articles

img

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்....

பாசிசம் என்பது ஓர் இத்தாலிய மொழிச் சொல்லைத் தழுவியது. பண்டைய ரோமப் பேரரசில் குற்றவியல் நீதிபதி ஒருவர் பணியில் இருக்கும்போது, அவருக்குக் கட்டியம் கூறி வரவேற்று, மக்களை மரியாதை கொடுக்கவைத்து, அவருக்கு ஒத்தாசைபுரிய விசேட அலுவலர்கள் (lictors) இருந்தனர். அவர்கள் ஒரு சிறு கைக்கோடரியையும் ஒரு சில மரக்குச்சிகளையும் (axe and rods) ஓர் உருளையாகச் சேர்த்துக்கட்டி, அதனை ஓர் அதிகார அடையாளமாக தங்கள் கைகளில் ஏந்திநின்றனர். “பார், நான் அதிகாரம் உடையவன்” என்று அறிவிக்கிற ஓர் உத்தியாகவும் அது இருந்தது.

‘பாசிஸ்’ (Fasces) என்றழைக்கப்பட்ட அந்த ஆயுதம்ஒற்றுமையின் இன்றியமையாமையையும், அந்த ஒற்றுமை வலிந்து கட்டிவைக்கப்படவேண்டிய தேவையையும் மக்களுக்கு உணர்த்தியது. அந்தக் குறியீட்டு ஆயுதத்தில், கைக்கோடரி ஆட்சியராகவும், மரக்குச்சிகள் மக்களாகவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கலாம். நாடாளும் தலைவனை நாட்டார் தலைவணங்கி ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று மறைமுகமாகப் பணித்தது அந்த ‘பாசிஸ்’ ஆயுதம்.

நாளடைவில் இந்த அடக்கியாளும் அதிகாரவெறியை ‘பாசிசம்’ என்றும், இந்த அதிகாரவெறி கொண்டவரை ‘பாசிஸ்ட்’ என்றும் அழைக்கத் துவங்கினோம். பாசிசம் எனும் சொல்லுக்கு துல்லியமான வரையறை, நேர்த்தியான விளக்கம் என்று எதுவுமில்லை. இது ஒரு வினோதமான மனப்பாங்கு. “எனது நாட்டை தரந்தாழ்த்தியிருக்கும் தீயசக்திகளுக்கு எதிரானப் போராட்டத்தில் என்னை அர்ப்பணித்துக்கொண்டு, எந்த தியாகத்தையும் செய்து, என் நாட்டின் பழைய மகத்துவத்தையும், மகிமையையும் மீட்டெடுப்பேன்” என்று உறுதிபூணுவதுதான் இதன் உந்துசக்தி. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், அபரிமிதமான தேசபக்தியின் அடாவடியான வெளிப்பாடுதான் பாசிசம்.

‘பாசிசம்’ என்பது அடக்கியாள விரும்புகிற ஓர் அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். சர்வாதிகாரம், சாதியவாதம், இனவாதம், மதவாதம், இந்துத்துவம், ஆரியத்துவம், பார்ப்பனத்துவம், வலதுசாரி, பிற்போக்குவாதி என்றெல்லாம் நமது அன்றாட அரசியல் வாழ்வில் நாம்பயன்படுத்துகிற பற்பல சொற்களின் உட்கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரே சொல்தான் பாசிசம்.பாசிசத்தை தனிமனிதர்களின் அதிகாரவெறி என்றோ, வெறும் வெறுப்பரசியல் மட்டும்தான் என்றோ சுருக்கிப் பார்ப்பது பெரும் தவறு. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவம் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொள்ளும்போது, பிற்போக்கு ஆதிக்கசக்திகளின் ஈடுபாடுகளைப் பாதுகாக்கும் அரசியல் போக்குத்தான் பாசிசம் என்று கம்யூனிஸம் விவரிக்கிறது. இன்றைய உலகில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் முதலாளித்துவ மும்மை ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் அதீத மாசுபாடு, புவி வெப்பமயமாதல், பருவநிலைச் சிதைப்பு என்று பூவுலகின் அடிப்படைகளையே தகர்த்துக் கொண்டிருக்கும்போது, பாசிசம் பல நாடுகளில் பல்வேறு வழிகளில், பற்பல தன்மைகளுடன் தன் கோரப்பற்களைத் துருத்தி நிற்கிறது.

