articles

img

கூட்டாட்சிக்கு எதிரான கேந்திரிய வித்யாலயாக்களின் மொழிக் கொள்கை....

இந்தியா முழுவதும் 1200க்கும் அதிகமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 13 லட்சம் பேர் பயில்கிறார்கள். தமிழகத்தில்சுமார் 25 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிற்று மொழிகளாக ஆங்கிலமும் இந்தியும் இருக்கின்றன. இதற்கு ஒன்றிய அரசு கற்பிக்கும் நியாயம் பல்வேறு மாநிலங்களிலிருந்து அரசுப் பணியின் காரணமாக மாறுதலாகி வரும் பெற்றோரின் குழந்தைகளின் பயிற்று மொழியில் தொடர்ச்சி இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அதை நியாயம் எனக் கொள்ளலாம். 

ஆனால், மொழிப் பாடங்களைப் பொறுத்தமட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதும், 6 முதல் 8 ஆம்வகுப்பு வரை இந்த இரு மொழிப் பாடங்களோடுமூன்றாவதாக சமஸ்கிருதம் மட்டும்தான் கற்பிக்கப்படும் என்பதும் வழக்கமாக உள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைப் பொறுத்தமட்டில் மொழிப் பாடமாக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை மட்டுமே பயில முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.உள்ளூர்/தாய் மொழியைப் பொறுத்தமட்டில் 20 மாணவர்களுக்கு மேல் விரும்பினால் மட்டுமே கற்றுத் தரப்படும் என்றும் அதுவும் கூட பள்ளி நேரத்திற்குப் பிறகுதான் கற்றுக் கொடுக்கப்படும் என்றும் அதுவும் வாரத்திற்கு 3 நாள் மட்டுமே கற்றுத்தரப்படும் என்றும் விதி வைத்திருக்கிறார்கள். இதன் பொருள் என்னவெனில் தமிழகத்திலுள்ள தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குழந்தை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கல்வி கற்க நினைத்தால் தாய் மொழியை தனியே டியூசன் வைத்துக் கொள்வது போலபள்ளி நேரத்திற்கு அப்பால் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். அந்த கற்பித்தலுக்கான மதிப்பெண்கள், தேர்வு, சான்றிதழ் எதுவும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இதில் இன்னொரு கட்டுப்பாடு என்னவெனில் பிப்ரவரி மாதத்திற்குப் பின் இவ்வாறு பள்ளி நேரத்திற்கு அப்பால் நடத்தப்படும் வகுப்புகள் நிறுத்தப்படும் என்பது. அதாவது, அந்தக் குழந்தை தாய் மொழியை கற்றுக் கொள்வது தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

இடைநிலைக் கல்வி வரை தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்பது நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து அமைக்கப்பட்ட அனைத்து நிபுணர் குழுவாலும் வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சமாகும். பயிற்று மொழியாக உள்ளூர் மொழியைவைத்துக் கொள்வதில் உள்ள பிரச்சினையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உள்ளூர்/தாய் மொழியே பாடத்திட்டத்தில் இருக்காது என்பது வன்மம்/வக்கிரத்தின் உச்சம். அதனிலும் முக்கியமான அம்சம் என்னவென்றால் தற்போது வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழி கட்டாயப் பாடமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் என்பது. கூடுதலாக எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்வதில் பிரச்சினை கிடையாது. ஆனால், முற்றிலுமாக உள்ளூர் மொழியை, தாய் மொழியை மறுக்கும் கல்விக் கொள்கை மிகப் பெரிய கலாச்சார ஒடுக்குமுறை ஆகும்.

கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தின் இந்த படு பிற்போக்குத்தனமானதும் ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்ததும் தாய் மொழிகளை சிதைக்கும் நோக்கம் கொண்டதுமான இந்த நடைமுறை கைவிடப்பட வேண்டும்.தமிழோ, மலையாளமோ, தெலுங்கோ, உருதோ எந்தவொரு தாய் மொழியையும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை மறுப்பது என்பது கூட்டாட்சி கொள்கைகளுக்கும் இந்தியாவின் ஏற்றுக் கொள்ளப்பட்டமொழிக் கொள்கைக்கும் மனித நாகரிகத்திற்கும் முற்றிலும் எதிரானதாகும்.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் உள்ளூர் மொழிகளை பாடமாக வைப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதேபோன்று சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறெந்த இந்திய மொழிகளுமோ அல்லது பிற நாட்டு மொழிகளுமோ விருப்பப் பாடமாக இருப்பதில்யாருக்கும் ஆட்சேபணைகள் இருக்க முடியாது.

சங்பரிவார் அமைப்பின் அகராதியில் சமஸ்கிருதம் தெய்வத்தின் மொழியாக இருப்பதாலேயே எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது உணவு அல்லாத ஒன்றை, உடலுக்கு ஒவ்வாத ஒன்றை ஒவ்வொருகுழந்தையும் உண்ண வேண்டுமென அழுத்தம் கொடுப்பதற்கு சமமானதாகும்.கல்வித் துறையிலேயே இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்க தாகும்.

கட்டுரையாளர் : க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;