articles

img

அமெரிக்க தேர்தல் களம் இந்திய மக்களுக்கு உணர்த்துவதென்ன?

கேள்வி: அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நடந்தேறிய கலகம், டிரம்ப் விரல் நுனியில் உள்ள அணு ஆயுத பட்டன் அமுக்கப்படுமோ என்ற அச்சம் ஆகியன தரும் செய்திகள் என்ன?

ஏ.கே.பத்மநாபன் : அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்எப்போதுமே உலகத்தினுடைய கவனத்தை தொடர்ச்சியாக ஈர்த்து வந்திருக்கிறது. ஒவ்வொரு நாலாண்டுகளுக்கு ஒருமுறை அந்த தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்று அமெரிக்க மக்கள் எதிர்பார்ப்பது போல, உலகத்தினுடைய பல்வேறு பகுதிகளில் ஆட்சியாளர்களும் சாதாரண மக்களும் கூட எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் உலகத்திலேயே மிகப் பெரிய ராணுவரீதியாக, பொருளாதாரரீதியாக வலுவான நாடு. அதற்கும் மேலாக நாங்கள் தான் ஜனநாயகத்தினுடைய எடுத்துக்காட்டு என்று அவர்கள் சொல்லுவதுமுண்டு, அப்படியுமொரு உரிமை கொண்டாடுவதுமுண்டு. கடந்த நான்கு ஆண்டுகளில்  அமெரிக்க அரசாங்கம் என்று சொல்லுவதை விட, “அமெரிக்க ஜனாதிபதி நடத்திய பேச்சுக்கள், அவருடைய டிவிட்டர்கள், அவருடைய செய்திவிளக்கங்கள், அவருடைய செயல்பாட்டுமுறை இவையனைத்தும் விவாதத்திற்கு உட்பட்டதாகிவிட்டது.” அந்த நான்கு ஆண்டுகள் அவருடைய தேர்தல் காலம் நெருங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னால், 350க்கும் மேற்பட்ட உளவியல் நிபுணர்கள், ‘ஜனாதிபதியுடைய மனநிலை கோளாறுக்கு உரியதாக இருக்கிறது’ என்று பகிரங்கமாக அறிக்கைகளும், அரசாங்கத்திற்கு குறிப்புகளும் அனுப்பியதாக இப்போது செய்திகள் வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதியா இப்படிப் பேசுகிறார் என்று பலர் வியந்து போகும் அளவிற்கு கருத்துக்கள் வந்தன. ஆனால், இவையனைத்தும் அமெரிக்க மக்களுக்காக, ‘அமெரிக்காவை முதலிடத்தில் கொண்டு வருவதற்காக’ என்கிற பெயர்களோடு, என்கிற விளக்கத்தோடு  மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியும். ஆனால், இந்ததேர்தல் நடைபெற்று தேர்தலினுடைய முடிவுகள் வரக்கூடியநேரத்தில் அல்லது முடிவுகள் வெளி வந்த நேரத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் உலகம் முழுதும் விவாதத்தை உருவாக்கின.

கேள்வி : அந்த விவாதங்களுடைய அடிப்படை எதுவாக இருந்தது? தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தன?

ஏ.கே.பத்மநாபன் : 5 கோடியே 70 லட்சம் வாக்குகள் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கும்,  5 கோடியே 20 லட்சம் வாக்குகள் குடியரசு கட்சி வேட்பாளரான இப்போதைய ஜனாதிபதி டிரம்பிற்கும் கிடைத்தது. 50 லட்சம் வாக்குகள் வேறுபாடு என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு கட்டத்திலும், இந்த தேர்தலினுடைய வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிற போதே, ‘இது மோசடியாக நடைபெற்றது, இது திருடப்பட்டது, இது என்னுடைய உரிமை மறுக்கப்பட்டது, ஜனநாயகம் கேலிக்குரியதாக்கப்பட்டது’ என எதையெல்லாம் தேர்தலையொட்டி அவதூறாகச் சொல்ல முடியுமோ, அவ்வளவு கேடு கெட்ட முறையில் உள்ள பிரச்சாரம் அதிபர்நேரடியாகத் தலையிட்டு நடத்தினார் என்பது அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஒட்டி வெளியாகியுள்ளது.

