articles

img

யாருடைய கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் ?

அரசமைப்புச்சட்ட அமைப்புகள் அனைத்தும் மோடி ஆட்சியின்கீழ் மிகவும் வேகமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கு தலைமைத் தேர்தல்ஆணையத்திற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைவிட வேறெதுவும் உதாரணமாகக் காட்ட வேண்டியதில்லை.தேர்தல் ஆணையம், மோடி அரசாங்கத்தின் விருப்பத்திற்கு எந்த அளவிற்கு மிகவும் மோசமான முறையில் வளைந்து கொடுத்திருக்கிறது என்பதற்கு கேரளாவிலிருந்து மாநிலங்களவைக்குத் தேவையான மூன்று காலிஇடங்களுக்கான தேர்தல் தொடர்பாக எடுத்த நடவடிக்கையே மிகச்சிறந்த உதாரணமாகும்.

முன்னெப்போதுமில்லை
மாநிலங்களவைக்கு ஒரு மாநிலத்தில் காலியாகும் இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைக்கு இப்போது தேர்தல் ஆணையம் அளித்திடும் விளக்கம் போன்று விசித்திரமாக இதற்குமுன்னெப்போதும் இருந்ததில்லை.தேர்தல் ஆணையம், தேர்தல்கள் ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என்று முதலில் அறிவித்தது.ஆனால் ஒரு வாரம் கழித்து, தேர்தல் நடைமுறையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இதற்கு அது அளித்த காரணம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திலிருந்து வந்துள்ள கடிதத்தைப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது என்பதாகும்.கேரள சட்டப் பேரவையின் செயலாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகி, தேர்தல் ஆணையம் இவ்வாறு தேர்தலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். இதன்மூலம்தற்போது இருந்துவரும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதாகவும்,  தேர்தல் ஆணையம் உரிமைகளைப் பறித்திட
முடியாது என்றும் விவாதித்தார்கள். இதற்கு நீதிமன்றத்தின் முன் பதிலளித்த தேர்தல் ஆணையம், இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என்று உறுதி அளித்தது. ஆயினும், அதனை எழுதித்தருமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டபோது, அவ்வாறு எழுதித்தராது அது பின்வாங்கியது. 

மோடி அரசின் சூழ்ச்சி முறியடிப்பு
பின்னர், தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய சட்டம்மற்றும் நீதி அமைச்சகம், தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின்படி, கேரள மக்கள் ஏப்ரல் 6 அன்று புதிய சட்டப்பேரவைக்காக வாக்களித்திருப்பதால், இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டிய தேவையில்லை என்று கூறியிருப்பதாக, ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இவ்வாறு மத்திய அரசு அளித்த அறிவுரையைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாகவே ஒப்புக்கொண்டது.

 தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டு, மே 2 அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே மாநிலங்களவை உறுப்பினர்களின் காலியிடங்களுக்கான தேர்தலை நடத்திட  வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. இவ்வாறு, காலியிடங்கள் மூன்றில் இரண்டு இடங்களை இடது ஜனநாயக முன்னணி பெறுவதற்கான உரிமையைப் பறித்திட, மோடி அரசாங்கம் மேற்கொண்ட சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.   இந்தநிகழ்வு, தேர்தல் ஆணையம் மோடி அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப எந்த அளவிற்கு ஆடத் தொடங்கியிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது.

வளைந்து கொடுத்த முந்தைய உதாரணம்
ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையம் இதற்கு முன்பும் இதேபோன்று வளைந்து கொடுத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப, 2019 ஏப்ரல்-மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றசமயத்திலேயே ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்தாது தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஜம்மு-காஷ்மீர்மாநில சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடத்துவதற்குத் தீர்மானித்திடவில்லை. 
ஜம்மு-காஷ்மீர் 2018 நவம்பரிலிருந்து குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.எனவே, மக்களவைக்குத் தேர்தல் நடைபெறும்போது மாநில சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறும் என்று எதிர்பார்ப்பது இயற்கையே. எனினும் மக்களவைக்கான தேர்தலுடன் மாநிலசட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தினால் பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏற்படும் என்று காரணங்களைக் கூறி மாநில சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்படவில்லை என தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.
மக்களவைத் தேர்தல் முடிந்தபின்னர்,  மூன்றுமாதங்களுக்குள்ளேயே, மோடி அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை உருக்குலைத்தது. இவ்வாறு செய்வதற்கு அரசமைப்புச்சட்டத்தின்படி மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதையே வசதியுடன் தவிர்த்துவிட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழேயே ஆளுநரின் ஆலோசனையே போதுமானது எனக்கூறி சட்டமன்றத்தைக் கலைத்தது. அப்போதும்இதற்கெல்லாம் கூறப்பட்ட காரணங்கள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் என்பவைகளேயாகும்.

