articles

img

கங்கையில் மிதந்த இந்துத்துவமும்... முதலாளித்துவமும்....

கடந்த மே மாதம் முதல் வாரத்தில் கங்கையில் மிதந்து சென்ற நூற்றுக்கணக்கான சடலங்கள் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் இந்திய மக்கள் சந்தித்த பேரவலத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது!  குறிப்பாக நமது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி மற்றும் உ.பி.-யிலுள்ள மாணிகார்னிகா, ஹரிச்சந்திரா போன்ற கங்கையின் படித்துறைகளில் இருந்து தான் இவ்வாறு நூற்றுக்கணக்கான சடலங்கள் எரியூட்டப்படாமல் மிதக்க விடப்பட்டன. இது போன்ற அவலக்காட்சிகளை விவரிக்கும் பாடல்கள் கலிங்கத்துப்பரணியில் இடம் பெற்றுள்ளன.

                          ‘பிணமும் பேயும் சுடுகாடு      

                      பிணங்கு நரியும் உடைத்தரோ!”

என்ற வரிகளின் மூலம், போரில் மாண்ட வீரர்களின் உடல்களை தின்பதற்கு பேய்கள் ஒரு பக்கமும், நரிகள் ஒரு பக்கமும் சுற்றி வரும் சுடுகாடு போல் போர்க்களம் காட்சியளிப்பதாக ஜெயங்கொண்டார் வர்ணித்திருப்பார். இப்படி கற்பனையில் மட்டுமே படைக்கக்கூடிய ஒரு கொடூரமான அவலத்தை நிஜத்தில் உண்டாக்கிய ‘பெருமை’  மோடி அரசையே சேரும். கலிங்கத்துப்பரணி பாடல்கள் முதலாம் குலோத்துங்க சோழனின் வெற்றியை உரைக்கிறது என்றால்;   கங்கையில் மிதந்த நூற்றுக்கணக்கான சடலங்களோ மோடி அரசின் தோல்வியின் சாட்சியமாக அல்லவா திகழ்கிறது?!

தத்துவத்தின் பின்னணியில்...
கொரோனா பெருந்தொற்றை ஒழிப்பதிலும், தடுப்பூசிக்கொள்கையை வகுத்ததிலும் மோடி அரசின் தோல்வியைப் பற்றி விமர்சிக்கும் போது அதன் நிர்வாகத் திறமையின்மையோடும் - ஈவு இரக்கமற்ற பண்போடும் இணைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதோடு கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு வட இந்தியாவின் பல மாநிலங்களில் சங்பரிவாரங்களின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் பாஜகவின் தலைவர்களும் அறிவியலுக்குப் புறம்பாக ஈடுபட்ட பல்வேறு நடவடிக்கைகளும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

குறிப்பாக பசுவின் சாணத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டும், பசுவின் கோமியத்தை குடிப்பதுமான சடங்குகளை அவர்கள் மேற்கொண்டனர்.  சங்பரிவாரங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை வெறும் மூடநம்பிக்கை சார்ந்ததாகவோ... அல்லது கோமாளித்தன மான கூத்துக்களாகவோ... கருதாமல் மோடி அரசை வழிநடத்தும் தத்துவத்தின் பின்னணியில் நாம் அணுக வேண்டும். அவர்களது இந்த நடவடிக்கைகள் மாமேதை மார்க்ஸ் “லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” நூலில் கூறியது போல  “இதுவரை செத்துப் போயிருக்கிற பழைய தலைமுறைகளின் மரபு இன்று உயிரோடு இருப்பவர்களின் மூளையில் அமுக்குப் பேயைப் போலஉட்கார்ந்திருக்கிறது.” என்கிற வாசகங்களுக்கு எவ்வளவுபொருத்தமாய் பொருந்திப் போகிறது...!  ஆகவே, சங்பரிவாரக் கும்பல்கள் அரங்கேற்றும் அடி முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கான ஊட்டத்தை தங்களது பண்டைய புராண சாஸ்திரங்களிலிருந்தே பெறுகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக பஞ்சகவ்யம் (பசுவின் சாணம், மூத்திரம், பால், தயிர், நெய்) குறித்து பௌதாயனரின் தர்மசூத்திரத்தி லும், சரகர், சுஷ்ருதர், வாக்பதர் ஆகியோர் எழுதிய பண்டைய மருத்துவ நூல்களிலும் பசுவின் ஐந்து பொருட்களைப் (பஞ்சகவ்யம்) பற்றிய குறிப்புகளைப் பார்க்க முடிகிறது என தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் டி.என்.ஜா. தனது நூலில் குறிப்பிடு கிறார். தொடர்ந்து அவர் கூறும் போது,  கடுமையான காய்ச்சலின் போது மற்ற மருத்துப் பொருட்களோடு பஞ்ச கவ்யத்தை உட்கொள்ளும்படி சரகர் பரிந்துரைக்கிறார் என்கிறார். மேலும், பசுவின் சாணம், மூத்திரம் போன்றவற்றின் குணப்படுத்தும் ஆற்றல்கள் குறித்தும், அவர் கூறுவதாகவும், வாக்பதர் 7வது நூற்றாண்டிலேயே இது குறித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

