articles

img

வங்கத்தில் படிப்பினைகளை உள்வாங்கி பலமான சக்தியாக எழுவோம்.... ஜி.ராமகிருஷ்ணன் நேர்காணல் - 2

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய அரசுகள் பதவியேற்றுள்ள நிலையில், இத்தேர்தல்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நக்கீரன் யு டியூப் சேனலுக்கு, தேர்தல் முடிவுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த நேர்காணல் இது. 

$  மேற்கு வங்கம் - மோடி, அமித்ஷா என மொத்த பாஜக மூத்த தலைவர்களும் குறி வைத்த மாநிலம் ஆகும்.  இத்தனை பேருடைய தீவிர பிரச்சாரத்திற்கு பின்பும் கூட, பாஜக அங்கு தோல்வியடைந்துள்ளது.  மம்தாவின் தொடர் வெற்றிக்கும், பாஜகவின் தோல்விக்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

மேற்கு வங்கத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் சிறுபான்மை மக்கள் – இஸ்லாமிய மக்கள் ஆவர்.  பாஜக தலைவர்கள் அங்கு சென்று அந்த மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கப் போவதாக பிரச்சாரம் செய்தார்கள். இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை உருவாக்கி, மதரீதியில் மக்களை பிளவுபடுத்தி எப்படியாவது ஆட்சியைப் பிடித்திடலாம் என்பது தான் மோடி-அமித்ஷாவின் திட்டம் ஆகும்.  ஆனால், இவர்களது திட்டம் அங்கு எடுபடவில்லை.  மக்கள் பொதுவாக, பெரும்பான்மையாக மதரீதியாக வாக்களிக்கவில்லை.  மத்தியில் உள்ள பாஜக இப்படி நாடு முழுவதும்மதவாதத்தை அமலாக்கக் கூடிய, மதவாத நாடாகமாற்றக் கூடிய முயற்சியை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள்;  அந்த முயற்சியை ஏற்றுக் கொள்ளக் கூடாதுஎன்ற அடிப்படையில்தான் பாஜகவை எதிர்த்து மக்கள் வாக்களித்து மம்தா பானர்ஜியை வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.  அங்கு இருதுருவ அரசியல் என்பது உருவாகியுள்ளது.  ஒருபுறத்தில் மம்தா பானர்ஜி, மறுபுறத்தில் பாஜக என்று இருதுருவ அரசியல் உருவாகிறபோது, மாநில மக்களுக்கு பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அது மம்தா பானர்ஜியால்தான் முடியும் என்ற எண்ணத்தில் அவர்கள் மம்தாவிற்கு வாக்களித்துள் ளார்கள்.  ஆனால் வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இடதுசாரிக் கட்சிகளுக்கு அங்கு சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லை என்பது உண்மையாகும். இது குறித்து கட்சியின் மேற்குவங்க மாநிலக் குழுவும், கட்சியின் மத்தியக் குழுவும் தேர்தல் நிலைமை குறித்து நாங்கள் பரிசீலிக்க உள்ளோம்.  அதிலிருந்து உரிய படிப்பினையைப் பெற்று மீண்டும் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகள் பேரெழுச்சி பெறுவார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.  

                                          ********************

$ தேர்தல் வெற்றிக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெரும் வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன.  இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆம், அது உண்மையே. 2011ல் மம்தா பானர்ஜி தலைமையில் அங்கு அரசு உருவான பிறகு, 100க்கும் மேற்பட்ட எங்கள் தோழர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அந்த வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.  தற்போது இந்த சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு நடந்த வன்முறைகளில் எங்களது கட்சியை சார்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.  எனவே, தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் மாநிலக் குழுவும், கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் ‘‘மேற்கு வங்கத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது;  ஆனால், அதே நேரத்தில் வன்முறையில் ஆளுங்கட்சி இறங்கக் கூடாது;  வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.

                                          ********************

$  தங்களது உறுப்பினர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொன்றதாக பாஜகவினர் சமூக. வலைதளங்களில் செய்தியைப் பரப்பினர். ஆனால், கொல்லப்பட்டதாக அவர்களால் சொல்லப்பட்டவர்களே, நாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்று எழுதுகிறார்கள்.  இந்த பொய்ப்பிரச்சாரம் பற்றி உங்களது பார்வை ...

