தீவுமக்கள் அரேபியக் கடலின் மடியில் நிம்மதியாக வாழ்ந்தனர். எந்தவொரு போதையும் இல்லாமல், லாபம் மற்றும் இழப்பு பற்றிய பெருநிறுவன புள்ளிவிவரங்கள்  எதுவுமில்லாமல், அவர்கள் பாரம்பரியத்தின் வலிமையின் பேரில்  வாழ்க்கைக்கடலை  நீந்தினர்.ஆனால் திடீரென்று எல்லாம் மாறுகிறது. பாஜக தலைமையிலான மத்தியஅரசு, பிரபுல் கோடாபடேலை லட்சத்தீவுகள் யூனியன் பிரதேச தலைமை  நிர்வாகியாக நியமித்து, அந்தக் கடலில் வகுப்புவாத விஷத்தை கலக்க முயற்சிக்கிறது. லட்சத்தீவின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும்‘சீர்திருத்தங்களை’ கொண்டுவருவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட வழி இது. 

யூனியன் பிரதேசத்தின் ‘அட்மினிஸ்ட்ரேட்டர்’ எனும் பதவியை அரசியல் ரீதியிலானதாக மாற்றியபிறகு படேலைநியமித்து முதல்கட்ட முயற்சி டாமன் - டையூவில் மேற்கொள்ளப்பட்டது.2020 டிசம்பரில் லட்சத்தீவு அட்மினிஸ்ட்ரேட்டர் என்ற கூடுதல் பொறுப்பு பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அங்கு மோசமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

திடீர் தாக்குதல்கள்
படேல்  பொறுப்புக்கு வந்த பின்பு,தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு மாவட்டப் பஞ்சாயத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை அட்மினிஸ்ட்ரேட்டர் நிர்வாகத்தின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன. ஒப்பந்த முறையில் அரசுப்பணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தீவுவாசிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சுற்றுலாத் துறையில் மட்டும் 190பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மக்கள் தொகையில் பெரும்பான்மையான மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் , வைக்கப்பட்ட கொட்டகைகள் கடலோர காவல்படை சட்டத்தின்கீழ் இடிக்கப்பட்டன.

கோவிட்நெறிமுறை சீர்குலைக்கப்பட்டது.கோவிட் 60 சதவிகிதத்திற்கு மேல் பரவுகிறது. ஐம்பதுஆண்டு கால மதுவிலக்கு நீக்கப்பட்டது. சுற்றுலா என்ற பெயரில் மதுபான உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மாட்டிறைச்சிதடை செய்யப்பட்டது,  பள்ளி மதியஉணவு மெனுவிலிருந்து இறைச்சி விலக்கப்பட்டுள்ளது. 38 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.துப்பாக்கிச் ச ட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பேப்பூர் துறைமுகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அனைத்து சரக்குகளையும் மங்களூருக்கு திருப்புவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அமைப்பிலிருந்து உள்ளூர்வாசிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் குடியுரிமை பதிவுக்கு எதிரான சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

புதிய நிலச்சட்டம்
 புதிய நிலச்சட்டம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று விதிக்கிறது.மத்திய அரசின் நிர்வாகி பிரபுல் படேல், லட்சத்தீவில் மேற்கொண்டுள்ள தலைகீழ் ‘சீர்திருத்தங்கள்’ மூலம் தீவிர கார்ப்பரேட்  மயபூமியாக லட்சத்தீவுகளை மாற்ற முயற்சிக்கிறார்.  தாதர் - நாகர் ஹவேலி, டாமன் - டையூ யூனியன் பிரதேசங்களில் படேல் இதைத்தான் செய்தார். அங்கு பழங்குடி மீனவர்கள் கடற்கரையிலிருந்து விரட்டப்பட்ட பின்னர், கடற்கரை பெரிய சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. அங்கு நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிராக உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டாமன் டையூவில் இரண்டு அரசு பள்ளிகளை சிறைகளாக மாற்றி  பழங்குடியினர் உட்பட போராட்டக்காரர்களை எதிர்கொண்டவர் தான் இந்த படேல்.

படேலின் பினாமிகள்
  படேல் பெரிய
அளவிலான கட்டுமானத்தில் ஆர்வம் காட்டினார். சுற்றுலாமேம்பாடு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் அங்கு நுழைவதற்கான நிலைமைகளை உருவாக்கினார். கீழ்ப்படிதல் கொண்ட அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மக்கள் விரோதசீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரேநாளில், 550பழங்குடி அதிகாரிகள் முக்கியமான பொறுப்புகளில் இருந்துவிடுவிக்கப்பட்டனர். அவர் துப்பாக்கிச் சட்டத்தை அமல்படுத்தி ஆதிவாசிகளை  வெளியேற்ற முயன்றார். அங்கன்வாடிகள் மூடப்பட்டன. மதிய உணவு சமையலறைகள் நிறுத்தப்பட்டு, அட்சயபாத்ரா என்ற ஒருங்கிணைந்த சமையலறை அமைக்கப்பட்டு, அவை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கட்டுமானத்துறை உள்ளிட்ட ஒப்பந்தக்காரர்கள் படேலின் பினாமிகள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.டாமன் மற்றும் டையூவைச் சேர்ந்த பழங்குடியினத்தைச்  சேர்ந்த பாஜக எம்.பி.மோகன் தேல்கர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் படேல் முக்கிய குற்றவாளி. தற்கொலைக் குறிப்பில்  படேலின் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்த போது டாமன் - டையூவில் தலைமறைவான படேல், கோவிட்பரவல் அதிகரித்த நிலையில், போராட்டங்களின் சூடு தணிந்ததும் தலை காட்டினார்.இத்தகைய நபரிடம் தான் இப்போது லட்சத்தீவுகளின் தலைமைப்பொறுப்பும் மோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது.