பஞ்சகவ்யம் என்ற கருத்தாக்கத்தின் வரலாறு என்னவாக இருந்தபோதிலும், சூத்திரர்களும், பெண்களும் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று சில சாஸ்திர நூல்கள் சொல்லியிருப்பதாகவும்;  தூய்மைப்படுத்தும் சடங்குகளிலும், பரிகாரச் சடங்குகளிலும் பஞ்சகவ்யம் தொடர்ந்து ஒரு முக்கியப் பாத்திரம் வகித்து வந்துள்ளது என்றும் டி.என்.ஜா. கூறுகிறார்.எனவே, சங்பரிவாரக் கும்பல்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நவீன அறிவியலுக்கு எதிராக பண்டைய சாஸ்திர மரபுகளை முன்னிறுத்துகின்ற கருத்தியல் ரீதியான களச் செயல்பாடாகவே நாம் பார்க்க வேண்டும். எனவே, கொரோனாவை ஒழிக்கும் போரில் மோடி அரசு அக்கறையின்றி இருப்பது - அதன் நிர்வாகத் திறமையின்மையின் காரணமாக மட்டுமல்ல  மாறாக தனக்கென்றுவழிகாட்டும் ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது என்பதும்; அது பல நூற்றுக்கணக்கான காலவழக்கொழிந்த பண்டைய புராணம் மற்றும் சாஸ்திர நூல்களை தனது மரபணுக்களாகக் கொண்டுள்ளது என்பதும்;  அதுதான் அவ்வாறு நடந்து கொள்ளத் தூண்டுகிறது என்பதும் தான் உண்மை.

அரசியல் - பொருளாதாரப் பின்னணியில்...
மோடி அரசின் மீதான மற்றொரு விமர்சனம் அதன் அரசியல் பொருளாதாரக்  கொள்கை சார்ந்தது. குறிப்பாக இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பு பற்றிய கேள்விகளிலிருந்து இத்தகைய விமர்சனம் எழுகிறது.

பொது சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பலவீனம்
இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பைப் பற்றி பேசும் போது கீழ்க்கண்ட விபரங்கள் தெரிய வருகின்றன. உலக மக்கள் தொகையில் இந்தியா 16 சதத்தைக்கொண்டுள்ளது.  உலகம் முழுவதும் தொற்று நோய்களினால் பாதிக்கப்படுவோரில் 21 சதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் 1000 பேருக்கு 1.3 என்ற அளவிலேயே மருத்துவப் படுக்கை வசதி உள்ளது. தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், லேப் டெக்னீசியன்கள் உட்பட கடும் பற்றாக்குறை நிலவுகிறது.மருத்துவர்களைப் பொறுத்தமட்டிலும் 10000 பேருக்கு 9 பேர் என்ற அளவில் உள்ளனர். இதுவே, ஜெர்மனியில் 42;  பிரிட்டனில் 28;  அமெரிக்கா - 26;  சீனாவில் - 26 என்ற அளவில் உள்ளது. சீனாவில் மொத்தம் 3.61 மில்லியன் (36 லட்சம்) மருத்துவர்கள் உள்ளனர். இது இந்தியாவைப் போல 3 மடங்கு அதிகமாகும்.இந்தியாவில் செவிலியர்களின் எண்ணிக்கை 32 இலட்சம் உள்ளனர். ஆனாலும் கூட  10,000 பேருக்கு 15 செவிலியர்களே உள்ளனர். இதுவே பிரிட்டனில் - 150;  ஜெர்மனியில் - 132;  அமெரிக்காவில் - 85;  சீனாவில் - 23 என்ற அளவில் உள்ளனர்.

