articles

img

சந்தி சிரிக்கும் மோடி அரசின் ஊடக கொள்கை !

மத வன்முறையை தூண்டினால் பாராட்டு ;

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தினால் சிறை “ -

சந்தி சிரிக்கும் மோடி அரசின் ஊடக கொள்கை !

 

 

         கடந்த 2020 ம் ஆண்டு , உத்தர பிரதேசத்தில் "பிரசாந்த் கனோஜியா" என்ற பத்திரிக்கையாளர் "ராம் மந்திர்" என்று அழைக்கப்படும் 'ராம ஜென்ம பூமி' என்ற இடத்தை பற்றி விமர்சித்தார் என்று இரவோடு இரவாகக் கைது செய்து அவர் மேல் வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே உத்தர பிரதேசத்தில் ,  கையில் துப்பாக்கிகளையும் , கத்திகளையும் ஏந்திக்கொண்டு , மிக வெளிப்படையாகவே , மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டும் வகையில் , தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் விஷத்தைப் பரப்பி வருகிறது ஒரு அமைப்பு . இவர்களுக்கு மட்டும் இல்லையா ஊடக சட்டங்கள் ?! , கடந்த சில நாட்களாக வன்முறையின் உச்சத்தில் செயல்பட்டுவரும் “சுதர்ஷன்” தொலைக்காட்சியின் நிறுவனரான “சுரேஷ் சாவன்கே” மேல் ஊடக சட்டங்கள் பாயுமா ? 

 

யார் இந்த சுரேஷ் சாவன்கே

                      சுரேஷ் சாவன்கே என்பவர் உத்தரப் பிரதேசம் , நொய்டாவில் "சுதர்ஷன்" என்ற பெயரிலான வலதுசாரி செய்தி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியரும் ஆவார் . ஆர்எஸ்எஸ் நிர்வாகியான இவர் , இதற்கு முன் "தருண் பாரத்" என்ற ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் , தான் நிறுவிய சுதர்சன் தொலைக்காட்சியில் "பிந்தாஸ் போல்" என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். 

 

சுதர்ஷன் செய்தி நிறுவனம் 

                     சுதர்ஷன் செய்தி நிறுவனமானது உத்தரப் பிரதேசம், நொய்டாவில் 2005 ம் ஆண்டு வலதுசாரியும் ஆர் எஸ் எஸ் நிர்வாகியுமான சுரேஷ் சாவன்கேவால் நிறுவப்பட்டது . பல சர்ச்சைகளையும் ,போலி செய்திகளையும் பரப்புவதாகக் குற்றங்களையும் கொண்டுள்ள நிறுவனமாக அறியப்படுகிறது. 

 

போலி செய்திகள்

                    2014 ம் ஆண்டு, பாலிவுட் நடிகர் 'ஷாருக்கான்' கூறியதாகப் பொய்யான , சர்ச்சைமிகு தகவல்களை ஒளிபரப்பியது . 2019 ம் ஆண்டு , பழைய காணொளியை தற்போது நடந்ததாகவும் , சர்ச்சைமிகு கோஷங்களை இந்த காணொளிகளோடு இணைத்தும் , ஆர்எஸ்எஸ் மக்களை முஸ்லீம் மக்கள் தாக்க முயல்வதாகவும் ஒளிபரப்பியது . 2020 ம் ஆண்டு டெல்லி கலவரத்தின் போது தவறான சித்தரிப்புடன் காட்சிகளை ஒளிபரப்பியது போன்று பல்வேறு  சர்ச்சைமிகு போலி செய்திகளை ஒளிபரப்பி பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது .

 

 சட்டச் சிக்கலில் சுரேஷ் சாவன்கே 

                   2016 ம் ஆண்டு , நொய்டாவிலுள்ள தனது சுதர்ஷன் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது .

2017 ம் ஆண்டு , தனது செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிந்தாஸ் போல்" என்ற நிகழ்ச்சி மூலம் இந்து-முஸ்லீம் என்ற இரு பிரிவினரிடையே மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் வெறுப்புணர்வு மிக்க கருத்துக்களால் பல்வேறு பிரிவினரிடமிருந்து தொடுக்கப்பட்ட வழக்கால் கைது செய்யப்பட்டார் .

