articles

img

தடுப்பூசிகளும் தாராளமய கோரமுகமும் - சுஜித் அச்சுக்குட்டன்

கொரோனா 3வது அலை எதிர்வரும் மாதங்களில் வரக்கூடும் என்ற தகவல்களோடு  மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை என்ற செய்தியும் வரு கிறது.  கோவிட் 19-ஐ உருவாக்கும் வைரஸ் (SARS-CoV-2)   உட்பட அனைத்து வைரஸ்களும் காலப் போக்கில் பிறழ்வு அடைகின்றன. தொற்று எவ்வளவு எளிதில் பரவுகிறது, தொடர்புடைய நோயின் தீவிரம் தடுப்பூசிகளின் செயல்திறன், சிகிச்சை மருந்துகள், கண்டறியும் கருவிகள் அல்லது பிற பொது சுகாதா ரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் போன்ற வைரசின் பொதுப்பண்புகளை  சில பிறழ்வுகள் பாதிக்கலாம்  (உலக சுகாதார அமைப்பின் வைரஸ் (Tracking SARS-CoV-2 variants) வகைகளைக் கண்கா ணித்தல்)  என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கொரோனா வைரசின் எதிர்கால உருமாற்றம்  திரிபு கள் அல்லது புதிய தொற்றுகள் அவைகளுக்கான  தடுப்பூசிகளின் அவசரத் தேவை நாட்டின் மிகப்பெரும் சவாலாக உருவாகக்கூடும். இந்தக்கவலை தடுப்பூசிப் பற்றாக்குறையால் மக்கள் அனுபவித்த துன்பங்க ளிலிருந்து நமக்கு உருவாகியுள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக  இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.  முற்றிலும் ஏழை எளிய நடுத்தர மக்களைக் கொண்ட நமது நாட்டின் உயிர்காக்கும் தடுப்பூசிகளின் உற்பத்தி முற்றிலும் தனியார் துறையை  சார்ந்திருப்பது ஆபத்தானது.

கண்கொத்திப் பாம்பாய்……

கொரோனா தடுப்பூசிகளின் இந்திய சந்தையின் மதிப்பு 2027 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.16660-கோடி) மேல் வளர்ச்சியடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்  முன்னறிவிப்பு காலத்தில் 25சதவீதத்திற்கும் அதிகமான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது  என்பதால்   தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள சந்தை யாக மாறிக்கொண்டிருக்கிறது. (Market research - India Vaccines Market – Growth, Forecasts (2021 – 2027).  உலக சந்தையின் மதிப்பு 2024 ஆம்  ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்ற  தகவல்களிலிருந்து  இந்தியச் சந்தையின் அளவை  நாம் புரிந்து கொள்ள முடியும். கோவிட் 19 தடுப்பூசி நீங்கலாக இதர தடுப்பூசிகளின் இந்திய சந்தை மதிப்பு  2019ஆம் ஆண்டில்  ரூ.9400 கோடியாக இருந்தது.  இதன் வளர்ச்சி  17.8 சதவீத  கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தோடு கணக்கிட்டால்  2025 ஆம் ஆண்டில் இந்திய தடுப்பூசி சந்தை மதிப்பு ரூ.25200 கோடியை எட்டும் என  சர்வதேச சந்தை பகுப்பாய்வு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக் குழு (IMARC Groups)வின்  இந்திய தடுப்பூசி சந்தை அறிக்கை மற்றும் முன்னறிவிப்பு 2020 - 2025 அறிக்கை கூறுகிறது. இத்தொகையோடு எதிர்கால வைரஸ் தொற்று  மற்றும் கோவிட் 19 புதிய திரிபு களுக்காக கண்டுபிடிக்கப்படும் புதிய தடுப்பூசிகள் உள்பட கோவிட் 19 தடுப்பூசி   சந்தையின் மதிப்பை சேர்த்தால் பில்லியன் மடங்குகள் மதிப்புள்ள மிகப் பெரும் இந்திய தடுப்பூசி  சந்தையைதான்   நிரந்தர வேட்டைக் களமாக இந்திய தனியார் மற்றும் அந்நிய நிறுவனங் கள் கண்கொத்திப்பாம்பாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

