articles

img

உண்மையைத் திரித்துக்கூறும் மோடி அரசாங்கம்.... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)

கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும்நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்வார நிகழ்வுகள், மோடி அரசாங்கத்தின் குணத்தைப்பற்றி, ஏராளமான அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. நாடாளுமன்றம் துவங்கிய ஒருசில நாட்களிலேயே, அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான இரு அம்சங்களைப் பதிவு செய்தது. முதலாவது, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர், இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்துவது குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை மறுத்ததுடன், “அதிகாரப்பூர்வமற்ற ஊடுருவும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை” என்றும் தெளிவற்ற விதத்தில்அறிக்கை தாக்கல் செய்தார். இரண்டாவதாக, மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு, சுகாதார இணை அமைச்சர் அளித்த அதிர்ச்சியூட்டும் பதிலாகும். அவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கூறியுள்ளபடி ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மரணங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அறிவித்தார்.  

இந்த இரு அறிக்கைகளும் எந்த அளவிற்குப்பொய்யானவை என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும். இவையிரண்டும் எதேச்சதிகார மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் அவமதித்திடும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.உண்மைகளை மறுப்பதும், அவற்றுக்கு எதிராகப் பொய்களை அவிழ்த்துவிடுவதும் இந்த அரசாங்கத்திற்கு வழக்கமான நிலைப்பாடாகப் போய்விட்டது. ஆகையால், நாடேகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப்போடப்பட வேண்டிய தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது,இந்தஅரசாங்கமோ பற்றாக்குறை ஏதுமில்லை என்றுமறுப்பதுடன், இவ்வாறு முறையிடும் மாநில அரசாங்கங்கள்தான் இதனை அரசியலாக்கிக்கொண்டிருக்கின்றன என்றும் தங்கள் மாநில மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தமுடியாத திறமையின்மையை இவ்வாறு மாற்றிக் கூறிக்கொண்டிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

மிகைப்படுத்துவதும் குறைத்துக் காட்டுவதும்
அடுத்து, மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில்,  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்ததடுப்பூசிகள் குறித்தும், தடுப்பூசி செலுத்துவதற்காகத் தேவைப்படும் தடுப்பூசித் தவணைகள் (doses)எண்ணிக்கை குறித்தும், மூன்று வெவ்வேறான கணக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறது.  ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படவேயில்லை. அரசாங்கம்தான் பயன்படுத்தப்படுவதற்காக கைவசம் இருந்துவரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து மிகைப்படுத்திக் கூறிக்கொண்டே இருக்கிறது.மேலும் மோடி அரசாங்கமானது, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து அரசாங்கம் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்றும் தொடர்ந்து மறுத்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் ஆய்வுகள் கூறுவதுஎன்னவென்றால், அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள எண்ணிக்கையைவிட குறைந்தபட்சம் பத்து மடங்காவது இருக்கும் என்று காட்டுகின்றன.

ஒப்பிட முடியா “பொய்”
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்குமுன்னர், வாரணாசியில் ஜூலை 15 அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கோவிட் தொற்றை ஆதித்யநாத் அரசாங்கம் மிகச்சிறப்பாகக் கையாண்டதாகவும், அதனை வேறெந்த அரசாங்கத்துடனும் “ஒப்பிடமுடியாது” என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டியதிலிருந்து, பிரதமர் மோடியின் உரை எந்த அளவுக்குப் பொய்யும்புனைசுருட்டும் மிகுந்தது என்பதற்கு சான்றாகும்.உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ்தொற்றின் இரண்டாவது அலை தாக்கிய சமயத்தில் அதனை அரசாங்கம் உரியமுறையில்  கையாள முடியாத காரணத்தால், கங்கையில்ஏராளமான சடலங்கள் மிதந்து சென்றன, ஆற்றின் கரைகளில் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டன, மக்கள் கிராமம் கிராமமாக கொத்துத்கொத்தாக உரிய சிகிச்சை கிடைக்காது இறந்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றை நாட்டிலேயே மிகவும் மோசமான முறையில் கையாண்ட ஆதித்யநாத் அரசாங்கத்தைத்தான் மோடி, வேறெதனுடனும் “ஒப்பிடமுடியாத அரசு” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.மோடியின் இந்தத்தோரணை எதைக்காட்டுகிறது? தங்கள் அரசாங்கம் உண்மைகளைப்பற்றியோ, எதார்த்த நிலைகளைப்பற்றியோ எந்தக் காலத்திலும் கவலைப்படாது என்பதையும் அவற்றைத் தங்கள் சொந்த நலன்களுக்கு ஏற்ப திரித்துக் கூறுவதற்குக் கொஞ்சமும் தயங்கிடாது என்பதையுமே காட்டுகின்றன.    

மூடிமறைத்தல்- இரக்கமற்ற முரட்டுத்தனம்
உண்மையைத் திரித்துக்கூறுதல் (Post-truth) என்பது ஒரு சொற்றொடர். மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு எதார்த்த உண்மைகளை செல்வாக்கு செலுத்தவிடாது தடுப்பதற்காக, அதனைத் தங்களின் சொந்த உணர்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் மூலம் மூடி மறைப்பதாகும்.அது தடுப்பூசிப் பற்றாக்குறையாக இருந்தாலும் சரி, அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் மரணமுற்றிருந்தாலும் சரி, அல்லதுகோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால்இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையாக இருந்தாலும் சரி மோடி அரசாங்கத்தின் மனப்பான்மை என்பது மனித உயிர்கள் இழப்பு குறித்து இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எந்தவொரு ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமும் இல்லாத அளவிற்கு ஒரு முற்றிலும் இரக்கமற்ற முரட்டுத்தனமான போக்கையே காட்டுகிறது.