அந்த வெறியூட்டக் கூடிய பேச்சுக்களின் விளைவுதான்ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற அவைகள் இந்த தேர்தலின் முடிவுகளை இறுதிப்படுத்துவதற்காக கூடியிருக்கிற நாளில், அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது, அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் நடைபெற்ற நிகழ்வுகள். அந்தகேபிடல் கட்டிடத்தினுடைய வாசலில் மக்கள் திரண்டார்கள்என்பதல்ல, திரட்டப்பட்டார்கள். அவர்கள் திரட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள், வீடியோக்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. அன்று காலையில் டிரம்ப் ‘நீங்களெல்லாம் மிகப் பெரிய போருக்கு, போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்’ என்று அறைகூவல் விடுக்கும் அளவிற்கு அவர்களுடன் பேசி, நீங்கள் அந்த கட்டிடத்தை நோக்கிச் செல்லுங்கள், நானும்உங்களோடு இருப்பேன் என்றார்.  அந்த ஒருநாள் பேச்சல்ல, கடந்து இரண்டு மாதங்களாக, இன்னும் சொல்லப்போனால், கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்க மக்களை பிளவுபடுத்துவதற்கும், வெறியூட்டுவதற்கும் பிற்போக்குத்தனமான முறையில் நடைபெற்ற பிரச்சாரத்தின்  ஜனாதிபதியின் பேச்சுக்களின் விளைவுகள் தான் ஜனவரி  6ஆம் தேதி அந்த கட்டிடத்திற்கு முன்னால் நடைபெற்ற நிகழ்வுகள்.  கட்டிடத்திற்கு முன்னால் நடைபெற்ற நிகழ்வுகள் மட்டுமல்ல நாடாளுமன்ற  அவைகளுக்குள்ளேயே ஆயுதம் தாங்கிய கும்பல். அமெரிக்க அரசாங்கமே சொல்லக்கூடிய   உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளே புகுந்தார்கள். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியில் லாரிகளில் நாபான் குண்டுகள் உள்பட இன்னும்பல்வேறு ஆயுதங்கள்  இருந்தன. உள்ளே நுழைந்தவர்களிடமும் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் இருந்தன என்றெல்லாம் செய்திகள் வரும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்.

 இந்த நிகழ்வுகள் அனைத்தும், அதையொட்டி வெளிவந்திருக்கும் செய்திகளை  அமெரிக்க பத்திரிகைகளில், ஊடகங்களில் வருகிற செய்திகளைப் பார்க்கிற போது, இந்திய ஊடகங்கள் இன்னும் அதை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்று தான் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அன்றைய தினம் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எல்லாவகையான பிற்போக்கு அமைப்புகளும், இன பாசிச அமைப்புகளும் சேர்ந்து அங்கே மக்களையும் ஆட்களையும் திரட்டினார்கள். அந்தத் திரட்டுதல்  திட்டமிட்ட முறையில் நடந்தேறியிருக்கிற ஒரு நிகழ்வு என இப்போது பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. அந்த சூழ்நிலையில் அங்கே நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, “அமெரிக்க ஜனநாயகத்தினுடைய சிறப்புக்கள் என்று எதையெல்லாம் சொன்னார்களோ, அந்த சிறப்புக்கள் அனைத்தும் இன்றைக்கு பகிரங்கமாக மக்களுக்கு முன்னால் இன்னும் சொல்லப்போனால் அம்மணமாக ஆக்கப்பட்டிருக்கிறது” என்பதுதான்.

அது, ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய அமைப்பு முறை எவ்வளவு கேலிக்குரியதாக ஆக்கப்பட முடியுமோ, அந்த அளவிற்கு ஆனது.  “அமெரிக்க ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து இராணுவம்செல்லவிருக்கிறது என்றொரு கேலிச் செய்தி  வெளியிடப்பட்டது.” ஏனென்றால் உலகம் முழுதும்  அந்தந்த நாடுகளுடைய ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பெயரில் இராணுவத்தை அனுப்பிய நாடாக அமெரிக்கா இருந்தது.வெனிசுலா நாட்டினுடைய அமைச்சர் அங்கே தேர்தல்முடிந்தவுடனே என்னவெல்லாம் அமெரிக்கா சொன்னதோ, அந்த வார்த்தைகளை அப்படியே போட்டு கிண்டல் செய்தார்.   வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய அறிக்கை கிட்டத்தட்ட அமெரிக்காவை பகிரங்கமாககேலி செய்வதாக, விமர்சிப்பதாக,  இருந்தது . ஆக ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற போது  அந்த நிகழ்வு அதை எங்கு கொண்டு சென்றிருக்கிறது. இப்போது வருகிற செய்திகள் என்ன சொல்லுகின்றன?

