articles

img

பொதுத்துறைகளை பாதுகாக்கும் தேசபக்த கடமை நிறைவேற்றுவோம்....

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம் இந்தியநாட்டை அடிமைப்படுத்தி. காலனியாதிக்க சுரண்டலை சுமார் 200 ஆண்டுகாலம் நிறைவேற்றியது. பருத்தி, சணல், தாதுப்பொருட்கள் போன்ற நமது விளைபொருட்களை. இயற்கை செல்வங்களை மிகக் குறைந்த விலையில் பெற்று, அவர்கள் நாட்டிற்குகொண்டுசென்று மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக, சரக்குகளாக மாற்றி, நம் நாட்டு மக்களுக்குஅதீத விலையில் விற்று கொள்ளையடித்தனர்.

பொருளாதார ஒடுக்குமுறையுடன், நிலப்பிரபுத்துவ சமூக ஒடுக்குமுறையும் நிலவியது. சுதந்திரத்திற்காக போராடிய தேச பக்தர்களின் கனவு என்னவாக இருந்தது? அனைத்துவித ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்டி, சமத்துவம், சமூக நீதி, சுயசார்பு பொருளாதார வளர்ச்சி நிலைநாட்டுவது அவர்களின் லட்சியமாக இருந்தது.1947ல் நாடு விடுதலை அடையும் தருவாயில், இந்திய முதலாளிகளின் பிரதிநிதிகள் பம்பாயில் கூடினர், தேச வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறையில் நிர்மாணிக்க வேண்டும் என்ற பம்பாய் திட்டத்தை முதலாளிகள் உருவாக்கினர். இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறையில் நிர்மாணிக்க ஏராளமான முதலீடு தேவைப்படும். உருக்காலைகள், ரசாயன ஆலைகள் போன்ற பெரும் நிறுவனங்களை நிறுவிமுடித்து, உற்பத்தி துவங்கி லாபம் பார்க்க நீண்ட காலம் காத்து இருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளே, பொதுத்துறை வேண்டும் என்ற தீர்மானத்தை முதலாளிகள் நிறைவேற்ற நிர்பந்தித்தது.
2வது 3வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு நிறுவியது. முதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான சாலை வசதி. மின்சார வசதி. மலிவான விலையில் நிலக்கரி, இரும்பு, எஃகு போன்றவை பொதுத்துறையில் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிக்கு பொதுத்துறை உதவினாலும், எதற்கெடுத்தாலும் அந்நிய நாட்டை சார்ந்து நில்லாமல், சொந்தக் காலில் நிற்கும் சுயசார்பு பொருளாதாரத்தை நிறுவிட பொதுத்துறை மிகவும் உதவிசெய்தது. பொதுத்துறையை இந்தியாவின் நவீன கோயில்கள் என நேரு வர்ணித்தார்.

தேசவுடமையாக்கம்
1956ல் அவசர சட்டம் மூலம் நிதி அமைச்சர்தேஷ்முக். இன்சூரன்ஸ் நிறுவனங்களை தேசவுடமையாக்கி, எல்.ஐ.சி சட்டம் கொண்டுவரப்பட்டது. மிகக்குறைந்த முதலீட்டில் துவங்கப்பட்டஎல்.ஐ.சி தற்போது ஆலமரமாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, அரசின் திட்டங்களுக்கு பெரும் உதவி செய்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் தில்லுமுல்லுகள் முடிவுக்கு வந்தன.அரசு வங்கிகள் துவங்கப்பட்டன. 1969ல்இந்திரா காந்தி அம்மையார். 14 தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கினார். அரசு வங்கிகள்வழங்கும் கடனில் 40சதவீதம் முன்னுரிமைக் கடன்கள். சிறு தொழிலுக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும் முன்னுரிமைக்கடன்கள் கிடைத்தன.
பொதுத்துறை நிறுவனங்கள் மாநிலங்களில் பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்படுவதால்சமச்சீரான வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. பொதுத்துறையில்தான் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு. சமூக நீதி காக்கப்படுகிறது.அரசுக்கு காமதேனு போல் வருவாய் ஈட்டித்தருவது பொதுத்துறை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் பொதுத்துறை. வரி,வட்டி, லாபபங்கீடு அரசுக்கு ஏராளமாக பொதுத்துறை வாரி வழங்குகிறது.பொதுத்துறைகளை சுற்றியுள்ள கிராமங்களின் முன்னேற்றத்திற்கும் பொதுத்துறை சமூக பொறுப்பாக  (Corporate  Social Responsibility) பங்களித்து வருகிறது.