ஆட்சேபணையும்பொறுப்பு கைகழுவலும்
தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தொடர்பான மற்றுமொரு நிகழ்வு என்பது அது தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எடுத்த நிலைப்பாடு ஆகும். 2017இல், அரசாங்கம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உருவாக்கியபோது, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டபோது, இதற்கு எதிராகக் கடுமையான விதத்தில் தன் கருத்தைப் பதிவு செய்தது. “அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படைத் தன்மையின் மீது கடும் விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்” என்று எச்சரித்தது. மேலும் இந்தியாவில் இயங்கிடும் அந்நிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம்நிதி அளிப்பதற்கு வகை செய்யும் விதத்தில், சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கும் தேர்தல் ஆணையம் ஆட்சேபணை தெரிவித்தது.   எனினும், சென்ற மாதம், இதேபோன்று ஏப்ரல்மாதத்தின் தொடக்கத்தில் மற்றுமொரு முறை தேர்தல் பத்திரங்கள் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றுவிசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையமானது தடை விதிக்கக்கோரும் அந்த மனுவை எதிர்த்ததோடு, தாங்கள் தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதை இப்போது எதிர்க்கவில்லை என்றும், இதில் வெளிப்படைத்தன்மை மட்டுமே தேவை என்று தாங்கள் விரும்புவதாகவும், அதுவும் பின்னர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான மனுக்கள் விசாரணைக்கு வருகையில் சரிசெய்து கொள்ளலாம் என்றும் கூறியது. இவ்வாறு இந்தத்திட்டத்திற்கு முன்பு கடும் எதிர்ப்பினை சமர்ப்பித்திருந்த தேர்தல் ஆணையம் இப்போது அதிலிருந்தும் தன் பொறுப்புகளைக் கைகழுவிக்கொண்டுவிட்டது.

நற்பெயர் இழக்கும் ஆபத்து
இப்போது மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாகத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. சிதால்குச்சியில் ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே  மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் (CISF)துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதில் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர்கள் அளித்திட்ட அறிக்கையின் அடிப்படையில், மத்தியதொழில் பாதுகாப்புப் படையினரை அப்பழுக்கற்றவர்கள் என்று கூறி விடுவித்திருக்கிறது. அங்குஎன்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

பாஜக, வழக்கம்போல, நரேந்திர மோடி மற்றும்அமித்ஷாவின் தலைமையின்கீழ் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது நடந்ததைப்போலவே, இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பாஜக-வினர் எவரொருவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜியின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, அவருக்கு 24 மணி நேரம் பேசுவதிலிருந்து தடை விதித்திருக்கிறது.

நேர்மையான விதத்திலும் நியாயமான விதத்திலும் தேர்தல் நடைபெற முன்நிபந்தனையாகத் தேவைப்படுவது தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சியினரையும் சம அளவில் பாவித்து செயல்பட வேண்டும் என்பதும் இதனை அனைத்துக் கட்சியினருமே ஒப்புக்கொள்ளும் விதத்தில் அதன்நடவடிக்கைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதுமேயாகும். தேர்தல் ஆணையம், தேர்தல் விதிகளுக்குப் புறப்பாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக உறுதியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். ஆட்சியாளர்களின் தலையீட்டை அனைத்து மட்டங்களிலும் தடுத்து நிறுத்திடவேண்டும். கடந்த காலங்களில் இது தொடர்பாக மிகவும் சிறப்பான முறையில் தேர்தல் ஆணையம் நடந்துகொண்டு வந்திருக்கிறது. ஆனால் இப்போது அத்தகைய நற்பெயரை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

