articles

img

அநீதிக்கு எதிராக மவுனமாக இருக்கக்கூடாது....

மனித உரிமை போராளி ஸ்டான் சுவாமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும் அவரது சிறை மரணத்திற்கு நீதி கேட்டும் “அரசு வன்முறையின் சவால்களை சந்திப்போம்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மனித உரிமைகள் குழு சார்பில் நடந்த இணையவழி கண்டன கருத்தரங்கை துவக்கி வைத்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆளுநர் அலுவலகம் முன்பு அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், பழங்குடியின ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட ஒன்றுபட்ட மேடையின் சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றபோது, ஸ்டான்சுவாமியுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த அந்தநிறுவனத்தின் சக ஊழியர்கள், தேசிய புலனாய்வு முகமை கைது செய்ய சென்றபோது கூட இருந்தவர்கள், பல்வேறு போராட்டங்களில் அவரோடு பங்கேற்றவர்கள் என பலரையும் சந்திக்கும் வாய்ப்புகள் அவர்களுடன் உரையாட கிடைத்த அந்த வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

3000 பழங்குடி மக்கள் விசாரணைக் கைதிகளாக இரண்டு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரைஎவ்வித விசாரணையும்  இல்லாமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கக் கூடிய சூழலில், அவர்களை விடுவிக்கவேண்டும் என்று ஸ்டான் சுவாமி,  ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகழ்மிக்கபொதுநல வழக்கு, அதற்கு உதவியாக, உறுதுணையாக இருந்த சிவப்பிரகாசம், இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பல வகையிலும்ஆய்வு செய்து தூணாக நின்றவர்களை சந்தித்து  உரையாடிய போது, நமது தேசம் பாஜக ஆட்சியால்ஆர்எஸ்எஸ் பரிவார கூட்டங்களால் எந்த அளவுக்குபாழ்படுத்தப்படுகிறது, சீரழிக்கப்படுகிறது என்பதைநினைக்கும் போது வருத்தம் தான் மிஞ்சியதுஎன்பதையும் பதிவு செய்தார்.
தொடர்ந்து தனது கண்டனத்தை இதை பதிவுசெய்து உரையாற்றிய பிருந்தா காரத்,” 84 வயதானஸ்டான் சுவாமியை பயங்கரவாதி என்று சொன்னதுமட்டுமல்லாமல் நடுக்கு வியாதியால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறையில் அடிப்படையான மனிதாபிமானநடவடிக்கைகள், உதவிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதையும், இந்த மரணத்தை  ஸ்டான் சுவாமியின் மரணமாக மட்டும் பார்க்கக் கூடாது. அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகள், உறுதிப்பாடு, ஜனநாயக உரிமைகள் இவை அனைத்தும் மரணமடைந்தன என்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இவர்கள் எங்கே இருந்தார்கள்?
ஸ்டான் சுவாமி மரணத்திற்கு காரணமாக பல அதிகாரிகள் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் அல்லது கூட்டாக இந்த மோசமான செயலில் ஈடுபட்டுஇருக்கிறார்கள். ஸ்டான் சுவாமி மரணமடைந்த பிறகு, மும்பை நீதிமன்றம் அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தியதாக ஊடகங்களில் பார்த்தோம். ஸ்டான் சுவாமியின் பணிகள், செயல்பாடுகள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவருடைய மரணத்திற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம். என்றெல்லாம் உயர் நீதிமன்றம் சொன்னது. ஆனால், இந்த நிறுவன கொலை, காவலில் மரணம் நடந்த போது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்ற கேள்வியை நாம்கேட்க வேண்டியிருக்கிறது.

ஸ்டான் சுவாமி, 2020 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு 5 நாட்களில் பதினைந்து மணி நேரம் விசாரணை நடந்தது. அந்த விசாரணைகள் அனைத்தையும் அவர் சந்தித்தார். நடுக்கு வியாதி இருந்தபோதும் கூட அவர் மாற்றுத்திறனாளியாக முழுமையாக மாறவில்லை. இருந்தாலும் அவரது வேலைகளை அவரே செய்து கொள்ளக்கூடிய ஒரு சூழலில்தான் இருந்தார். அப்போது அவர் கேட்டுள்ளார். என்னைகைது செய்து சிறையில் அடைக்க போகிறீர்கள் என்றால்
சொல்லி விடுங்கள். இதற்கு காரணம்,  என்னுடைய லேப்டாப்பை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். எனவே,எனது பணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மருந்து, மாத்திரைகளை  கையோடு எடுத்துக்கொண்டுவரவேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனாலும் கூட, அவரை என்ன செய்யப் போகிறோம்என்று கூட கடைசி வரைக்கும் தேசிய புலனாய்வு முகமைகூறவில்லை. ஜார்க்கண்டில் இருந்து மும்பை அழைத்துச் சென்று சிறையில் தள்ளுகிறார்கள்.

