articles

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக டிசம்பர் 1 கண்டன நாள் - எஸ்.நூர்முகம்மது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நவம்பர் 15 ல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் சமீப காலமாக சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தி ருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, அதற்கு எதிரான கண்டன இயக்கத்தை நாடு முழுவதும் 2021 டிசம்பர் 1 ல் நடத்திட கட்சிக் கமிட்டிகளுக்கு அறை கூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அந்த அறிக்கையில் சங் பரிவார் அமைப்புகள் லவ் ஜிகாத் மற்றும் பசு பாதுகாப்பு எனும்  பெயரால் நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்கள் அதிகரித்து ள்ளதையும், அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநி லங்களில் இத்தகைய தாக்குதல்கள் மிக அதிகமாக உள்ளதையும், பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்க ளுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் காவல்துறை பாரபட்சமாக செயல்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீது போலீசாரால் பொய் வழக்கு போடப்படுவதோடு, சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி துப்பாக்கி சூட்டில் அவர்கள் காவல்துறையினரால் கொல்லப்படுவது குறித்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள் ளது. மேலும் சமீப காலங்களில் சிறுபான்மை கிறிஸ்த வர்களின், குறிப்பாக ஆதிவாசி மற்றும் பழங்குடி யினரான கிறிஸ்தவர்களின்  மத வழிபாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்படு வதையும் குறிப்பிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் சிறுபான்மை மக்கள்

இந்தியாவில்  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லீம்கள் 14.2 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 2.3 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் மதவழி சிறு பான்மையினர் ஆவர். சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் இதை விட குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் இந்துக்களின் ஒரு பகுதி யாகவே கருதப்படுகின்றனர். இந்திய அரசியல் சாச னத்தின் படி இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை, வழிபாட்டுரிமை மற்றும் அவர்களது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமை உள்ளது. அத்த கைய உரிமைகள் சிறுபான்மை மக்களுக்கு கிடைப் பதை உத்தரவாதப்படுத்தும்  பொறுப்பு அரசியல் சட்டத் தின படி பொறுப்பேற்கும் அரசுக்கு வழங்கப் பட்டுள்ளது.

முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள்

 இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகாரான மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் நடந்து வந்துள்ளன. தற்போது அத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்றச் செயல்கள் பதிவேட்டு வாரியம் (NCRB) தகவல் படி இந்தி யாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக 2018ல் 512, 2019ல் 440, 220ல் 857 வகுப்புவாத வன்முறைகள்  நடை பெற்றுள்ளன. ஒன்றிய பாஜக அரசின் பொறுப்பில் காவல்துறை உள்ள தில்லியில் 520, பீகார் 117, ஹரியானா 51, ஜார்கண்ட் 51 எனப் பட்டியல் நீள்கிறது. இதில் பாஜக அங்கம் வகிக்கும் மாநிலங் களும், ஒன்றிய பாஜக அரசு பொறுப்பில் காவல்துறை உள்ள டில்லியும் முதலிடத்தில் உள்ளதைப்  பார்க்க முடிகிறது. இத் தகவல்கள் ஒன்றிய அரசின் உள்துறை துணை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரது பதிலில் வகுப்பு வாத செயல்கள் அதிகமாக நடக்கும் உத்தரபிரதேசம் குறித்து தகவல் இடம்பெறாதது தற்செயலானதல்ல. இத்தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதும், முஸ்லீம்களான தெரு வியாபாரிகள் மீதும், முஸ்லீம் களை விவசாய நிலங்களிலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடனும் நடைபெற்றுள்ளன. இக்காலத்தில் பாஜக ஆட்சி செய்யும் திரிபுரா மிக  அதிக வகுப்புவாத தாக்குதல்கள் நடைபெற்ற மாநி லங்களில் ஒன்றாகவுள்ளது. நமது நாட்டில் இக்காலத் தில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது 300 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