பாஜகவின் உறுப்பினர்கள் திரிணாமுல் கட்சியினரால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திகளில் ஒன்றிரண்டு தவறாக இருக்கலாம்.  ஆனால், தேர்தலுக்குப் பிறகு ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் வன்முறைகளில் ஈடு
பட்டிருக்கிறார்கள்.  அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும், மாநில முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மம்தா பானர்ஜி, அவரது அரசு வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என  பல ஊடகங்கள், குறிப்பாக பல நாளேடுகள்  தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்.  அந்த அடிப்படையில் அங்கு ஆளுங்கட்சியின் வன்முறைகள் நடப்பது உண்மையாகும்.  அவை நிறுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நாங்கள் வலியுறுத்துகிறோம்.

                                          ********************

$  பாஜக அரசியல் என்பது, ஒரே சமயத்தில் தமிழகம்,கேரளா, மேற்குவங்கம்  ஆகிய 3 மாநிலங்களி லும் பாஜக ஆட்சி நிராகரிக்கப் பட்டுள்ளது. ஒன்றியஅரசின் கடந்த சில வருட செயல்பாடுகளுக்கான எதிர்வினையாக இதைப் பார்க்கலாமா?

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அதனுடைய நடவடிக்கைகள், திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதாக இருந்து வருகிறது. குறிப்பாக, நான் ஏற்கனவே சொன்ன 3 வேளாண் சட்டங்கள் என்பது முழுக்க,முழுக்க விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடிய மோசமான சட்டங்கள் ஆகும். அந்த சட்டங்களை எதிர்த்து, தொடர்ந்து பல மாதங்களாக பல லட்சம் விவசாயிகள் தில்லியில் போராடி வருகிறார்கள். அதைப்பற்றி மோடி அரசாங்கம் கவலையே படவில்லை. இரண்டாவதாக, கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்திருக்க முடியுமா என்றால், நிச்சயம் முடிந்திருக்கும். குறிப்பாக, முதல் அலை ஓய்ந்து எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து வந்த பின்னணியில், உலகளவிலும் இந்தியாவிலும், வல்லுநர்கள், இதோடு கொரோனா முடிந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது; பல நாடுகளில் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என கொரோனா பாதிப்பு அதிகமான உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும், இரண்டாவது அலை வரக்கூடிய ஆபத்து உள்ளது என எச்சரிக்கை விடுத்தனர் . இந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி டாவோஸ் நகருக்குச் சென்று, உலகப் பொருளாதார மன்றத்தில் பேசினார். அங்கு ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர். ‘‘130 கோடிமக்களைக் கொண்ட இந்திய தேசத்திலிருந்து நல்ல செய்தியுடன் வந்திருக்கிறேன். கொரோனா வந்த பின் இந்தியாவில் பல கோடிப்பேர் இறந்துவிடுவார்கள் என பலர் ஆரூடம்கூறினார்கள். ஆனால், இந்தியாவில் கொரோனாவை வெற்றிகரமாக தடுத்தி நிறுத்திவிட்டோம். இதன்மூலம், உலக மனித குலத்தையே நாங்கள் பாதுகாத்திருக்கிறோம்’’ என்று மோடி அங்கு சிறிது கூட தன்னடக்கமின்றி பேசினார். 2 ஆவது அலை ஒன்று வருகிறது, மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என பல வல்லுநர்கள் சொன்ன பிறகும்கூட, அதற்கு எந்த தயாரிப்பையும் செய்யாது எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் இனி கொரோனா இல்லை என்றார். 

தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும கல்வியை தனியார்மயமாக்கும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஜனநாயக உரிமைகளை பறிக்கக் கூடிய அடிப்படையில், மத்திய அரசு கொண்டவந்த சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டமும், தேசிய புலனாய்வு முகமைச் சட்டமும் ஒட்டுமொத்தமாக, இந்திய அரசியல் சட்டமென்பது ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற குடியரசு என்பதை எதேச்சதிகாரமான முறையிலும், ஒரு மதச்சார்புள்ள இந்துத்வா நாடாக மாற்றக்கூடிய மோசமான மத்திய அரசின் நடவடிக்கை காரணமாகவே, நடந்து முடிந்த தேர்தல்களில் இந்த மாநிலங்களில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. எனவே வகுப்பு வாதத்தையும் மத்திய அரசு அமலாக்குகிற நவீன தாராளவாதப்பொருளாதார கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற மகத்தான தீர்ப்பையே இந்த மூன்று மாநில மக்கள் அளித்துள்ளார்கள்.  

                                          ********************

$ இந்தியாவில் இடதுசாரிகள் – அதில் குறிப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கேரளா, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் நிலை – கேரளாவில் இடதுசாரிகளை இரண்டாவது முறை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய மக்கள், 35 வருடங்கள் மேற்கு வங்கத்தை ஆண்ட இடதுசாரிகளுக்கு இந்த முறை ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை.  எதனால் இந்த முரண்?  இதன் மூலம் இடதுசாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?  மாற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

மேற்குவங்கத்தில் ஒரு மிகப் பெரிய தோல்வியை இடதுசாரிகள் சந்தித்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  இது குறித்து மேற்கு வங்க மாநிலக் குழுவும், மாநில செயற்குழுவும் சுயவிமர்சனப்பூர்வமாக ஆழமாக பரிசீலிக்க வேண்டுமென கட்சியின் அரசியல் தலைமைக் குழு மேற்குவங்க மாநிலக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளது.  துவக்கமாக சொல்ல வேண்டுமெனில், நடந்த முடிந்த இந்த தேர்தலில் ஒரு வகுப்புவாத, மதவாத சக்தியான பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும்;  எக்காரணம் கொண்டும் அங்கு பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று கருதக் கூடிய மக்கள், இது மம்தா பானர்ஜி - திரிணாமுல் காங்கிரஸ் அவர்களால் மட்டும்தான் சாத்தியம் என்ற எண்ணத்தோடு மம்தா பானர்ஜிக்கு கூடுதலான இடங்களை அளித்துள்ளார்கள்.  இருந்தபோதும், பாஜகவைத் தோற்கடித்த இந்த மக்கள் ஏன் இடதுசாரிகளுக்கு வாக்களிக்கவில்லை, ஒரு இடத்தில்கூட ஏன் வெற்றி பெற இயலவில்லை என்பதை ஆழமாக பரிசீலிக்கஉள்ளோம்.  அதிலிருந்து உரிய படிப்பினையைப் பெற்றுமீண்டும் அங்கு ஒரு பலமான சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் உருவாவார்கள் என்று கட்சியின் சார்பில் சொல்ல விரும்புகிறேன்.

                                          ********************

$    இந்த கொரோனா காலம், உலகம் முழுவதும் மிகவும் மோசமான அவலநிலை.  அப்படி யிருக்கும்போது, இந்த கொரோனா காலத்தில்  - குறிப்பாக இந்த இரண்டாவது அலை சார்ந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்த கேள்வியை நீங்கள் கேட்பதற்கு முன்பே இதற்கான விளக்கத்தை நான் சொல்லியிருக்கிறேன்.  உலகில் பல நாடுகளில், குறிப்பாக ஜப்பான், வியட்நாம், ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற பல நாடுகளில் இரண்டாவது அலை வராமல் தடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா வராமல் தடுக்க வேண்டுமெனில், கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சைக்கான ஏற்பாடு என்பது ஒரு நடவடிக்கையாகும்.  மற்றொன்று, கொரோனா வராமல் தடுப்பதற்கு அடிப்படையாக தடுப்பூசி போடுவது என்பதாகும்.  இந்த இரண்டு விஷயங்களிலும் மோடி அரசு எந்தத் தயாரிப்பும் இல்லாதிருந்தது மிகப் பெரிய தோல்வியாகும்.  மோடி அரசு முதல் அலை வந்தபோதே தடுப்பூசியை தயாரிப்பதற்கான பணிகளைத் துவக்கிட வாய்ப்பு கிடைத்தது. உதாரணமாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில், இங்கி லாந்தில், இந்தியாவில், சீனாவில் என இன்னும் பல நாடு களில் ஆராய்ச்சி நடைபெற்றது.  இந்தியாவில் புனேயில் கிருமிகள் மற்றும் நோய் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.  அந்நிறுவனத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு செய்து, கொரோனாவைத் தடுப்பதற்கான விதையைக் கண்டு பிடித்தார்கள்.

