articles

img

போராடும் விவசாயிகளும் ‘காகித விவசாயிகளும்’ - கோபால் குரு

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து, விவசாயிகள் என்பதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் விவசாயிகள் என்ற வார்த்தையைச் சுற்றி தெளிவில்லாத வளையத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகளின் உண்மைத்தன்மையை மறுக்க முற்படுகின்ற அவர்கள் உண்மையான விவசாயிகள் யார் என்பதை வரையறுக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. இந்த வேளாண் சட்டங்களை விவசாயி என்பதற்கான நம்பகத்தன்மையை ஒருதலைப்பட்சமாக நிறுவுவதற்கான முக்கியமானதொரு அளவுகோலாகவே அதன் ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தெரிகிறது. இந்தச் சட்டங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே உண்மையான விவசாயிகள், மற்றவர்கள் அனைவரும் ‘போலிகள்’ அல்லது ‘பயங்கரவாதிகள்’ என்றே அதிகாரப்பூர்வ சிந்தனை கருதுகின்றது. விவசாயிகள் என்ற வகைப்பாட்டைத் தெளிவற்றதாக மாற்றுவதற்கு தார்மீக வழிமுறைகளை மட்டுமே இந்த அரசாங்கம் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. அது மிகவும் பிடிவாதத்துடன் இந்தச் சட்டங்களை நிலைநிறுத்துவதற்காக  உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த குழு என்று தனக்குச் ‘சாதகமான’ உறுப்பினர்களைப் பரிந்துரைக்கின்ற நுட்பமான வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அந்தக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடலின் குறிக்கோள்கள் மற்றும் அதன் நேர்மை குறித்து விவசாயிகள் சந்தேகம் கொண்டுள்ளதையே அந்தக் குழுவின் மீதான விவசாயிகளின் பிரதிபலிப்பாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.       

அரசாங்கத்தின் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையிலே காந்திய எதிர்ப்பு முறைகளைக் கையாண்டு வருகின்ற விவசாயிகள் தங்களுடைய உறுதியான பதிலை அளித்துள்ளனர். போராடி வருகின்ற இந்த எதிர்-குணாதிசயத்தின் ஒரு பகுதியாக அவர்கள் சுயமாக விவசாய வல்லுநர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டிருப்பவர்களை ‘காகித விவசாயிகள்’ என்றே குறிப்பிடுகின்றனர். போராடி வருகின்ற விவசாயிகளின் வெளிப்பாடுகளிலிருந்து, ‘காகித விவசாயி’ என்பதற்கான பொருளை ஒருவரால் எளிதில் அறிந்து கொள்ள முடியும். ‘காகித விவசாயி’ என்பதை ‘காகிதத்தில் இருக்கின்ற விவசாயிகள்’ என்றழைக்கப்படும் மற்ற போலி வகைகளுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.    

உண்மையான விவசாயி என்பதற்கான பொருள் குறித்து சில கருத்துகளைப் பெற உதவுகின்ற கடுமையான அளவுருக்களை விவசாயிகள் வகுத்துக் கொடுத்துள்ளனர். புதிய வகை விதைகள் மற்றும் கருவிகளைக் கண்டுபிடிப்பது, நல்லதொரு அறுவடைக்கான திறன் வாய்ந்தவையாகக் கருதப்படும் புவிசார் நிலைமைகள், விதைகள் மற்றும் அறுவடை நுட்பங்கள் குறித்த தனித்துவமான அறிவை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றின் அடிப்படையிலே அறிவியல் கண்டுபிடிப்புகளில் பங்கேற்கும் வகையில் தங்களிடம் உள்ள அறிவாற்றல் திறனை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகள் தங்களூக்கான உண்மையான அடையாளத்தை நிறுவ முற்படுகின்றனர். நிலத்துடன் தாங்கள் கொண்டிருக்கின்ற தார்மீக, கலாச்சார உறவிலேயே விவசாயியாக இருப்பதன் உண்மையை அவர்கள் கண்டறிகின்றனர். இறுதியாக சந்தையின் மாறுபாடுகளுக்கு எதிராக தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வலுவான மதிப்பீட்டு திறன்,  இயற்கையால் உருவாக்கப்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறன் போன்றவற்றைக் கொண்டிருக்கும் இவர்கள்தான் உண்மையான விவசாயிகள். ஈரமான வயலுக்குள் நுழையாமல் அல்லது மழை பெய்யும் என்று ஆண்டுதோறும் வறண்ட வயல்களில் ஏமாற்றத்துடன் காத்திருக்காமல் இருக்கின்ற ஒருவரால் விவசாயிகளின் பிரச்சனைகளில் எவ்வாறு நிபுணராக இருக்க முடியும் என்று இந்த விவசாயிகள் தங்களுடைய வாழ்வனுபவத்திலிருந்தே கேள்விகளை எழுப்புகிறார்கள்.     

