articles

img

எளிய இளைஞர்களின் வலுமிக்க டிஜிட்டல் குரல்....

இந்த மாமனோட மனசறிஞ்சும்...

இந்த மாமனோட மனசறிஞ்சும்...art
மாறாத குணமறிஞ்சும்...
வறும வெதப்போட என்ன புரியாம போறவளே...

அட பெட்ரோலு வெலையா நிக்காம ஓடுறியே....
இந்த பித்தான மாமன பாக்காம போகுறியே...  

வைகையன மூடிவெச்ச தெர்மகோலு ராஜூவ போல...
உன்னோட காதல என் கிட்ட மூடி மறைக்காத...

கைய தட்டி வெலக்கு புடிச்சி 
Go corona சொன்னது போல
Go back னு சொல்லி என்ன நீயும் தொறத்தாத...

அட பெட்ரோலு வெலையா நிக்காம ஓடுறியே...
இந்த பித்தான மாமன பக்கமா போகுறியே...

இடியாப்ப சிக்கலுல புரியாம மாட்டிகிட்ட சிறு குறு வியாபாரி போல...
நாம சிக்காம வாழலாம் வாயே...

தினம் தினம் விலையேறி திரு திருனு முழிக்கும் வெங்காய விலைய போல...
நாம உயர்ந்து வாழலா வாயே...

அந்த அம்பானிக்கு மோடி துணை இருப்பதப்போல உனக்கு துணையா இருப்பேனே...

அந்த அம்பானிக்கு மோடி துணை இருப்பதப்போல உனக்கு துணையா இருப்பேனே...

அட பெட்ரோலு வெலையா நிக்காம ஓடுறியே....
இந்த பித்தான மாமன பாக்காம போகுறியே...  

Rap:-

விலைவாசியும் ஏறுது
ஜனமெல்லாம் வாடுது வேர்வைக்கு கூட ஜிஎஸ்டி...
தெருக்கோடியில் கெடக்கிற நமக்கில்ல வாய்ப்புகள் கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி ...

அடுபெரிஞ்ச காலம் போய் மக்களோட வயிறு எரியும் கேஸ் சிலிண்டர் விலைய போல 
உன்ன வாட்டி வதைக்கவும் மாட்டேன்...
சாதி, மத பேர சொல்லி சாவடிக்கும் ஆட்சியைப் போல் வேதனைப் படுத்தவும் மாட்டேன்...
உன்ன அன்பால படுத்தவும் மாட்டேன்...
அந்த அதானி குவித்த சொத்துகள போல 

காதல நான் குவிப்பேனே...
என் காதல நான் குவிப்பேனே...
அட பெட்ரோலு.......

அட பெட்ரோலு வெலைய நிக்காம ஓடுறியே....
இந்த பித்தான மாமன பாக்காம போகுறியே...  

Rap:-
வரிச்சுமை ஒருபுறம்...
பதுக்கல்கள் மறுபுறம்...

அம்பானிக்கு அதானிக்கும்
அள்ளி அள்ளி கொடுக்குற
பிராடு பண்ணும் அரச போல்
சத்தியமா நானு இல்ல
கோரிக்கையை கண்டுக்காம போற பதில் சொல்லுபுள்ள...

மக்கள ஏமாத்தி, மாசம் மாசம் பொய் சொல்லும் ஏழத் தாயின் மகன போல...
உன்ன நடுத்தெருவில் விடவும் மாட்டேன்...

பதவிக்கு காலத்தொட்டு
பதிமூன்று பேரை சுட்ட
கொலகார பழனிச்சாமி போல... 

நான் தவறாக நடக்கவும் மாட்டேன்...

உன்ன மகாராணி போல வாழ வெப்பேனு போலி வாக்குறுதி சொல்ல நான் பிராடு தலைவனும் இல்ல 

உன்ன மகாராணி போல வாழ வெப்பேனு போலி வாக்குறுதி சொல்ல நான் பிராடு தலைவனும் இல்ல 

அட பெட்ரோலு........

அட பெட்ரோலு வெலையா நிக்காம ஓடுறியே....

இந்த பித்தான மாமன பாக்காம போகுறியே...  

அட பெட்ரோலு வெலையா நிக்காம ஓடுறியே....

இந்த பித்தான மாமன பாக்காம போகுறியே...  

வாழ்க்கன்ன கஷ்டம்
தெனம் தெனம் இருக்கு
காதல ஒரு மொற சொல்லு...

அதுலத்தான் இருக்குது தில்லு...

வாழ்க்கன்ன கஷ்டம்
தெனம் தெனம் இருக்கு
காதல ஒரு மொற சொல்லு...

