articles

img

வேலைவாய்ப்பு வீழ்ச்சி மோடி அரசின் படுதோல்வி....

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை 49.5 கோடி ஆகும். 2020 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தள்ளி வைத்துள்ளது. உழைக்கும் மக்கள் தொகை என்பது 15 வயதிலிருந்து 59 வயதுக்கு உட்பட்டோரை கொண்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தொழிலாளர் பங்களிப்பு விகிதம்(LPR) 39 கோடியே 8 லட்சம் ஆகும். மொத்த உழைக்கும் மக்கள் தொகையில் தொழிலாளராக பங்களிப்பு உள்ளவர்களை விட்டு விட்டு கணக்கிடப்படுவது முழுமையான வேலையின்மை விகிதமாகும். இதன்படி உழைக்கும் மக்கள் தொகையில் உள்ள 49 கோடியே 50 லட்சம் பேரில் தொழிலாளர் சந்தையில் பங்களிப்பை செலுத்தக்கூடிய 39 கோடியே 8 லட்சம் பேரை விட்டு விட்டால் 10 கோடியே 42 லட்சம் பேர் ஒட்டு மொத்த இந்தியாவில் வேலைஇல்லாதவர்களாக மதிப்பிடலாம். இதன்படி வேலையின்மை விகிதத்தை கணக்கிட்டால் 23.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

ஒன்றிய அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரங்கள், தகவல்களை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளே பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடு முழுவதும் அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு உட்படஅதற்கான திட்டமிடல்களை முனைப்புடன் மேற்கொண்டது. ஆனால் இந்திய நாடு முழுவதும் வேலையில்லாமல் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் உழைப்பாளர்களை கணக்கில் எடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மோடி அரசாங்கம் தயாராக இல்லை.

புதிய ஏழைகள் அதிகரிப்பு
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி வேலையின்மை விகிதம் 14.5சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் கணக்கிட்டாலே கிட்டத்தட்ட 7 கோடியே 17 லட்சம் பேர் தற்சமயம் வேலையில்லாமல் உள்ளனர். வேலையின்மை விகிதம்கடந்த மே 16- கணக்கு படி நகர்ப்புறங்களில் 14.71 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 14.34 சதவீதமாகவும் உள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இரட்டிப்புச் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கூட ஏற்கனவே பணியாற்றியவர்களில் 47 சதவீதமான பெண்களுக்கு வேலை வாய்ப்புமீண்டும் கிட்டவில்லை. நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை விகிதத்தை விட நகர்ப்புற பெண்களின் வேலையின்மை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

வேட்டைச் சமூகத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக உணவினை தேடி அலைந்து கண்டறிந்தார்கள். தற்போது மனித சமூகம் உணவினையும் மற்றும் வாழ்க்கைத் தேவைகளை பெறுவதற்கும் வேலைவாய்ப்பு என்பது அடிப்படையான நிபந்தனையாக உள்ளது. முதலாளித்துவ சமூக அமைப்பில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் இருக்கும்போதுதான் முதலாளிகளின் லாபம் கூடுதலாக இருக்கும் என்று சொல்கின்றனர். தற்சமயம் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள இதுவரை இல்லாத நெருக்கடி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாதது, உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக உழைப்பாளர்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். வறுமை குறித்த ஆய்வின் அடிப்படையில் 27 சதவீதம் பேருக்கு முழுமையான வருமானம் இல்லை. ஒட்டுமொத்தமாக 63 சதவீதம் பேருக்கு வருமானத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய சரிவால், இந்தியாவில் புதிய ஏழைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