உலக வங்கி அறிக்கையின்படி இந்தியாவில் மருத்துவ அலுவலர்கள், 1 இலட்சம் பேருக்கு 85.7 பேர். இதுவே;  பாகிஸ்தானில் - 98;  வங்கதேசம் - 58;  இலங்கை - 100;  ஜப்பான் - 241 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.  படுக்கைகள் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டிலும் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு - 53;  பாகிஸ்தான் - 63;  பங்களாதேஷ் - 79.5;  இலங்கை - 415;  ஜப்பான் - 1298 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதன் மூலம் சின்னஞ்சிறிய நமது  அண்டை நாடுகள் கூட பலமான சுகாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்பது தெரிய வருகிறது.மேலும், சுகாதாரத்திற்காக மோடி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 1.3 சதம் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. இதுவே;  இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சின்னஞ்சிறிய நாடுகளிலும் சீனா மற்றும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் 5 -10 சதம் வரை ஒதுக்கீடு செய்கின்றனர். இதை விட கொடுமை! தனிநபர் ஒருவர்தான் செலவு செய்யும் மொத்த செலவினத்தில் மருத்து வத்திற்காக மட்டும் உலகிலேயே அதிக அளவாக 62.3 சதம் இந்தியாவில் தான் செலவழிக்கும் நிலைமை உள்ளது. ஆக  இந்தியாவில் பொது சுகாதாரக் கட்டமைப்புஎவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதும்;  கொரோனா போன்ற பெருந்தொற்றை எதிர்கொள்ள இதனை எந்த அளவுக்கு பலப்படுத்த வேண்டியுள்ளது என்பதும் தெளிவாகவேத் தெரிகிறது. ஆனாலும் கூட்  இப்படிப்பட்ட நிலைமையிலும் மோடி அரசு எந்த திசையில் பயணிக்கிறது? நிச்சயமாக அது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர
வாகவே செயல்படுகிறது. 

மருத்துவத்துறையில் கார்ப்பரேட்டுகளின் அசுர வளர்ச்சி
இந்தியாவில் தனியார் மருத்துவத் துறையானது உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும், சந்தையாக(சேவையல்ல) உள்ளது என தனியார் மருத்துவத் துறையில் மிகப்பெரிய முதலீட்டராக உள்ள ஐஎச்எச் ஹெல்த்கேர் நிறுவனத்தின்  தலைவரான டாக்டர் லோஹ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் சுகாதாரத்துறை சந்தை வளர்ச்சி 2020-ல் 193 பில்லியன் (14 இலட்சம் கோடியாக) இருந்துள்ளது. இது 2022-ல் 372 பில்லியனாக (28 இலட்சம் கோடியாக) உயரும் என ஐபிஇஎப் எனப்படும் இந்திய தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.மருத்துவத்துறையில் தனியார் ஏகபோகங்களின் வளர்ச்சி 2019-ல் 7.56 இலட்சம் கோடியாக இருந்துள்ளது. இது 2025-ம் ஆண்டில் 18.32 இலட்சம் கோடியாக வளர்ச்சியடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் உள்நாட்டு, அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து ஏகபோகக் குழுமங்களாக உருவாவதும்; மேலும், மேலும் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மருத்துவச் சேவைத்துறையை அதீத லாபம் ஈட்டக்கூடிய  வணிகமாகவும் மாற்றி வருகின்றன; அதன்படி 2018 -19-ம் நிதியாண்டில் மட்டும் இதன் வளர்ச்சி 155 சதமாக இருந்துள்ளது.

உதாரணமாக தில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட எஸ்ஒஐ - என்ற தனியார் மருத்துவமனை 2014-ல் மிகவும் நொடிந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர் மும்பையைச் சேர்ந்த நானாவதி மருத்துவ அறக்கட்டளையோடு இணைந்துள்ளது. அதன்பின் அமெரிக்காவைச் சேர்ந்த கேகேஆர்  -என்கிற மருத்துவ கார்ப்பரேட் குழுமம் மேற்கண்ட  எஸ்ஓஐ நானாவதி நிறுவனத்தின் 49 சதமான பங்குகளை 200 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. அதன் பின்னர் எம்எச்ஐஎல் - என்கிற குழுமத்துடன் இணைந்து தற்போது எஸ்ஓஐ - எம்எச்ஐஎல் கார்ப்பரேட் குழுமமானது மும்பை மற்றும் வட இந்தியாவில் 17 மருத்துவமனைகள், 3500 படுக்கைகள், 2000 மருத்துவர்கள் மற்றும் 1000 செவிலியர்கள், 14000 ஊழியர்களோடு ரூ.4000 கோடி வருவாயைக் கொண்டதாக மாறியுள்ளது.

