articles

img

மீண்டும் தலைதூக்கி இருக்கும் ரபேல் ஊழல் விவகாரம்.... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)

2021 ஜூன் 14 அன்று பிரான்சில், ரபேல்-இந்தியா ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் (€7.87 billion) அளவுக்கு நடைபெற்றுள்ள ‘ஊழல்’, ‘செல்வாக்கான நபர்களுக்கிடையேயான பணமோசடி’, மற்றும் ‘வரிச் சலுகைகள்’ தொடர்பாக நீதிவிசாரணை தொடங்கியிருப்பதன் மூலம், நரேந்திர மோடி அரசாங்கம் மூடிமறைத்திட்ட மாபெரும் ஊழல் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. ‘பிஎன்எப்’ (PNF-the parquet national financier) எனப்படும் பிரெஞ்சு தேசிய நிதி விசாரணை அலுவலகம் (The French National Financial Prosecutor’s Office) இந்த ஊழல் தொடர்பாக ஒரு நீதித்துறை விசாரணையைத் தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்து முடிவெடுத்திருக்கிறது. செர்பா (Sherpa) என்னும் பிரெஞ்சு ஊழல் எதிர்ப்பு அரசு சாரா நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் இந்த நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. “ரபேல் தாள்கள்” (“Rafale Papers”) என்னும் தலைப்பில் மீடியாபார்ட் (Mediapart) என்னும் சுயேச்சையான பிரெஞ்சு ஆன்-லைன் புலனாய்வு இதழில் தொடர்ச்சியாக வெளியான புலனாய்வுக் கட்டுரைகளினால் மேற்கண்டவாறு முடிவு முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. 

பிஎன்எப்-இன் தற்போதைய தலைவர் ஜீன்-பிரான்காய்ஸ் போனெர்ட்), செர்பா “ரபேல் தாள்கள்” தொடர்பாக முன்பு அளித்திட்ட தகவல்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முந்தைய தலைவர் இலைன் ஹௌலெட்  மேற்கொண்டிருந்த முடிவினை ரத்து செய்துவிட்டு, விசாரணையைத் தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரான்சின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மீடியாபார்ட் வெளியிட்டுள்ள “ரபேல் தாள்கள்” புலனாய்வு அளித்துள்ள விவரங்களின் அடிப்படையில் நீதித்துறை விசாரணை நடைபெற இருக்கிறது.

மீடியாபார்ட்டின் கூற்றுப்படி, 2016இல் பிரெஞ்சு அதிபர்  ஹாலண்டேவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே இரு அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்துடன் முடிவடைந்த ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் பங்கு குறித்து விசாரணை கவனம் செலுத்தும். ஹாலண்டே, தற்போது பிரெஞ்சு அதிபராக இருக்கின்றவரும் ஹாலண்டே அதிபராக இருந்த சமயத்தில் அந்த அரசின் பொருளாதார மற்றும் நிதி அமைச்சராக இருந்தவருமான இம்மானுவேல் மாக்ரன்  மற்றும் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜீன்-யுவெஸ் லீ டிரியன்  ஆகியவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் எழுந்துள்ள பல்வேறு கேள்விகள் தொடர்பாகவும் குற்றவியல் புலனாய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மேற்படி இதழ் கூறியிருக்கிறது.

அரசியல் செல்வாக்கு மட்டுமே
இந்தக் குற்றவியல் முறையீட்டுக்கும், நீதித்துறை புலன்விசாரணைக்கும் கேந்திரமாக அமைந்திருப்பது என்பது ரபேல் உற்பத்தியாளர் தசால்ட் ஏவியேசனுக்கும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் இடையே 2017இல் தசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (DRAL) என்னும் கூட்டு நிறுவனம்  சார்பாக செய்துகொள்ளப்பட்டுள்ள பங்குதாரர் ஒப்பந்தம்  ஆகும். இந்த தசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட்டின் தொழிற்சாலை நாக்பூர் அருகே அமைந்திருக்கிறது. இந்த இதழின் சார்பாக பெறப்பட்டுள்ள கமுக்கமான ஆவணங்கள் (confidential documents), அரசியல் காரணங்கள் அல்லாது வேறு எந்தக் காரணத்தாலும் ரிலையன்சுடன் பங்குதாரர் ஒப்பந்தம் செய்துகொள்ள தசால்ட் நிறுவனத்திற்கு ஆர்வம் இல்லை என்று காட்டுகின்றன.

