articles

img

கலைஞானமும் இல்லை இதயமும் இல்லை....

மத்திய அரசாங்கம், ‘சென்ட்ரல் விஷ்டா மறுஅபிவிருத்தித் திட்டம்’ என்னும் திட்டத்தின்கீழ் பல கட்டிடங்களை இடிக்க முடிவு செய்திருப்பது தொடர்பாக அறிஞர் பெருமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் இந்தத் திட்டம் கொரோனாவைரஸ்பெருந்தொற்றுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு, தேசிய முன்னுரிமை அளித்திருப்பது மிகவும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், பிரதமருக்கும், குடியரசுத்துணைத் தலைவருக்கும் புதிய இல்லங்கள்கட்டுவது ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடம்உண்மையில் தேவைதான். மத்திய அரசாங்கத்தின்கீழ் இப்போது உள்ள அலுவலகங்கள் பலவற்றை மாற்றியமைப்பதற்கு வலுவான காரணங்களும் இருக்கிறது. எனினும், இதனை இப்போது இவ்வளவு ஆடம்பரத்துடன் கட்டவேண்டியது தேவைதானா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று நாட்டையே பேரழிவுக்கு உட்படுத்திக்கொண்டிருப்பதற்கு மத்தியில், மக்களின் நலன்களைப் புறந்தள்ளிவிட்டு, கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடம் என்ற அவப்பெயர் இதற்கு ஏற்படக்கூடும். 

எப்படியும் இந்தத்திட்டத்தின் கீழ் 2024இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்டிடங்களைக் கட்டி முடித்துவிட வேண்டும் என மத்திய அரசு வீம்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும் இவ்வாறு இந்தத் திட்டத்திற்காக,இருக்கின்ற கட்டிடங்கள் பலவற்றை அவசரகதியில் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு,  அந்த இடங்களில் புதிதாகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான நியாயமான அவசரம் எதுவும் இப்போது இல்லை.

அறிஞர் பெருமக்களின் கவலை
கடந்த வாரம், 76 அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், அருங்காட்சியக நிர்வாகிகள், அலுவலர்கள் ஒரு குறிப்பிட்டஅம்சத்தைச் சுட்டிக்காட்டி கவலைப்பட்டிருக்கிறார்கள். புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக, தற்போது இருந்துவரும்  இந்திய தேசிய அருங்காட்சியகம், இந்திரா காந்தி தேசியக்கலை மையம் (IGNCA-Indira Gandhi National Centre for the Arts) மற்றும்தேசிய ஆவணக் காப்பகங்கள் ஆகியவற்றையும் இடித்துத்தரைமட்டமாக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிராகத் தங்கள் கவலையைத் தெரிவித்திருக்கிறார்கள். 

இதனை உடனடியாக நிறுத்திட வேண்டும்என்றும், இதனைத் தொடர்வது தொடர்பாகவிரிவான அளவில் மக்களிடம் கலந்தாலோசனைகள் பெற வேண்டும் என்றும் அந்த வல்லுநர்கள் கோரியிருக்கிறார்கள். இந்த மையங்களில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கருத்துக் கருவூலங்கள் குறித்து கவலைப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள பொக்கிஷங்களையும், தேசிய ஆவணக்காப்பகங்களில் உள்ள ஆவணங்களையும், இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தில் உள்ளகையெழுத்துச் சுவடிகளையும் வேறிடங்களுக்குக் கொண்டுசெல்வதென்பது சாதாரணமான காலங்களிலேயே மிகவும் சவாலான செயலாகும். இதற்கு வல்லுநர்களுடன் மிகவும் ஆழமான முறையில் திட்டமிடப்பட்டு இந்தச் சிக்கலான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று மிகவும் முக்கியமான, முதன்மையான நிறுவனங்களை மாற்றும்போது, விரிவான அளவில் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இதுதொடர்புடைய வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று விரிவான அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டபின்னர் மட்டுமே இவற்றைச் செய்திட வேண்டும். நிச்சயமாக இப்போது போன்று செய்யக்கூடாது.

கணக்கெடுக்கப்படாத கலைப் பொருட்கள்
தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கின்றகலைப்பொருட்கள் இன்னமும் முழுமையாககணக்கெடுக்கப்படவில்லை என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதனால் இவை புதிய இடத்திற்கு இடம்பெயரும்போது கணக்கிற்கு வராமல் போவதற்கான அல்லது தவறான முறையில் கையாளப்படுவதற்கான ஆபத்து உண்டு. இப்போது சென்ட்ரல் விஷ்டா  திட்டம் மிகவும் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்தின்மீது பொதுமக்களின் கருத்துக்களை கோர மறுத்திடும் மத்திய அரசாங்கத்தின் சகிப்பின்மையை இங்கேநடைபெறும் கட்டுமான வேலைகளை புகைப்படம் எடுக்கக்கூட தடை விதித்திருப்பதிலிருந்து நன்கு காண முடிகிறது. நாடு இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுகாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் மோசமான விளைவுகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்கூட வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை அனைத்துத்தரப்பினராலும் உணர முடிகிறது. இந்தத் திட்டத்தை இப்போது நிறுத்திவிட்டு சாதாரணமான காலம் வரும்போது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று இதனை மேற்கொள்வதால் அரசாங்கம் இழப்பதற்கு எதுவும் இல்லை.  

நன்றி: தி இந்து 

(ஆங்கிலம்) தலையங்கம், 17.5.2021), 

தமிழில் : ச.வீரமணி

;