articles

img

மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு...

 5 மாநில தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தேர்தலுக்கு பின் உயர்ந்து கொண்டே இருக்கிறது.  திங்கட்கிழமை 6 மாநிலங்களில் பெட்ரோலின் விலை ரூபாய் 100 ஐ தாண்டிவிட்டது. இன்னும் சிலநாட்களில் இந்தியா முழுவதும் பெட்ரோல் - டீசல் விலை சதம் அடிக்க உள்ளது. எரிபொருள் இல்லை என்றால் சரக்குப் போக்குவரத்து இயக்கம் இல்லை. போக்குவரத்து இயக்கம் இல்லை என்றால் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காது. எனவே அன்றாட பொருட்களின் விலை உயர்வில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கியப் பங்கு உண்டு.  இவற்றின் விலையை கட்டுப்படுத்துவது எப்படி; அரசு செய்யத் தவறிய காரியங்கள் என்ன என்பது பெரும்பகுதியான மக்களுக்கு தெரியாத நிலையே உள்ளது. நான்குவித நடவடிக்கைகள் மூலம் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும்.

நிர்வாக ரீதியான நடவடிக்கைகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தால் அது பெட்ரோல்- டீசல் விலையை நிலையாக இருக்க விடாது. எனவேபெட்ரோல்- டீசல் விலையை நிலையாக வைத்துக் கொள்ள அரசே விலையை நிர்ணயம் செய்யும் ஏற்பாடு இந்தியாவில் இருந்தது. இதற்கென ஒரு தொகுப்பு நிதி ஏற்படுத்தி விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது. 1970ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இம்முறையை 2002ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான  பாஜக கூட்டணி அரசாங்கம் கைவிட்டது. சர்வதேச சந்தையுடன் இணைப்பதன் மூலம் பெட்ரோல் - டீசல் விலைசர்வதேச சந்தையை ஒட்டி இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இந்தியாவிலும் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதற்கு இடைவிடாத விலை உயர்வுகளே சாட்சி.

மோடி ஆட்சிக்கு வந்த நிலையில் 2014ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 84 டாலராக இருந்தது. அன்றுஇந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72ஆக இருந்தது. 2020 ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இருபது டாலராக சரிந்தது. நான்கு மடங்கு விலை வீழ்ந்த நிலையில், அன்றைக்கு வாஜ்பாய் அளித்த வாக்குறுதிப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 15க்கு கிடைத்து இருக்கவேண்டும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 75. இப்போது ஒரு பேரல் விலை 70 டாலர். 2014ஆம் ஆண்டை விட 14 டாலர் குறைவாக உள்ளது. ஆனால் விலை ரூபாய் 100 ஐத் தொட்டுவிட்டது. வாஜ்பாய் அரசு 2002ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதி வெற்று வாக்குறுதியாக மாறிவிட்டது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அரசாங்கம் விதிக்கும் வரி என்பது அனைவரும் அறிந்ததே. 2020 மே மாதத்தில் மட்டும் பெட்ரோலுக்கு ரூபாய் 10ம் டீசலுக்கு ரூபாய் 16ம் என வரி கூடுதலாக போடப்பட்டது. 

உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவது 
கடந்த இருபதாண்டுகளில் இந்தியா முழுவதும்பல இடங்களில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு கொடுப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது மோடி அரசாங்கம். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தி, இறக்குமதியை குறைத்து பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அனைத்து வாய்ப்புகள் இருந்தும் செய்ய மறுக்கிறது ஒன்றியஅரசாங்கம். 2016 ஆம் ஆண்டு 36 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த உள்நாட்டு உற்பத்தி இப்போது 32.2 மில்லியன் மெட்ரிக் டன் ஆக குறைந்துவிட்டது.  இந்தியாவிலேயே தயாரிப்போம் என மேடைதோறும் முழங்கி வரும் மோடி, கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை நாசமாக்கும் செயலை செய்து வருகிறது. 

இறக்குமதி எங்கிருந்து... 
எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கு சென்று பொருள் வாங்குவது என்பதுதான் எல்லோருடைய அணுகுமுறை. குறைந்த விலையில் கச்சா எண்ணெய் தருவதாக ஈரான் அறிவித்த போதும் அதை வாங்க மறுத்து விட்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறது மோடி அரசு. வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த மோடி அரசு இப்போது அதிகமாக அமெரிக்காவில் இருந்துஇறக்குமதி செய்கிறது. அருகில் உள்ள வளைகுடா நாடுகளை விட்டு விட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது அமெரிக்கவை திருப்திப்படுத்தவே. சொந்த நாட்டு மக்களை வஞ்சிக்கும் கேடுகெட்ட தேசப்பற்று.

 வரி வரி வரி 
‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜிஎஸ்டி கொண்டு வந்த ஒன்றிய அரசு பெட்ரோல்- டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மறுக்கிறது. நாங்கள் கொண்டு வர தயார்; மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளமறுக்கின்றனர் என பழி போடுகிறது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை டீசலுக்கு ரூபாய் 16  பெட்ரோலுக்கு ரூபாய் 13 வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு  இந்த பணத்தில் ஒரு பைசாவைக் கூட மாநில அரசுகளுக்கு தரத் தயாரில்லை. எனவேமாநில அரசுகளும் ஆங்காங்கே வரியை வசூலித்துதங்களது பற்றாக்குறையைப் போக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர். எல்லாவற்றிலும் ஒரே இந்தியா என்று பேசும் மோடி அரசில் மாநிலத்துக்கு மாநிலம்பெட்ரோல் - டீசல் விலையில் உள்ள வித்தியாசத்தைஎன்னவென்று சொல்வது? இந்தியாவில் விற்பனைசெய்யப்படும் பெட்ரோல் - டீசலில் 69 சதம் ஒன்றிய- மாநில அரசுகளின் வரியாக செல்கிறது.

கடும் பாதிப்பில் மோட்டார் தொழில்
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மக்களைபாதிப்பதோடு மோட்டார் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்விலும் கைவைக்கின்றது. தினமும் 5 லிட்டர் பெட்ரோல் போட்டு வாகனம் ஓட்டும்ஒரு ஆட்டோ தொழிலாளி, எரி பொருளுக்காக ஓராண்டு காலத்தில் கூடுதலாக செலவு செய்த தொகை ரூபாய் 27 ஆயிரம். 10 லிட்டர் டீசலை போட்டு இயக்கும் ஒரு கால் டாக்ஸி ஓட்டுனரிடம் கூடுதலாக பறிக்கப்பட்ட ரூபாய் 50,000. தினமும் 150லிட்டர் போட்டு ஓடுகின்ற ஒரு லாரி உரிமையாளரிடம் இருந்து ரூபாய் 8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சேவை அளித்து வரும் அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக செலவு செய்தது ரூபாய் 500 கோடிக்கு மேல்.மக்கள் பாதிக்கப்படுவதோடு ஒட்டுமொத்த மோட்டார் தொழிலும் தொழிலாளர்களும் ஒன்றியஅரசின் கொள்கைகளால் மிகப்பெரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது மக்களுக்கு உண்மையைச் சொல்லி ஒன்றிய அரசின் கொள்கைகளை முறியடிப்போம்.

கட்டுரையாளர் :கே.ஆறுமுக நயினார், தலைவர், தமிழ்நாடு சாலை போக்குவரத்து  தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)

;