articles

img

நெல்லிக்குப்பம் தந்த விதைநெல் தோழர் சி.கோவிந்தராஜன் - டி.கே.ரங்கராஜன் ,மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையே கம்யூனிஸ்டுகளின் அடிப்படை குணங்கள். இத்தகைய குணங்களை கொண்டிராதவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாற முடியாது. கம்யூனிஸ்ட் என்பது ஒரு கட்சியின் அடையாளம் மட்டுமல்ல.. அது வொரு வாழ்க்கை முறையும் கூட. ஒவ்வொரு தனி மனிதனையும் சமூக மனிதனாக மாற்றுகிற தத்து வத்தையே நாம் கம்யூனிசம் என்கிறோம். எல்லோ ருக்கும் கல்வி, சுகாதாரம், கண்ணியமிக்க வாழ்க் கையை அமைத்து தருவது கம்யூனிச கோட்பாட்டின் அடிப்படை லட்சியமாகும். தத்துவத்தின் மீதான ஆழ்ந்த பற்றையும் இயக்கத்தின் மீதான பிடிப்பை யும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்ப வர்களை, கொஞ்சம் கூட தளர்ந்து விடாமல் பாது காத்துக் கொள்பவர்களை காலம் தனது பக்கங்களில் பதிவு செய்து பாதுகாக்கிறது. அந்த வரலாற்றுப் பக்கங்க ளை நாம் புரட்டுகிற போதெல்லாம் நமக்குள்ளும் அவை ஒளியூட்டுகின்றன. ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக, தொழி லாளர்களின் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக, சிறந்த  அமைப்பாளராக பன்முகத்தன்மையோடு பணியாற்றிய தோழர் சி.கோவிந்தராஜன் அவர்களின் வாழ்க்கை யும் அத்தகையதே. நெருக்கடி மிகுந்திருக்கும் இக் காலர்த்தில், பல்வேறு சவால்களை கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் இந்நேரத்தில் தோழர் சி.கோவிந்த ராஜனின் பங்களிப்புகளை நினைவு கூர்வது அவசி யமாகிறது.

1938 ஆம் ஆண்டில் அன்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட் மாணவனாக படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே தேச விடுதலை உணர்வும், பொதுவுடமை சித்தாந்தத்தின் தாக்கமும் அவரை ஆட்கொண்டது. மாணவராகப் படித்துக் கொண்டிருக்கும் போது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என அவரை எச்சரித்ததோடு, அவரை கல்வி நிலையத்திலிருந்து நீக்கவும் நடவ டிக்கைகளை மேற்கொண்டார் அப்போது துணை வேந்தராக இருந்த சீனிவாச சாஸ்திரி. மக்கள் நல னுக்கான போராடுவதை கைவிட்டு படிப்பை முடித்து பட்டம் பெற்றால் ஒரு அரசு வேலை கிடைக்கும். இல்லை யெனில் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்படும் என இரண்டு வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டபோது இரண்டாவதையே தேர்வு செய்தார் தோழர் சி.கோவிந்த ராஜன். அரசு வேலைக்குச் செல்வதை விட அரசியல் பணி களை மேற்கொள்வதே சரியானது என அவர் எடுத்த  முடிவுதான் ஒரு பேரியக்கத்தின் தலைவராக பிற்காலத்தில் அவர் மாறுவதற்கான முதல் படியாக இருந்தது. 

தீண்டாமைக்கு முடிவு கட்டிய வர்க்க உணர்வு

கல்லூரி படிப்பை கைவிட்ட பின்பு தொழிலாளர்கள் இயக்கம் அவரை சுவீகரித்துக் கொண்டது. ரயில்வே  தொழிலாளர்கள், சர்க்கரை ஆலைத்தொழிலாளர் கள், மின்சார வாரிய தொழிலாளர்கள், காகித ஆலை தொழிலாளர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் அமைப்புகளின் பல பொறுப்புகளில் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது என்பதோடு, ஒரு வழிகாட்டும் ஆவணமாகவும் விளங்குகிறது. அப்போ தெல்லாம் பல தொழிற்சாலைகளில் இரட்டைக் குவளை முறை என்பது சாதாரணமாக இருந்தது. பாரி சர்க்கரை ஆலையிலும், தொழிலாளர்கள் தண்ணீர் குடிப்பதற் காக ஒரு பித்தளைப் பாத்திரமும், மண்பானையும் தனித் தனியாக வைக்கப்பட்டிருக்கும். மண்பானையிலி ருக்கும் நீரை தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களும், பித் தளை பாத்திரத்தில் இதர தொழிலாளர்களும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1943ஆம் ஆண்டில் அத்தொழிற் சாலையில் சங்கத் தலைவராக இருந்த தோழர் சி.கோவிந்தராஜன் இத்தகைய நிலையை கண்டவு டன் கொதித்துப் போனார். “சாதீய பாரபட்சக் கண்ணோட் டத்திற்கு நாம் இரையாகிவிடக்கூடாது, தொழிலாளர்க ளுக்கு வேறு எதனையும் விடவும் வர்க்க உணர்வு என்பதே மேலானதாக இருக்க வேண்டும்” என புரிய வைத்ததோடு அத்தொழிலாளர்களை கொண்டே அத்தகைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

