articles

img

விவசாயிகள் எழுச்சியின் வர்க்க அரசியல் - பேரா.பிரபாத் பட்நாயக்

இந்திய விவசாயிகளின் மகத்தான போராட் டம் கோட்பாட்டு ஞானத்திற்கு புதிய தூண்டு கோலாக மாறியுள்ளது. இந்தியாவின் கிராமப் புறங்களில் ஒரு பொதுவான போராட்டத்தில், நிலப்பிர புத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக,  வசதி படைத்த விவ சாயிகள் உட்பட விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை எவ்வாறு ஒன்றிணைப்பது என்பது இடதுசாரிகளால் மிகவும் தீவிரமாக விவா திக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாட்டு கேள்வி. பல ஆண்டு களாக  பல மார்க்சியக் கூட்டங்கள் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்தும், விவாதித்துள்ளன.  நிலப்பிர புக்களுக்கும் கிராமத்தில் வாழும் பிற பகுதியின ருக்கும் இடையிலான முரண்பாட்டிற்கு  தீர்மானகர மான  தீர்வுகளை அக்கூட்டங்கள் முன்வைத்துள்ளன. இடதுசாரி விவசாய அமைப்புகள், இடதுசாரி அல்லாத பிற விவசாய அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்க ளில் ஈடுபட்ட போதெல்லாம், விவசாயத் தொழிலாளர்க ளின் சில கோரிக்கைகளை இணைத்தன. அதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களை நம் போராட்டங்களில் கலந்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என வலி யுறுத்தின; ஆனால் இம்முயற்சிகள் பெரிதாக பலன ளிக்கவில்லை.

சாதிப் பஞ்சாயத்து  வர்க்கப் பஞ்சாயத்தானது

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்க ளுக்கும் இடையிலான முரண்பாடு என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல – கூடுதலான கூலி பெற விழையும் விவசாயத் தொழிலாளர்களின் விருப்பம் என்பது விவசாயிகளை நேரடியாக பாதிக்கக் கூடிய ஒன்று – இதற்குள் சாதியப் பரிமாணமும் உள்ள டங்கி உள்ளது. விவசாயத் தொழிலாளிகள் முக்கிய மாக பட்டியல் சாதிகளைச் சார்ந்தவர்கள், ஆனால் விவ சாயிகளோ பொதுவாக பட்டியல் சாதி அல்லாத வர்கள்; இந்தியாவின் பெரும்பகுதிகளில், குறிப்பாக வடக்கில், பட்டியல் சாதியினர் பாரம்பரியமாக எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக் கப்படுவது கிடையாது. தில்லியின் சுற்றுப்புறங்களில், இந்த முரண்பாடு தீவிரமான ஜாட்-(எதிர்)  பட்டியலினத்தவர்  என்ற வடிவில் உள்ளது. தில்லிக்கு அருகில் உள்ள கிராமம் கஞ்சவாலா. கூலிக் கோரிக்கைகள் தொடர்பாக 1970களில் ஜாட் விவசாயிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி யால் திரட்டப்பட்டிருந்த பட்டியலின விவசாயத் தொழி லாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு சாட்சி யமாக இக்கிராமம் இருந்தது. இந்தியப் புரட்சி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஒரு பாடமா கவும் இம்மோதல் இருந்தது.

ஆனால், நரேந்திர மோடி அரசாங்கத்தால் இயற்றப் பட்ட மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயி களின் தற்போதைய போராட்டம், சாத்தியமற்றது எனக் கருதப்பட்ட ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது; அது,  விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதே. உண்மையில், 2021 செப்டம்பர் 5 அன்று  முசாபர்நகரில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சா யத்திற்கு ‘அனைத்து வர்க்கத்தினரும்’, ‘அனைத்து சாதி யினரும்’ ‘அனைத்து மதத்தினரும்’ வருகை புரிந்திருந்த னர்; இவர்கள் அனைவரின் ஒருமித்த ஆதரவைப் போராட்டம் பெற்றிருந்ததாக மகாபஞ்சாயத்தின் ஒருங் கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் கூறினர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்த போதிலும், செப்டம்பர் 27 அன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த பாரத் பந்த்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவை அளித்தது. இது அக்கட்சியின் அடி மட்டத்தில் ஏற்பட்டி ருந்த பெரும் குழப்பத்தை சுட்டிக் காட்டியது.இந்த குழப்பம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் கள் அல்லது ஜாட் மற்றும் பட்டியலின மக்களுக்கு இடையிலான உறவுகளுடன் மட்டும் சுருங்கி விட வில்லை. இது மேலும் இரண்டு வழிகளில் தென் பட்டது. ஒன்று, போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்பது. குறிப்பாக, வழக்கு மொழி யில் கொடூரமானவர்கள் எனச் சித்தரிக்கப்படும் ஜாட் விவசாயப் பெண்கள் பற்றியது , அவர்களும் காலங் காலமாக, ஆணாதிக்க சமூகத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருபவர்கள் தான்; அவர்கள்  வெகுஜன போராட்டங்கள் மற்றும் வெகுஜன கூட்டங்களில் பெரிய அளவில் பங்கேற்றது என்பது ஒரு புதுமை யான மற்றும் வரலாறு காணாத நிகழ்வு.