மாநில அரசு போக்குவரத்து சேவை மூலம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது; உட்கிராமப்புறங்களுக்கும் போக்குவரத்துசேவை விஸ்தரிக்கப்படுகிறது. அரசு மின்சார வினியோகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசம். கைத்தறி, விசைத்தறிக்கு குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம் கிடைக்கிறது.பொதுத்துறையைப் போலவே. கேரளாவில் கூட்டுறவு நிறுவனங்களும் அளப்பரிய மக்கள் சேவை வழங்கி வருகிறது.பொறுப்புள்ள மத்திய மாநில அரசுகள் பொதுத்துறையை பலப்படுத்த வேண்டும்; விஸ்தரிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், சேவையிலும் சமூக கட்டுப்பாடு அமலாக்க வேண்டும். உதாரணமாக தனியார் கல்வி மருத்துவ நிறுவனங்களில் 20சதவீதம் இடங்கள்  ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கிட வேண்டும்.
ஐ.எம்.எப், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு நிர்ப்பந்தங்களால் உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகள் உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி வருகின்றன. இதை எதிர்த்து உலக தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் போராடி வருகிறது.  உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) இவற்றுக்கு ஆதரவும், ஒருமைப்பாடும் வழங்கி வருகிறது.

விற்க தனி அமைச்சகம்
நரசிம்மராவ் பிரதமராகவும். மன்மோகன்சிங் நிதி அமைச்சராகவும் இருந்த காலத்தில் பொதுத்துறை பங்கு விற்பனை ஐபிஒ (Initial public offer)  மூலம் நடந்தது. 2004ல் வாஜ்பாய்தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிஅரசு பங்கு விற்பனைக்கென தனி அமைச்சகத்தையே உருவாக்கியது. 12க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை வாஜ்பாய் அரசு முழுமையாக விற்பனை செய்தது. உதாரணம் பாரத் அலுமினியம் கம்பெனி. இந்துஸ்தான் ஜிங்க், ஐபிசிஎல் (IPCL), விஎஸ்என்எல் (VSNL), ஐடிடிசி (ITDC) ஓட்டல்கள் இந்த ஆண்டு 2021-22 மத்திய அரசு பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்ட பொதுத்துறை கொள்கை அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதே இக்கொள்கை, பிரதமரும், அமைச்சர்களும் முன்பு மார்கரெட் தாட்சர் கூறியதுபோல், தொழில் நடத்துவது அரசின் வேலைஇல்லை என கூச்ச நாச்சமின்றி கூறிவருகின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, உயிர்
காக்கும் மருந்து உற்பத்தி என அனைத்தையும் தனியார் மயமாக்கி வருகிறது.

பொதுத்துறை மீது நடைபெறும் தற்கொலைதாக்குதல், மேக் இன் இந்தியா,  ஆத்மநிர்பார் பாரத் அபியான் போன்ற ஏமாற்றும் கோஷங்களுடன் நேரடியாக இணைந்தது. உள்நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல், உள்நாட்டு சந்தையை புறக்கணித்து ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை குறிவைக்கிறார்கள். இது ஏற்கனவே தோல்வி அடைந்த பாதையாகும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தி உள்நாட்டு சந்தை, நுகர்வை பலப்படுத்தாமல். உலகின் உற்பத்தி பேக்டரியாக இந்தியாவை மாற்றுவது முட்டாள்தனமானது. பல பத்தாண்டுகள் முயற்சியில் உருவான பொதுத்துறையை ஒழித்துக் கட்டுவதும் முட்டாள்தனமானது.

Initial Public offer. Follow on public offer, offer for Sale, Exchande Traded fund  (buyback)திரும்ப வாங்கு, ஏலம் விடுவது, கேந்திரமான விற்பனை போன்ற பல வழிகளில் பொதுத்துறைபங்குகள் இதுவரை விற்கப்பட்டு வந்தன. தற்போதைய மோடி அரசின் கொள்கை முழு தனியார்மயமாக்கல். எனவே பல வழிகளில் பங்கு விற்பனை என்பது இனி பயன்படுத்தப்படமாட்டாது. கேந்திரமான பொதுத்துறை விற்பனை, கேந்திரமற்ற பொதுத்துறை விற்பனை என்பதெல்லாம் கண்துடைப்பு, மாநில அரசுகள், மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க ஊக்கமளிப்பது என்பதன் பேரால், மோடி அரசு ‘கூட்டாட்சி சுதந்திரம்’ என்பதில் தலையிட்டு, மாநில அரசுகளை விற்பனைக்கு மிரட்டி உருட்டுகின்றது.

