articles

img

94.5 சதவீதம் நிதி பாஜகவுக்கே..... தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் கொள்ளை.....

உச்சநீதிமன்றம், ஏப்ரல் 1முதல் 10 தேதி வரையிலும், நடப்புக் காலத்திற்குரிய, தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைப்பதற்கு மறுத்திருக்கிறது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்  தேர்தல் நடைபெறும் நான்கு மாநில சட்டமன்றங்களுக்காகவே தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருப்பதால், அதனை நிறுத்தி வைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் இது அவசரமான ஒன்று என்றும் உச்சநீதிமன்றத்தைக் கோரி இருந்தது. இக்கோரிக்கையை நிராகரித்துத்தான் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது. அவ்வாறு தீர்ப்பளிக்கையில் உச்சநீதிமன்றமானது, இந்தத் திட்டமானது கடந்த மூன்றாண்டு காலமாகஎவ்விதமான இடையூறுகளும்இல்லாமல் செயல்பட்டிருப்பதாகவும், அதற்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது. இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவைகளாகும்.  

நடவடிக்கை எடுக்காத உச்சநீதிமன்றம்
இந்தத் திட்டத்தின்கீழ் உள்ளமுக்கிய பிரச்சனையே இந்தத் திட்டமானது அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்திடும் திட்டத்தின்கீழ், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதேயாகும். இந்தத் திட்டத்தில்செய்யப்பட்டிருக்கிற பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை என்னவென்றால், தேர்தல் பத்திரங்களைப் பெறும்அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை முத்திரையிடப்பட்ட உறைகளில் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திட வேண்டும் என்று  கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகும். இவ்வாறு 2019இல் ஓர் உத்தரவுஉச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக தொடர் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.இந்தத் திட்டம் தொடர்பாக நம்முன் இருக்கின்ற அடிப்படை பிரச்சனை என்னவென்றால், 2018க்குப்பின், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தையே கேள்விக்குரியதாக்கி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், அவை இன்றளவும் நிலுவையிலேயே இருந்து வருகின்றன என்பதுமாகும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறது.   

கட்சிகள் கையூட்டுப் பெறல் சட்டப்பூர்வமாகிவிட்டது
இந்த மனுக்கள் மீது எவ்விதமானஉத்தரவும் பிறப்பிக்காமல் உள்ள நிலையில், இந்தத் திட்டமானது கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக எவ்விதமான இடையூறும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது, வெளிப்படைத் தன்மை எதுவுமின்றி எந்தக் கார்ப்பரேட்டுகள் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு நிதி அளிக்கிறார்கள் என்பது வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் ஜனநாயகத்தையே நாசகரமான முறையில் தீங்கிழைத்துவரும் இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் சட்டப்பூர்வமாகவே கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

இந்தத் திட்டத்தின்மூலம் கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு ஆள்வோர் செய்திடும் உதவிகளுக்கு, கைமாறுசெலுத்தும் விதத்தில், ஆளும் கட்சியினருக்கு இந்தத் தேர்தல் பத்திரங்கள்மூலமாக நிதி அளித்துவருகிறார்கள் என்பதாகும். இந்தத் திட்டத்தின்மூலம் நன்கொடை அளித்திடும் கார்ப்பரேட்டுகள் எந்தக் கட்சிக்குஎவ்வளவு தொகை அளித்திருக்கிறோம் என்று வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று அதனைப் பெறும் கட்சிகளும் தாங்கள் எவ்வளவு பெற்றோம் என்றும் தெரிவிக்க வேண்டிய அவசியம்  இல்லை.

இவ்வாறாக இது, அரசியல்கட்சிகள் கையூட்டுகள் பெறுவதற்கும், சட்டவிரோதமான பணம் சட்டப்பூர்வமாகப் பாய்வதற்கும் வழிசெய்து தந்திருக்கிற திட்டமாகும். இவ்வாறு ஆளும் கட்சியினருக்கு அளிக்கப்படும் கையூட்டுப்பணம் சட்டப்பூர்வமாக மாற்றப்படுவதற்காகவே பல துணை நிறுவனங்களை, கார்ப்பரேட்டுகள் அமைத்துக் கொள்ள முடியும்.  

94.5 சதவீதம் பாஜகவுக்கே
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, பாரத ஸ்டேட் வங்கி, 2018பிப்ரவரிக்குப் பின் இதுவரையிலும்14  கட்டங்களாக தேர்தல் பத்திரங்களை வெளியிட்டிருக்கிறது. 2020இறுதி வரை, மொத்தம் 12,773 பத்திரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றின் மதிப்பு 6,472 கோடி ரூபாய்களாகும். 2018 பிப்ரவரியில் முதல் தொகுதியாக 222 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவற்றில், 94.5 சதவீதம் அதாவது, 210 கோடி ரூபாய்க்கும் அதிகம் பாஜக-விற்கே சென்றுள்ளது. இது, பாஜக-வினால் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து நன்கு தெரிகிறது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களிலும், பாஜக-வானது 90 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றிருக்கிறது.இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் பத்திரங்களில் 92.12 சதவீதபத்திரங்களின் மதிப்பு என்பது 1 கோடி ரூபாய்க்கும் மற்றும் அதற்குஅதிகமான தொகைக்கும் என்பதிலிருந்து, இவ்வாறு தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்கள் கார்ப்பரேட்டுகள் அல்லது உயர்நிலையில் உள்ளபெரும்புள்ளிகள் என்பது தெளிவாகிறது.

