articles

img

மோடி என்றால் பொய் என்று பொருள்.....

பொய் பேசுவது என்பது பாசிசத்தின் மிகப்பெரிய முதலீடு!சங்பரிவாரத்தினரின்பொய்கள் அனைவரும் அறிந்த ஒன்று! ஆனால் பிரதமர் பதவிக்குரிய கண்ணியம் குறித்து சிறிதும் கவலைப்படாமல்  பொய் பேசினால் என்னவென்று சொல்வது? அதுவும் தொடர்ச்சியாக! விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனில் மூன்று வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் ஒரே வழி என போராடும் விவசாயிகள் தெளிவாக தெரிவித்துவிட்டனர். மோடி அரசாங்கமோ அதானி/அம்பானி போன்ற கார்ப்பரேட் நலன்களை முன்னுரிமையாக கருதுவதால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஆகவே விவசாயிகள் போராட்டத்தை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை செய்கின்றனர். அதில் ஒன்று பொய்ப் பிரச்சாரம். விதிவிலக்குக்கு உட்பட்ட சில ஊடகங்கள் தவிர  பல அச்சு/காட்சி ஊடகங்கள் விவசாயிகளை சிறுமைப்படுத்த முயன்றன. வழக்கம் போல “டிஜிட்டல் அடியாட்கள்” சமூக ஊடகங்களில் தமது கைங்கர்யத்தை வெளிப்படுத்தினர். குறைந்தபட்சம் சுமார் 20 முதல் 25 பொய்யான காணொலிகள் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் எதுவும் எடுபடவில்லை. எனவே பிரதமரே நேரடியாக பொய்களை அவிழ்த்துவிட துணிந்துவிட்டார்.

பிரதமர் கூறிய பொய்களில் ஒன்று கேரளா விவசாயம் குறித்து! இந்தியா முழுதும் APMC எனப்படும் மண்டிகள் வேண்டும் என கோரும் இடதுசாரிகள் ஏன் கேரளாவில் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பி இடதுசாரிகள் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். கேரளாவின் விவசாயம் குறித்து தெரியாமல் பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என வைத்துக் கொண்டால் அது பிரதமருக்கு அழகா எனும் கேள்வி எழுகிறது. தெரிந்தே சொல்கிறார்

எனில் பொய் சொல்வது பிரதமருக்கு பொருத்தமா எனும் கேள்வி எழுகிறது. பிரதமரின் பொய்களை அம்பலப்படுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரளா திட்டக்குழுவின் உறுப்பினரும் பேராசிரியருமான ராம்குமார் அவர்களின் காணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏன் மண்டிகள் இல்லை?
1960களில்தான் பல்வேறு மாநிலங்களிலும் APMC சட்டங்கள் இயற்றப்பட்டன. அப்பொழுதே கேரளா அந்த சட்டத்தை  இயற்றவில்லை. ஏன்?ஏனெனில் கேரளாவின் பயிர்களில் 82% பணப்பயிர்கள்தான்!தேயிலை/காப்பி/ஏலக்காய்/ரப்பர்/மிளகு/முந்திரி/லவங்கம்/ஜாதிக்காய் போன்றவைதான் அதிகமாக பயிரிடப்படுகின்றன. இந்த பயிர்களை கொள்முதல் செய்ய தனித்தனியான வாரியங்கள் உள்ளன. உதாரணத்திற்கு “தேயிலை வாரியம்” (Tea Board)/ “காபி வாரியம்” (Coffee Board)/ ஏலக்காய் மிளகு ஆகியவற்றுக்கு “வாசனைப் பொருட்கள் வாரியம்” (Spice Board) என வாரியங்கள் உள்ளன. இந்த வாரியங்கள் மத்திய அரசாங்கம் உருவாக்கியவை என்பதும் அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படுபவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாரியங்கள் மூலம்தான் மேற்கண்டபொருட்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இது கேரளாவுக்கு மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு கர்நாடகாவில் கூர்க் பகுதியில் விளையும் காபியும் தமிழகத்தில் ஏற்காடு பகுதியில் விளையும் காபியும்காபி வாரியம் மூலம்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே போல நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை அந்த வாரியம் மூலம்தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த வாரியங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குவதால் விவசாயிகளுக்கு ஏல முறைகள்மூலம் இலாபம் தரும் வகையில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். எனவே இந்த பொருட்களுக்கு மண்டிகள் தேவை எனும் நிலை எழவில்லை. ஆனால் 1990களில் ஒரு நெருக்கடி உருவானது. பா.ஜ.க.வும் அன்று வலுவாக ஆதரித்து உருவாக்கப்பட்ட நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட பொழுது இந்த பணப்பயிர் வாரியங்களுக்கு நிதிஉதவிகள் பெருமளவு குறைக்கப்பட்டன. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த வாரியங்கள் சந்தையில் தலையீடு செய்வது அநேகமாக நின்று போனது. இதன் காரணமாக கொள்முதல் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் நட்டமடைந்தனர். இந்த பயிர்கள் அதிகமாக விளையும் வயநாடு பகுதியில் 1996க்கு பிறகு விவசாயிகள் தற்கொலைகளும் நிகழ்ந்தன. மத்திய அரசாங்கம் இந்த வாரியங்களை பழைய நிலைக்கு செயல்படுத்த முன்வரவில்லை. அது இன்றைய மோடி அரசாங்கத்துக்கும் பொருந்தும். 