போராடி வருகின்ற விவசாயிகளின் கூற்றுப்படி பார்த்தால், இந்த தார்மீக கட்டமைப்பிற்குள் வருபவர்கள் அனைவரும் உண்மையான விவசாயிகளாக இருக்க, ‘காகித விவசாயிகளாக’ இருப்பவர்கள் விவசாயத்தைப் பற்றி சிறிதளவே அறிவு கொண்டவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘காகித விவசாயிகள்’ என்ற இந்தப் பெயர், வெறுமனே வஞ்சகர்கள் அல்லது பாராசூட்டிலிருந்து விவசாயப் பிரச்சனைக்குள் குதித்தவர்கள்  என்ற மோசமான விளக்கத்தை மட்டுமே அவர்களுக்கு தருவதாக இருக்கவில்லை. விவசாயிகளைப் பொறுத்தவரை, உண்மையான விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற தகுதிகளால் மட்டுமே அவ்வாறு இருக்கிறார்களே தவிர, தங்களுடைய பதவி அல்லது நியமனத்தால் அல்ல. தங்களுடைய அறிவு, உடல் உழைப்பு இரண்டையும் நிலத்துடன் கலக்கின்ற கடினமான செயல்முறைகள் மூலமே விவசாயிகள் தங்களை விவசாயிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அத்தகைய செயல்முறைகளே விவசாயி என்று வகைப்படுத்தப்படுபவரின் உள்ளடக்கத்திற்கு தார்மீகரீதியான, பொருள் ரீதியான தனித்துவத்தைக் கொண்டு வருகின்றன.  

தற்போதைய சூழலில், கள நிலைமையை மதிப்பிடுவதற்காக குழுவை அமைப்பது மூன்று சிக்கலான தாக்கங்களுடன் உள்ளது. முதலாவதாக விவசாயிகள் தங்களுடைய போராட்டங்களில் இருப்பதாகக் காணும் நோக்கங்களின் உண்மைத்தன்மையை மறுப்பதன் மூலம் அந்தக் குழு அரசாங்கத்திற்கு நன்மையை ஏற்படுத்தித் தரவே முற்படும். இரண்டாவதாக, விவசாயிகளின் பார்வையில் இருந்து பார்க்கும் போது இதுபோன்று ஒரு குழுவை அமைப்பது, அவர்களுடைய எதிர்ப்பை ‘இருப்பதாகக் கருதப்படுகின்ற’ என்பதாக வகைப்படுத்தி அதன் செயல்திறனை மறுப்பதாகவே இருக்கும். ‘இருப்பதாகக் கருதப்படுகின்ற’ என்ற அந்தச் சொல்லாடல், அவர்களுடைய கோரிக்கைகளை மிகவும் உறுதியான கான்கிரீட்டிலிருந்து திரவமாக மாற்றுவதற்கான, தெளிவான நிலையிலிருந்து குழப்பமானவையாக மாற்றுவதற்கான செயல்பாட்டையே  கொண்டுள்ளது. கான்கிரீட் நிலையில் உள்ள தங்களுடைய நிலைமைகளை மாற்றுகின்ற இந்த வேளாண் சட்டங்கள் தங்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை என்பதை விவசாயிகள் தெளிவாகக் காண்கின்றனர். கோடிக்கணக்கான விவசாயிகளால் எழுப்பப்பட்டிருக்கின்ற சந்தேகங்களுக்கான நம்பகத்தன்மையை மறுப்பதாகவே அந்தச் சொல் இருக்கிறது. நல்ல பொது அறிவின் ஒரு பகுதியாக விவசாயிகளிடம் இருக்கின்ற சந்தேகங்கள், முற்றிலும் மோசம் என்று கருதப்படுகின்ற நிபுணர்களின் அறிவுக்கு எதிராகப் போராடுகின்றன.   

தங்களுடைய செயல்திறனுக்காக இந்த சட்டங்கள் சந்தைகள் மூலமாகவே நிறைவேற்றப்பட வேண்டும், பெருநிறுவனங்களைப் போன்று விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பதையே தங்களுடைய நோக்கமாக இந்த சட்டங்கள் கொண்டுள்ளன என்பதே மத்திய அரசிடம் இருந்து வருகின்ற அனுமானம். அந்த அனுமானத்தை வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் இருக்கின்ற சந்தேகமே அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குகிறது. புதிய தாராளமயத்தின் தர்க்கமே அரசின் அத்தகைய அனுமானத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே சட்டங்கள் உள்ளன என்ற அரசாங்கத்தின் வற்புறுத்தல் அதன் ‘பிடிவாதத்தை’ அதிகப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. ஒருபோதும் காலையில் எழத் தவறாது வெற்றிகரமாக சூரியனைப் போல இந்தச் சட்டங்கள் இருக்கும் என்று இந்தச் சட்டங்கள் முழுமையாக இயற்கையான உறுதியுடன் இருப்பதாகவே அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கருதுகிறார்கள் என்று தெரிகிறது. உண்மையிலேயே இந்தச் சட்டங்கள்  அவ்வாறு  இருக்கும் என்றால், இந்த அரசாங்கம் ஏன் இந்த சட்டங்களை விவாதிக்கின்ற நிலைமையிலேயே வைத்திருக்க விரும்புகிறது? அரசாங்கத்திடம் இருக்கின்ற அனுமானங்கள் கேள்விக்குரியவை என்பதாகவே அதன் செயல்பாடுகள் பொருள் கொள்ள வைக்கின்றன. சட்டத்திற்கும் சந்தைக்கும் இடையிலான உறவுகளின் வரலாறுமுழுக்க அவை இவ்வாறு கேள்விக்குரியவையாகவே இருந்திருக்கின்றன.      

https://www.epw.in/journal/2021/4/editors-desk/%E2%80%98paper-farmers%E2%80%99.html

நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி

தமிழில்: தா.சந்திரகுரு

;