“இரண்டாவது முறையாக குற்ற விசாரணை நடத்தப்படுகிற ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் “புதிய வரலாறு” படைக்கிறார் என்று செய்தி வருகிறது.” அது வெற்றி பெறுகிறதா, இல்லையா என்பதல்ல. மீண்டும் ஒரு குற்ற விசாரணைக்காக அமெரிக்க ஜனாதிபதியை அவர் அதிகாரத்தை விட்டு வெளியேறுவதற்கு ஒரு பத்து நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் அப்படி ஒரு தீர்மானத்தை, விவாதிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.  அவரால் நியமிக்கப்பட்ட  உயர் பொறுப்புகளிலே உள்ளவர்கள் பலர் அவர்கள் ராஜினாமா செய்து தங்களுடைய எதிர்ப்பைத்தெரிவிக்கிறார்கள்.

அவரது சொந்தக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேலவை, செனட் உறுப்பினர்களும் அவர்களுடைய கண்டனத்தைத் தெரிவிக்கிறார்கள். உலகம் முழுதும் அமெரிக்காவோடு என்றென்றைக்கும் துணை நின்று உலகம் முழுதும் வன்முறைகளையும், ராணுவ தலையீடுகளையும் நடத்துகிற பிரிட்டன், பிரான்ஸ்,ஜெர்மனியின் ஆட்சியாளர்களும் ஜனவரி 6 நிகழ்வுகளை பகிரங்கமாக விமர்சிக்கிறார்கள். டொனால்ட் டிரம்பைஆதரித்து எழுதி வந்த  ஊடகங்கள், ஊடக பெருமுதலாளிகள்,  இந்தியா உட்பட உலக நாடுகளின் ஊடகங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் ராபர்ட் தோபெக்குடைய ஊடகங்கள் உட்பட  பகிரங்கமாக டொனால்ட் டிரம்ப்பின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் சூழ்நிலைஉருவாகியிருக்கிறதைப் பார்க்கிறோம்.

கேள்வி: ‘அப்படிப்பட்ட நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன?’ 

ஏ.கே.பத்மநாபன் : ஜனநாயகம் என்பது மக்களோடு இணைந்தும், மக்களுக்கானதாகவும் இல்லையென்று சொன்னால், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய போது அம்பேத்கர் சொன்ன எச்சரிக்கைதான் நினைவுக்கு வருகிறது.  இன்றைக்கு அமெரிக்காவின் நிகழ்வுகள், நமக்கு,‘நம்மைப் போன்ற மூன்றாவது உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாக வருகிறது.’ தங்களுடைய விருப்பத்திற்குட்பட்டு தேர்தல் முடிவுகள் மக்களுடைய வாக்குகள் அமையவில்லையென்று சொன்னால், அந்த ஜனநாயக முடிவையும், ஜனநாயகத்தையுமே தூக்கி எறிவதற்குத் தயங்க மாட்டார்கள் என்று இன்றைக்கு அமெரிக்கத் தேர்தல் நமக்குச் சொல்லுகின்றது. இந்த விவரங்களிலிருந்து பல படிப்பினைகளை உலகம் முழுதும் இருக்கும் மக்கள்,இந்திய  மக்கள் பெற வேண்டியிருக்கிறது, பெறுவார்கள். மக்கள் சக்தியென்பது மக்களுடைய விருப்பம் என்பது அதை முழுமையாக அமலாக்குகிற ஜனநாயக அமைப்பு முறையாகும். ‘ஏனென்றால்  குடியரசுக்கட்சியா, ஜனநாயகக் கட்சியா என்று வருகிற போது, அவை அடிப்படையான இரு வேறுபட்ட கட்சிகள் அல்ல. ஒரே தன்மையை பிரதிபலிக்கக்கூடிய இரண்டு கட்சிகளாகத் தான்  இருக்கின்றன. ஆனால் அந்தச் சூழலிலும் குடியரசுக் கட்சியின் ஒரு பிற்போக்குத் தனமான பிரதிநிதியாகத்தான் டொனால்ட் டிரம்ப் இருந்தார், இருக்கிறார் என்பது இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.’ அந்த முறையில் டொனால்ட் டிரம்ப் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்பது உலகத்தில் ஜனநாயகத்தை விரும்புகிற அல்லது அமைதியை விரும்புகிற மக்களுக்கு ஒரு பெரிய செய்தியே.

