articles

img

மதவெறி உருவாக்கும் இழி பிறவிகள்....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி அவர்களின் உயிரிழப்பு செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக வந்தது. தோழர் யெச்சூரி அவர்கள்தான் தனது அதிகாலை டுவீட் பதிவில் இதனை தெரிவித்தார். ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்கள் தமது குடும்பத்தில் நடந்த ஒரு சோகமான நிகழ்வாகவே இதனை கருதி தமது வருத்தம் மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். பல அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் தமது அஞ்சலியை பதிவு செய்தனர். கனடா கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல அரசியல் அமைப்புகளும் வருத்தம் கலந்த செய்திகளை டுவிட்டர் மூலம் தெரிவித்தனர். எனினும் சில சங்கிகளுக்கு மட்டும் இது மகிழ்ச்சியான செய்தியாகவும் குரூரம் கலந்த பழிவாங்கும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. எத்தகைய கொடூரமான உளவியல் அவர்களுக்கு உள்ளது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.

அன்பான தந்தை
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சீத்தாராம் யெச்சூரி அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்க காத்திருந்தோம். எங்களை பார்த்து கை அசைத்த வண்ணம் வந்த யெச்சூரியுடன் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரும் உடன் வந்தார். நாங்கள் முதலில் அவரை ஊடகவியலாளர் என நினைத்தோம். யெச்சூரி, அவரை தனது இளைய மகன் என அறிமுகம் செய்து வைத்தார். கீழ்வேளூர்/ திருவாரூர்/ கந்தர்வகோட்டை/ பழனி/திண்டுக்கல் என அனைத்து கூட்டங்களுக்கும் யெச்சூரியின் இளைய மகன் உடன் வந்தார். கட்சியின் மத்திய சமூக ஊடகக் குழுவுக்கு தேவையான புகைப்படங்களையும் எடுத்தார்.

கீழ்வேளூர் செல்லும் வழியில் சாலையோர கடையில் தேநீர் அருந்த வாகனங்கள் நின்றன. அப்பொழுது கிடைத்த இடைவெளியில் கோவிட் தொற்று இளைஞர்கள் மத்தியிலும் எவ்வித உளவியல் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதை யெச்சூரி விவரித்தார். அதில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இளைய மகனை உடன் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பொதுக் கூட்டத்தின் பொழுதும் தனது மகனின் பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் கவனித்தார். கூட்டம் முடிந்ததும் ஏராளமான தோழர்கள் யெச்சூரியை சந்திக்க வருவதால் நாங்கள் ஒரு தோழரை அவரது மகனுடன் பாதுகாப்புக்காக இருப்பதை உத்தரவாதம் செய்தோம். ஏனெனில் யெச்சூரியின் மகனுக்கு தமிழ் தெரியாது! ஒவ்வொரு முறை உணவு உண்ணும் பொழுதும் முதலில் தனது மகன் சாப்பிடுவதை உத்தரவாதப்படுத்திய பின்னர்தான் தான் சாப்பிட்டார். தமிழக உணவு வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்து சாப்பிடச் செய்தார். ஒரு சித்தாந்த அரசியல் போராளியாக தோழர் யெச்சூரியை பார்த்த பலருக்கும் அந்த பயணத்தில் ஒரு அன்பான அக்கறையான பாசம் கொண்ட தந்தையாக அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதே போன்ற பாசத்துடன்தான் மூத்த மகன் ஆஷிஷ் அவர்களுடனும் யெச்சூரி பழகினார் என்பதை அவரின் நண்பர்களின் பல பதிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு புகைப்படத்தில் ஆஷிஷ் தனது தந்தை யெச்சூரியின் தோள்களில் கைகளை போட்ட வண்ணம் உரையாடிக் கொண்டுள்ளார். தந்தை-தனயன் உறவுக்கும் அப்பால் அவர்கள் நல்ல நண்பர்களாகவும் இருந்தனர் என்பதை இந்த புகைப்படம் பறைசாற்றுகிறது. ஆஷிஷின் மரணம் எத்தகைய மனவலியை யெச்சூரிக்கு உருவாக்கியிருக்கும் என்பதை கூறத் தேவை இல்லை.