அதிகாரத் தளங்களில் மட்டுமல்லாமல், உலகளாவிய குடிமைச் சமூகங்களிலும் புதிய பாசிச சித்தாந்தமும் (நியோ-பாசிசம்), அமைப்புக்களும் பல்கிப் பெருகியிருக்கின்றன. இன்றைய இணையத்தில்கூட பாலியல் தளங்களுக்கு இணையாக பாசிசத் தளங்கள் நிறைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. பல நாடுகளில் வலதுசாரி பாசிசக் குழுக்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், அவை இடையூறு ஏதுமின்றி இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.உலகெங்கும் பல ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கவும், தக்கவைத்துக்கொள்ளவும் பாசிசச் சிந்தனையையும், செயல்பாடுகளையும் பிரயோகிக்கின்றனர். ‘ஏழ்மையை அகற்றுவோம்,’ ‘வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம்’ என்றெல்லாம் சொல்லி மக்கள் ஆதரவைப் பெறுவதைவிட, ‘புதிய தேசம்,’ ‘நமது பேரரசு,’ தேசியப் புண்ணாக்கு என்றெல்லாம் வெற்று முழக்கங்களை, வெறுப்புப் பேச்சை பயன்படுத்தி, மக்களை உசுப்பேற்றி எளிதில் அடிமைகளாக்குகின்றனர்.தம்மினத்தின் வரலாற்றுப் பின்னடைவுகள் மீதான கோபம், தற்காலச் சமூகத்தின் ஒரு சாரார் மீதான வெறுப்பு, வருங்காலத்தைத் தமதாக்கிக்கொள்ள வேண்டுமெனும் பேராசை போன்ற எதிர்மறை உணர்வுகளை சாமர்த்தியமாக பயன்படுத்துகிறார்கள் பாசிஸ்டுகள். முன்னாள் பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கால் சொன்னதுபோல, உங்கள் மக்கள் மீதான அன்பு முதன்மை பெறும்போது, அதன் பெயர் நாட்டுப்பற்று; பிற மக்கள் மீதானவெறுப்பு முதன்மை பெறும்போது, அதுதான் தேசியவாதம். பாசிஸ்டுகள் எப்போதுமே கொடும் தேசியவாதிகள் என்பதால் வெறுப்பையே உமிழ்கிறார்கள்.

வெறுப்பு ததும்பிநிற்கும் உள்ளம் வெகு எளிதில் ஓர் எதிரிக்குழுமத்தைக் கண்டறிந்து, ‘அவர்கள் அப்படித்தான்’ என்று பொதுமைப்படுத்தி, வேற்றுப்படுத்தி, விலக்கிவைக்கிறது. ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாகப் பார்க்காமல், அனைவரையும் ஒரேமாதிரியாகப் பார்த்து, பகைமைப் பாராட்டுகிறது (stereotyping) பாசிசம். பசியும், பஞ்சமும், ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார நெருக்கடிகளும், அரசின் சிக்கன நடவடிக்கைகளுமாக ஒரு சமூகம் திண்டாடும்போது, குற்றம் கண்டுபிடிப்பதற்கும், குறை சொல்வதற்கும், பழிபோடுவதற்கும், பகையைத் தீர்த்துக்கொள்வதற்கும் ஒரு பலியாட்டைத் தேடுகிறது (scapegoating) அது.சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்களை, அந்த இழிநிலைக்கு அவர்களே  காரணமானவர்கள் என்று பாதிக்கப்பட்டோர் மீதே பழிசுமத்துகிறது (victim-blaming). வயிறார உண்டு, வாழ்வின் அனைத்து வாய்ப்பு வசதிகளுடன் வாழ்வாங்கு வாழும் சமூகங்களிலும்கூட சிலர் வெறுப்புக்கு (bigotry) ஆளாகிறார்கள். அவர்கள் வெறுப்புப் பேச்சுக்கள்  பேசி,வெறுப்புக் குற்றங்களில்  ஈடுபடுகிறார்கள். சமூக அமைதியைக் குலைக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை வெறுப்பதும், வேற்றுப்படுத்துவதும், விரட்டியடிப்பதும், வேரறுப்பதும்தான் மீட்சிக்கான ஒரே வழி என்று பாசிஸ்டுகள் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஆயிரம் வழிகளில் அதை மீண்டும்மீண்டும் நிறுவுவார்கள். திரும்பும் திசையெல்லாம் நின்று, தினமும் இந்தச் செய்தியை அடுத்தடுத்துச் சொல்லி நம்மைதிக்குமுக்காடச் செய்வார்கள்.“எதிரி” என்று பாசிஸ்டுகள் கருதுபவர்களின் சிறுமைகளைப் பட்டியலிட்டு, அவர்களை மனிதத்துவம் அற்றவர்களாக மாற்றி (dehumanizing), கொடும் அசுரர்களாகச் சித்தரிக்கும் (demonizing) அதேவேளையில், தங்களின் பெருமைகளைப் பற்றியெல்லாம் பீற்றிக்கொள்வார்கள். இன அறிவியலை போதித்து நாம் எப்படி உயர்ந்தவர்கள், மேன்மையானவர்கள் என்பதையெல்லாம் விவரிப்பார்கள், விளக்குவார்கள். 