திருத்தங்களும் உச்சவரம்பு ஒழிப்பும்
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின்கீழ் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு எவ்விதமான சட்டச் சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, மோடி அரசாங்கமானது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்கும் சட்டத்தில், வெளிநாட்டுக் கம்பெனிகள், இந்தியாவில் கிளைகளை வைத்திருந்தால், அவைகளும் இந்தியக் கம்பெனிகளுக்கு இணையானவை என்கிற விதத்தில்சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்தி இருந்தது. மேலும், கம்பெனிகள் தங்களுடைய மூன்றாண்டுகால லாபத்தின் சராசரியில் 7.5 சதவீதஅளவிற்கே நன்கொடைகள் அளிக்கமுடியும் என்றிருந்த உச்சவரம்பையும் ஒழித்துக்கட்டிவிட்டது.இவற்றின் காரணமாக ஆளும்கட்சிக்கு அந்நிய நிறுவனங்களிடமிருந்து பணம் அருவியில் நீர்கொட்டுவதுபோன்று, வெள்ளமெனப் பாய்ந்து வந்தது. மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகாரக் குணத்தை நன்கு தெரிந்திருந்த நிறுவனங்களில் பல எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடைஅளித்து, ஆளும் கட்சியினரின் வெறுப்புக்கு ஆளாக விரும்பவில்லை. இந்தப் பத்திரங்கள் பெற்றவர்களும், பெற்றுக்கொண்டவர்களும் பொது வெளியில் வெளிப்படுத்தப்படுவதில்லை என்றபோதிலும், இப்பத்திரங்கள் அரசுக்குச் சொந்தமான பாரதஸ்டேட் வங்கி மூலம் அளிக்கப்படுவதால், இவற்றைப் பெற்றவர்களின் பெயர்களையும், பெற்றுக்கொண்ட அரசியல் கட்சிகளையும், ஆளும் கட்சி மிக எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

பாஜகவுக்கு... மே.வங்கத்துக்கு...
ஏப்ரல் மாதத்தில் அளிக்கப்படக்கூடிய தேர்தல் பத்திரங்கள் பாஜக-விற்கு அளிக்கப்படக் கூடும். அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் அளிக்கப்படும். இதுவரை, மும்பைக்கு அடுத்து, மிக அதிக எண்ணிக்கையில் கொல்கத்தாவில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பெரும் வர்த்தக நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன.  தேர்தல் பத்திரங்கள், தேர்தல்களில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் சட்டப்பூர்வமான வெள்ளைப் பணத்தைக் கொண்டுவரும் என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பது போலித்தனமான ஒன்றாகும். இப்போதும் வர்த்தக நிறுவனங்கள் வாரிவழங்கும் கறுப்புப் பணம் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பாய்ந்து கொண்டிருக்கிறது. பாஜக,  தேர்தல் பத்திரங்களைப் பெறுவதன் மூலம் கார்ப்பரேட்டுகளிடமிருந்தும், பெரும் பணக்காரர்களிடமிருந்தும் சட்டப்பூர்வமாகவே நிதியைப் பெற்று, பண பலத்தில் இதர கட்சிகளைவிட மிகப்பெரிய அளவில்ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரம் திட்டம், பெரும்வர்த்தக நிறுவனங்களுடன் ஆளும் கட்சி வைத்துக்கொண்டுள்ள கள்ளப் பிணைப்பை முறைப்படுத்திட உதவும் ஒரு திட்டமாகும்.

கடமையிலிருந்து நழுவும் உச்சநீதிமன்றம்
தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத்  தங்கள் நீதிமன்றத்தின்முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது எவ்விதமானதீர்ப்பும் வழங்காததன் மூலம் உச்சநீதிமன்றம் தன் கடமையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. எப்படிஉச்சநீதிமன்றமானது அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தகர்க்கப்பட்டதன் மீதான வழக்கில் தீர்ப்பு எதுவும் அளிக்காமல் நழுவிக்கொண்டிருக்கிறதோ அதேபோன்று இந்தத்திட்டத்தின் மீதும் தீர்ப்பு எதுவும்வழங்காமல் நழுவிக்கொண்டிருக்கிறது. நீதித்துறை இவ்வாறு தன் பொறுப்புகளைத் தவிர்ப்பது என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்படுவது தொடர்பாக வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதும், கள்ளப்பணம்,கணக்கில் வராத பணம் ஆகியவற்றின் மூலமாக ஜனநாயகத்தில் மேற்கொள்ளப்படும் தவறான போக்குகளை நிறுத்துவதும் உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். இவற்றின்மீது எவ்வளவு விரைவாக உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதாகும்.

மார்ச் 30, 2021, 

தமிழில்: ச.வீரமணி

;