காவிக் கூட்டத்தின்  குரூரமான உளவியல்
ஒருவரின் மரணம், அவர் எதிரியாக இருந்தாலும், அதற்கு இறுதி மரியாதை தர வேண்டும் என்பது உலகம் எங்கும் உள்ள மனிதப் பண்பாடு! அதுவும் இந்தியாவிலும் தமிழகத்திலும் இந்த பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். ‘‘கல்யாண வீட்டுக்கு அழையாமல் செல்லாதே! கருமாதி வீட்டுக்கு அழையாமலே செல்!’’ எனும் முதுமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று! தனயனை இழந்து தவிக்கும் தந்தைக்கு ஆறுதல் சொல்ல என்ன வார்த்தைகள் உள்ளன? ஒரு டுவிட்டர் பதிவு கூறியது போல ‘‘தனது குழந்தையின் மரணத்தை அறிவிக்கும் கொடுமை போல எந்த கொடுமையும் ஒரு பெற்றோருக்கு வரக்கூடாது’’ என்பது மிக பொருத்தமான ஒன்று!

பல்லாயிரக்கணக்கான கட்சி ஊழியர்களும் அரசியல் தலைவர்களும் தமது ஒருமைப்பாட்டை யெச்சூரிக்கு தெரிவித்தனர். ஆனால் சில சங்கிகளின் பதிவுகள் இவர்கள் மனிதர்கள்தானா எனும் கேள்வியை எழுப்புகிறது. யாஷ்ராஜ் சத்துர்வேதி எனும் சங்கியின் பதிவு: ‘‘யெச்சூரி மகனின் மரணம் இன்றைய தரமான செய்தி’’

மிதிலேஷ் குமார் திவாரி எனும் சங்கியின் பதிவு:

‘‘சீனாவின் ஆதரவாளர் யெச்சூரியின் மகன் சீனாவின் கொரோனாவால் உயிரிழந்தார்’’இந்தியாவில் உருமாறிய கொரோனா இப்பொழுது இங்கிலாந்துக்கு பரவியுள்ளதாக பல விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து இதனை ஆய்வு செய்யுமாறு அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. அது உண்மை என நிரூபிக்கப்பட்டால் இதனை ‘‘இந்திய கொரோனா’’ என இந்த சங்கிகள் அழைப்பார்களா?

ஹர்ஷ் தொக்கானியா எனும் சங்கியின் பதிவு:
‘‘ஒவ்வொரு நாளும் பல இளைஞர்கள் நக்சலைட்டுகளால் கொல்லப்படுகின்றனர். சமீபத்தில் 20 மத்திய படையினர் இவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். எதை விதைத்தாரோ அதுவே கர்மபலனாக யெச்சூரிக்கு திரும்ப கிடைத்துள்ளது’’
மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்துக்கும் நக்சலைட்டுகள்/மாவோயிஸ்டுகள் சித்தாந்தத்துக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை என்பதும் இந்த சங்கிக்கு தெரியவில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. அத்வானியின் ஆசியுடன் மம்தா பானர்ஜியின் ஒத்துழைப்போடு இதே மாவோயிஸ்டுகள்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நூற்றுக்கணக்கான ஊழியர்களை மேற்கு வங்கத்தில் கொன்று குவித்தனர் எனும் உண்மையை இவர்கள் மறைத்தாலும் இப்பொழுது அம்பலமாகியுள்ளது.
‘‘தனயனை இழந்து தவிக்கும் தந்தையின் துக்கத்தை வன்மத்துடன் கொண்டாடும் இவர்கள் என்ன பிறவிகள்?’’ என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வேதனையுடன் பதிவு செய்துள்ளார். ஆம்! இவர்களைப் போல இழி பிறவிகள் உருவாகும் அளவுக்கு மதவெறி இவர்களுக்கு போதிக்கப்படுகிறது. 