பணியவைக்கும் பாணி
தேர்தல் ஆணையத்தைப் “பணிய வைப்பதற்கான” வேலைகளை மோடி அரசாங்கம் செய்யும் விதமே அலாதியானதாகும். 2019 மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையர்களில் ஒருவரான, அசோக் லவாசா, சுதந்திரமான சிந்தனையாளராக செயல்பட்டார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மோடி மீதும்அமித்ஷா மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஐந்தின் மீது, தேர்தல் ஆணையர்கள் விசாரணை மேற்கொண்டு, குற்றமற்றவர்கள் என்று தேர்தல் ஆணையத்தின் இதர ஆணையர்கள் எடுத்த முடிவுகளுக்கு எதிராக அவர் தன் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதன் விளைவுகள் தொடர்ந்தன. விரைவிலேயே லவாசாவின் மனைவி, மகன், சகோதரி ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் விசாரணை பாய்ந்தது. இவைமிகவும் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகின. லவாசாவின் சொந்த சொத்துக்கள் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாயின. 2020 ஜூலையில் லவாசா, ஆசியன் வளர்ச்சி வங்கியில் ஒரு பதவி அளிக்கப்பட்டு அதை அவர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, தேர்தல் ஆணையரின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

சுனில் அரோரா, இப்பொழுதுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து ஓய்வு  பெற்றிருக்கிறார். லவாசா ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தாரானால் அவர்தான் தலைமைத் தேர்தல் ஆணையராக வந்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம், ஒரு சுதந்திரமான, சுயேச்சையான அரசமைப்புச்சட்ட அமைப்பாக செயல்படுவதில் முக்கியமான பலவீனங்கள் இருந்து வருகின்றன. இது முழுக்க முழுக்க ஆட்சியாளர்களின் கைகளின் கீழ் இருக்கிறது.ஆரம்பத்திலிருந்தே ஆட்சிப் பணி ஊழியர்கள்அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா போடுகிறவர்களும் துதிபாடுகிறவர்களும் ஆணையர்களாக வருவது எளிதாகிவிட்டது.  மோடிஅரசாங்கம், மிகவும் நன்கு திட்டமிட்டு, அரசமைப்புச்சட்டத்தின் அனைத்து அமைப்புகளையும், தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. தேர்தல்ஆணையம், அரசாங்கத்தின் ஓர் அங்கமாகமாறிக்கொண்டிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சமரசம் செய்வது ஜனநாயகத்துக்கு ஆபத்து
தேர்தல் ஆணையத்திற்கு அரசமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக “மேற்பார்வை, கட்டளைகள் மற்றும் கட்டுப்பாடுகளை” மேற்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இதில்ஆட்சிபுரிபவர்களுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டால், அது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஆபத்தை ஏற்படுத்திடும்.  மோடி அரசாங்கத்தின் பிடியிலிருந்து தேர்தல் ஆணையத்தை விடுவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதல் நடவடிக்கை என்பது, ஆட்சியாளர்களின் முன்நிபந்தனையுடன் தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்படுவது என்பதும், நியமனம் செய்யப்படுவது என்பதும் இருக்கக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதாகும். இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விரிவான அளவில் ஒரு குழு அல்லது கொலிஜியம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் ஆட்சிபுரிபவர்கள் மட்டுமல்ல, நீதித்துறையில் உள்ளவர்களும் இடம் பெற வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் குறிப்பிடத்தக்க நடுவர்களும்  இடம் பெறவேண்டும்.  தேர்தல் ஆணையர்களாக வருவதற்கான தகுதி என்பது ஆட்சிப்பணி ஊழியர்களுக்கு மட்டும் இருக்கக்கூடாது, புகழ்பெற்ற நடுவர்கள்  இதர துறைகளில் பணிபுரிந்த புகழ்பெற்ற ஆளுமைகளும் இடம் பெற வேண்டும்.  

தேர்தல் ஆணையத்தின் நேர்மையைப் பேணிப் பாதுகாத்திட, தலைமைத் தேர்தல் ஆணையராக அல்லது இதர தேர்தல் ஆணையர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் பின்னர் அரசாங்கம் அளித்திடும் எந்த பணியையும் ஏற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதற்கும், கட்சித் தாவல்கள்மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான விதத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும். தேர்தல் அமைப்பு முறையை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அமைப்பு முறையாக மாற்றிட வேண்டும். ஆனாலும், இத்தகைய சீர்திருத்தங்கள் அனைத்தையுமே, தேர்தல் ஆணையத்தை சீர்திருத்துவதிலிருந்து தொடங்கிட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்

ஏப்ரல் 14, 2021, தமிழில்: ச.வீரமணி

;