கொரோன வைரசை செயலிழக்கச் செய்து அதிலிருந்து விதையை எடுத்து அதிலிருந்து தடுப்பூசியைத் தயாரிக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒரு  பணியைமத்திய அரசின் தலைமையில் செயல்படக் கூடிய, இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைமையில் செயல்படக் கூடிய பூனேவில் இருக்கக் கூடிய நிறுவனம் கண்டுபிடித்து விட்டது.  மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கவேண்டும்?  அந்த கண்டுபிடிப்பை வைத்து இந்தியா முழுவதும் உள்ள ஐந்து தடுப்பூசி தயாரிப்பதற்கான பொதுத்துறை நிறுவனங்களிடம் கொடுத்திருந்தால் தடுப்பூசியை உற்பத்தி செய்திருப்பார்கள்.  இன்றைய காலத்திற்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசியைப் போட்டிருக்கலாம்.  50 கோடி பேருக்கு தடுப்பூசியைப் போட்டிருந்தால்இரண்டாவது அலை என்பது இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கியிருக்காது.  தடுப்பூசியைத் தயாரித்திட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் என்ற மருந்தை சீரம் என்ற நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார்கள்.  புனேயில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் கண்டுபிடித்த அந்த தடுப்பூசிக்கான விதையை பாரத் பயோடெக் எனும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார்கள்.  இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் தடுப்பூசியை தயார் செய்கிறார்கள்.  எல்லா மக்களுக்கும் தடுப்பூசி என்றால் ஜூலை மாதம் வரை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். எனவே, தடுப்பூசியைத் தயாரிப்பதிலும் மத்திய அரசாங்கத்தின் தயாரிப்பாக இல்லாததும், கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆக்சிஜன் இல்லாததும் குறித்து இன்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, கொரோனாதொற்று ஏற்படுவதற்கும், தொற்றால் மக்கள் கொத்து கொத்தாக இறப்பதற்கும் பொறுப்பேற்க வேண்டியது மோடி அரசேயாகும் என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். 

                                          ********************

$ மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை அமைத்துள்ளது.  ஆனால், சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் செய்யப்பட்டு வரு கிறது.  இவர்களும் அவர்களைப் போல்தான் ஒன்றிய அரசோடு ஒன்றிப் போகும் நிலை வரும்;  எந்த அளவிற்கு மாநில உரிமைகளுக்காக துணிந்து நிற்பார்கள் என்பது கேள்விக்குறிதான் என்று முன்வைக்கிறார்கள்.  இதைப் பற்றி ….

பதவியேற்பு முடிந்தவுடனேயே முதலமைச்சர் முதன்முதலாக சில நடவடிக்கைகளை எடுத்து அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.   கொரோனாவால் பாதிக்கக் கூடிய குடும்பங்களுக்கு அறிவிக்கும் போது அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே 4000 ரூபாய்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.  முதல் தவணையாக ரூ.2000 கொடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து போட்டுள்ளார்.  அடுத்ததாக, கொரோனா நொய்த்தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறறக் கூடிய அந்த நோயாளிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலாகும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  அடுத்ததாக, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சலுகை என்பதை அறிவித்துள்ளார்.  ஆகவே, இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளார்கள்.  வந்தவுடனேயே கையெழுத்து போட்டு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்.  இப்படி ஆட்சிப் பொறுப்பேற்று அடுத்த சில மணித்துளிகளுக்குள்ளாக அந்த ஆட்சியைப் பற்றி மதிப்பீடு செய்வது சரியானதல்ல.  திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது.  இப்போதும் கூட கொரோனா சவாலை சமாளிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது.  திமுக அளித்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.  