ஒடுக்குமுறையும் இணையத்தடையும்
லட்சத்தீவில் இவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மூன்று இளைஞர்களை லட்சத்தீவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர்,எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.அகட்டிதீவைச்சேர்ந்த நாசிம், (17) மற்றும்ஹம்ஸத் (24), பித்ரா தீவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆகியோர் காவலில் வைக்கப்பட்டனர். நசீம் மற்றும் ஹம்சத் ஆகியோர் அகட்டி காவல் நிலையத்திற்கு இரவில் அழைத்துச் செல்லப்பட்டனர். தலைநகர் கவரட்டியிலிருந்து செய்தி வந்ததும் மேலதிக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வரவழைக்கப்பட்டு எதிர்காலத்தில் எதிர்ப்புதெரிவிக்காமல் இருக்குமாறு மிரட்டினர்.நிர்வாகிக்கு “சேவ் லட்சத்தீவ்” என செய்தி அனுப்பியதாக நசீம் மீது குற்றம்சாட்டப்பட்டது.வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பு விடுத்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றதாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. கோவிட் கட்டுப்பாடுகள்  அமலில்உள்ளதால், இணையத்தை பயன்படுத்தி ஆன்லைனில் எழும்எதிர்ப்புகளை தடுக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மொபைல் இணையத்தை 3 ஜி வேகத்திலிருந்து 2 ஜிஆக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையம் பல இடங்களில் மந்தமாகிவிட்டது. பிராட்பேண்ட் இணைப்புகளும் வேகமாக இல்லை. இணைய அணுகல் இல்லாமல் தகவல் உடனடியாக வெளியிடப்படாது என்பதும்,தீவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறி அதிகாரப்பூர்வ அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதும் நிர்வாகத்தின் திட்டமாகும். இதற்காக, கூடுதல் அரசு வழக்கறிஞரின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டப்பட்டது.

டாமனில் செய்த அட்டூழியத்தின் நகல்
லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல், உள்ளூர் மீனவர்களை துன்புறுத்துவதை அமல்படுத்தியதே டாமனிலும் டையூவிலும் செய்ததன் நகல்தான். டாமன் கலங்கரை விளக்கத்திலிருந்து ஜம்போரி வரை ஒரு கிலோமீட்டர் தொலை
வில் உள்ள அழகிய கடற்கரையை கைப்பற்றி தனது கார்ப்பரேட்  நண்பர்களிடம்  ஒப்படைக்க மோடி விரும்பினார். அதற்காக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வந்தபழங்குடியின டமானிய மீனவர்களை பிரபுல்படேல் இரக்கமின்றி விரட்டியடித்தார்.கடற்பரப்பை விரிவுபடுத்திட, அந்த இடத்தைக்காலி செய்ய வேண்டும் என 2018 டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டாமன்இனத்தவரில்  11,000 பேர் இங்கிலாந்தின் லீசெஸ்டரில் வசிக்கின்றனர்.அவர்களது புகாரின்படி, தொழிற்கட்சி எம்.பி.கீத்வாஸ், உடனடியாக விமானம் மூலம் வந்து படேலைசந்தித்து வெளியேற்றத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டனர்.

2019 நவம்பர் 3 ஆம் தேதி தடை அறிவிக்கப்பட்டது. தற்காலிக சிறைச்சாலைகள் திறக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை கைதுகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு புல்டோசர் கொண்டு வரப்பட்டு அனைத்து வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. வீடற்றவர்களில் பெரும்பாலோர் இப்போது சேரிகளில் வாழ்கின்றனர். போர்த்துகீசியர்களால் முடியாததை மோடியின் நிர்வாகி படேல் செய்து முடித்தார். உலகளாவிய கார்ப்பரேட் ஹோட்டல் நிர்வாகத்திடம் டாமன்  கடற்கரை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைதான் இப்போது லட்சத்தீவில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. இப்பகுதி படிப்படியாக ஏகபோக கார்ப்பரேட்  ஹோட்டல் நிர்வாகங்களின் கைகளுக்கு நகரும்.

தீவுவாசிகளுக்கு எதிராக பொய் பிரச்சாரம்
இந்நிலையில், மத்திய அரசுக்கும் அட்மினிஸ்ட்ரேட்டருக்கும் அடிபணியாத லட்சத் தீவுவாசிகளுக்கு எதிரானபொய் பிரச்சாரத்தில் அதிகாரிகளும் சங்பரிவார் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். தீவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது.ஆனால் அங்கு ஒருதாக்குதல் வழக்கு கூட பதிவாகவில்லை. வெளிநாட்டு கப்பல் பாதை வழியாக சென்ற இலங்கை படகில்இருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில், தீவுவாசிகளின் பெயர்களை குற்றவாளியாக திணிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக  பரப்பப்படுகின்றன.கடற்கொள்ளையர்கள் மற்றும் பிறரால் தங்கம், துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தப்படுகின்றன. இந்திய கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்ட இந்த குழுக்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும். லட்சத் தீவுவாசிகள் இதில்ஒருபோதும் ஈடுபடவில்லை. ஆனால் தீவில் குண்டர் சட்டத்தைஅமல்படுத்துவதை நியாயப்படுத்த தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தீவுவாசிகள் தெரிவிக்கின்றனர். 

நன்றி  : தேசாபிமானி 

தமிழில் , தொகுப்பு: சி.முருகேசன்

;