அதுலத்தான் இருக்குது தில்லு...

பாடல் எழுதி இசையமைத்து பாடியவர்

             ஆர்.ஜே.பிரசாத்

 

                                              $$$$$$$$$$$

 

அனிருத்தெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். 

இசை உலகின் சகலவிதமான வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றிருக்கிற தமிழகத்தின் இளம் இசையமைப்பாளர் என்று புகழப்படுகிற அனிருத் போன்றவர்களோ அல்லது திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று பெரிய லாபங்கள் சம்பாதித்து இசைத்துறையில் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிற பிரபல இசை இயக்குநர்களோ பாடல்களை எழுதியும், இயக்கியும் ஆல்பம் வெளியிடுவது பெரிய விசயமே அல்ல. 

ஆனால் சின்னஞ்சிறிய எளிய இளைஞர்கள், ஏழை-எளிய பாட்டாளி மக்கள் மீது பேரன்பு கொண்ட இளைஞர்கள், தாங்கள் சந்திக்கும் மக்களின் வாழ்க்கைப் பாடுகளை, அதிலிருக்கும் அரசியலை பளிச் பளிச்சென்று நறுக்குத் தெரித்தாற்போல் எழுதி, இசையமைத்து, அதைக்கொண்டு காசு பணம் பண்ணத்தெரியாமல் அல்ல... விரும்பாமல்... எளிய மக்களின் அரசியல் மேடைகளுக்கு கொண்டுவந்து அரங்கேற்றம் செய்கிறார்கள்; டிஜிட்டல் உலகிற்குள் அவர்கள் தங்களது படைப்புகளை வெளியிடும்போது, வெறும் பொழுதுபோக்கு பாடல்களுக்கு கிடைக்காத பெரும் வரவேற்பு கிடைக்கப்பெறுகிறது.

காம்ரேட் டாக்கீஸ்!
இடதுசாரி சிந்தனைகொண்ட எளிய குடும்பத்து இளைஞர்களின் போராட்ட இசை முயற்சி இது.

தமிழ்த் திரையுலகில் முற்போக்கு எண்ணம் கொண்ட பல இயக்குநர்கள் இந்தக் காலக்கட்டத்தில் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜு முருகன்.அவரது முன்முயற்சியில், இசைத்துறையில் விருப்பம் உள்ள இளைஞர்கள் ஒன்றுகூடி உருவான இடதுசாரி இசைக்குழுதான் காம்ரேட் டாக்கீஸ்!

கடந்த சில ஆண்டுகளாக காம்ரேட் டாக்கீஸ் குழுவினர், மக்கள் சமூகத்தை உலுக்கிய பல்வேறு அரசியல் பிரச்சனைகள் மீது விமர்சனப்பூர்வமான பாடல்களையும், படைப்புகளையும் உருவாக்கி யூ டியூப் மூலமாகவும், இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். பல படைப்புகள் லட்சக்கணக்கான மக்களின் பார்வையையும், விருப்பத்தையும் பெற்றவையாக இன்றும் வலம் வருகின்றன. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் இவர்கள் எழுதி, இயக்கி வெளியிட்ட “கோ கொரோனா” பாடல் அரசுத்துறையிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. 

எல்ஐசி தனியார்மயம், சென்னையின் உழைப்பாளி மக்களது வாழ்நிலைமை, சென்னை தொழிலாளர்களை ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கூறி வெளியேற்றுவதற்கு எதிரான கொந்தளிப்பான மனநிலை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதற்கு எதிரான உணர்வலை என - திரைத்துறையில் பிரபலமானவர்கள் சொல்லத் தயங்குகிற - தீப்பிடிக்கிற அரசியல் பிரச்சனைகளை “ராப்” (Rap) பாடல் வடிவத்தில் இந்தக் குழு வெளியிட்டிருக்கிறது. 

ராப் என்பதன் பொருள் சொல் இசை என்பதாகும். மிக வேகமாக சொற்களை அடுக்கி, பெரும் இசையில் அதன் அர்த்தம் மங்கிவிடாமல் அதேவேளையில் கேட்போர் அனைவரையும் ஈர்க்கிற சக்திகொண்ட வடிவம் ஆகும் இது. 
இந்த வடிவத்தை காம்ரேட் டாக்கீஸ் குழுவின் ஆர்.ஜே.பிரசாத்தும், தினேசும் லாவகமாக கையாள்கிறார்கள். 

எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல், தாங்கள் ஏற்றுக்கொண்ட கம்யூனிச லட்சியத்திற்காக இவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். ஒரு பெரும் படையே இந்தக் குழுவில் இருக்கிறது. இரா.சிந்தன் ஒருங்கிணைப்பில் யு.எஸ்.மதன்குமார், ஆனந்த் காஸ்ட்ரோ, கலைச்செல்வி, பத்மநாபன், அந்தோணி சத்யா, என்.ஏ.அசோக், துரை, எம்.சி.காசிபன், லிங்கா, டி.ஜே.சதீஷ் என பல இளைஞர்கள் இந்தக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு பாடத்தெரிகிறது, பாடல் எழுதத் தெரிகிறது, இசைக்கருவிகளை பிரமாதமாக வாசிக்கத் தெரிகிறது, வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட டிஜிட்டல் பணிகள் கைவந்த கலையாக கொண்டிருக்கிறார்கள். 

திரைத்துறையில் இந்த ஒவ்வொரு பணிக்கும் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும். ஆனால் அதைநோக்கி இவர்கள் ஓடவில்லை. 

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் களத்தில் காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர். கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரையின் நேர்காணல் - வெளியிட்ட சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான மக்களின் பார்வையை - வரவேற்பைப் பெற்றது. ஓர் எளிய ஓட்டு வீட்டிலிருந்து தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புக்காக களத்தில் நிற்கும் சின்னத்துரையின் வாழ்க்கையை படம்பிடித்தது காம்ரேட் டாக்கீஸ்.

நடப்பு தேர்தல் களத்தில் அதிமுக அரசும், பாஜகவும் வீழ்த்தப்பட வேண்டியது எத்தனை அவசியம் என்பதை திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியின் நேர்காணல் வடிவில், சில நிமிடங்களே ஓடினாலும், பளிச்சென அரசியலை புரிய வைக்கும் படைப்பை வெளியிட்டது காம்ரேட் டாக்கீஸ்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்துடன் இரண்டு நாட்கள் பிரச்சாரத்தில் நேரடியாக கலந்து கொண்டு அவரது அரசியல் வாழ்க்கையையும், கம்யூனிஸ்ட் தலைவர்கள் எத்தனை எளிமையானவர்கள் - அவர்களது வாழ்வு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் உயர்வுக்காகவே என்பதை எடுத்துக் காட்டும் விதமாக “தோழர் பிருந்தா காரத்” என்ற படைப்பினை இந்தக்குழு வெளியிட்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக தேர்தல் களத்தில் பாஜக - அதிமுக கூட்டணியின் கொடுமைகளையெல்லாம் அம்பலப்படுத்தும் விதத்தில் “பெட்ரோலு விலையா நிக்காம ஓடுறியே” என்ற ராப் பாடலும், “குறட்டைகள் போதும் Wake Up!” என்ற ராப் பாடலும், சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 வேட்பாளர்களைப் பற்றியும், ஈர்ப்புமிக்க பாடலுடன் கூடிய படைப்புகளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

எளிய மக்களுக்காக எளிய இளைஞர்களின் வலுமிக்க டிஜிட்டல் குரல்... காம்ரேட் டாக்கீஸ்!

***ராஜு முருகன்***

 

                                              $$$$$$$$$$$

 

ஒரு விரல் போதும் நம் நிலை மாறும்

Rise Let’s Speak up! 
குறட்டைகள் போதும், Wake Up!

VERSE: 1

விதிகளின் பேரில் சதி செய்து,
எம் உரிமைகள் யாவையும் கொலை செய்தாய்,
மத போதையை ஏற்றி நீ 
சாதியைக் காட்டி நீ,
பாதகக் கொலைகளைச் செய்தாய்... 

வந்தது இப்போ, தேர்தல் காலம்,
எங்கெங்கும் காவி அடிமைகள் ஓலம்,

கற்பனைக் கதைகள் பேசி எங்கள் 
வாக்குகள் வெல்வது ஈஸி என்று, 
என்றென்றும், நீ எண்ணிவிடாதே,

முகமூடி கிழிப்போம் இம்முறையும்,
உனை நின்று எதிர்ப்போம் எம்முறையும்,

மாயாஜாலக் கதைகளைச் சொல்லி முட்டாள் ஆக்க நினைக்காதே,
உன் மோடி மஸ்தான் வேலை எல்லாம் என்றும் இங்கே பலிக்காதே,

தேவை வேலை, வேலை இல்லை,
உன் கூத்தைப் பார்க்க ஆள் இல்லை,
அன்பே எங்கள் ஆன்மிகம்,
அதை கற்றுத்தரத் தேவை இல்லை,

வலிகளைப் பொறுத்தோம், ரணங்களைச் சுமந்தோம்,
திமிரினை உடைக்கும் வினை செய்வோம்.

