articles

img

பெட்ரோல் கொள்ளையின் கதை....

முன்பு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே பெட்ரோல் விலை அதிகரிக்கப்படும். ஆனால், இப்போது எல்லாநாட்களிலும் பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய்க் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லா நாட்களிலும் சில காசுகள் விலை உயர்த்தினால்யாரும் அதிர்ச்சியடைய மாட்டார்கள் என்பதுதான் ஒன்றியஅரசின் உளவியல். தற்போதைய சட்டமன்றத் தேர்தலுக்குப்பிறகு 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மத்தியில் இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) ஆட்சியின் காலத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது, மக்களைக் கொள்ளையடிப்பதற்கு எதிராக அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கண்டனம் தெரிவித்தார். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் பாஜக-வினர் போராட்டம் நடத்தினர். ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்த காலத்தில் கேரளத்தில் பாஜக தலைவர் கே.சுரேந்திரன் போன்றோரெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விநியோகிப்போம் என்றனர்.

 இப்போது மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல். ஒரு வாரத்திற்கு முன்புராஜஸ்தானிலும், பிறகு மத்தியப்பிரதேசத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டு சாதனை நிகழ்த்தியது! எண்ணெய்க் கம்பெனிகள் நிர்ணயிக்கிற விலை  இந்தியாமுழுவதும் ஒரேமாதிரியாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்தின் விற்பனை வரியில் வித்தியாசம் உண்டு. அதனால்தான் சில மாநிலங்களில் விலை 100 ரூபாயைக் கடந்தது.இவ்வாறு போனால் சில நாட்களில் மற்ற மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைக் கடந்துவிடும். 

எண்ணெய்க் கம்பெனிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம்
பாஜக சொல்வதில் ஓர் உண்மை உண்டு. இரண்டாம்ஐமுகூ ஒன்றிய அரசுதான் எண்ணெய்க் கம்பெனிகளுக்கு அவற்றின் இஷ்டப்படி விலை நிர்ணயித்துக் கொள்ளஅதிகாரம் வழங்கியது. நேருவின், இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க் கம்பெனிகள் தேசவுடைமை ஆக்கப்பட்டன. அடிப்படையான எரிபொருள் விலை உறுதியுடன் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதாகக் கொள்கை இருந்தது. கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட முழுவதும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகும். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை அதிகரிக்க அனுமதிவழங்காவிட்டால் எண்ணெய்க் கம்பெனிகள் நஷ்டமடையும். இதற்கு ஒரு தீர்வாகத்தான் ‘ஆயில் பூல் அக்கவுண்ட்’  என்றொரு நிதிக்கு வடிவம் தரப்பட்டது. எண்ணெய்க் கம்பெனிகளின், எண்ணெய்ச் சுரங்கக் கம்பெனிகளின் லாபத்திலிருந்து ஒரு பகுதியாகவும், ஒன்றிய அரசு ஆண்டுதோறும் வழங்குகிற மானியமாகவும் இருந்தது இந்த நிதியின் வருமானம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அதனால் எண்ணெய்க் கம்பெனிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை இந்த நிதியிலிருந்து ஒன்றிய அரசு ஈடு செய்யும்.

இவ்வாறு காரியங்கள் போய்க்கொண்டிருந்தபோதுதான் ஒரு புதிய சம்பவப் போக்கு நிகழ்ந்தது. ரிலையன்ஸ் கம்பெனி எண்ணெய்த் துறைக்குள் நுழைந்தது. ஆனால், பொதுத்துறைக் கம்பெனிகளுக்கு அல்லாமல் தனியார்த்துறைக் கம்பெனிகளுக்கு ‘ஆயில் பூல் அக்கவுண்டிலிருந்து’ மானியம் கிடைக்கவில்லை. அதனால், ரிலையன்ஸ் முதலான பெட்ரோல் நிலையங்கள் அனைத்தையும்  மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அரசு தனியார்துறை மீது வெறுப்புக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுடன் ரிலையன்ஸும் மற்ற கம்பெனிகளும் சர்வதேச எரிசக்தி கமிஷனை நாடின.இந்தச் சூழலில்தான் ஆண்டு 2010-க்கும் 2014-க்குமிடையே ஐமுகூ அரசு படிப்படியாக எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதிலிருந்து பின்வாங்கியது.

கச்சாஎண்ணெய் விலை அதிகரித்தால் எண்ணெய்க் கம்பெனிகள் சில்லறை விலையை அதிகரிக்கலாம். இதற்கு மாறாக இருந்தால் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும்.இராக் யுத்தத்திற்குப் பிறகு எண்ணெய் விலை செங்குத்தாக உயர ஆரம்பித்தது. 2009-ல் உலகில் நிலவிய குழப்ப நிலையைத் தொடர்ந்து  எண்ணெய் விலை செங்குத்தாகச் சரிந்தது. இரண்டாம் ஐமுகூ ஒன்றிய அரசுக் காலத்தில் உலக நெருக்கடி தணிந்தபோது எண்ணெய் விலை உயர ஆரம்பித்தது. புதிய கொள்கையின் அடிப்படையில் இந்திய பெட்ரோலின், டீசலின் சில்லறை விலையும் உயர்ந்தது. ஏற்கெனவே சொன்னதுபோல பாஜக இதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தியது. 2014-ம் ஆண்டு பாஜக வெற்றி பெற்றதற்கு  ஐமுகூ ஆட்சிக் காலத்தின் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் உதவியது.

மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்தது. அமெரிக்காவின் துருவப் பிரதேசத்தில் எண்ணெய் சுரந்துள்ள பாறைகளை உடைத்துச் சேகரிக்கப்படுகிற ‘ஷெல் ஆயில்’ உற்பத்திசெய்ய ஆரம்பித்தவுடன் எண்ணெய் தேவைக்கு அதிகமாகக் கிடைத்தது. விலையைப் பிடித்து நிறுத்துவதற்கு அரபு நாடுகள் உற்பத்தியைக் குறைக்கத் தயாரில்லை. விளைவு?ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 2014-ம் ஆண்டைவிடப் பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. 

பறித்தது ரூ.5 லட்சம் கோடி!
இயல்பாகவே தாராள வர்த்தக முறைப்படி இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை சரிபாதியாகக் குறைய நேரிட்டது. உலகம் முழுவதும் நிகழ்ந்தது இதுதான். பாஜக-வின் ஒன்றிய அரசு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. எண்ணெய் விலை குறைவதற்கு ஏற்ப பாஜக அரசு எக்சைஸ் வரியை அதிகரித்துக் கொண்டிருந்தது. மத்தியில் பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்த 2014 மே மாதம் பெட்ரோலுக்கு ஒன்றிய வரி லிட்டருக்கு ரூ.9.48ஆக இருந்தது 2020 ஜூனில் ரூ.32.89 ஆக உயர்த்தப்பட்டது. மூன்றரை மடங்கு உயர்வு! டீசலுக்கு ஒன்றிய வரிலிட்டருக்கு ரூ.3.56ஆக இருந்தது ரூ.31.83 ஆக உயர்த்தப்பட்டது. ஒன்பதரை மடங்கு உயர்வு! இவ்வாறு மக்களிடமிருந்துஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை அதிகமாகப்பறிக்கப்பட்டது.

எதற்கும் ஒரு நியாயம் சொல்ல வேண்டுமல்லவா... இந்தக் கொள்ளை குறித்து ஒன்றிய அரசின் நியாயம் இதுவாக இருந்தது: எக்சைஸ் வரி அதிகரித்ததால் பெட்ரோல்-டீசலின் சில்லறை விற்பனை விலை உயரவில்லை. காரணம், கச்சா எண்ணெய் விலை சரியும்போது எண்ணெய்க் கம்பெனிகளுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த லாபம் வரியாக ஈடு செய்யப்படுகிறது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு ஒன்றிய அமைச்சர் சொன்னது மாதிரி கக்கூஸ் முதலானவற்றைக் கட்டுவதற்கு ஒன்றிய அரசுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டாமா? மக்கள் மீதுஅதிக சுமையைச் சுமத்தாமல் வளங்களைத் திரட்டுவதற்கான வழியாம் இது! இந்திய அரசு இவ்வாறு கொள்ளையடித்து ஈடு செய்தது சில்லறை வருமானம் அல்ல. ஐந்துலட்சம் கோடி ரூபாயாவது இவ்வாறு அதிக வரி சுமத்தியதன் மூலம் ஒன்றிய அரசு திரட்டியது.

கொரோனாவும் எண்ணெய் விலையும்
இவ்வாறு இருக்க, 2020 ஆரம்பத்தில் கொரோனா வெடித்துக் கிளம்பியது. அத்துடன் உயர ஆரம்பித்த எண்ணெய் விலைகள் சரிந்து வீழ்ச்சியுற்றன. 2020 ஜனவரி மாதம் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ.28.84ஆக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் ஆனபோது அது ரூ.9.54ஆக வீழ்ச்சியுற்றது. கொரோனா தொற்றுநோய்க் காலமாக இருந்தபோதிலும் மக்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்க பாஜக அரசு தயாரில்லை. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 16 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா காலத்தில் இந்தியாவில் பெயரளவுக்கே விலை குறைந்திருந்தது. 2020 ஜனவரியில் ரூ. 78 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பிறகுரூ.73 ஆகக் குறைந்தது. கொரோனாவுக்கு முன்பு ஒருலிட்டர் பெட்ரோல் விலை, கச்சா எண்ணெய் விலையைவிட மூன்று மடங்காக இருந்ததென்றால் ஏப்ரல் மாதத்தில் அது எட்டு மடங்காக உயர்ந்தது.

