articles

img

‘எதிர்கால நெருக்கடிகளை வெல்ல நம்பிக்கை அளிக்கும் மாநாடு’

சென்னை, ஆக. 9 - எதிர்கால நெருக்கடிகளை வெல்வதற்கான நம்பிக்கை தரும் வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநாடு அமை யும் என்று தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தமுஎகச 15ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 12-15  தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம்  நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்,  75ஆவது சுதந்திர தின கொடியேற்று வதற்காக, குடி யாத்தத்திலிருந்து தேசியக் கொடி கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கொடிப்பயணம் ஆக.9 அன்று சென்னை யை வந்தடைந்தது. குரோம்பேட்டையில் தேசியக் கொடிக்கு வரவேற்பு, மரியாதை செலுத்தும் நிகழ்வு  நடைபெற்றது. கொடியைப் பெற்று மரியாதை செலுத்தி என்.சங்கரய்யா  வாழ்த்தி வழியனுப்பினார். இந்நிகழ்வில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு: 

சிகரம் ச.செந்தில்நாதன்

தமுஎச உருவாவதற்கு முன்பாகவே மக்கள் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்த சிகரம் ச.செந்தில்நாதன் நிகழ்வுக்கு தலைமை தாங்கிப்  பேசினார். அப்போது, “அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், காட்டிக் கொடுத்தவர்கள், கறைபடிந்த கரங்களில் தேசியக் கொடி ஏந்தி வருகின்றனர். சுதந்திரப் போராட்டத்தை நடத்திய சங்கரய்யா கொடுத்த தேசியக் கொடி மாநாடு நோக்கிச்  செல்கிறது. அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு மேன்மையானதாக இருந்தாலும், அதை அமல்படுத்துகிறவர்கள் மோசமாக இருந்தால், எல்லாம் மோசமாகி விடும் என்றார் அம்பேத்கர். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத்தை வளைத்து வருகிறது. மதவெறி, சாதி வெறி பிடித்த கட்சிகள் மேலே வருமானால், இன்னொரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி வரும் என்றும் அம்பேத்கர் எச்சரித்தார். அதை உண்மையாக்கும் வகையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இளந்தலைமுறையின் சிந்தனைக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தலாம் என்றும் அம்பேத்கர் கூறினார். அது முற்போக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, பிற்போக்கானதாக இருக்கக் கூடாது.” என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம்

தலைவர் சங்கரய்யா போன்ற தியாகிகள் தேசியக் கொடியை தங்களின் உயிரை விட உயர்வாக  நேசித்தனர். அவர் கொடுத்த கொடியை, காஷ்மீர் மக்கள் தலைவர் யூசுப் தாரிகாமியிடம் ஒப்படைக்க உள்ளோம். 101 வயதிலும் ஒரு (சங்கரய்யா) மூளை தங்குதடையின்றி சிந்திக்கிறது, செயல்படுகிறது என்பது அபூர்வமானது என்றார். மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா போன்ற தலைவர்கள் 1947ஆம் ஆண்டு  ஆக.14ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சிறையி லிருந்து வெளியே வருகின்றனர். அப்போது மதுரையில்  லட்சக்கணக்கான மக்கள் தலைவர்களை வரவேற்று அழைத்துச் சென்று கூட்டம் நடத்தியதை கண்டதாக சாலமன் பாப்பையா பதிவு செய்கிறார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் எத்தகைய உறுதி, உத்வேகத்தோடு இருந்தாரோ, அதில் சற்றும்  குறையாமல் தற்போதும் உள்ளார். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சங்கரய்யா தரிசனம் தேசத்தின் தரிசனம் என்று தமுஎகச பொறுப்பு மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார்.

பத்திரிகையாளர் ஜென்ராம்

அரசியலமைப்புச் சட்டம், பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவை நெருக்கடிக்கு உள்ளாக்கப் படுவதை அனைவரும் உணர்கிறோம். தமுஎச உருவாக்கப்பட்ட சில நாட்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அதைவென்றோம். அதே போன்று அடுத்துவரவிருக்கும் நெருக்கடிகளையும் வெல்வோம் என்பதே மாநாட்டுச் செய்தியாக உணர்கிறோம். சங்கரய்யா பேச்சும் அதையே உணர்த்துகிறது என்று பத்திரிகையாளர் ஜென்ராம் குறிப்பிட்டார்.

ஓவியர் டிராட்ஸ்கி மருது

1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எங்கள் வீட்டு மாடியில் நடை பெற்ற கூட்டத்தில்தான் சங்கரய்யா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது 8ஆவது படித்துக் கொண்டிருந்த நான், அவருக்காக தேர்தல் பணி யாற்றினேன். மூத்த தோழர்கள் பெயிண்ட் டப்பாவை பிடித்துக் கொண்டு இருக்க, ஏணியில் நின்று வரை வேன். 500 சுவர் விளம்பரங்களாவது எழுதி இருப்பேன். நான் ஓவியராக மாற இந்த தேர்தல் பணியும், வாய்ப்பும் ஒரு பயிற்சியாக இருந்தது என்று உவகையோடு ஓவி யர் டிராட்ஸ்கி மருது குறிப்பிட்டார். நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளோம். எப்போதும் தமுஎகச-வுடன் இருப்போம் என்றும் அவர் கூறினார்.

எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி

1974ஆம் ஆண்டு மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் தோழர்கள் வி.பி.சிந்தன், கே.ரமணி ஆகியோரை சந்தித்த போது நிகழ்ந்த அனுபவங்கள், செம்மலரில் முதல் கதை பிரசுரமான நிகழ்வு, தமுஎச தொடங்கிய 34 பேரில் ஒருவராக கலந்து கொண்டது போன்றவற்றை எழுத்தாளரும், திரைக்கலைஞருமான வேல ராமமூர்த்தி பகிர்ந்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை சங்கரய்யாவின் பேச்சும், வழிகாட்டலும் தொடர்கிறது. தமுஎகச தொடங்கியவர்களில் நானும் ஒருநபர் என்பதே பெருமை. எனது நாற்றாங்கால் தமுஎகச-தான்  என்றார்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ரத்தம் சிந்தி, வாழ்விழந்து, உயிரைக்  கொடுத்தது செங்கொடி இயக்கம். தேசியக் கொடியை ஏந்த இந்த இயக்கத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார். 

சு.ராமச்சந்திரன்

பிரெஞ்ச் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், அரசியல் அதிகாரத்தோடு புதுச்சேரியில் நாடகம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்ட தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், தமுஎகச-வின் ஐம்பெரும் ஆளுமைகளாக பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி, பாலசரஸ்வதி ஆகியோர் வாழ்ந்த, நினைவிடங்கள் வழியாக கொடிப்பயணக்குழு செல்கிறது என்றார்.

எஸ்.ஏ.பெருமாள்

மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் குறிப்பிடுகை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு, கலை இலக்கிய பெருமன்றத்திற்கு மாற்றாக ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினோம். அப்போது சங்கரய்யாவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஒரு உப குழு அமைக்கப்பட்டது. அதில், கே.ரமணி, ஏ.நல்லசிவன், பி.ஆர்.பரமேஸ்வரன், வி.பி.சிந்தன், கே.முத்தையா இவர்களோடு நானும் இடம்பெற்றேன். தமுஎச என்ற பெயரை சங்கரய்யாதான் சூட்டினார். அரசியல் சூழல் காரணமாக தமுஎச அமைப்புக்  கூட்டத்தை தலைமறைவாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். அன்றைக்கு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தால், போக்குவரத்து - மின்சார சங்க அலுவலக கட்டிடத்தில் தமுஎச அமைப்புக் கூட்டத்தை நடத்தினோம். அன்றிலிருந்து இன்றுவரை அவரின் வழிகாட்டுதல் தொடர்கிறது என்றார். பல ஆண்டுகள் சிறையிலும், தலைமறைவாகவும் வாழ்வை கழித்த மாபெரும் போராளி சங்கரய்யா. அவர் கொடுத்த கொடியை கொண்டு சென்று மகத்தான முறையில் பறக்கவிடுவோம். எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பேச்சாளர்கள் என படைப்பா ளிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கிறோம். பாசிச பாஜகவை எதிர்த்து ஜனநாயக முறையில் மக்களை திரட்டி முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது விதைக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆதவன் தீட்சண்யா

தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், தேசியக்கொடி தயாரிப்பை அவுட்சோர்சிங் விட்டுள்ளவர்களின் ஆட்சியில் மக்கள் படாதபாடுபடுகின்றனர். வீடுகள்தோறும் கொடியேற்றச் சொல்பவர்கள், வீடு கொடுத்துவிட்டு அதைச் சொல்ல வேண்டும். 2018ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் பேசிய பிரதமர், 2022ஆம் ஆண்டு  சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் வீடு கொடுப்போம் என்றார். அவர்தான் கொடுக்கவில்லை என்று நாம் வீடுகட்டினால், 2 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு அதிலும் முத்திரையை குத்திவிடுகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தாம்பாளத் தட்டை அடிக்கச் சொன்னதுபோல, முகநூல் முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடி வைக்கச் சொல்கிறார்கள் என்றார்.

1925ஆம் ஆண்டுகளில் அம்பேத்கர், பகத்சிங் மேலெழுகின்றனர். இடதுசாரி இயக்கமும், ஆர்எஸ்எஸ்-சும் தொடங்கப்படுகிறது. தேசிய வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லீம்கள், போராட்டம் நடத்தி தலைமறைவாக இருந்து செயல்பட்டனர். ஆர்எஸ்எஸ், போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காக தலைமறைவாக இருந்தது. இன்றைக்கு அதிகார த்தைக் கைப்பற்றி அரசியல் சாசன நிறுவனங்களை காவிமயப்படுத்தி வருகிறது. பன்மைத்துவத்தை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றி வரு கிறது. இதற்கெதிரானதாக மாநாடு அமையும் என்று அவர் கூறினார். இந்நிகழ்வை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் சைதை ஜெ. ஒருங்கிணைத் தார். சங்கத்தின் நிர்வாகிகள் களப்பிரன், நாடகவிய லாளர் பிரளயன், மயிலைபாலு, கி.அன்பரசன், புதுவை மாநில தலைவர் உமா, தென்சென்னை மாவட்டத் தலைவர் பகத்சிங் கண்ணன், மாவட்டச் செயலாளர் கள் ராஜசங்கீதன் (மத்திய சென்னை), மணிநாத் (வட சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









 

;