எத்தனை எத்தனை சம்பவங்கள்...
 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஒரு கிராமத்தில் 8 பேர் கொண்ட ஒரே ஒரு முஸ்லீம் குடும்பம் வசித்து வந்தது. அந்த  குடும்பத்தினர் கொல்லர்களாவர். அவர்கள் இரு வரு டங்களுக்கு முன்னர் இந்தூரில் உள்ள பிவ்டே கிராமத்திற்கு குடிபெயர்ந்து அருகிலுள்ள கிராமத்தில் விவசாய கருவிகளைப் பழுதுபார்க்கும் கடை ஒன்றை  நடத்தி வந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் 8 அன்று ஆயுதம் தரித்த மதவெறி கும்பல் ஒன்று  அக்குடும்பத்தினரை அடுத்த நாளுக்குள் அக்கிராமத்தை விட்டு வெளியேறிட வேண்டுமென்று மிரட்டினர். இவர்களது தாக்குதலில் குடும்பத்தினர் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் அவர்களது புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டது. உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் எதேசம் ஹாஷ்மி அங்கு வந்து  நிர்ப்பந்தப்படுத்திய பின்னர் அவர்கள் புகாரின் பேரில் 9 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை எவரையும் கைது செய்யவில்லை. ஆனால் தாக்குதலுக்கு உள்ளான முஸ்லீம் குடும்பத்தி னர் மீதே ஒரு பொய் வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட அனை வருமே சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள். 

இந்துத்துவா கும்பல்கள் ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவராத்திரியின் போது இறைச்சி கடைகளை கட்டாயப்படுத்தி அடைக்க வைத்தனர். உத்தரப்பிர தேச மாநிலம் அலிகாரில் மிர்கான் எனும் துணி வியா பாரி அக்டோபர் ஒன்றாம் தேதியன்றைக்கு துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு  வநத பஜ்ரங்தள் கும்பல் ஒன்று அவரைத் தாக்கி ஜெய்ஸ்ரீராம் என்று கூறவும், ஒரு காலண்டரில் இருந்த  இந்து தெய்வத்தின் படத்தின் காலடியில் கை வைத்து கும்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். அவரிடமிருந்து ரூ.10,000ஐ பறித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்தாலும், இது துணி  விலை பேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறி, வகுப்பு வாத தாக்குதலை மூடி மறைக்க முயற்சித்தது. 

ஜுன் 5அன்று உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், காசியாபாத் லோனி எனும் இடத்தில் அப்துல் சமத் எனும் முதியவர் ஒரு பள்ளி வாசலில்  தொழுகை செய்து கொண்டிருந்தார். அந்நேரம் ஒரு  கும்பல் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்று, பக்கத்தி லிருக்கும் ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று, அவரை பாகிஸ்தான் ஒற்றன் என்று கூறி,தாக்கி, ஜெய் ஸ்ரீராம் என கூறுமாறு வற்புறுத்தியதோடு, அவரது தாடியையும் கத்தரித்துள்ளனர். தனது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். வழக்கு பதிவு செயய்ப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.  கோவிட் காலத்தில் அந்நோய் பரவியதற்கு தப்லீக் ஜமாஅத் தான் காரணம் என திட்டமிட்டு பிரச்சாரம் சங் பரிவாரத்தினராலும், அரசு சார்ந்தவர்களாலும் தொடர்ந்து நடைபெற்றது. இது குறித்து தொடர்ந்து சங் பரிவாரத்தினர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்து வந்ததோடு, இந்துக்களின் வணி கத்தைப் பறித்து ‘ஹலால் பொருளாதாரம்’  நடத்த முற்படுவதாக குற்றம் சாட்டி, முஸ்லீம்களிடம் வணிகம் செய்வதை புறக்கணிக்கவும், இந்துக்கள் இந்துக்களிடமே வணிகம் செய்ய வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்தனர். 2021 ஆகஸ்ட் 11 ல் முசாபர்நகரில் கிரந்தி சேனா  எனும் சங் பரிவார அமைப்பு முஸ்லீம்கள் மெகந்தி  ஜிகாத் நடத்துவதாக கூறி முஸ்லீம்களை வெறியேற்ற முயற்சித்தனர்.