இந்த விவசாயிகளை பாதுகாக்க கேரளாவில் இடதுசாரி அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தன. உதாரணத்துக்கு 2006ம் ஆண்டு அமைந்த இடதுஜனநாயக அரசாங்கம் “கடன் தள்ளுபடி வாரியம்” அமைத்தது. இதன் மூலம் வங்கி கடன் மட்டுமல்ல, தனியார் கடன் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்மன. இதன் பின்னர்தான் வயநாடு பகுதியில் விவசாயிகள் தற்கொலைகள் நின்றன. மத்திய அரசாங்கங்களின் தவறான நவீன தாராளமய கொள்கைகள் காரணமாக இந்த பயிர்களின் விலை இன்று சர்வதேச சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக பயிர்களின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சி அடையும்பொழுது மத்திய அரசாங்கம் எவ்விதஉதவியும் செய்வது இல்லை. மாநில அரசாங்கம்தான் தனது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவுகிறது. இந்த உண்மைகள் அனைத்தையும் பிரதமர் மறைத்துவிட்டு பொய்களை அள்ளி வீசுகிறார்.

விவசாயிகளுக்கு மகத்தான உதவிகள்  
கேரளாவில் நெல் மற்றும் ஏனைய விவசாயிகளுக்கு அரசாங்கம் செய்யும் உதவி வேறு எந்த மாநிலம் மட்டுமல்ல; மத்திய அரசாங்கமும் செய்வது இல்லை. விதைப்பு காலத்துக்கு முன்பே கீழ்கண்ட நிதி உதவிகள் செய்யப்படுகின்றன;

ஒரு ஹெக்டேருக்கு/ரூபாயில்:

நெல்- 22,000; காய்கறிகள்- 25,000; குளிர்கால காய்கறிகள்- 30,000; பருப்பு வகைகள்- 20,000; வாழைப்பழம்- 30,000; கிழங்கு வகைகள்- 30,000.