உற்பத்தித் துறையில்...
உற்பத்தித் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு என்பது சரிபாதியாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரியபாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஒன்றிய அரசின் கொள்கைப் பூர்வமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மோடி அரசின்ஜிஎஸ்டி உள்ளிட்ட மோசமான கொள்கைகள் உற்பத்தித்துறையை எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பதற்கு ஆட்டோமொபைல் துறையின் சரிவே சான்று.ஆட்டோமொபைல் துறை இந்திய உள்நாட்டு உற்பத்தியில் மிக முக்கியமான தூணாகவிளங்கியது. 2006-இல்இருந்து 2016 வரை உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும்,இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்புக்கும்,மூன்று கோடியே இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைஅளிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. அதற்குப் பிறகு, மோடி அரசாங்கம் கொண்டுவந்த ஜிஎஸ்டிஎனும் தவறான வரி விதிப்பு கொள்கை மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களால் கடுமையானநெருக்கடியால் சரியத் துவங்கியது. இத்துறையை பாதுகாப்பதற்கு மோடி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் முதல் கொரோனா அலை நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் இத்துறையில் ஒட்டுமொத்தமாக உற்பத்தியையும், விநியோகத்தையும் பாதித்தது. இத்துடன் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களிலும் கடுமையான விளைவுகளை உருவாக்கியது. இந்த நெருக்கடிகள் வேலைவாய்ப்பிலும் 3.45 லட்சம் பேருக்கு இழப்பை ஏற்படுத்தியது. 

வாகன உற்பத்தியில் பயணிகள் வாகனத்தில் 2.24 சதவீதமும், இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் 13.1 9 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் உற்பத்தியில் 20.7 7 சதவீதமும், மூன்று சக்கர வாகன உற்பத்தியில் 66.1 சதவீதமும் விற்பனையில் குறைவு ஏற்பட்டது. இதனை சீர் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.இதனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது அலையும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையையும் முடக்கி வைத்துள்ளது.பொது போக்குவரத்து முடங்கிய நேரத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அவசியமாகிறது. அதுபோல விவசாய உற்பத்தி போன்ற விஷயங்களுக்கு டிராக்டர்கூடுதலாக தேவைப்படுகிறது. 

எனவே, ஒவ்வொரு தொழில் துறையும் உற்பத்தியும் வளர்வதற்கு ஏற்ற முறையில் வரிக் கொள்கையை திருத்துவதும், மூலப்பொருட்கள் விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசர அவசியத் தேவையாகும்.2020-21 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பாதியாக குறைந்துவிட்டதாக சி எம் ஐ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக 2019-20 ஆம் ஆண்டைவிட 2020-21 ஆம் ஆண்டில் 32 சதவீதம் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. அதேபோல வேலைவாய்ப்பில் கூடுதல் பங்களிப்பை செலுத்தக்கூடிய கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையிலும் கடந்த ஐந்தாண்டுகளில் செங்குத்தாக சரிவு ஏற்பட்டுள்ளது. இத்துறையில் 2016 -17 ஆம் ஆண்டில் 6 கோடியே 91 லட்சம் பேர் பணியாற்றினர். தற்சமயம் இதில் 5 கோடியே 31 லட்சம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

2010- 11 ஆகிய ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை தீவிரமான வேலைவாய்ப்பு வளர்ச்சியில் இருந்தது. இத்துடன் கூடுதலான வேலை வாய்ப்பை தரக்கூடிய துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்றாகும். கட்டுமானத்துறையில் எல் அண்டு டி நிறுவனத்தில் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். தற்சமயம் ஒரு லட்சத்து 71 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 74 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். இதுகுறித்து தொழில்வல்லுநர்கள் “இரண்டாவது அலை என்பது முறைசாரா தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களை விட கூடுதலான அளவிற்கு வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்கின்றனர்.இரசாயனத் தொழிற்சாலைகள் தவிர்த்து அனைத்து உற்பத்தித் துறைகளிலும் வேலைவாய்ப்பு என்பது 2016-17 ஆம் ஆண்டில் ஐந்து கோடியே பத்து லட்சம் பேராக இருந்தது. தற்சமயம் 2020-21 காலாண்டில் இரண்டு கோடியே எழுபத்தி முன்று லட்சம் பேராக  கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் விவசாயம், சுரங்கம், உற்பத்தித் துறை, ரியல் எஸ்டேட், கட்டுமானம், நிதித்துறை மற்றும் நிதி அல்லாத சேவைத்துறை, பொது நிர்வாகம் ஆகியவைதான் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 99 சதவீதத்தை உருவாக்குவதாக சிஎம்ஐ இ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் துறைகள் அனைத்தும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