யெச்சூரி மீது ஏன் வன்மம்?
தனிப்பட்ட மதவெறியர்கள் மட்டுமல்ல; இவர்களை உருவாக்கும் மதவெறி சித்தாந்தத்துக்கு எதிராகவும் யெச்சூரி வலிமையாக களமாடுகிறார். குறிப்பாக அவரது தினசரி டுவீட் பதிவுகள் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மதவாதத்தினை தயவுதாட்சண்யமின்றி அம்பலப்படுத்துவதாக உள்ளன. அவரது டுவீட் பதிவுகள் பல ஊடகங்களால் கவனிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் அதனை வரவேற்கின்றனர். அதே சமயத்தில் சங்கிகளின் கடும் ஆத்திரத்தையும் அது விளைவித்துள்ளது. யெச்சூரியின் ஒவ்வொரு டுவீட் பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு பெரிய சங்கிப்படை யெச்சூரியை அல்லது சம்பந்தமே இல்லாமல் பினராயி விஜயன் அவர்களை இழிவுபடுத்தி பதிவு செய்கின்றனர். யெச்சூரியின் டுவீட்/எழுத்துகள் மற்றும் உரைகள் சங்கிகளுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்துள்ளன எனில் மிகை அல்ல. மோடி அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகத்தை இடைவிடாது ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் மிகச்சில எதிர்க்கட்சி தலைவர்களில் யெச்சூரி மிக முக்கியமானவராக உருவாகியுள்ளார்.

திண்டுக்கலில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மதுரை செல்லும் வழியில் அவரது முதுகு வலி எப்படி உள்ளது எனக் கேட்டோம். வலி உள்ளது எனவும் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர் எனவும் சொன்னார். ஆனால் தேர்தல் கடமையை எப்படி புறக்கணிக்க முடியும் என கூறிய அவர் தில்லி சென்று ஓரிரு நாட்களில் அசாம் பிரச்சாரத்துக்கும் பின்னர் மேற்கு வங்க பிரச்சாரத்துக்கும் செல்ல இருப்பதாக கூறினார். இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான இந்த போர்க் குணம்தான் அவர் மீது சங்கிகள் ஆத்திரம் கொள்வதற்கு காரணம் ஆகும்.

கொடிய இழி பிறவிகள்
குஜராத் கலவரங்கள் குறித்து தனது உயிரைப் பணயம் வைத்து அயூப் ரானா ‘‘குஜராத் டைரி’’ எனும் நூலை வெளியிட்டார். அதில் பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்தார். அதே போல பல இந்துத்துவா ஊழியர்கள் எவ்வாறு கொலை/கொள்ளை/பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டனர் என்பதை ‘‘ஆஷிஷ் கேட்டன்’’ எனும் பத்திரிக்கையாளர் தனது ‘‘Under Cover/My journey into the darkness of Hindutva’’ எனும் நூலில் விவரிக்கிறார். இந்துத்துவா தீவிரவாதி எனும் போர்வையில் பலரிடம் தான் நடத்திய பேட்டிகளை பதிவுசெய்ததன் அடிப்படையில், இந்த முக்கிய நூலை அவர் வெளியிட்டுள்ளார். இதில் பாபு பஜ்ரங்கி எனும் இந்துத்துவாவாதியின் பேட்டிதான் மிக முக்கியமானது; கொடூரமானது. காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரியை உயிரோடு இருக்கும் பொழுதே எப்படி துண்டு துண்டாக வெட்டினோம் என்பதை பாபு பஜ்ரங்கி விவரிக்கிறான். முஸ்லீம் பெண்களை அவர்களின் வீட்டு ஆண்கள் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றதை புளங்காகிதத்துடன் கூறுகிறான். ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து துண்டு துண்டாக வெட்டியதை பெருமை பொங்கச் சொல்கிறான்.

மதவெறி, அது எந்த பிரிவாக இருந்தாலும், எத்தகைய இழி பிறவிகளை உருவாக்குகிறது என்பதற்கு பாபு பஜ்ரங்கி போன்றவர்கள் ஒரு உதாரணம்! ஆனால் அவர்கள் ‘‘ஒரு சோற்றுப் பானையில் ஒரு சோறு’’ போன்றவர்கள். இத்தகையவர்கள்தான் யெச்சூரி அவர்களின் இழப்பைக் கொண்டாடுகின்றனர். இத்தகைய இழி பிறவிகளையும் இவர்களை உருவாக்கும் சித்தாந்தத்தையும் தனிமைப்படுத்தாவிட்டால் தேசம் இருண்ட காலத்துக்கு பயணிப்பதை எவராலும் தடுக்க முடியாது! சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த சக்திகளை தடுக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்!

கட்டுரையாளர் : அ.அன்வர் உசேன்

;