அந்த சிறை, ஏற்கனவே அளவுக்கு அதிகமாக கைதிகளை அடைத்து வைத்திருக்கக் கூடிய சிறையாக இருந்தது. அதிலும் குறிப்பாக கோவிட்19 நேரத்தில்சிறைக்கைதிகளின் உடல்நிலையை பார்க்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்தான், 84 வயதான நடுக்க நோயால் பாதிக்கப்பட்டவரை அதே சிறைக்குள் அடைகிறார்கள். தேசத் துரோக குற்றம், அரசுக்கு எதிராக சதி செய்தகுற்றம், யுஏபிஏ போன்ற  உள்ளிட்ட பல்வேறு கடுமையான அடக்குமுறைச் சட்டங்களில் பிணையில்வெளியே வரமுடியாத கொடூரமான சூழலை உருவாக்கி, அவர் இப்படித்தான் சாக வேண்டுமென்று சாகடிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டான் சுவாமி மற்றும் 16 நபர்களுக்காக 2021 ஜனவரிமுதல் ஏப்ரல் மாதம் வரையில் வழக்கறிஞர்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து மருத்துவகாரணங்களால் பிணை வேண்டும் என கேட்கப்பட்டது.ஆனால், பிணை கொடுக்கக் கூடாது என்பதற்காக தேசிய புலனாய்வு முகமை மற்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்ட அனைத்து சால்ஜாப்புகளையும் நீதிமன்றம்ஏற்றுக்கொண்டது கொடுமையிலும் கொடுமை.

தேசிய கிரிமினல் முகமை
நமது அரசியல் சாசனத்தின் 226, 227 பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக தலையிடுவதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது. கேட்டது பிணை. ஆனால், நீதிமன்றமோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது. அதுவும் மிக மிக காலதாமதம். அந்த மருத்துவமனையில் அலோபதிக்கு மருத்துவர் கிடையாது. ஆரம்பத்தில் சிறிய மருத்துவமனையில் இருந்தபோது கோவிட்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலைமை மிகவும் மோசமான பிறகு, பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசென்றதும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைகண்டுபிடிக்க முடிந்தது. 

எனவேதான் இது காவலில் நடந்த மரணம்,நிறுவன கொலை என்று குற்றம் சாட்டுகிறோம். எனவே, தேசிய புலனாய்வு முகமையில் இருக்கக் கூடிய முக்கியமான அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு கிரிமினல் நோக்கத்தோடு, அவர் மரணிப்பார் என்று தெரிந்தே இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.இந்த தேசிய புலனாய்வு முகமை நேரடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே இதை, தேசிய புலனாய்வு முகமை என்று சொல்வதைவிட ‘தேசிய கிரிமினல் முகமை’என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். இப்படி சொல்லும் பொழுது அந்த முகமையில் இருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகள் மீதும் நான் பழி போடவிரும்பவில்லை.ராஞ்சியில் இதை சொன்ன போது, பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர்,“பிருந்தா ஒரு பாகிஸ்தான் உளவாளி, ஏனென்றால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேசபக்த கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்வதால் இவரை தேசபக்தி அற்றவராகபாகிஸ்தான் உளவாளியாக நாம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஊடகங்களில் திட்டமிட்டு உண்மைக்குமாறாக செய்திகள் பரப்பப்பட்ட தையும் எடுத்துக்கூறினார்.

நீதி விசாரணை தேவை
ஸ்டான் சுவாமியை கைது செய்வதற்கு ஒரு துரும்பு கூட ஆதாரம் கிடையாது. விசாரிப்பதற்காக கைது என்றார்கள். 8 மாத காலம் சிறையில் இருந்தார்.ஒரு முறையாவது விசாரித்து இருப்பார்களா?  விசாரிக்கவில்லை. அவருடன் சேர்ந்த மற்ற 16 பேரையும் கூட விசாரிக்கவில்லை. எனவே விசாரணைக்காக கைது செய்தோம் என்பதெல்லாம் உண்மையில்லை என்றுஎன்பது இந்த விஷயத்தில் வெளியில் வந்து இருக்கிறது. எனவே இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? என்ற பொறுப்பை தீர்மானித்து அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிருந்தாகாரத்வலியுறுத்தினார்.