2018 ம் ஆண்டு , மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி "பாரத் பச்சாவ் பேரணியை" தொடங்கினார் . இந்த பேரணியும் , சிறுபான்மை மக்கள் மீது குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்டதால் ஹைதராபாத் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது . 

 

"யுபிஎஸ்சி ஜிஹாத்" - சர்ச்சைமிகு கருத்து 

                  தன்னுடைய சுதர்சன் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பின்தாஸ் போல்" என்ற நிகழ்ச்சியில் சர்ச்சைமிகு பல கருத்துக்களை ஒளிபரப்பி வந்த சுரேஷ் சாவன்கே , 2020 ம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் , "யுபிஎஸ்சி ஜிஹாத்" என்ற ஒரு முன்னோட்ட காணொளியைப் பதிவிட்டிருந்தார் .  இந்த முன்னோட்ட காணொளி , சிறுபான்மையின மக்கள் , குடிமுறை அரசுப் பணியில்(சிவில் சர்விஸ்-ல் )அதிகளவில் உள்ளே வருவது , இந்தியக் கட்டமைப்புகளையும், ராணுவ ரகசியங்களையும் ஊடுருவுவதற்கே என்றும், இது முஸ்லீம் மக்களின் "யுபிஎஸ்சி ஜிஹாத்" என்றும் வெறுப்புணர்வு மிக்க ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார் . மேலும் , இந்த முன்னோட்ட காணொளியின் முழு காணொளியை அடுத்த நாள் வெளியிடுவதாகவும் கூறியிருந்தார் .

 இந்த முன்னோட்ட காணொளியைப் பார்த்த பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ., 91 ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் சேர்த்து பலர் , இந்த சர்ச்சைமிகு "யுபிஎஸ்சி ஜிஹாத்" என்ற காணொளியை ஒளிபரப்பக்கூடாது என்று வழக்குத் தொடுத்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் , இந்த காணொளி ஒளிபரப்பப்பட்டால் மக்களினூடே உள்ள சகோதரத்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தடை விதித்தது .

 

 டிவிட்டர் ட்ரெண்டிங்

                  கடந்த நான்கைந்து நாட்களாக டிவிட்டரில் அதிகமான ஹாஸ்டக் உடன் வலம் வருவது "#சுரேஷ் சாவன்கேவை கைது செய்" என்பது தான்

. "மீனா" என்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வடமாநிலத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதியில் பரவலாக வசித்து வருகின்றனர் . இவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை தங்கள் கலாச்சாரமிகு இடமாகக் கருதுகின்றனர் . கடந்த ஜூலை 22 ம் தேதி "விஷ்வ இந்து பரிஸாத்" என்ற இந்துத்துவ அமைப்பு , சுரேஷ் சாவன்கேவின் தலைமையில் , பாரத ஜனதா கட்சியின் பின்புலத்துடன் , ஆம்பர் கோட்டையில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற எழுத்துக்கள் பதித்த காவிக் கொடியைக் கம்பத்தில் ஏற்றினர் . இதனால் ஆத்திரமடைந்த மீனா இன மக்கள் , ஆம்பர் கோட்டையில் ஏற்றப்பட்ட காவிக் கொடியைக் கீழே இறக்கினர் . இதனால் "விஷ்வ இந்து பரிஸாத்" என்ற இந்துத்துவ அமைப்புக்கும் ,"மீனா" இன மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .  இரு தரப்பினரும் போக்குவரத்து நகர் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