மதவெறி மாயமாய்  மறைந்த விநோதம்

மற்றொன்று, ஜாட் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான உறவு. இவ்வுறவு கடந்த காலத்தில் ஒப்பீட்டளவில் சுமூகமாக இருந்து வந்தது. ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தற்போ தைய ஆளும் பாஜகவின் தூண்டுதலினால் கசப்பான தாக மாறியது. ​ஆகஸ்ட் 2013ல் முசாபர் நகரில் சாதி அடிப்படையிலான ‘மகா பஞ்சாயத்து’ ஒன்று நடை பெற்றது. அப்பஞ்சாயத்து வகுப்புவாத சம்பவம் ஒன்றினை குறித்து விவாதிப்பதற்காக கூடியது. அதன் தொடர்ச்சியாக  மிகப் பெரிய அளவிலான கலவரங் கள் நடைபெற்றன. இக்கலவரங்கள் மக்களை வகுப்பு வாத அடிப்படையில் பிளவுபடுத்தின; பாரதிய ஜனதா கட்சியை தனிப்பெரும் கட்சியாக மாற்றின;  அறுதிப் பெரும்பான்மையையும் அக்கட்சிக்கு பெற்றுக் தந்தன.  ஆனால், விவசாயிகளின் தற்பொழுதைய போராட்டமோ  கசப்புணர்வுடன் இருந்த இந்த இரண்டு சமூக மக்களையும் ஒன்றிணைத்துள்ளது; ஒவ்வொரு சமூக மக்களும் கடந்த ஏழு ஆண்டுகளில் தாங்கள் செய்த  தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

ஒட்டு மொத்தப் பிரச்சனையையும் கையில் எடுத்து...

சாதி, சமூகம் மற்றும் பாலின உறவுகளின் மீது  ஏற்படுத்திய தாக்கங்கள் மட்டுமல்ல; தவிர, விவசாயிக ளின் இப்போராட்டமானது அவர்களின் சொந்த கோரிக் கைகளுடன் நேரடியாக தொடர்பில்லாத, பல அழுத்த மான ஜனநாயகப் பிரச்சனைகளுக்கும் ஆதரவினை நல்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ‘பண மாக்கல் திட்டம்’  என்ற பெயரில் பொதுத்துறை சொத்துக் களை தனியார்மயமாக்குதல், குடிமை உரிமைகள் மீதான தாக்குதல், அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு போன்ற அரசு நிறுவனங்க ளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்ச கர்களை மிரட்டுவது, பீமா-கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட ஏராளமான மக் களை விசாரணையின்றி சிறையில் அடைத்திருப்பது ஆகியவற்றை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகள் இயக்கம் முற்றிலும்  மாறுபட்ட ஒன்றினை நிகழ்த்திக் காட்டியுள்ளது. நம் தேசத்தில் இது வரை நடை பெற்றுள்ள  விவசாயிகளின் எந்த ஒரு போராட்டமும், தற்பொழுதைய போராட்டத்தைப் போல விரிவானதா கவோ, ஒட்டுமொத்த தேசத்திற்கான ஜனநாயகப் பிரச்சனைகளை கையில்  எடுத்துக் கையாண்டதாக வோ இருந்ததில்லை.

விவசாய வர்க்கம் தனது பாத்திரத்தை உணர்கிறது...