அடுத்ததாக, ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேரைகைது செய்த அடக்குமுறைச் சட்டங்கள், அரசியல் சதி என்கிற அந்தப் பிரிவு, யூஏபிஏ போன்ற சட்டங்கள்,தேசத் துரோகம் என்கிற பிரிவுகள் இவை அனைத்தையும் அரசாங்கம், மக்கள் உரிமைகளை தட்டி கேட்பவர்கள், மாற்று கருத்து கூறுபவர்கள், அரசை விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெரிப்பதற்கு இந்த அடக்குமுறை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன, தவறாகவும் பயன்படுத்தப்படுகின்றன. தேசத்துரோக சட்டத்தின் கீழ் மோடி ஆட்சியில் 516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7100 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், தண்டனை அடைந்தவர்கள் என்று பார்த்தால் கைது செய்யப்பட்டவர்களில் 3 விழுக்காடு தான். எனவே இப்படிப்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதைவலுவாக சொல்ல வேண்டும்.

சதித்திட்டம் தீட்டினார்கள், அரசுக்கு எதிராக பேசினார்கள் என்றெல்லாம் சாதாரணமாக சுமத்தப்படுகின்ற குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய இருபத்தொரு இளைஞர்கள் இளம் பெண்கள் ‘யுஏபிஏ’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள். என்ன ஆதாரம்? ஆறு மாதத்திற்கு முன்பு யாரோ ஒருவர் போன் செய்தார்? அதனால் குற்றவாளி என்று அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தான் சட்டங்கள் பாய்ந்தன. யுஏபிஏ சட்டத்தில் குறிப்பாக45டி என்கிற பிரிவு, பிணை கொடுப்பதை தடுக்கிறது. எனவே இப்படிப்பட்ட கொடும் சட்டங்கள், அடக்குமுறைச் சட்டங்கள், பிரிவுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

12 ஆயிரம் பேர் மீதுஓபன் எப்ஐஆர்
மூன்றாவதாக, ஸ்டான் சுவாமி எந்த நோக்கத்திற்காக பணியாற்றினாரோ அந்தப் பணியை நாம்முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 3000 பழங்குடியினர் விசாரணை கைதிகளாக சிறையில் வாடிக் கொண்டு இருந்தார்கள். ஜார்க்கண்டில் ஒரே ஒரு மாவட்டத்தில் ‘ஓபன் எப்ஐஆர்’ பதிவு செய்துள்ள காவல்துறை, ஒருவரது பெயரை மட்டும் குறிப்பிட்டு அதோடு 100 பேர், 200 பேர் என்று சேர்த்துக் கொள்ளக்கூடிய மிக மோசமான நடவடிக்கையை கையாண்டுள்ளனர். இதன்மூலம் ஒரே மாவட்டத்தில் கிட்டத்தட்ட 12000 பழங்குடி மக்கள் மீது இப்படிப்பட்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் கிராமங்களுக்குள் புகுந்து வளர்ச்சி திட்டங்கள் என்ற போர்வையில் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டதோடு, வேறுசில கட்டுமானங்களையும் மேற்கொண்டுள்ளனர்.  கிராம சபையை கேட்காமல், தீர்மானம் போடாமல்,அனுமதி இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை செய்யக் கூடாது என்பதற்காகவும் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கவும் கற்களை கொட்டி தடை அரண்களை ஏற்படுத்தியிருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக 12 ஆயிரம் பேர் மீது முதல் தகவல் அறிக்கைகாவல்துறையால் போடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமன் சோரன் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்நாயக்கமிஷன் என்ற ஒரு ஆணையத்தை உருவாக்கிஅதன் மூலம் சில கைதிகளை விடுவித்திருக்கிறார்கள். ஆனாலும் அவை அனைத்தும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தார்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே. எனவே இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து அரசியல் நோக்கத்திற்காக அடக்குமுறை சட்டங்கள் மூலம் கைது செய்யப்பட்டார்கள், ஆதாரமில்லாமல் புனையப்பட்டு விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த கருத்தரங்கு மூலம் வலியுறுத்தினார்.