தடுப்பூசி தயாரிப்பில்  தனியாரின் ஆதிக்கம்

எல்லா வகை தடுப்பூசிகளின் பெரும்பகுதி உற்பத்தி  சீரம் இன்ஸ்டிடியூட், சைடக் கெடில்லா, ஜென்னோவா பயோ பார்மசூடிக்கல், பனாசியா பயோடெக்,  மைன் வாக்ஸ், பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்ட ரிஸ், பாரத் பயோடெக் ஆகிய தனியார் நிறுவனங்களி டம் தான் உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை  இத்தனி யார் உற்பத்தி நிறுவனங்கள்  கொள்ளை லாபம் பார்க்கும் பெரும் வணிகமாக மட்டும் பார்க்கின்றன. தடுப்பூசி வர்த்தகத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உரு வாக வேண்டும் என்ற பேராசையும் அதையொட்டிய மறைமுகமான போட்டிகளும் கம்பெனிகளுக்கிடை யில்  நடைபெறுவதாகவும் இத்துறையில் உள்ளவர்கள் கருதுகின்றனர். 2000 ஆம் ஆண்டிற்கு முன்புவரை  உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்திற்கான 80 சதவீதம் தடுப்பூசிகள் பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்டன. பின்னர் இந்திய  பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டன. பொதுத்துறை-அரசுத்துறை நிறுவனங்களின்  உற்பத்தி  இல்லாத தால் உண்மையான  உற்பத்திச் செலவை  கணிக்க  முடியாத நிலை உருவாகியிருந்தது.  வெளிச்சமில்லா மர்ம  குகைக்குள்  உண்மைப் பொருளை தடவித் தேடு வதைப் போல  தடுப்பூசிகளின் உற்பத்தி  விலை மற்றும் விற்பனை விலை, இந்திய தடுப்பூசி கொள்கை களில் அரசு, தனியாரின் பங்கு இவைகளில் என்ன, எப்படி, எது என்பதை தெரிந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தனியார் தடுப்பூசிகளின் விலை நிர்ணயத்திலும்   தடுப்பூசி சம்பந்தப்பட்ட சட்டங்கள் விதிகள் உள்பட அனைத்திலும் தனியார்துறையினர் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாறி உள்ளனர். வெளிப் படை இல்லாத்தன்மை மேலும் வளர்ந்துள்ளது. 

மோடிஜியின் திக்விஜயம்

சென்ற ஆண்டு நவம்பர் மாதம்  நரேந்திர மோடி ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், அகமதா பாத்தில் உள்ள சைடஸ் கேடில்லா, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய தனியார் நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்தித் திட்டங்களை  நேரில் சென்று பார்வையிட்டார். அதில் ஒரு நிறுவன முதலாளி மோடியின் பாதங்களுக்கு குனிந்து மரியாதை செய்தார். மற்றொரு முதலாளி மனித ரோபாட் பாணியில் சற்றே குனிந்து  நமஸ்காரம் செய்தார். உலகில் எந்த நாடும் கண்டிராத அபூர்வக் காட்சிகள் இவை. பாஜக வின் தாராளமய கார்ப்பரேட்டிசத்திற்கு கிடைத்தற்க ரிய இந்த காணொலி காட்சிகளை எல்லா மொழிக ளிலும்  இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பின. இதில் வேதனை  என்னவென்றால் அதே ஹைதராபாத்தில் தான் இந்திய பொதுத்துறை நிறுவனமான  இந்தியன் இம்யூனாலஜிக்கல் லிமிடெட் நிறுவனம் உள்ளது. அதில் இந்தியாவின் ‘சக்திமான்’ மோடிஜி காலடி எடுத்து வைத்தாரா, அதன் உற்பத்தி வசதிகள் தேவைகளை  பார்வையிட்டு கேட்டறிந்தாரா  என்பதைப் பற்றி எந்த தகவலையும் அந்த ஊடகங்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. 