உடைக்கப்படும் முதுகெலும்பு
இந்திய நாட்டின் விவசாயத்துறை 2019 - 20 ஆம் ஆண்டை விட 2020 - 21 ஆம் ஆண்டில் கூடுதலான உற்பத்தியை நிகழ்த்தியுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, பருத்தி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி என்பது 47சதவீதம் மழையைச் சார்ந்து உள்ளது. அதே போல 75 சதவீதமான நீராதாரம், பருவமழையை ஒட்டியே அமைந்துள்ளது. இந்திய நாட்டின் நீர்வளம் என்பது 2011-ஆம் ஆண்டில்1545 கியூபிக் மீட்டராக இருந்தது. தற்சமயம் 2021 ஆம் ஆண்டில் 1486 கியூபிக் மீட்டராக குறைந்துள்ளது.

உணவையும் வேலைவாய்ப்பையும் தருகிற விவசாயத்துறையை இந்திய நாட்டின் முதுகெலும்பு என குறிப்பிடுகிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் கணக்கெடுப்பில் 2017- 18ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் உள்ள50 சதவீதமான ஆண்களுக்கும் 70 சதவீதம் பெண்களுக்கும் வேலைவாய்ப்பை தந்து வருகிறது.விவசாயத்துறையில் 2016 -17ஆம் ஆண்டில் 14 கோடியே 56 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. அதுவே 2020-21 ஆம் ஆண்டில் 15 கோடியே 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.

இதனால் கிராமப்புற மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் விவசாயத்துறை வேலைவாய்ப்பு பிரதானமானது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்துறையின் பங்களிப்பில் 36 சதம் என்பது தற்போது40 சதமாக உயர்ந்துள்ளது.   விவசாயத்துறை பொருளாதார வளர்ச்சிக்கும் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு என விரிவான முறையில் பங்களிப்பை செலுத்தியுள்ளது.  ஆனால் மோடி அரசாங்கம் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க கூடிய முறையில் இந்தப் பேரிடர் காலத்திலும் மிக மோசமான வேளாண் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியது. ஏற்கனவே ஆசியாவின் முதல் இரண்டு பணக்காரர்களாக அம்பானியும் அதானியும் வந்திருக்கக்கூடிய நேரத்தில் இன்னும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உயர்வதற்கு வேளாண் சட்டங்களும் உதவும் என்பதில் ஐயமில்லை.நிலம், உணவு உற்பத்தி, உணவுச் சந்தை ஆகியவற்றை கார்ப்பரேட்டுகளுக்கு அளிப்பதற்கு உதவிடும். இந்த சூழ்ச்சியை உணர்ந்தே விவசாயிகளின் போராட்டம் 200 நாட்களைக் கடந்தும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

சேவைத்துறை
கடந்த இரண்டு ஆண்டுகளில் 2019 - 20 ல் 1.7%; 2020 - 21 ல் 4.1% சேவைத்துறை உயர்ந்துள்ளது. சேவைத்துறையில் சில ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த சிறிய முன்னேற்றமும் தற்சமயம் பேரிடர் காலத்தில் சரிவை சந்தித்துள்ளன. இத்துறையில் தினக்கூலி மற்றும் சிறு விற்பனையாளர்கள் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பை கடந்த ஏப்ரல் மாதத்தில் இழந்துள்ளனர்.எனவே, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திச் சரிவு, உணவுப் பொருள் பண வீக்கம் மற்றும்பணவீக்கம், கடும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய நேரத்தில் பிரதமர் மோடி கண்களில் உள்ள கிளிசரின் கண்ணீரை துடைத்துவிட்டு செயல்பட வேண்டிய தருணமிது.

கட்டுரையாளர் :எஸ்.பாலா, மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

;