மீடியாபார்ட்டில் கூறப்பட்டிருப்பதாவது: “ரிலையன்ஸ் நிறுவனம் நிதி எதுவும் கொண்டுவரவில்லை அல்லது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விதத்தில் தொழில்நுட்பமும் (know-how) எதுவும் கொண்டுவரவில்லை. அதன் வல்லமை என்பது அதன் அரசியல் செல்வாக்கு மட்டுமேயாகும். மீடியாபார்ட் பெற்றுள்ள ஆவணங்களில், ஓர் ஆவணத்தில் ரிலையன்ஸ்க்கும் தசால்டுக்கும் இடையேயான ஒப்பந்தங்களில் ஒன்று, அனில் அம்பானி குழுமம் இந்திய அரசுடன் திட்டங்கள் மற்றும் சேவைகளைச் சந்தைப்படுத்துவதற்கான தொழிலைச் செய்திடும்.” 

இந்தியாவில் வெளியான செய்தித்தாள்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களுடன் ஒருங்கிணைந்திருந்த, மீடியாபார்ட் மேற்கொண்டுள்ள “ரபேல் தாள்கள்” புலன்விசாரணையானது, ரபேல் ஒப்பந்தம் உட்பட இந்தியாவின் ராணுவ ஒப்பந்தங்களில் மூக்கை நுழைத்துள்ள இடைத்தரகர், சுஷேன் குப்தா  என்பவரைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குப்தா, 2019 மார்ச்சில் அமலாக்கத்துறையினரால் “பண மோசடி” க் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குப்தாவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறையினரின் குற்றவியல் முறையீட்டில், அவர் 550 மில்லியன் ஈரோக்கள் மதிப்புள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்னும் ‘சோப்பர்கேட்’ (‘Choppergate’) மற்றும் இதர ராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பாக ‘அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுபவர்களுக்கு’ லஞ்சம் கொடுப்பதற்காகக் கையூட்டுகள்  பெற்றார்  என்று குற்றம்சாட்டியிருந்தது.

எனினும், 2019 மே 20 அன்று அமலாக்கத்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்ற அறிக்கையில், இதர ராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பான கையூட்டுகள் தற்போதைய புலன்விசாரணையில் அடிப்படை அம்சமாக இல்லாததால், அதாவது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் மீதான ஒன்றாக இல்லாததால்,  இதர ஒப்பந்தங்கள் தொடர்பாக தனியே புலன்விசாரணை நடத்தப்படும் என்பதுடன் முடித்துக்கொண்டது.     ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடைத்தரகர் குறித்து இந்தியாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கடைசி நடவடிக்கை என்பது இதுவேயாகும்.

கொள்முதல் நடைமுறைகளிலிருந்து தெளிவான விலகல்கள்...
இவை அனைத்துமே என்.ராம் அவர்களால் தி இந்து நாளிதழில் 2019 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே வெளியான ஆறு பகுதிகள் கொண்ட புலனாய்வுக் கட்டுரைகளில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளவைகள்தான். இப்போது தெளிவாகியிருப்பது என்னவென்றால், தி இந்து நாளிதழின் புலன் விசாரணையில் ஆவணப்படுத்தப்பட்டபடி, ராணுவக் கொள்முதல் நடைமுறைகளில் (DPP-2013—Defence Procurement Procedure)-இருந்து விலகிச் சென்றிருப்பது தெள்ளெனத் தெரிவதேயாகும். இவை அனைத்தும் பிரான்சில் நடைபெற்ற சந்தேகத்திற்குரிய ஊழல், செல்வாக்கு, பண மோசடி மற்றும் பல்வேறு குற்றங்களிலும் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