ஜூன் மாதத்துடன் கச்சா எண்ணெய் விலை மெதுவாக உயர ஆரம்பித்தது. 2020 ஜூனில் லிட்டருக்கு 20 ரூபாயாகஇருந்த கச்சா எண்ணெய் விலை 2021 ஜனவரியில் 25 ரூபாயாக உயர்ந்தது. ஒன்றிய அரசு அதிகரித்த வரியைக் குறைப்பதற்குத் தயாரில்லை. இதன் விளைவாக நஷ்டத்தைச் சரிசெய்வதற்கு எண்ணெய்க் கம்பெனிகள் விலையை அதிகரித்துக் கொண்டிருந்தன. அவ்வாறு பெட்ரோலின் விலை 2021 பிப்ரவரியில் 93 ரூபாய் ஆனது.கொரோனா குறையுமென்றும், உலக நெருக்கடி மாறி பொருளாதார நிலைமை சீராகுமென்றும் நம்பிக்கை ஏற்பட்டதுடன் கச்சா எண்ணெய் விலை மறுபடியும் உயரஆரம்பித்தது. 2021 மே மாதத்தில்  லிட்டருக்கு 30 ரூபாய்ஆனது. தேர்தல் காலம் அல்லவா? எண்ணெய்க் கம்பெனிகளின் கோரிக்கையில் கைவைக்க முடியவில்லையென்று சொல்கிற ஒன்றிய அரசு தற்போது விலை உயர்வை நிறுத்தி வைக்கும்படிக் கூறியது. அவ்வாறு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல் விலை உயரவில்லை. ஆனால், தேர்தல் முடிந்ததும் தேர்தல் காலத்து நஷ்டத்தையும் சேர்த்து-நஷ்டத்தைச் சரிசெய்யும் விதத்தில் - எண்ணெய்க்கம்பெனிகள் தினமும் விலையை அதிகரிக்க ஆரம்பித்தன.இவ்வாறு இந்தியாவில் பெட்ரோல் விலை செஞ்சுரியைத் தாண்டுகிறது! 

விலை உயர்வும் பொருளாதார மந்தமும்
கொரோனா காலத்தில் பெட்ரோல்- டீசலின் விலைஉயர்வைத் தவிர்ப்பதற்காக, தான் சுமத்திய வரி உயர்வில் ஒரு சிறு பகுதியைக்கூடக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு தயாரில்லை. இந்தப் பொருளாதார மந்தக் காலத்திலும் விலை உயர்வு மிகக் கடுமையாக உள்ளது. மந்தநிலைக்கு பொருளாதார இயல் கூறும் மாற்றுத் தீர்வு என்பது அரசு தனதுசெலவை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். பொருளாதாரமந்தநிலையும் விலை உயர்வும் சேர்ந்து வந்தாலோ அரசின் கொள்கைகள் முடங்கிவிடும்.2010 ஏப்ரலுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் மிகஅதிகமாக விலை உயர்ந்ததை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மொத்த விலைக் குறியீடு பதிவு செய்துள்ளது. மார்ச் மாதம் பொது விலைவாசி உயர்வு 7.39 சதவீதமாக இருந்தது ஏப்ரல் மாதத்தில் 10.49 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணத்தை அறிய பெரிய ஆய்வு எதுவும் தேவையில்லை.ஒன்றிய அரசே ஒவ்வொரு பொருளாதாரத் துறையின் விலை உயர்வு விவரத்தைத் தனியாகத் தருகிறது. ஏப்ரல் மாதம் எரிபொருள் துறையின் விலை அளவுதான் மிகவும் உயர்ந்து நின்றது - அதாவது 20.9 சதவீதம். பெட்ரோல்- டீசல் முதலியவற்றின் உயர்வுதான் மொத்த விலைக் குறியீட்டில் ஒரு ‘சாதனை’ உயர்வைக் காட்டியது! 

முழு நிவாரணம் வழங்க வேண்டும்
விலை உயர்வைக் கண்டு அஞ்சிய ரிசர்வ் வங்கி கடந்தஆறு மாதங்களாக வட்டியின் அளவைக் குறைக்க மறுக்கிறது. கிட்டத்தட்ட அனைவருமே கருதுவது அரசு செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். மக்கள் கையில் பணம் போய்ச் சேரவேண்டும் என்பதுதான். அரசாங்கத்தின் செலவைக் குறைக்க வேண்டித்தான் தடுப்பூசிஅனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்குவதற்குஒன்றிய அரசு முன்வராமல் உள்ளது. பட்ஜெட்டில்  ஒதுக்கீடு செய்த35,000 கோடி ரூபாய்கூட செவழிப்பதற்கு மோடி அரசுதயங்குகிறது. காரணம், விலை உயர்வுச் சங்கிலி அறுந்துவிட்டால்? மோடியின் அமெரிக்கப் பயணக் காலத்தில் பங்குச் சந்தையில், ஒரு பெரும் கூட்டத்தில் உரத்தக் குரலுடன், கார்ப்பரேட் வரியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்வரிச் சலுகை அளித்த மோடிதான் இப்போது செய்வதறியாது பதுங்குகிறார். பெட்ரோல்- டீசலின் மீதான அதிகஅளவு எக்சைஸ் வரியைக் குறைத்து மக்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் : டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக்,பொருளாதார அறிஞர், கேரள முன்னாள் நிதியமைச்சர்

நன்றி: ‘சிந்தா’ மலையாள வார இதழ் (11.6.2021),

 தமிழில்: தி.வரதராசன்

;