2021 அக்டோபர் 1ல் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் 25 வயதான முஸ்லீம் இளைஞனின் சிதைந்த உடல் ரயில்வே தண்டவாளத்தில் கண்டறி யப்பட்டது. அவன் மாற்று மத பெண்ணை காதலித்து வந்தாகவும், அதனால் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்தது. அக்டோபர் 23 ல் மதுராவில் ஒரு கும்பல் இரண்டு முஸ்லீம்களை, மாமிசம் கொண்டு சென்றதாக குற்றம்சாட்டி தாக்கினர். செப்டம்பர் 20ல் ஒரு இந்து  பெண் மிரட்டப்பட்டு தனது முஸ்லீம் நண்பரான இளை ஞரை  செருப்பால் அடிக்குமாறு கட்டாயப்படுத்தப் பட்டார். ஆகஸ்ட் மாதம் முழுக்க இந்தியா முழுவதும் முஸ்லீம்கள் ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லியும், வந்தே மாதரம் கூறச் சொல்லியும், மெகந்தி ஜிகாத், வளையல் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத், பொரு ளாதார ஜிகாத், ஏன் பழச்சாறு ஜிகாத் என்ற பெயரால் கூட  வெறுப்பேற்றப்பட்டு,  அடிக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், பொது இடத்தில் அவமரியாதையாக நடத்தப்பட்டனர் என்று ‘வயர்’ இணைய ஏடு விவரிக்கிறது.

சமூக ஊடகங்களில் வெறுப்புப் பிரச்சாரம்

 இத்தகைய பிரச்சாரங்கள் அனைத்தும் சமூக ஊடகங்கள் வாயிலாக திட்டமிட்டு நடைபெறுவதாக அந்த ஏடு கூறுகிறது. இத்தகைய பிரச்சாரத்திற்கு உ.பி.  முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவு பெருமளவு  உள்ளது. அவர்கள் இதற்கு மோடி பெயரையும் பயன் படுத்துகின்றனர். இத்தகைய சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லீம்களை வில்லன்களாக சித்தரிப்ப தற்கு ஆளும் கட்சியினுடையதும், ஆளும் அரசினுடை யதுமான ஆதரவு பெருமளவில் உள்ளது. நவராத்திரி யை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் வெளி யிடப்பட்ட ஒரு சமூக ஊடக பதிவில் வந்த ‘ஜிகாத்துக் காக பணத்தை பயன்படுத்துபவரிடம் பொருள் வாங்காதீர்கள்’ என்ற பிரச்சாரம், 2,78,800 ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களால் பகிரப்பட்டது. அது போல் இந்து பண்டிகைகளின் போது இறைச்சி கடைகளை மிரட்டி அடைக்கச் செய்யக் கூறும் சமூக ஊடகப் பதிவு களும் இக்காலத்தில் மிகப்பெரிய அளவில் பரப்பப் பட்டன. நவராத்திரி நிகழ்ச்சியின் போது அங்கே சென்ற 4 முஸ்லீம் இளைஞர்கள் விஸ்வ ஹிந்து பரிசத்தின் நிர்பந்தம் காரணமாக கைது செய்யப்பட்டனர். ஜெய் ஸ்ரீராம் என கூறாத எந்த பிச்சைக்காரர்களுக்கும் பிச்சை  அளிக்காதீர் எனும் பதிவு 110, 692 பின்தொடர் பவர்களைக் கொண்ட முகநூலில் பதியப்பட்டது. ஹலால் பொருளாதாரம் தேசத்துக்கு ஆபத்து எனும்  பதிவு 50000 பின் தொடர்பவர்களைக் கொண்ட ட்வீட்டரில் பதிவானது. அதுபோல்  ட்வீட்டரில்  ஹலாலைப் புறக்கணியுங்கள், பொருளாதார ஜிகாத் போன்ற பதிவுகளும் தொடர்ந்து போடப்படுகின்றன.இத்தகைய பதிவுகள் முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு வெறுப்பேற்படுத்தும் வகையில் நடைபெறுகிறது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் நடத்தப் பட்டது போல் இந்தியாவிலும் முஸ்லீம்களை நடத்து ங்கள் எனும் பதிவு மோடி, யோகி பகவான் படை என்ற பெயரால் பதிவிடப்பட்டு, வைரலாக்கப்படுகிறது.