அடையாளம் காணப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயத்தை வேகப்படுத்த தனியார் நிபுணர்களைக் கொண்ட ‘சுயேச்சையான அதிகாரக்குழு’ ஒன்றை அரசு அமைத்துள்ளது. ஏன் தனியார்மயத்தில் தாமதம் என நாடாளுமன்றத்திலேயே சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சகங்களின் செயலாளர்களை கடிந்து கொண்டு கோபமாக பேசினர்.அரசின் பொதுத்துறை கொள்கைப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் நேரடிவிற்பனை, பயன்படாத நிலம் உட்பட பொதுத்துறை சொத்துக்களை விற்று வருவாய் உருவாக்குவது என இரண்டு வழிகளில் பொதுத்துறை விற்பனை நடைபெறும்.பங்கு விற்பனை, தனியார் மயம் மூலம் ரூ.1,75,000 கோடி திரட்டுவது என மத்திய பட்ஜெட் 2021-22 இலக்கு தீர்மானித்துள்ளது. மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதையும் எல்ஐசி-யைஐபிஒ மூலம் விற்பனை செய்யும் அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவித்தது மோடி அரசு. இதேபோல் மின்சார வினியோகமும் பெருமளவில் தனியார் மயம் ஆகிறது. மின்சார திருத்த மசோதா, 2021 பொது வெளியில் உள்ளது.

2021-22 பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன், சமர்ப்பித்தபோது, 2021-2024- மூன்று நிதிஆண்டுக்குள் பொதுத்துறை நிலம் மற்றும் இதர பயன்படாத சொத்து விற்பனை மூலம் ரூ.2.5லட்சம் கோடி திரட்டப்படும் என அறிவித்தார். 50 ரயில் நிலையங்கள், 150 பயணிகள்ரயில்கள்,பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் - ஆகியவற்றின் நிலம், கட்டிடம், 700 கி.மீ சாலை,பவர் கிரிட்டின் எலக்ட்ரிக்கல் லைன்ஸ், விளையாட்டு திடல்கள், 13 விமான நிலையங்கள், கெய்ல் பைப்லைன்கள், 30 கப்பல் தளங்கள் தனியார்மய உடனடி இலக்குகளாம், நிலக்கரி சுரங்கங்கள், சுற்றுலா துறை, வீட்டுவசதி துறையின் சொத்துக்களும் தனியார்மயமாகும்.

2008ல் அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு பிறகு முதலாளித்துவ அமைப்பு முறைக்கேதீராத நெருக்கடி ஏற்பட்டுவிட்டது, கொரோனா நெருக்கடிக்கு முன்னரே நம் நாட்டு பொருளாதாரமும் சர்வாம்சம் வாய்ந்த சீரழிவில் இருந்தது.நாட்டில் எப்போதெல்லாம் நிதி நெருக்கடி அல்லது எந்த நெருக்கடி ஏற்பட்டாலும், அப்போதெல்லாம் அரசை பொதுத்துறைகளே காப்பாற்றி வருகின்றன. சில பொதுத்துறை நிறுவனங்களின் ரிசர்வ் நிதியை அரசு கபளீகரம்செய்து, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் ஊறுவிளைவிக்கிறது. 55க்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் பிஎம்கேர்ஸ் நிதி செலுத்த நிர்பந்திக்கப்பட்டன 38 நிறுவனங்கள் அளித்த நிதி மட்டுமே ரூ.2105 கோடியாகும்.