வழக்கமாக மேற்கொள்ளப்படவேண்டிய விதிகளிலிருந்து விலகிச்சென்றுள்ள அம்சங்கள் வருமாறு: இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனத்துடன் முன்பு மிகவும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தைத் திடீரென ரத்து செய்தது, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் இந்தியாவின் தரப்பில் சென்ற பேச்சுவார்த்தைக்குழுவில் அங்கம் வகித்த மூன்று உறுப்பினர்கள் ஆட்சேபணை தெரிவித்தபோதிலும் அதனைப் புறந்தள்ளிவிட்டு, ரபேல் ஜெட் விமானம் ஒவ்வொன்றிற்கும் மிகைப்படுத்தப்பட்ட விலை நிர்ணயம் செய்தது, ராணுவ அமைச்சகத்தின் சார்பில் எதிர்ப்புப் பதிவு செய்தபோதிலும் அதனையும் மீறி பிரதமர் அலுவலகத்தின் சார்பில் ராணுவ அமைச்சகத்திற்கு இணையாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது, இரு நாட்டின் அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது அவற்றின் முன்பு கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஊழல் தடுப்பு தர நிர்ணயங்கள், வெளிப்படைத்தன்மை, நேர்மை தொடர்பான பிரிவுகளை நீக்கியது, இறையாண்மை அல்லது அரசாங்க உத்தரவாதங்களை அல்லது நிதி உத்தரவாதம் தொடர்பாக வங்கிகள் மற்றும் அரசாங்க நிதி வல்லுநர்கள் கேட்கும் உத்தரவாதங்களை ரத்து செய்தது, பிரெஞ்சு விநியோகஸ்தர்களுக்கு ஆதரவாக ஆப்செட் பிரிவுகளில் (offset clauses) பெரிய அளவில் மாற்றங்கள் செய்தது. இவ்வாறு பல்வேறு விலகல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மூடி மறைக்க மோடி அரசு செய்த முயற்சிகளுக்குப் பிறகும்...
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எவ்விதமான விசாரணையையும் நிறுத்துவதற்கான முயற்சிகளில் மோடி அரசாங்கம் உறுதியாக இருந்தது. உச்சநீதிமன்றத்தின் முன்பிருந்த ஒரு மனுவின் மீது விசாரணைக்காக எழுப்பப்பட்ட கோரிக்கையை மோடி அரசாங்கம் எதிர்த்தது, உச்சநீதிமன்றமும் அதற்கு ஒப்புக்கொண்டது. 2016இல் விமானங்களின் விலைகள் தொடர்பான மத்திய தணிக்கைத்துறைத் தலைவரின் (சிஏஜி-யின்) அறிக்கையும் ராணுவ அமைச்சகத்தின் வற்புறுத்தலின் காரணமாகத் திருத்தப்பட்டது. அரசாங்கம் இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை செய்திட கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வெறித்தனமாக மறுத்தது. இவ்வாறாக இந்தப் பிரச்சனையை முழுமையாக மூடிமறைத்திட வேண்டும் என்று அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்குப்பின்னரும் பிரெஞ்சு புலன்விசாரணை இந்த விஷயத்தை மீண்டும் தலைதூக்க வைத்திருக்கிறது.

பிரெஞ்சு புலன்விசாரணை அறிவிப்பு வந்தபின்னர், இது தொடர்பாக இந்திய அரசின் தரப்பில் அதிகாரப்பூர்வ எதிர்வினை எதுவும் இல்லை. இவர்கள் கடைப்பிடிக்கும் மவுனமே நிறைய விஷயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இரு நாட்டின் அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக, பிரான்சில் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கும்போது, இந்தியாவில் எத்தனை காலத்திற்குத்தான் மோடி அரசாங்கம், ஒரு சுயேச்சையான, உயர்மட்ட அளவிலான விசாரணையை, தட்டிக்கழித்திட முடியும்?    

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம் 

(ஜூலை 7, 2021) 

 தமிழில்: ச.வீரமணி

;