குருகிராமில் முஸ்லீம்களுக்கு உரிமையான வக்ப் வாரிய இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் முஸ்லீம்கள் பொது கூட்டுத் தொழுகைக்காக பொது இடங்களை நகராட்சி அனுமதித்ததும், அதற்கு சங் பரி வாரத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொது கூட்டுத் தொழுகை நடத்த இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டது. நில ஜிகாத் என்று பெயர் சூட்டி தொழுகைக்கான இடங்களை சங் பரிவாரத்தினர் மறுக்கின்றனர்.

திரிபுராவில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள்

வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்கு தல்கள் நடைபெற்றதைக் காரணம் காட்டி திரிபுராவில் பா.ஜ.க ஆட்சியினரின் பின்துணையுடன் முஸ்லீம்கள் மீது சங் பரிவாரத்தினர் தாக்குதல்களை நடத்தினர். அக்டோபர் 27 ல் வங்காளதேச தாக்குதல்களுக்கு  எதிரான இயக்கங்களில் விஸ்வ இந்து பரிசத், இந்து  ஜக்ரான் மஞ்ச், பஜ்ரங்தளம், ஆர்.எஸ்.எஸ்  அமைப்பினர் நடத்தினர்.  15 மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன. ஏராளமான வீடுகள், கடைகள்  அடித்து நொறுக்கப்பட்டன. மொத்த மக்கள் தொகை யில் வெறும் 8.6 சதவிகிதமே உள்ள திரிபுரா முஸ்லீம்கள் அச்சத்தின் பிடியில் தள்ளப்பட்டனர். வங்க தேசத்தில் நடைபெற்ற செயல்களுக்கும் திரிபுரா முஸ்லீம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத போதும் திட்டமிட்டு அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கண்டித்தது. பா.ஜ.க தவிர்த்து இதர கட்சி களும் கண்டித்தன. அடுத்த ஒரு சில நாளில் உள்ளாட்சி  தேர்தல் அறிவிக்கப்பட்டது.  வங்கதேசம் ஒரு இஸ்லா மிய நாடு என அறிவிக்கப்பட்ட தேசம் என்றாலும் அந்த அரசு இந்து சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த தோடு, இந்துக்களுக்குப பாதுகாப்பும் வழங்கியது. ஆனால் மதசார்பற்ற இந்தியாவிலுள்ள திரிபுராவில் உள்ள பாஜக அரசு குற்றவாளிகளுடன் கைகோர்த்து சிறுபான்மை முஸ்லீம்களின் மீதான தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதனால் சில  பகுதிகளில் இரண்டு நாட்கள் முஸ்லீம்களின் தொழுகைக்கான பாங்கு அழைப்பு கூட நிறுத்தப் பட்டது. திரிபுராவில் இத்தகைய தாக்குதல்கள் குறித்த  உண்மைகளை வெளிக் கொண்டு வந்த உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் மகேஷ்,  அன்சருல் ஹக் அன்சர், ஷ்யாம் மீரா சிங் எனும் ஊடக வியலாளர் ஆகியோர் மீது திரிபுரா அரசு உபா சட்டத்தின்கீழ் ஜாமீனில் வர இயலாத வகையில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உச்சநீதிமன்ற தடை யின் காரணமாக அவர்கள் கைது செய்யப்படவில்லை.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள்