எந்த அளவிற்கு போயிருக்கிறது? அமெரிக்கா குவித்துவைத்திருக்கக் கூடிய அணுஆயுதங்களை இயக்கக் கூடிய சங்கேத வார்த்தை (Code Word), அது அமெரிக்க ஜனாதிபதியின் கையில் தான் இருக்கிறது. அதை அவர் இந்த கடைசி நாட்களில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்  என்று அமெரிக்காவின் மிக உயர்ந்த பொறுப்புக்களில் உள்ள  ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பலர் பகிரங்கமாக அறிக்கை விடுவதும் நடந்தேறுகிறது. அவர் யார் மீதாவது இதை ஏவிவிடக்கூடிய உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறார் என்று அச்சப்படும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கிறது.  பென்டகன் ராணுவ தலைமையக தலைவர்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசப்படுகிறது.  

“இது டொனால்ட் டிரம்ப் என்கிற ஒரு மனிதரல்ல, அங்கிருக்கக் கூடிய அரசியல் அமைப்பின் சீரழிவின் அடிப்படையான, பாசிஸ்ட்த் தன்மை வளர்ந்து வருவதுடைய ஒரு எடுத்துக்காட்டாகத்தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.” அது தான் இந்த நிகழ்வின் எச்சரிக்கையாக இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். ஆனால் இதை சொல்கின்ற போது இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியாக வேண்டும். அங்கு சென்றவர்கள் பலவிதமான பதாகையைஏந்தி வந்தார்கள், பிற்போக்குத்தனமான அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பல்வேறு வகை பதாகைகளுடனும், தட்டிகளுடனும், எழுதப்பட்ட கோசங்களுடனும் வந்தார்கள். அதைப்பற்றியெல்லாம் படித்த போது என் கவனத்தில் பட்டது இரண்டு விச
யங்கள்தான்.

ஒன்று, ‘இந்திய தேசியக் கொடியை ஏந்தி’ பிறப்பால் இந்தியாவைச் சார்ந்த, அமெரிக்க குடிமகனாக உள்ள ஒருவர் நின்றார். அவர் டிரம்பை ஆதரிப்பதற்காகத்தான் நான் வந்தேன் என்று அவர்கள் பெருமையோடு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். எதற்காக இந்திய தேசியக் கொடியோடு சென்றார்? அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் ஆதரவு டிரம்பிற்கு உண்டு என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் என்று சொல்கிறார்? இந்தியாவின் தேசியக் கொடி ஏன் அவ்வளவு கேவலமாக ஆக்கப்பட்டிருக்கிறது இவர்களால்?

இதை எதோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என்றால்,இந்திய பிரதமர் அமெரிக்காவிற்குச் சென்று இந்த முறை டிரம்ப்தான் என்று பகிரங்கமாக அவருக்கு தேர்தல் வேலைசெய்ததும், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நமஸ்தே டிரம்ப்என்று குஜராத்திற்கு வந்து மீண்டும் விழா நடத்தியதும். அந்த அளவிற்கு அமெரிக்க மக்களை வெறியூட்டுவதற்கு டிரம்ப் செயல்பட்டார் என்றால், அந்த டிரம்பிற்கு ஆதரவாகஅமெரிக்காவில் உள்ள இந்தியர்களை அணிதிரட்டுவதற்குஎவ்வாறு இந்திய பிரதமர் செயல்பட்டார் என்பதும் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், இன்றைய இந்திய ஆட்சியாளர்களுக்கும், டிரம்ப் அரசாங்கத்திற்கும் உள்ள நெருக்கத்தின் வெளிப்பாடு.  பகிரங்கமாக தங்களின் நட்பாக, கேந்திர கூட்டாளி (Strategic Alley), கொள்கைரீதியான கூட்டாளிகள் என்று பகிரங்கமாக அறிவித்தவர்கள். ஆகவே தான் டிரம்ப் ஆட்சியில் இருந்து வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன்னால் இந்திய பிரதமருக்கு வழக்கமாக அமெரிக்காவினுடைய ராணுவ நண்பர்களுக்கு வழங்குகிற உயரிய பட்டத்தை  வழங்கினார்.  ‘ஆகவே, அப்படி உள்ள ஒரு உறவுதான் அமெரிக்கர்களை, குறிப்பாக வெள்ளையர்களை  வெறித்தனமாக ஒன்றாகத் திரட்டுவதற்காக முயற்சித்த டிரம்ப்- அவருக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களைத் திரட்ட முயற்சித்த இந்திய பிரதமர் இருவருக்குமான பிணைப்பு.’ 