இந்தியா இன்றைக்கு உலக அளவில் எப்படி பார்க்கப்படுகிறது என்றால் முழுமையான சுதந்திரம் பெற்ற நாடாக இல்லை. அரைகுறை சுதந்திரம் இருக்கக்கூடிய நாடாகத்தான் கருதப்படுகிறது. ஏனென்று? சொன்னால் மோடி-அமித்ஷா ஆட்சியில் நாடு வளர்ந்து விட்டது. வளர்ச்சி பெற்றுவிட்டது என்றுகூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் சிதிலமடைந்து கிடக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ஸ்வீடன் நாட்டில் ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் “தேர்தல் முறை இருக்கும் சர்வாதிகாரம்” என்று பாஜக அரசை விமர்சித்து இருக்கிறது. ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து சொல்பவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. மத சுதந்திரம்கூட பல இடங்களில் நடைமுறையில் கிடையாது. இதெல்லாம் உலக நாடுகளில் பல இடங்களில் பட்டியல்போடும் போது இந்தியா மிகக் கீழ் நிலையில் இருக்கிறது. ஆகவே இது சம்பந்தமான சில கேள்விகளை எழுப்பி விடை காண வேண்டும்.

பாஜக - ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் மதரீதியாக மக்களை பிரிப்பதன் மூலமாக ஜனநாயகத்தின் மீது அவர்கள் தொடுக்கும் தாக்குதலை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதை எதிர்க்கும் நிகழ்வுகளை மடை மாற்றம் செய்வதற்கு திசை திருப்புகிறார்கள்.ஜனநாயகம் என்பது எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாத, செய்துகொள்ள முடியாத விஷயம். ஒரு தேசத் துரோகக் குற்றத்திற்காக இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் கைது செய்யப்பட்டார் என்றால், அவர் வேறு மதத்தைச் சார்ந்தவர். எனவே, அதைநாம் கண்டு கொள்ளக்கூடாது. அவசியமும் இல்லைஎன்று இதர மதங்களைச் சேர்ந்தவர்கள் யோசிக்கக்கூடாது. யாருடைய ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டாலும் அதை எதிர்த்த போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும்.அது இந்துத்துவா சித்தாந்தம் என்கிற அடிப்படையில் தொடுக்கப்படும் கொடிய தாக்குதலாக இருந்தாலும், தலித் பெண் ஒருவர் மிக மோசமான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட  சம்பவமாக இருந்தாலும், தில்லியின் எல்லையில் போராடிக் கொண்டிருக்கக் கூடிய விவசாயிகளின் போராட்டமாக இருந்தாலும், அவர்களுக்கான ஜனநாயக உரிமை அரசியல் சாசன சட்டத்தால் வழங்கப்பட்ட உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளை பறிக்கும் பொழுது அது என்னுடைய பிரச்சனை இல்லை என்று பாராமுகமாக இருந்து விடக்கூடாது.

அதே போல் தொழிலாளர்களுடைய சட்டங்களைப் பறிக்கக்கூடிய சட்டங்களும் வந்துள்ளன. உரிமைகளே அற்ற தொழிலாளர்களாக இந்தியத் தொழிலாளிகள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவற்றை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியஅவசியம் இருக்கிறது.ஸ்டான் சுவாமி சொன்ன ஒரு மேற்கோள் “சுற்றிஅநீதிகள் நடக்கும்பொழுது மவுனமான பார்வையாளராக நான் இருக்க முடியாது; இருக்க விரும்பவில்லை” என்பது அவர் சொன்ன இந்த இந்த விஷயம்தான் இந்த கருத்தரங்கின் செய்தியாக, நமக்கான பிரச்சனையாக இருக்க வேண்டும். எதிர்ப்புக் குரல் கொடுக்க ஏதாவது ஒரு அமைப்பில் இருந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை. குடிமக்கள் என்ற அடிப்படையில் தேசத்தின்மீதும், ஏழை-எளிய மக்கள் மீதும் தொடுக்கப்படுகிறஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும். மவுனமாகவும் பார்வையாளராக இருக்கக்கூடாது. கடந்தும் போய் விடக்கூடாது என்று தனது உரையை நிறைவு செய்தார் பிருந்தாகாரத்.  அவரது உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழாக்கம் செய்தார்.

கட்டுரையாளர் : பிருந்தாகாரத்

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு

;