ஒன்ஜிசியை கடனாளியாக்கிய அரசு
ஒஎன்ஜிசி உயர்மட்ட மஹாரத்னா பொதுத்துறை கம்பெனியாகும். எச்பிசிஎல் மற்றும்குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (மோடி முதல்வராக இருந்தபோது உருவாக்கியது) ஆகியவற்றை ஒஎன்ஜிசி வாங்க மோடி அரசு நிர்பந்தித்தது. இது ஒஎன்ஜிசி-ன் நிதி இருப்பு ரூ.25000 கோடியை காலி செய்தது. சந்தையிலிருந்து ரூ.24881 கோடி கடனும் பெற்றது. 2013-14ல் ஒஎன்ஜிசி- ன் உபரி ரொக்க இருப்பு ரூ.1.07.989 கோடியாகும். தற்போது ஒஎன்ஜிசி நடைமுறை மூலதன பற்றாக்குறையுடன் கடன்கார கம்பெனியாக உள்ளது. இதனால் 2004லிருந்தே புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கும் பணி ஆண்டுக்கு 13.7 சதம் குறைந்து வந்தது. ஒஎன்ஜிசி  எடுக்கும் கச்சா எண்ணெயும் குறைந்தது.

மத்திய நிதி அமைச்சர் 2019 செப்டம்பரில் 32 பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை அழைத்து பேசினார். மூலதன செலவுகளை உயர்த்தக் கோரினார். அரசு பெரும் சலுகைகளை தனியாருக்கு வழங்கியும் அவர்கள் மூலதன சந்தையிலிருந்து வெளியேறவே செய்தனர். 2020ல் கொரோனா முதலாளித்துவ நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியது. 2020 ஜூலை 7ல் நிதி அமைச்சர், 23 பொதுத்துறை நிறுவனங்களின் சிஎம்டி-யை ஆன்லைனில் அழைத்து மூலதனச் செலவுகளை உயர்த்தக் கோரினார்.

நிதி ஆயோக் உதவி சேர்மன் ராஜீவ் குமார் குறிப்பிடுகிறார் “வருவாயை உருவாக்குவதற்கு மட்டுமல்ல பொதுத்துறை பங்கு விற்பனை, தனியார்துறையின் வளர்ச்சிக்கு மேலும் வழி ஏற்படுத்திக் கொடுக்கவே, உயர்மட்ட அரசியல் தலைமையும் இதை தெளிவுபடுத்தியுள்ளது. தனியார் முதலீடுகளுக்கு மோடி அரசு பாதுகாப்பு வழங்கும், பொதுத்துறையின் மிச்ச சொச்சங்களை ஒழித்துக் கட்டுவதில் மோடி அரசு மூர்க்கத்தனமாக உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் மிகநம்பிக்கைக்குரிய ஏஜெண்டாக மோடி அரசு செயல்படுகிறது, சீனாவை தனிமைப்படுத்துவது என்ற ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது.

பொதுத்துறை மீது அரசின் தாக்குதல் என்னவேகத்தில் உள்ளதோ அதைவிட கூடுதல் வேகத்தில் அரசின் தீய முயற்சிகளை தடுத்து நிறுத்த போராட வேண்டும். பொதுத்துறை பயனாளிகளையும் இணைத்துக்கொண்டு பொதுத்துறை காத்திடும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும், உதாரணமாக மின்சார பயனாளிகள், இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள், ரயில் கட்டண சலுகை பெரும் மூத்த குடிமக்கள், இலவச பஸ்பாஸ் பெறும் மாணவர்கள், இடஒதுக்கீடு சலுகைபெறுவோர் என பயனாளிகளை திரட்டலாம்.தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக இதுவரை 20முறை அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டங்களை உழைக்கும் வர்க்கம் நடத்தியுள்ளது, துறைவாரியாக தனித்தனியே உருக்காலை தொழிலாளர், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராடியது போன்றவைகளால் தனியார்மய வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பரந்துபட்ட மக்களை திரட்டி, மக்களின் ஆதரவுடன், தொடர்ச்சியான பொதுத்துறை ஊழியர் சங்க வித்தியாசமின்றி, ஒன்றுபட்டு ஆவேசமான சக்திமிக்க போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்துகிறது.தேச நலன், தேச சுய நிர்ணய உரிமை, சுயசார்பு பொருளாதாரம் காத்திட பொதுத்துறை அவசியம் என்பதை அனைத்து தேச பக்த ஜனநாயக சக்திகளுக்கும் புரிய வைப்போம்; பொதுத்துறை காத்திடும் தேசபக்த கடமையை நிறைவேற்ற நாட்டு மக்களின் பரந்துபட்ட ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.

கட்டுரையாளர் : ஆர். சிங்காரவேலு, சிஐடியு தமிழ் மாநில துணைத் தலைவர்

;