மார்க்சியக் கோட்பாட்டின் படி, விவசாயிகளை கூட்டாளிகளாக இணைத்துக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்தால் தான் இது போன்ற முக்கியமான பணி களைச் செய்ய இயலும்; விவசாயிகளால் ஒரு பொழுதும் சுயமாகச் செய்ய இயலாது. காலனி ஆட்சிக்கெதிரான போராட்டத்தை விவசாயிகள் வழி நடத்திய போது, ​​காலனி ஆட்சிக்கு பிறகு கட்டியெழுப்பப்பட வேண்டிய சமூகம் எவ்வாறிருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான பார்வை அவர்களுக்கு ஏதும் இருந்த தில்லை என்று அடிக்கடி வாதிடப்பட்டது; ஆனால் தற்பொழுதோ மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றைத் தகர்க்கும் முயற்சி களை எல்லாம் எதிர் கொண்டு, அவைகளை பாதுகாக்க முயற்சிக்கும் விவசாயிகளை நாம் காண்கிறோம். இது போன்ற விசயங்களில், விவசாயிகளின் பார்வை குறித்து மதிப்பீடு செய்யும் பொழுது, ஜான் மேனார்ட் கீன்சால் ‘படித்த முதலாளித்துவம்’ என்று அழைக்கப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரில் சில பிரிவினரும், அரசை பகுத்தறிவின் உருவகமாக மாற்றும் கூறு களில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர்களில் சில பிரிவினரும் முரண்பட்ட வகையில்  உடந்தையாக  இருந்துள்ளனர்.

“கிராமப்புற வாழ்க்கையின் முட்டாள்தனம்” என்று அடிக்கடி நிராகரிக்கப்பட்ட ஒரு வர்க்கம், திடீரென ஜன நாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் அதிக ‘முற்போக்கான’ சமூக வர்க்கங்க ளை விட முன்னேறி வருவது எப்படி?  இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி – சந்தேகத் திற்கு இடமின்றி மாற்றம் அடைந்து வருகிற சூழ்நிலை களுக்கு ஏற்ப  விவசாய வர்க்கம் தனக்கான பாத்திரத்தை கண்டடைந்துள்ளது என்பது தான். ஏகபோக முதலாளித்துவ காலக்கட்டத்தில்,  விவசாயிகளின் வேளாண்மை உட்பட சிறு உற்பத்திகளின் மீது ஏகபோக மூலதனத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் முன்பு போல் நிலப்பிர புத்துவத்தை மட்டுமல்ல, சமூகத்தின் மிகவும் ‘முன்னே றிய’ பிரிவான ஏகபோக முதலாளிகளையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

விவசாயிகளின் குணங்களை புரட்சிகரமாக்குவோம்!

நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தத் துவங்கியதற்கு பிறகு இந்தியாவில் ஏகபோக மூலதனம்  விவசாயத்தை ஆக்கிரமிப்பு செய்வது,   விரை வாகியுள்ளது. இதற்கு முன்பான அரசாங்கங்கள் ஏக போக மூலதனத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து  விவசா யத்தைப்  பாதுகாத்து வந்தன. ஆனால் இந்த பாதுகாப்பு, நவதாராளவாதக் கொள்கைகள் அமலாக துவங்கிய பொழுதே முடிந்து போனது; விவசாய இடுபொருள் மானியங்கள் குறைக்கப்பட்டன; பணப்பயிர்களுக் கான ஆதார விலை திரும்பப் பெறப்பட்டது; நிறுவனக் கடன் மறுக்கப்பட்டது; இதன் விளைவாக லாபம் குறைந்து, கடன் சுமை அதிகமாகி லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. 

உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை மூலம் மாநிலங்களால் வழங்கப் பட்டு வந்த பாதுகாப்பு கூட  தற்பொழுதைய மூன்று விவசாயச் சட்டங்கள் மூலம் மறுக்கப்பட்டது. உள்நாட்டு ஏகபோகம் மற்றும் சர்வதேச விவசாய வணிகத்தை உள் ளடக்கிய புதிய, ‘நவீன’ எதிரியை எதிர்த்துப் போராடுவ தற்காக, விவசாயிகள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

மேற்சொன்ன கேள்விக்கான விடையின் மற்ற பகுதி - விவசாயிகளின் பழைய சாதிய, வகுப்புவாத மற்றும் ஆணாதிக்க தப்பெண்ணங்களை அகற்றுவதி லும், அவர்களின் குணாம்சங்களை புரட்சிகர மாக்குவதிலும் இருக்கும் போராட்டத்தில் உள்ளது. என்னே ஒரு அற்புதமான போராட்டம் இது!

தமிழில்: அ.கோவிந்தராஜன்,  சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

;