 இந்நிலையில், சுரேஷ் சாவன்கே, தனது சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சியில், வருகிற ஆகஸ்ட் 1 ம் தேதி ஆம்பர் கோட்டையில் மீண்டும் காவிக் கொடியை ஏற்றப்போவதாகவும் , அதற்காக மக்களைப் பெருந்திரள் பேரணியாக வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளார் . இதே வேளையில் , மீனா சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடி ராணுவ நிறுவனரான ஹன்ஸ்ராஜ் மீனா என்பவர் , அதே ஆகஸ்ட் 1 ம் தேதி , தனது மீனா இன மக்களையும் பெருந்திரளாக வரும்படி அழைத்திருக்கிறார் .  மேலும் , வருவோர் அனைவரும் மரக்கன்றுகளையும் , மூவர்ணக் கொடியையும் எடுத்துவர அறிவித்திருக்கிறார் . இங்ஙனம் , தங்கள் இன மக்கள் இயற்கை அன்னையை நேசிப்பவர்களாகவும் , தேச பக்தி கொண்டவர்கள் எனவும் அனைவருக்கும் நிரூபிக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார் .

 இரு தரப்பினருடைய இந்த அழைப்பானது ,சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது . இந்நிலையில் , இது பெரும் கலவரத்தைத் தூண்டும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாகப் பல எம்எல்ஏக்கள் , அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , ராஜஸ்தான் முதலமைச்சரான "அசோக் கெலாட்டிடம்" பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சுரேஷ் சாவன்கேவை கைது செய்யுமாறு வலியுறுத்தினர் . இதனால் , அரசியல்வாதிகள் , இளைஞர்கள் , இடதுசாரிகள் என பல்வேறு மக்கள் , தனது டிவிட்டர் பக்கத்தில் "#சுரேஷ் சாவன்கேவை கைது செய்" என்று பதிவிட்டு வருகின்றனர் .

 

தொடரும் இந்துத்துவ கலவரம் 

                 சென்ற வருடம் , இதே போல் , உதய்பூர் அருகிலுள்ள "சோனார் மாதா" கோவிலிலும் , ஆர்எஸ்எஸ் அமைப்பினர் , பழங்குடியின மக்களின் பாரம்பரிய "பழங்குடி கொடி"-யை மாற்றி "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற எழுத்துக்கள் பதிந்திருந்த காவிக் கொடியை ஏற்றினர் என்று பாரதிய பழங்குடி கட்சியின் எம்எல்ஏ-வான ராஜ்குமார் ராட் என்பவர் "தி வயர்" பத்திரிக்கையில் கூறினார் . ஆகவே , இதுபோன்ற கலவரத்தைத் தூண்டும் வகையான செயல்களை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து செய்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார் . 

 

ஆர்எஸ்எஸ் குண்டரைக் கைது செய்யுமா அரசு ?

                 சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதக்கலவரங்களையும் , ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக இனக் கலவரங்களையும் தூண்டும் வகையில் , மக்களிடையே சமத்துவத்தைச் சீர்குலைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்கும் சுரேஷ் சாவன்கே மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது . இருந்தும் , இன்றுவரை அவரை கைது செய்யாதது பாஜகவின் பின்புலம் தான் என்று அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் , இவரைப்போன்ற ஆர்எஸ்எஸ் குண்டர்களைக் கைது செய்யாமல் இருப்பது , தேசத்தின் அழிவிற்கு வித்திடுவதாகவே கருதப்படும் . 

ஆகஸ்ட் 1 ம் தேதியன்று , சுரேஷ் சாவன்கே அறிவித்திருப்பது போல்  , ஆம்பர் கோட்டையில் மீண்டும் காவி கோடி ஏற்றப்பட்டால் , ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் , மீனா இன மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்படும் என்பது நிச்சயம் . இந்நிலையில் , இதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறியே .

 

                நமது இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் “ஜனநாயக கருத்துரிமை” என்பதையே முற்றிலுமாக முடக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘புதிய ஊடக கொள்கை’ தேவைதானா என்பதை ஒன்றிய அரசு யோசிக்க வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்பட்டாலும் , அது யாருக்கான கொள்கை என்பதை ஒன்றிய அரசு தெளிவான விளக்கம் தர வேண்டும் . இந்நிலை தொடர்ந்தால் “ஜனநாயக தனிமனித உரிமை” என்பதை நாம் இழப்பதற்கு வெகு தூரம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். 

 

;