இதுதான் நாம் கவலையோடு பார்க்க வேண்டிய விசயம். அந்த திரட்டலில் அவர்கள் மிகப் பெரிய அளவில்வெற்றிபெறவில்லை என்பது தான் ஊடகங்களிலிருந்து வரும் செய்திகளில் உள்ளது.முழு  உண்மையென்னவென்று தெரியாது. ஆனால், இந்தியர்களையோ, லத்தீன்என்று சொல்லக் கூடிய தென் அமெரிக்க மக்களையோ, கறுப்பின மக்களையோ அமெரிக்க குடிமக்களையோ அவர்கள் டிரம்பிற்கு முழுமையான ஆதரவாகத் திரட்ட முடியாவிட்டாலும், அதில் ஒரு பகுதியினரைத் திரட்டினார்கள் என்று ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது.

இரண்டாவதாக, கடைசியாக எனது கவனத்திற்கு வந்த ஒரு விசயம். அங்கு கையில் கொண்டு வரப்பட்ட தட்டி,ஒரு வாசகம் எழுதப்பட்டது. “The most invisible enemyeverywhere is Communism” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கண்ணுக்குத் தெரியாத எங்கும் இருக்கக்கூடிய எதிரி கம்யூனிசம்தான் “ என்று அங்கு தட்டிகளில் எழுதப்பட்டு அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்ததை வீடியோவும், படமும் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அது இன்னொரு செய்தியைச் சொல்லுகிறது. எப்படி இந்திய தேசியக்டியை எடுத்து வந்தது ஒரு செய்தியைச் சொல்லுகிறதோ, அதே போன்றதொரு செய்தியை இவர்கள் சொல்லுகிறார்கள். எல்லா வகையான பிற்போக்குக் கருத்துக்களையும்,  தங்களை எதிர்க்கக் கூடியவர்களையும்  கம்யூனிஸ்டுகள் என்றும், தீவிரவாதிகள் என்றும், இடதுசாரிகள் என்றும்சொல்கிறார்கள்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரையே ஒரு இடதுசாரி என்று சொல்லக் கூடிய அளவிற்கு சென்றார்கள். ஜார்ஜியாமாகாணத்தில் கடைசியாக இந்த கலவரம் நடக்கக்கூடிய நாளில் அந்த செனட் தேர்தல் முடிவுகள் வெளி வந்தன.அங்கு ஒரு கறுப்பினத்தைச் சார்ந்த பாதிரியார் ஒருவரை,டிரம்பும், அவரது ஆதரவாளர்களும், இடதுசாரி, தீவிரவாதி, காஸ்ட்ரோவினுடைய நண்பர் என்றெல்லாம் விமர்சித்துத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்கக் கூடாது என்றார்கள். அதையும் மீறி குடியரசுக் கட்சியினுடைய தளமான ஜார்ஜியா மாநிலத்தில் அக்கட்சியின் வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெற்று, ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை என்ற நிலைமையை உருவாக்கியது அவர்களை அதீதமாகஆத்திரப்படுத்தியது.

எதிர்ப்பாளர்களை அவதூறு பேசுவதும், அவர்களை இடதுசாரிகள், தீவிரவாதிகள் என்று சொல்லும் அதே போக்குதான் இங்கே, விவசாயிகள் தில்லி மாநகரத்திலே கடும் குளிரில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிற போதும் நடந்தேறுகிறது. அவர்களை பாகிஸ்தானியர்கள் என்றும், காலிஸ்தானிகள் என்றும், சீன ஆதரவாளர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும், நக்ஸலைட்டுகள் என்றும், தேசவிரோதிகள் என்றும் பட்டம் சூட்டுகிறார்கள். ‘இந்த மக்கள்விரோதக் கொள்கைகளுடைய, வலதுசாரி தன்மையுடைய ஆட்சியாளர்கள் அனைவரும் எப்படி மக்களை நியாயம்கோருகிற மக்களை, பிற்போக்குத்தனமான கருத்துக்களைஎதிர்க்கக்கூடிய மக்களை, தேச விரோதிகளாக சித்தரிக்கிறார்கள் என்பதும் சர்வதேசத் தன்மை கொண்டதாக இருக்கிறது.’ 
நவீன பாசிசத் தன்மை இதில் அடங்கியிருக்கிறது என்பதை அடையாளம் காண வேண்டும். இதுவே இந்திய மக்களுக்கும் அமெரிக்கத் தேர்தல் களம் கொடுத்திருக்கிற படிப்பினையாக நான் கருதுகிறேன்.

நேர்காணல் அளித்தவர்  : ஏ.கே.பத்மநாபன்,, சிஐடியு, அகில இந்திய துணைத் தலைவர்

பேட்டி : செவ்வானம்

;