வக்கிரமான தர்க்கமுறை
நாடாளுமன்றம் தொடங்கப்பட்ட முதல்வாரத்தில் அதனுடன் இணைந்து புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் விவசாயிகள் நாடாளுமன்றமும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து நடந்து வருவதைப் பார்த்தோம். தில்லியின் எல்லைகளில் கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் அமைப்புகள் தங்கள் சொந்த நாடாளுமன்றத்தை நடத்திடத் தீர்மானித்தன. காவல்துறையினரின் கெடுபிடி மிகவும் கடுமையாக இருந்தபோதிலும் அதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கின்றன. இங்கேயும்கூட, பாஜக அரசாங்கத்தின் பிரதிபலிப்பு என்பது, இந்தப்பிரச்சனையைக் கண்டுகொள்ளாது கைவிட வேண்டும் என்பதும், நாட்டில் விவசாயம்மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளைப் பொறுத்தவரை அனைத்தும் நன்றாகவே நடந்துகொண்டிருக்கின்றன என்று கூறவேண்டும்  என்பதேயாகும். எதேச்சதிகார அரசாங்கத்தின்வக்கிரத்தனமான தர்க்கமுறை என்னவென்றால், நாம் ஒரு பிரச்சனையை அங்கீகரிக்க
வில்லையானால், அதுபோன்ற பிரச்சனை எப்போதுமே எழவில்லை என்பதேயாகும்.நாட்டு மக்களைப் பாதிக்கும் பொதுக் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் முடிவுகள் குறித்து எதையுமே நாடாளுமன்றத்தில் கூற முடியாது என்று ஓர் அரசாங்கம் மறுப்பது,ஓர் அசாதாரணமான நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது. ரபேல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை தேவை என்று இந்தியாவில்  எழுப்பப்பட்ட பிரச்சனையை மோடி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முரட்டுத்தனமாக மறுத்துவந்த சமயத்தில்,  நாடும், நாட்டு மக்களும் ரபேல் பேரத்தில் நடந்த ஊழல்கள் பற்றிய உண்மை நிலவரத்தை பிரான்சில் ஒரு நீதித்துறை அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புலனாய்வு மூலமாகவே தெரிந்துகொள்ள முடிந்தது.  
உண்மை - இவர்களுக்கு வளைந்து கொடுக்கும் பொருள்
இப்போது பெகாசஸ் ஊழல் சம்பந்தமாகபிரெஞ்சு அரசாங்கத்தால் புலன் விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேல் அரசாங்கம்கூட இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ உற்பத்தி செய்திடும் உளவு மென்பொருளை விற்பது தொடர்பாகவும் பயன்படுத்துவது தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளை மறுஆய்வு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. ஆனால், இஸ்ரேலிலிருந்து எவ்விதமான உளவு மென்பொருளையும் வாங்குவதற்கு அரசின் அமைப்புகள் எதுவும்
ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை என்றும், எனவே இந்தியாவில் அதுபோன்று எந்தவொருவிசாரணையும் நடத்த முடியாது என்றும் மோடிஅரசாங்கம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, உண்மை என்பது தங்களின் தேவைக்கேற்றவாறு வளைந்துகொடுக்கும் ஒரு பண்டமாகும். இந்த அரசாங்கத்திடம் நிலைத்திருப்பவை என்பன இந்துத்துவாவும் நவீனதாராளமய நிகழ்ச்சி நிரலுமேயாகும். மக்கள்தொகைக் கட்டுப்பாடு, பசுவதைத் தடை, ‘புனித ஜிகாத்’ சட்டங்கள்-என அனைத்துமே பாஜக மாநிலஅரசாங்கங்களால் எவ்வித இடைவெளியுமில்லாமல் பின்பற்றப்படுகின்றன. 

ஒன்றிய அரசைப் பொறுத்தவரை, அது பெரிய கார்ப்பரேட்டுகளையும், பெரும் பணக்கார பில்லியனர்களையும் மேலும் மேலும்வளமாக்குவதற்கான வேலைகள் அனைத்தையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இதற்காக அது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திடும்  நாசகரமான கொள்கையைப் பின்பற்றுகிறது,பெரும் கார்ப்பரேட்டுகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களைத் தள்ளுபடிசெய்கிறது, பொது சுகாதார அவசரநிலைமையைச் சமாளித்திட பணம் அத்தியாவசியமாகத் தேவையுள்ளபோதிலும்கூட, கொரோனா வைரஸ் பெருந்தொற்றாலும், பொருளாதார மந்தத்தாலும் சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பணத்தேவை அதிகமானஅளவில் தேவைப்படும் நிலையிலும்கூட கார்ப்பரேட்டுகள் மீதும் பெரும் பணக்காரர்கள் மீதும் வரி விதிக்க மறுக்கிறது.கொரோனா வைரஸ் தொற்று அனைவரையும் பாதித்துள்ள போதிலும், நாட்டு மக்கள் அதன் கோரத்தன்மையை முழுமையாக உணர்ந்துள்ள போதிலும், இதன் பாதிப்புகளிலிருந்து மக்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கொஞ்சம்கூட கவலைப்படாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருந்துவருகிறது.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம் (ஜூலை 28, 2021) 

தமிழில் : ச.வீரமணி 

;