அந்த தொழிற்சாலையில் மிட்டாய் தயாரிக்கும் பிரிவில் தாழ்த்தப்பட தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களை கொண்டு தயாரித்தால் மிட்டாயை இதர மக்கள் வாங்க மாட்டார்கள் என ஒரு விளக்கமும் சொல்லப்பட்டது.  இதைக் கேட்ட சி.கோவிந்தராஜன் இந்த ஆலைக்கு  வரும் கரும்புகளை தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலா ளிகள்தானே வெட்டி அனுப்புகிறார்கள். அந்த கரும்பின் மூலம் உற்பத்தியாகும் சர்க்கரையை எல்லாரும் பயன்படுத்தும் போது, தொழிற்சாலை தயா ரிக்கும் மிட்டாயை மட்டும் எப்படி வாங்காமல் போவார்கள். எனவே இத்தகைய அணுகுமுறையை கைவிட வேண்டும் என உறுதியாகப் போராடி அனைத்துத் தொழிலாளர்களையும் அப்பகுதியில் பணியாற்ற வைத்தார். தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடித்து அடையாளங்களால் அவர்களைப் பிரிக்க முயலும் சக்திகள் வலுப் பெற்று வளரும் இக்காலத்தில் அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது முயற்சிகளே இப்போதும் நமக்கு ஊக்கமளிப்பவையாக உள்ளன.

நாடு விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிலேயே கட்சி தடை செய்யப்பட்டது. ஏ.கே.கோபாலன், சி.கோவிந்த ராஜன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலம் அது. 1948 ஆண்டில் வேலூர் சிறையில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட அவர் தனது முயற்சியை ஏகேஜி அவர்களிடம் தெரிவிக்கி றார். உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் தப்பிக்க திட்டமிட்டு பிறகு மாட்டிக் கொண்டால் சுட்டுக் கொல்வ தற்கான ஆபத்தும் உள்ளது. எனவே மிகுந்த கவனம் தேவை என ஏகேஜி எச்சரிக்கை விடுக்கிறார். அப்போது வேலூர் சிறையிலிருந்து மிகச் சாதுர்யமாக தப்பித்து தலைமறைவாக இருந்து கொண்டே கட்சிப் பணிகளை மேற்கொள்கிறார் சி.கோவிந்தராஜன். அப்படி தலை மறைவாக அவர் வாழ்ந்த கிராமம் ஒன்று தான் சன்னி யாசிக் குப்பம். அவர் தலைமறைவாக இருந்தபோதே அக்கிராமத்திலும் ஒரு கட்சிக் கிளையை உருவாக்கி னார் அவர். மக்களோடு இரண்டறக் கலந்து விட்டால் எத்தகைய தடைகளையும் நம்மால் எளிதில் உடைக்க முடியும் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். 

1946ஆம் ஆண்டில் நடைபெற்ற வீரம் செறிந்த ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற விவசாயத் தொழிலாளர்களையும், நெசவாளர் களையும் கிராமங்களுக்குள் புகுந்து மூர்க்கமாக காவல்துறை தாக்குதல் தொடுக்கத் துவங்கியது. அப்போது நடுவிரல் குப்பம் எனும் கிராமத்தில் தாக்கு தல் தொடுக்க வந்த காவல் ஆய்வாளரை நேரடியாக எதிர்கொண்டு ஊரிலிருந்து விரட்டி கிராம மக்களை பாதுகாத்தார் சி.கோவிந்தராஜன். நெருக்கடி சூழும் காலத்தில் எவ்வாறு ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் உறுதி யோடும், துணிச்சலோடும் களத்தில் நிற்க வேண்டும் என்பதோடு மக்களையும் பாதுகாப்பதில் முதன்மையா னவராக விளங்க வேண்டும் என்பதற்கு தோழர் சி.கோவிந்தராசன் ஒரு சிறந்த முன்னுதாரணமாவர்.