இந்த ஒரே ஒரு மருத்துவக் கார்ப்பரேட் குழுமத்தின் வளர்ச்சியானது, மறைமுகமாக ஒரு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது 2014-ல் மோடிஅரசு பதவியேற்றதிலிருந்து  கடந்த 7 ஆண்டுகளில் அதன்  தேசிய மருத்துவக் கொள்கை கார்ப்பரேட்டுகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவாக உள்ளது என்பதை அம்பலப் படுத்திக் காட்டுகிறது.இந்த கார்ப்பரேட் குழுமம் மட்டுமல்ல; தனியார் மருத்துவத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் முன்னணி கார்ப்பரேட் குழுமங்களை பிசினஸ் டூடே இதழ் வெளியிட்டுள்ளது.

அவை வருமாறு:

வ.எண்          கார்ப்பரேட்                மருத்துவமனை         படுக்கைகள்           ஆண்டு
                        குழுமங்கள்                 எண்ணிக்கை                                             வருவாய்    
                                                                                                                                    கோடியில்

1                   அப்போலோ                            71                           10261                     6150

2    மணிப்பால்&கொலம்பியா                 27                            7200                      2153

3     IHH போர்ட்டீஸ் ஹெல்த்கேர்          27                             3700                    1550

4    ஹெல்த்கேர்-குளோபல்                    26                              2071                    1300

5     நாராயணா ஹிருதாலயா                21                              5455                   1800

6    ஆஸ்டர் - DM                                        13                              3708                   1600

7    மேக்ஸ் ஹெல்த்கேர்                         17                             3400                   1450

ஆதாரம் - பிசினஸ் டூடே ௲ ஏப்ரல் - 18, 2021

இவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மோடி அரசின் தாராளமயக் கொள்கையை சாடுவதென்றால் திருக்குறளின் கீழ்க்கண்ட பாடலே போதுமானது. கொலை மேற்கொண்டாரின் கொடிதே அவைமேற்கொண்டு அல்லது செய்தொழுகும் வேந்து.
அதாவது பகையினால் கொலை செய்யும் குற்றவாளி யை விட குடிமக்களுக்கு விரோதமாக செயல்படும் அர சனே மிகவும் கொடியவனாவன் என்பது அதன் பொருள்.

சுகாதாரக் கொள்கையும் -  நிதி ஆயோக்கின் தலையீடும்
சமீபகாலமாக பிரதமர் அலுவலகத்தின் அனைத்து முக்கிய முடிவுகளின் பின்னணியிலும் நிதி ஆயோக்கின் கை மேலோங்கியுள்ளதாகவும் இது குறித்து எந்தவொரு அமைச்சகமும் கேள்வி எழுப்பப்பட முடியாத அளவுக்கு வல்லமை படைத்ததாக அதன் தலையீடு உள்ளதாகவும், சுகாதாரத் துறையின் உயரதிகாரியே குற்றம் சுமத்தியுள்ளதாக கேரவன் ஜுன், 2021 ஆங்கில இதழ் தெரிவித்துள் ளது. அது தான் தற்போது இந்திய நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கையை வடிவமைப்பதாகவும், இதில் மோடி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கோ மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, பொது சுகாதார அலுவலர்களுக்கோ எந்தவொரு பங்களிப்பும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக் கொள்கையில் இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஏன் எடுத்தது என்பதற்கான விடையும் இதில் அடங்கியுள்ளது.

ஆக, இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களின் உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கொள்கையை தீர்மானிப்பதில் மாநிலங்களுக்கான நிதி விவகாரங்களைக் கையாளும் உயர்மட்ட அமைப்பின் தலையீட்டின் மூலம் மோடி அரசு தெரிந்தே பொது சுகாதாரத்தை கைவிட்டு வருகிறது என்பதும்; இந்தியாவின் பெரு முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் வினோத் பால் என்பவரை நிதி ஆயோக்கின் உறுப்பினராக நியமித்திருப்பதும் எதேச்சையான ஒன்றல்ல.அதனால் தான் மோடி அரசை வழிநடத்தும் இந்துத்துவ தத்துவமும் - பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அதன் கொள்கைகளின் தோல்வியும் தான் கங்கையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதக்கக் காரண மாயிருந்தன.உண்மையில்  கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்து கங்கையில் மிதந்த நூற்றுக்கணக்கான சடலங்களின் மேல் துணிகளுக்குப் பதிலாக சுற்றப்பட்டிருந்தது - இந்திய குடிமக்களின் உயிரை காப்பாற்ற வக்கில்லாத பாஜக மோடி அரசின் இந்துத்துவ - முதலாளித்துவ கொள்கைகளே...!

கட்டுரையாளர் : ம. பாலசுப்பிரமணியன், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;