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, கொஞ்சம் கொஞ்சமாக சாதி/மத/இன வெறியைப் புகட்டுவார்கள். “நம் குமுகத்தின் தூய்மையை, சுத்தத்தைப் பேணுவோம்” என்று பதைபதைப்பார்கள்; “நம் வரலாற்றுப் பெருமைகளை மீட்போம்” என்று கொக்கரிப்பார்கள்; “பெருவாழ்வு நோக்கிப் பீடுநடை போடுவோம், வாருங்கள்” என்று பின்னோக்கிச் செல்ல பெரிதும் விரும்பி அழைப்பார்கள்.இவை அனைத்தையும் செவ்வனே செய்துமுடிக்க,தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று கோருவார்கள். தங்கள் விருப்பப்படி சமூகப்-பொருளாதார-அரசியல் அமைப்பை “சரிசெய்ய” முனையும் இந்த வெறுப்பு,அதற்கான அதிகாரத்தைத் தேடுகிறது. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு இந்த வெறுப்பு பெரும் துணையாகவும் அமைகிறது. சிறுபான்மையினர், வந்தேறிகள், கருப்பு நிறத்தினர், ஓரினச் சேர்க்கையாளர்கள், நாடோடிகள், அரசியல் எதிர்த்தரப்பினர் என எல்லோருமே எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்கள்.

நாம் யார், நமது எதிரி யார், நமக்கு என்ன வேண்டும்என்பவற்றையெல்லாம் தெளிவாக்கிய பிறகு, பாசிச அரசியல் முழுவீச்சில் ஆரம்பிக்கிறது. நாட்டிற்கேற்ப, அங்கே நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப, காலத்தின் தேவைகளுக்கேற்ப பாசிசம் தன்னை உருமாற்றிக்கொண்டு உலாவரும்.பல பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் முசோலினி - ஹிட்லர் போல நேரடி வன்முறை, அதிரடி அடக்குமுறை, அராஜக அழித்தொழிப்பு என்றெல்லாம் இயங்குவதில்லைதான். ஆனாலும் பல்வேறுப் பிரச்சனைகளில் வரம்புமீறி நடந்துகொண்டோ, அல்லது வாளாவிருந்தோ, தம் மக்களுக்கு பற்பல துன்பங்களைத் தந்து, சமூக நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு, அரசியல் மேன்மை அனைத்தையும் அழிப்பார்கள்.

பாசிசம் எனும் அழிவுச் சித்தாந்தம், இந்தியச் சூழலைப் பொறுத்தவரை, மதவெறி, சாதிவெறி, ஆணாதிக்கவெறிக் கொள்கையாக, சிறுபான்மையினர் மீதான வெறுப்பாக, சமத்துவக் கனவுகளைச் சிதைத்து, சமூகநீதியை மறுத்து, ஆதிக்க வெறுப்பின், அடக்குமுறையின் அடிப்படையில் சமூகத்தைக் மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கையாக உருப்பெறுகிறது. இந்தியா எனும் பெருங்கனவை தகர்க்க முயலும் பேய்க்கனவாக முகிழ்க்கிறது.

கட்டுரையாளர் : பாசிசம், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்

;