articles

img

தான் திருடி பிறரை நம்பாது 

மோடி கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியில் நடந்த மாநாட்டில் மத்திய அரசு பலவீனமாக இருப்பதால் தான் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார்.
ஆனால் இன்று அதே மோடி பிரதமராக மாறி உள்ள இப்போது நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி முதல் சாதாரண வீட்டு வேலைக்காரர்கள் வரை யாருக்கும் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் அந்தரங்க உரிமைக்கு கூட பாதுகாப்பு இல்லாத அபாயகரமாக சூழல் உருவாக்கி உள்ளது. இது அயல்நாடுகளின் அத்து மீறல்களால் உருவானது அல்ல. மாறாக  ஒன்றிய அரசின் ஆசிர்வாதத்தோடு நடைபெறுவதே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
பெகாசஸ் என்ற உளவு செயலியின் மூலம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என தி வயர் உள்ளிட்ட 17 செய்தி நிறுவனங்கள் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் தனி நபர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டியதே ஒன்றிய அரசின் கடமை. நாடு முழுவதும் பதறவைக்கும் உளவு விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கூட அதுகுறித்த உண்மையை கூற மோடி அரசு மறுப்பதும் மறைப்பதும் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. 

அதுமட்டும் அல்லாமல் பெகாசஸ் உளவு விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் இந்த நாட்டின் உச்ச பட்ச அதிகாரம் கொண்டிருந்த நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாயின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நீதித்துறை ஆபத்தில் உள்ளது என்று வரலாறு காணாத வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த 5 நீதிபதிகளில் ஒருவர்தான் ரஞ்சன் கோகாய். ஆனால் அவரே தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின் நாட்களில் எந்த அரசுக்கு எதிராக பத்திரிகையாளர்களை சந்தித்தாரோ அதே அரசுக்கு ஆதரவாளராக மாற்றப்பட்டதன் பின்னணியில் இந்த பெகாசஸ் உளவு வேலை முக்கிய பங்கு வகித்திருக்கிறது என இன்று பல்வேறு தொழில்நுட்ப அறிவு ஜீவிகள் முன்வைத்திருக்கும் கருத்து கவனிக்கத்தக்க ஒன்று. இந்த உளவு செயலிமூலம் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் அதிகார அமைப்புகளின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்தல் காலங்களில் பாஜகவின் அத்து மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பிய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அசோக் லாவாசா குறிவைக்கப்பட்டு பழிவாங்க பட்டிருப்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது. இதேபோன்று அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பாஜகவிற்கு எதிராக தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷேர் உள்ளிட்ட பலரும் குறிவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர். 

ஆம் தான் திருடி பிறரை நம்பாது என்பது கிராமத்து வழக்கு. 
இதுபோன்ற உளவு பார்ப்பது தற்போது மட்டும் இல்லை. மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே பாஜகாவில் இருந்த பலரை இதுபோன்று கண்காணித்து அவர்களை பின்னுக்கு தள்ளி தன்னை முன்நிறுத்திக்கொண்டார் என்பதே வரலாறு.
தற்போது பெகாசஸ் உளவு வேலை பிரதமர் தேச நலன் சார்ந்து எடுக்கப்படும் ராஜதந்திரம் என்கிற ரீதியில் சிலர் திசை திருப்புகின்றனர். 
அது சரி பாஜகவிற்கு இதுபோன்ற திசைதிருப்பல்கள் புதிதா என்ன?
ஏற்கனவே தற்போதைய பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண்ணை ரகசியமாக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 
இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜி எல் சிங்கால் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சி.பி.ஐ-யிடம் கொடுத்த பென் டிரைவில் இருந்த தொலைபேசி உரையாடல்களில் உளவு பார்க்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் அடங்கியிருந்தது. அதில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, 2009 ஆகஸ்ட் மாதம் பெங்களூருவைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான இளம் பெண்ணை பின் தொடர்ந்து கண்காணிக்கும்படி சிங்காலுக்கு உத்தரவிட்டது தெரியவந்தது.  அதுமட்டும் இல்லாமல் கட்ச் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா, ‘இந்த பெண்ணுக்கும் மோடிக்கும் இடையேயான தொடர்பு பற்றி தனக்கு தெரிந்திருந்ததால் பழி வாங்கப்படுவதாக’ பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  அப்போது மோடியோ வழக்கம் போல் மவுனம் காத்தார். 
ஆனால் அமித் ஷா - சிங்கால் தொலைபேசி உரையாடலை கோப்ரா போஸ்ட்- குலேல் ஆகிய இணைய தளங்கள் செய்தியாக வெளியிட்டு அம்பலப்படுத்தின. 
வழக்கம்போல் மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்த பாஜக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் அறிக்கையை வெளியிட்டது.  அதில் “என் பெண்ணின் பாதுகாப்புக்காக, நான்தான் முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதனால் என் மகளை பின் தொடர்வதற்கு மோடி ஏற்பாடு செய்தார்” என்கிறார் பிராண்லால் சோனி என்ற அந்த தந்தை. அதாவது, அமித்ஷா – சிங்கால் உரையாடலில் குறிப்பிடப்படும் பெண் பிராண்லால் சோனியின் மகள். அந்த கண்காணிப்புக்கு உத்தரவிட்டது நரேந்திர மோடி என்பதை பாஜக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, பெகாசஸ் உளவு பார்ப்பு விவகாரம் பூதாகரமாகி உள்ள இந்த சூழலில் ஒன்றிய அமைச்சகத்தின் உள்துறை அமைச்சராக உள்ளார் அவ்வளவுதான். 
உலக நாடுகளின் ரகசியங்களை ஒட்டுகேட்டுக்கொண்டே ஜனநாயகத்தின் காவலன் என்று தன்னை தானே பறைசாற்றிய அமெரிக்காவின் கோர முகத்தை வெளிச்சமிட்டு காட்டிய எட்வர்ட் ஸ்னோடன், பெகாசஸ் என்ற வணிக ரீதியிலான உளவு மென்பொருள் சக்தி வாய்ந்ததாகும். சாதாரண மக்கள் இதைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது. “அணு ஆயுதங்களிலிருந்து தங்களைக் காப்பாற்ற மக்கள் என்ன செய்ய முடியும்? என்று இதன் உள்ளார்ந்த ஆபத்தை எச்சரிக்கிறார். நாடாளுமன்றத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் நாடே கொந்தளிக்கும் தறுவாயில் 54 இன்ச் மார்பு கொண்ட மோடி வழக்கம் போல் மவுனம் காக்கிறார். நாடாளுமன்றத்தில் குடைபிடித்து செய்தியாளர்களை சந்தித்த மோடி அந்த செய்தியாளர்களின் செல்போன்களை உளவு பார்க்கும் மென்பொருட்களை இந்தியா வாங்கியதா? வாங்கவில்லையா? என்று வெளிப்படையாக சொல்வாரா?
-எம்.பாண்டீஸ்வரி

;