1968 இல் தமிழகத்தில் அண்ணா முதலமைச்சராக இருக்கிறார். அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.கோவிந்தராஜனுக்கு உடனடியாக சந்திக்க முடியுமா என முதலமைச்சரிடமிருந்து நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வருகிறது. முதலமைச்சரை சந்திக்க நேரில் செல்கிறார். முதல்வர் அண்ணாவோடு கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார் கள். அனைவரது முகங்களும் கவலையில் தோய்ந்தி ருந்தது. அப்போது சென்னையில் ஒரு கல்லூரி மாண வர்களுக்கும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் குறித்தும், அதில் ஒரு போக்குவரத்துத் தொழிலாளர் மரணமடைந்த விபர மும் சி.கோவிந்தராஜனுக்கு சொல்லப்படுகிறது. “போக்குவரத்து தொழிலாளர்கள் மிகுந்த கோபத் தோடு அக்கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே போக்குவரத்து தொழிலாளர்களை சமாதானம் செய்ய நீங்களும் தோழர் வி.பி.சிந்தனும் உதவ வேண்டும்” என முதல்வர் அண்ணா வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தோழர் கள் வி.பி.சிந்தன், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோ ரோடு சி.கோவிந்தராஜன் அவர்களும் சென்று தொழி லாளர்களிடம் பேசுவது என முடிவானது.அதன்பிறகு தோழர்கள் வி.பி.சிந்தன், கே.பி.ஜானகியம்மாள், சி.கோவிந்தராஜன் ஆகியோர் தொழிலாளர்களை சந்தித்து நிலைமையை விளக்கி சமாதானப் படுத்தினர். ஒரு இக்கட்டான நேரத்தில் அரசும், அமைச் சர்களும் கூட செய்ய முடியாத ஒரு காரியத்தை சி.கோவிந்தராஜன் உள்ளிட்ட தலைவர்கள் செய்து முடித்ததென்பது அவர்கள் எந்த அளவிற்கு தொழிலா ளர்களின் அபிமானம் பெற்ற தலைவர்களாக விளங்கி னார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

போராட்டக் களத்தில்  உருவான காதல்

வேலூர் சிறையில் பெண் கைதிகளுக்கு தனியாக குளியல் அறை ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்தது. பெண் கைதிகள் சிறை வார்டன்களுக்கு முன்னால் தான் குளிக்க வேண்டும் எனும் கொடுமையை கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் இருந்து போராடி, பிறகு பெண்களுக்கென்று பிரத்யேகமாக குளியல் அறையை ஏற்பாடு செய்த தோழர் ஷாஜாதியின் தீரம் குறித்தும், போர்க்குணம் குறித்தும் வேலூர் சிறையில் வேறொரு பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த சி.கோவிந்தரா ஜன் கேள்விப்படுகிறார். பிறருக்கு அநீதி இழைக்கப் படுகிற போது வெறுமென பார்த்துக் கொண்டிருக்க முடியாது; வெகுண்டெழுந்து போராட வேண்டும் என கருத்தொற்றுமையின் காரணமாக இயக்கங்களில் இருவரும் இணைந்து நின்றனர். பிறகு இருவரும் வாழ்க்கை இணையராகவும் மாறினர். தோழர் சி.கோவிந்தராஜன் அவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத பாத்திரம் தோழர் ஷாஜாதி அவர்களுடைய தாகும்.   

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணி யாற்றிய காலத்தில் தொழிலாளர்களின் குரலாய், எளிய மக்களின் கோரிக்கையாக அவரது குரல் சட்ட மன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. தொழிலாளர் கள் இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றியபோது கோரிக்கைகளில் சமரசத்திற்கு இடமளிக்காத உறுதி யான தலைவராக விளங்கினார். அவர் அணியும் உடைகளைப் போலவே அவரது உள்ளமும் மிகத் தூய்மையானதாக இருந்தது. ஒரு அப்பழுக்கற்ற கம்யூனிஸ்டாக, மிகச் சிறந்ததோர் ஆளுமையாக விளங்கிய தோழர் சி.கோவிந்தராஜன் அவர்களின் வாழ்க்கை நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறது. ஜனநாயகத்திற்கு பேராபத்து, வலதுசாரி அரசியலின் வளர்ச்சி, இடதுசாரிகள் மீதான தாக்கு தல் என மூளும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கம்யூ னிஸ்டுகளின் பணி மிக முக்கியமானதாகும். எளிய மக்க ளின் பொருளாதார விடுதலையும், சமூக விடுதலையும் கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியோடு இணைந்த ஒன்றா கும். நமது அடிப்படை வர்க்கங்களை ஒன்று திரட்டி  ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தீரமிக்க போராட்டங்க ளை நடத்துவதும், அதன் மூலம் வர்க்க உணர்வை மேலோங்கச் செய்வதுமே கம்யூனிஸ்டுகளின் வர லாற்றுக் கடமையாகும். இத்தகைய கடமையை நாம் சலிப்பின்றி மேற்கொள்ள தோழர் சி.கோவிந்தராஜன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை நமக்கு வழி காட்டுகிறது.
 

;