அக்டோபர் 3ல் 200க்கு மேற்பட்ட சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக உத்தர்கண்ட மாநிலம் ரூர்க்கியில் உள்ள சர்ச் மீது தாக்குதல் நடத்தி, அங்கு ஞாயிறு பிரார்த்தனைக்காக கூடியிருந்த கிறிஸ்தவ மக்களை காயமடையச் செய்தனர். அந்த  தாக்குதல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த 9  மாதங்களில் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் 21 மாநிலங்களில் இந்துக்களை மதமாற்றம் செய்கின்ற னர் என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என குறிப்பிடுகின்றனர்.  கிறிஸ்தவர்கள் மீதான 300 தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறுகின்றனர். உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு  பிரச்சாரம் செய்யப்படுகிறது. பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிசத்தைச் சார்ந்தவர்கள் பஜனை பாடிக்  கொண்டே கிறிஸ்தவ வழிபாடு இடத்தில் நுழைந்து, மதமாற்றம் நடைபெறுவதாக கூறி அமர்ந்துகொண்ட னர். பாஜக எம்.எல்.ஏ கிறிஸ்தவ புரோகிதரை கைது செய்ய வற்புறுத்தினார். அக்டோபர் 10 ல் உத்தரப்பிர தேசம் மாவ் மாவட்டத்தில் சங் பரிவாரத்தினர் புகாரின் பேரில் மதமாற்றம் நடத்துவதாக குற்றம் சாட்டி ஏராள மான ஆண்களும், பெண்களும் கைது செய்யப்பட்ட னர். சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தாம் மாவட்டத்தில் 100 பேர் கொண்ட கும்பல் 25 வயது கிறிஸ்தவ பாஸ்டரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரைத் தாக்கினர். பல இடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுக்கள் தாக்கப்பட்டதாக வும், பாஸ்டர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றதாக வும் கார்டியன் இதழ் கூறுகிறது. இதற்கு காவல்துறை யினரும் உடந்தையாக இருந்துள்ளனர். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் கூட கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் வகையில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சியின் அறைகூவல்

அரசியல் சட்டம் வகுத்த நெறிமுறைகளின் படி மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. பாபர் மசூதி பிரச்சனை முதல் மண்டைக்காடு கலவர பிரச்சனை வரையிலும் மார்க்சிஸ்ட் கட்சி  எவ்வித சமரசமும் இன்றி வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், வகுப்புவாத தாக்கு தல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்துள் ளது. பிற மதசார்பற்ற கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் காரணங்களுக்காக வகுப்புவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டோ அல்லது வகுப்புவாத செயல் களைக் கண்டிக்க மறுத்தும், தடுக்க மறுத்தும் மவுன சாட்சிகளாக இருந்த காலங்களில் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி, பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களோடு நின்றுள்ளது.

மத நல்லிணக்கம், மனித நேயம் ஆகியவை மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும் அடிப்படை என்ற நிலைபாட்டின் அடிப்படையில் சிறுபான்மையினர் மட்டுமன்றி பெரும்பான்மை யினரும் வகுப்புவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டுமென்று வற்புறுத்தி வருவதோடு, அந்த ஒற்றுமையை உருவாக்கப்  பாடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு பெரும்பான்மை வகுப்புவாதமும், அதற்கு போட்டியாக எழும் சிறுபான்மை வகுப்பு வாதமும் ஆபத்தானவை. எனவே தான் சிறுபான்மை மக்கள் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மக்களும் மத வேறுபாடின்றி ஒன்று பட்டு, டிசம்பர் 1ல் கண்டன இயக்கத்தில் பங்கேற்க முன்வருமாறு வேண்டுகிறது.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
 

 

;