articles

img

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்

எழுத்தாளர் சேட்டன் பகத் முதன்முறையாக ஏ.பி.பி செய்தி சேனலில், ‘7 RCR’ என்னும் அந்த தொடரை 2014ம் வருடம் ஜனவரி மாதம் முதல் நடத்தியதற்கு காரணங்களும், பின்னணியும் இருந்தது. இந்திய மத்திய வர்க்கத்தின் இளைய தலைமுறையால் நெருக்கமாக அறியப்பட்டவர் சேட்டன் பகத். 2010ம் ஆண்டு உலகின் மிக செல்வாக்கு பெற்ற நூறு பேரில் ஒருவராக அவரை டைம் பத்திரிகை அறிவித்திருந்தது.

2014 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில். 7ம் நம்பர் வீட்டை அடையக் கூடிய முக்கிய அரசியல் தலைவர்களின் பிம்பங்களை காவியமாக்கும் தன்மையில் அந்த தொடரின் அத்தியாயங்கள் அமைந்திருந்தன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் செல்வாக்கும், அதிகாரமும் செலுத்தக் கூடிய மனிதர் இவர்களில் ஒருவர் என்று ஆவலைத் தூண்டுவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.

மொத்தம் பதினைந்து எபிசோட்களில், நரேந்திர மோடிக்கு ஆறு, ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தலா இரண்டு, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா ஒன்று என முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தங்கள் உள்ளமும் அறிவும் கவர்ந்த எழுத்தாளரின் உள்ளக் கிடக்கையை வாசக பெருமக்கள் பார்த்தார்கள்.

ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. அவ்வகையில் நரேந்திர மோடியின் கடந்த காலம் பலருக்கும் அறியப்படாமல் இருந்ததால் அல்லது அதிகமாக சொல்லப்பட வேண்டி இருந்ததால் அவருக்கு மட்டும் ஆறு எபிசோட்கள் என்றும் அந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்பவர் குஜராத்தில் இப்போதும் ஒரு டீக்கடை நடத்திக்கொண்டு இருப்பவராக வைத்துக் கொள்வோம். அசாமிலோ, தமிழ்நாட்டிலோ உள்ள டீக்கடைகளில் யாராவது அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர் என்ன படித்தார், யசோதா பென்னோடு ஏன் சேர்ந்து வாழவில்லை என்றெல்லாம் யாராவது சிந்திக்கப் போகிறார்களா? அவரது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கும்.

‘அவரே இனி இந்தியாவின் பிரதமர்’ என பெரும் சத்தத்தோடு சங்கு ஊதப்பட்டது. எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட மனிதராகிவிட்டிருந்தார். அவரை கடுமையாக எதிர்த்தும், கடுமையாக ஆதரித்தும் எங்கும் பேசப்பட்டது. அவரது கொள்கைகள், பார்வைகள், சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவங்கள் எப்படிப்பட்டவை என ஆராயாமல், அவரது தனிப்பட்ட குண நலன்கள்கள், இயல்புகள், வாழ்க்கை குறித்த அலசலாக மாற்றி, அவரை நாயகனாக்கும் காரியங்கள் கார்ப்பரேட் மூளைகளில் இருந்து அரங்கேறிக் கொண்டு இருந்தன. அதில் ஒரு எபிசோட்தான் சேட்டன் பகத்தின் ’7 RAC’ தொடர். சைரன் பொருத்திய காரொன்று வாசல் திறக்க ஒரு ஒரு மாளிகை நோக்கி பயணிக்கும் காட்சியுடன் துவங்கியது.

அறிந்திராத பல தகவல்களால் மோடி வடிவமைக்கப்பட்டிருந்தார். “டீ விற்றவர் பிரதம வேட்பாளராக..” என்ற பின்னணிக்குரலில் மனதை கவ்வும் ஈர்ப்பு இருந்தது. மோடி பிறந்த வட நகர், அவர் பிறந்த வீடு, படித்த பள்ளி என தொடர்ந்த காட்சிகள் ஆழ்ந்து போக வைத்தன. மோடிக்கு நெருக்கமானவர்கள், மோடியை அறிந்தவர்களின் உரையாடல்கள் அரூபமான இசைச் சேர்க்கையோடு பார்வையாளர்களை தன்னிலை இழக்க வைத்தன.

அப்படித்தான் மோடியின் பள்ளி நண்பர் சுதிர் மிஸ்ரா போகிற போக்கில் அந்த தகவலைச் சொன்னார்.

;