நம் கனவுகள் கொன்று, உரிமையைத் தின்று,
உலவும் மிருகத்தை வதம் செய்வோம்,

வயல்களைப் பறித்து, பயிர்களைச் சிதைத்து,
உழவனை அழிக்க விடமாட்டோம்! 

விளக்கங்கள் போதும், மழுப்பல்கள் போதும்,
காதுகள் புளிச்சுப் போயாச்சு,

Mr. பழனிசாமி அண்ணாச்சி,
மாநில உரிமைகள் என்னாச்சு?

தமிழ்நாடு, பாச்சா பலிக்காது,
என்று இருந்தால் அது தான் இறுமாப்பு,

இனி ஒன்றாவோம், பகை வென்றாவோம்,
அட அதுவே நமக்கும் நன்றாகும்.

எவர் தடுத்தாலும், பகை சிரித்தாலும், 
களம் கண்டிட நாம் இங்கு இணைந்திடுவோம்,

சிறை அடைத்தாலும், சுட்டு எரித்தாலும், 
எமை ஒடுக்கும் எண்ணத்தை ஒழித்திடுவோம்,

தேர்தல்கள் நெருங்குது, பண மழை பொழியுது,
வாக்குகள் வலிமையை உணர்ந்திடுவோம்,

சாதி, மதங்களைப் பார்த்து 
வாக்குகள் அளிக்கும், 
மடமை எண்ணங்கள் களைந்திடுவோம்,
அடிமையின் ஆட்சியின் 
மௌனத்தின் சாட்சியாய் 
இருந்தது போதும் எழுந்திருங்கள்,
இங்கு மதங்களை வைத்து அரசியல் செய்யும் 
மடையர் கூட்டத்தை விரட்டிடுங்கள்,

நீ நீயாக, நான் நானாக,
நாம் சேர்ந்தே இருந்தால் -வளர்ச்சியடா

அட மனிதத்தால், நாம் இணைந்திட்டால், 
மறு கணமே நிகழும் -எழுச்சியடா,

வலைத்தள வதந்திகள், 
பரப்பிடும் விஷங்களை,
நம்பி நீயும் தொலஞ்சி, 
நாம் அழிஞ்சிட வேண்டாம்,

காசுக்காக ஓட்டை வித்து,
உரிமைகளைக் கோட்டை விட்டு,
உயிர்களை பலி கிடா -ஆக்கிட வேண்டாம்,

குதித்தாலும், நீ நடித்தாலும், 
உன் பாசிசம் இங்கு செல்லாது

தமிழ் மண்மீது, காவிக் கொடி ஏற்றும்,
உன் தாமரை நிச்சயம் மலராது….........................(2)
உன் மதவெறித் திட்டம் வெல்லாது,.............................(2)

தகுதித் தேர்வால் படுகொலைகள்,
மதக் கடவுள்கள் பெயரால் கலவரங்கள்,
மக்கள் பணத்தில் விளம்பரங்கள்,
அனுதினமும் நடக்குது நாடகங்கள்,

அடிக்கடி ஆணவப் படுகொலைகள்,
எங்கும் அதிகார வர்க்கத்தின் அலப்பரைகள்,
சுரண்டித் திங்குது ஒரு கூட்டம்,
காலில் விழுந்து கிடக்குது மறுகூட்டம்,

தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் 
கொட்டம் போடுது மத்திய அரசு,

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்,
மாநில மாண்புகள் விட்டுக் கொடுத்து,
வெற்றிநடை என விளம்பரம் போடுது 
முதுகெலும்பற்ற டெண்டர் அரசு,

தமிழ் நெஞ்சங்கள் ஒன்று சேருங்கள்
பட்ட பாடுகள் போதும் மாறுங்கள்!
கெட்ட குடியாகி, நமை வதைக்கின்ற   
இந்த அடிமைகள் ஆட்சியை மாற்றுங்கள்! 

நயவஞ்சகத்தை நாம் துரத்திடுவோம் 
நம் உரிமைகளை மீட்டெடுத்திடுவோம் 
இருட்டினில் தொலைந்தது போதும்
வெளிச்சத்திலே நாம் திரண்டிடுவோம்! 

குரல் எழுப்பாது இருள் விலகாது 
ஒரு விரல் போதும் நம் நிலை மாறும்.

பாடல் எழுதி பாடியவர் தினேஷ் 

தொகுப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்

;