தாராளமயத்தின் கோர முகம் 

உயிர் காக்கும்  தடுப்பூசி உற்பத்தியில்   தீவிர  தாராள மயத்தின்  மிக மோசமான  சம்பவங்கள்  இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன. கோவிஷீல்டு, சீரம் நிறுவனத்திற்கு ரூ.3ஆயிரம் கோடியும், கோவாக்சின் பாரத பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1500  கோடியும், தடுப்பூசி  முன்பணமாக ஒன்றிய அரசு அளிக்கவிருக்கிறது என்ற  முதல் செய்தியை  10.4.2021 இந்தியா டுடே வெளியிட்டிருந்தது. இரண்டா வது செய்தியாக 1.5.2021 அன்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறு வனத்தின் செயல் தலைவர் ஆதார் பூனாவாலாவிற்கு  முதலமைச்சர்கள் உள்பட சக்திவாய்ந்த நபர்களிட மிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் இதன் காரண மாக அவர் லண்டனுக்கு தப்பித்துச் சென்றதாகவும் தி டெலிகிராப் உள்ளிட்ட இந்திய பத்திரிக்கைகளில்  செய்திகள் வெளியாயின. அதே நேரத்தில் மூன்றாவது செய்தியாக   பிரிட்டன் இதழான தி டைம்ஸ்  ஏடு, சீரம் நிறுவனம் மற்ற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது என்ற செய்தியை வெளியிட்டிருந்தது. நான்காவதாக, பாஜகவின் ஆதரவு. ஊடகமான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் வேர்ல்ட் புளகாங்கிதத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. தனது லண்டன் கூட்டாளி களை ஆதார் பூனாவாலா சந்தித்ததற்குப் பிறகு நாசிவழி ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் பிரிட்டனில் துவக்கப்பட்ட தாகவும் தனது தடுப்பூசி தொழிலை விரிவுபடுத்தவும் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை பிரிட்ட னில் (!) உருவாக்கும் புதிய விற்பனை அலுவலகத்தை அமைக்கவும் பிரிட்டனில் சுமார் ரூ.2469 கோடி (ஆகஸ்ட் 2021 மதிப்பில்) அளவில்ஆதார் பூனாவாலா  முதலீடு செய்வதாகவும் 3.5.2021 அன்று லண்டனில் அறிவிக்கப் பட்டதாக ரிபப்ளிக் வேர்ல்ட் ஊடகத்தின் அச்செய்தி கூறியது. 

இந்தியாவில் முதலமைச்சர்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆட்களின் அச்சுறுத்தல்களால்தான் லண்ட னுக்குதப்பித்து செல்லவேண்டியிருந்தது என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா கூறியது பொய் என்பதும் தனது உலகளாவிய தடுப்பூசி வணி கத்தின் விரிவாக்கத்திற்கு போலியான காரணத்தை கூறி லண்டன் சென்றார் என்பதும் நிரூபணமானது. 

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை யின் பாதிப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து மிகக்கடுமை யாகி மே,ஜுன் மாதங்களில் உச்சத்தை எட்டியிருந்த நிலையில்  தடுப்பூசி பற்றாக்குறையால் நமது மக்கள் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தன் நாட்டு  மக்களுக்கான தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்து வதில்  மட்டும் சீரம் நிறுவனம் தன் முழு கவனத்தை  செலுத்தியிருக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து விலகி பிரிட்டனில் தனது தடுப்பூசி வணிக விரிவாக்க வேலைகளில் கோவிஷீல்ட் சீரம் நிறுவன முதலாளி ஆதார் பூனாவாலா ஈடுபட்டிருந்தது அம்பலமானது. மிகப்பெரும் பெருந்தொற்றின்போது ஒரு ஜனநாயக நாட்டின் சர்வதேச உதவி ஒத்துழைப்பு அரசின் கொள்கை முடிவாக இருக்க வேண்டும். ஆனால் சீரம் நிறுவனம் தன்னிச்சையாக தனது லாப நோக்க வணிக விரிவாக்க செயல்பாடுகள் மோடி அரசால் அனுமதிக்கப்பட்டது.   