                                          ********************

$ சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக் கூடிய மராத்தா இன மக்களுக்கான இடஒதுக்கீடு சார்ந்த ஒரு தீர்ப்பு உச்சநீதிமன்றத் தால் அளிக்கப்பட்டது.  அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக வருகிறது.  அதுபற்றி...

மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட மராத்தா என்ற சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது மாநில அரசால் அறிவிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.  அந்த சட்டத்திற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. மாநில அரசு சார்பில் மராத்தா சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டையும் சேர்த்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அளிக்கப்பட்ட மொத்த இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக வருகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு மாநிலத்தின் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் மேல் போகக் கூடாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் மராத்தா சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனுடைய பின்னணி என்பது, தமிழ்நாட்டில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு கல்வியில், வேலை வாய்ப்பில் அமலாக்கப்பட்டு வருகிறது என்ற அடிப்படையைக் கொண்டது. தற்போது  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீதமும், தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீதமும் ஆகிய 69 சதவீதம் என்பது உச்சநீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது.  தமிழ்நாட்டில் அமலாக்கப்பட்டு வரக்கூடிய இந்த 69 சதவீதம் இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.  

                                          ********************

$ 50 சதவீதத்திற்கு மேல் போகும்போதுபட்டியல் 9ல் உட்படும் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே…

ஏற்கனவே அரசியல் சட்டத்தில் 9வது அட்டவணையின் கீழ் ஒரு மாநில அரசு கொண்டு வந்த சட்டம்சேர்க்கப்பட்டால் அது நீதிமன்றங்களின் பார்வைக்குவராது, நீதிமன்றங்கள் அதை விசாரிக்க முடியாது, தள்ளுபடி செய்ய முடியாது என்ற அடிப்படையில் ஏற்கனவே தமிழக அரசாங்கம் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஒரு சட்டமாக இயற்றி அதனை 9வது அட்டவணையின் கீழ் சேர்த்திட மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது.  அந்த அடிப்படையில், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு ஏற்கனவே அமலாக்கி வரும் 69 சதவிகித இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சொல்ல விரும்புகிறேன்.  

                                          ********************

$  69 சதவீத இடஒதுக்கீட்டில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளன.  இதற்கு நடுவிலேயே, பாமக நிறுவனர் ராமதாஸ் 20க்குள் 10.5 என்றெல்லாம் முன் வைத்து அது ஒப்பந்தமாகியுள்ளது என சொல்லப்படுகிறது.  சாதி வாரியான கணக்கீடெல்லாம் வரவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.  இதுவெல்லாம் சாத்திய மானதா?    

இது உள்ஒதுக்கீடு என்பதாகும். அதாவது 69 சதவீதத்திற்கு மேல் அல்ல.  ஏற்கனவே, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகிதம், அந்த 50 சதவிகித பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்குள் ஒரு 20 சதவிகிதம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களுக்கு அளிக்கப்படுகிறது.  அந்த 20ல் 10.5 சதவிகிதம் வன்னியர்களுக்கு என்று அதிமுக அரசாங்கம் திடீரென சட்டம் கொண்டு வந்தது.  அதை வைத்து தேர்தலில் பிரச்சாரம் செய்தார்கள்.  எனவே, இது 69 சதவிகிதத்திற்கு மேல் அல்ல.  தமிழகத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது, கணக்கெடுப்பு தவறல்ல. ஆனால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு முழுவதையும் சாதிவாரியாக பிரித்து பிய்த்துப் போடுவது சரியானது என நான் கருதவில்லை. ஆகவே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தலித், பழங்குடியின மக்களுக்கும் கல்வியில், வேலைவாய்ப்புகளில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதைத்தான் மீண்டும் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன்.   

நன்றி : நக்கீரன் யு டியூப் வெளியீடு

தொகுப்பு : எம்.கிரிஜா

இந்த நேர்காணல் தொகுப்பு 4 ஆம் பக்கத்தில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தலையங்கத்தின் கீழ் பகுதியில் கடைசி பத்தி தொடர்ச்சி என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது.  தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே பகுதியில்  கட்டுரைத் தொகுப்பு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.  

;