இது மட்டுமல்லாது நெல் விவசாயிகள் தமது நிலத்தை தரிசாக போடாமல் நெல் விளைவித்தால் கூடுதலாக ரூ.2000 ஊக்கத்தொகை தரப்படுகிறது. நெல் விளைச்சலில் 90%ஐ மாநில அரசாங்கமே கொள்முதல் செய்கிறது. கேரளா அறிவித்திருக்கும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ. 2748. இது மத்திய அரசாங்கத்தின் விலையைவிட ரூ. 900 அதிகம். எடப்பாடி அரசாங்கம் நிர்ணயித்த விலையைவிட ரூ.850 அதிகம். இந்தியாவிலேயே இதுதான் உயர்ந்தபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மிகப்பெரும்பான்மையான விவசாயிகள் அரசாங்கத்திடமே விற்கின்றனர். ஆனால் பா.ஜ.க. கூட்டணி ஆளும் பீகாரில் என்னநடந்தது? 2006ம் ஆண்டே நிதிஷ் குமார் அரசாங்கம் மண்டிகளை மூடியது. இன்று விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ 1000 முதல் 1200 வரை நட்டத்துக்கு விற்க தள்ளப்பட்டுள்ளனர்.  இது போதாதென்று மத்திய அரசாங்கம் அமைத்துள்ள சில குழுக்கள்மாநில அரசாங்கங்கள் நெல் அல்லது கோதுமைக்குமத்திய அரசாங்கத்தின் ஆதார விலைக்கும் கூடுதலாக தருவதை தடை செய்யுமாறு பரிந்துரைகள் அளித்துள்ளன. இதுவும் மத்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

காய்கறிகளுக்கு ஆதார விலை!
கேரள இடது முன்னணி அரசாங்கம் வேறு எந்தஅரசாங்கமும் செய்யாத ஒரு புதுமையை செய்துள்ளது. “சுபிட்சம் கேரளா” எனும் திட்டத்தின் கீழ் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தக்காளி/முட்டைகோசு/ வாழைப்பழம் /பீன்ஸ்/ புடலங்காய்/கேரட்/ உருளை கிழங்கு/ மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு/ பூண்டு/பீட்ரூட்/பாகற்காய் ஆகியவை இதில் அடங்கும். வீடுகள் தோறும் பழவகைகள் பயிரிட ஊக்கம் தரப்படுகிறது. கேரளாவின் தென்னை மரங்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையாகிவிட்டதால் ஒவ்வொருகிராம பஞ்சாயத்தும் புதியதாக தென்னை நட ஊக்கம் தரப்படுகிறது. இதற்காக இலவசமாக விதைகளும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன.  அறிவியல் அடிப்படையில் துல்லிய விவசாயம் எனப்படும் நடைமுறைகள் அமலாக்க வேகமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. “சுபிட்சம் கேரளா” எனும் திட்டத்திற்காக கேரளா அரசாங்கம் பெருந்தொற்று காலத்தில் ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தகைய விவசாய ஆதரவு திட்டங்கள் அம்பானி/அதானிகளின் சொற்படி நடனமாடும் மோடி அரசாங்கத்தின் கனவுகளில் கூட தோன்றும் வாய்ப்பு இல்லை.

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகபோராட்டங்கள் இல்லை எனவும் மோடி கூறினார். இதைவிட வேறு ஏதாவது பொய் இருக்க இயலுமா? கிராமங்கள் மற்றும் வார்டுகள் தோறும் வேளாண் சட்டங்களை எதிர்த்தும் போராடும் விவசாயிகளை ஆதரித்தும் தீப்பந்த ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இப்பொழுது அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் தினமும் போராட்டம் நடக்கிறது. கேரளாவின் எர்ணாகுளத்திலிருந்து 25டன் அன்னாசிபழங்கள் தில்லி விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் கேரளா விவசாயிகளையும் பாதிக்கும் என்பதால்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கேரளா குறித்து பிரதமரின் கூற்றுகள் உண்மைக்கு மாறானவை என்பது தெளிவான ஒன்று. இத்தகைய பொய்கள் மூலம் விவசாயிகள் போராட்டத்தை பலவீனப்படுத்த முடியாது. விவசாயிகள் பக்கம் நிற்கும் இடதுசாரிகளை சிறுமைப்படுத்த இயலாது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தவிர மோடி அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை.

===அ.அன்வர் உசேன்==

;