பற்றாக்குறையையே  நிர்பந்தமாக  மாற்றும் சாதுர்யம்  

28.4.2021 அன்று 11 கோடி கோவிஷீல்டு தடுப்பூ சிக்கான மூன்றுமாத   முன் தொகை ரூ.1732.50 கோடி  சீரம் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவித்தது. முந்தைய 10 கோடி தடுப்பூசி ஆர்டரில்  8.747 கோடி 3.5.2021 வரை பெறப்பட்டுள்ளது. புதிதாக அரசு தடுப்பூசி ஆர்டர் எதுவும் சீரத்திற்கு வழங்கவில்லை என்ற பத்திரிக்கை செய்திகள் ஆதார மற்றவை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. (எக்கானமிக்ஸ் டைம்ஸ் 3.5.2021). 

ஆரம்பம் முதலே இந்தியாவின் பெரும் நிறுவனங்க ளில் ஒன்றான சீரம் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு சப்ளை புள்ளிவிபரங்கள் குழப்பங்கள்- மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்தன. நாடாளு மன்றத்தில் விதவிதமான புள்ளிவிபரங்கள் கூறப் பட்டன. லண்டனுக்கு தப்பித்துச் சென்றதற்கு பூனாவாலா கூறிய சோகம்  ததும்பும் காரணங்களில் ஒன்று எல்லாவற்றையும் என் தோளிலேயே சுமத்தி னால் நான் என்ன செய்யமுடியும் என்பதுதான். பெருந்தொற்றின் உச்சக்கட்டத்திலும்  தடுப்பூசிப் பற்றாக்குறையை அரசியல் நிர்பந்தமாக மாற்றி வர்த்தக லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் லாவகத்தை புதிய தாராளமயம் இந்திய முதலாளித்துவத்திற்கு பரிசாக வழங்கியதற்கு இது ஒரு அண்மை உதார ணமாகும். நமது டிஜிட்டல் ‘சக்திமான்’ மோடிஜியின் ஆசியால்  கோவிட் 19 நெருக்கடியின்போது  பெரும் லாபத்தை குறுகிய காலத்தில் சீரம் (கோவிஷீல்ட்) நிறுவனம் அறுவடை செய்துகொண்டது.

2019-20-நிதியாண்டில் 418 இந்திய நிறுவனங்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக பெரு நிறுவன தரவுத்தளமான ‘கேபிடலைன்’ தெரிவித்துள் ளது. வருவாயின் ஒவ்வொரு ரூபாய்க்கும், அதிகபட்ச நிகர லாபத்தை ஈட்டிய ஒரே நிறுவனம்  சீரம் இன்ஸ்டி டியூட் ஆப் இந்தியா தான் – ரூ.5,446 கோடி நிகர விற்பனை யில், சீரம்  ரூ.  2,251கோடி நிகர லாபம் ஈட்டியது. (Live mint 15.5.2021).அதாவது 2019-2020- ஓராண்டில் மட்டும்  41.3 சதவீதம் நிகர ஆதாய வீதமாகும். கோடிக்க ணக்கான மக்கள் பதறியடித்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 2020-2021 மற்றும் 2021-2022 நிதி யாண்டுகளில் சீரம் நிறுவனத்தின் லாபம் கொள்ளை யோ கொள்ளை லாபமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இந்தியாவில் திரட்டிய இந்த உபரி லாபம் மூலதனமாக மாறி பிரிட்டனுக்கு  சென்றது என்றா லோ அல்லது பூனாவாலாவின் பிரிட்டன் முதலீட்டின் பெரும்பகுதி கோவிஷீல்ட் சப்ளைக்கான இந்திய  மக்களின் முன்பணத்தொகையிலிருந்து ஈடுகட்டப்பட் டது என்று நாம் கூறினாலோ இரண்டும் மிகையல்ல. தவறல்ல. ஏனென்றால் மூலதனத்திற்கு லாபம் என்றால் அது  நாடுவிட்டு நாடல்ல; கண்டம் விட்டு  கண்டமும் பாயும்.


 

;