articles

img

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு.... ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த மகத்தான மக்கள் தீர்ப்பு....

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  பல சவால்களை சந்தித்து மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக, பாஜக, பாமக கூட்டணியை முறியடித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று மொத்தத்தில் 45 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட சுமார் 5 சதவிகிதம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுகஅரசு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் பல்வேறு சித்துவிளையாட்டுகளை நடத்தி அதிமுக - பாஜக - பாமக கூட்டணி ஆட்சி அமைத்திட பாஜக மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் தமிழக மக்கள் தவிடுபொடியாக்கியுள்ளார்கள். அதிமுக 66 இடங்களிலும், பாமக, பாஜக முறையே 5, 4 இடங்களை மட்டும் பெற்றுள்ளது. இக்கட்சிகள் 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல், 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றவாக்குகளை விட இத்தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. அதிமுகவை பல கூறுகளாகப் பிரித்து பின்னர் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்குள் இருந்த போட்டியை பயன்படுத்தி ஒட்டுமொத்த அதிமுக கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிபணிந்து போகிற காரியத்தையே அதிமுக ஆட்சி மேற்கொண்டது. 

எடுபிடியான அதிமுக
நாடாளுமன்றத்தில்  மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் ஆட்சேபணை ஏதுமின்றி அதிமுக ஆதரித்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு எதிரான முத்தலாக் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்ததோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்புவராது என பாஜகவின் குரலாக முதலமைச்சரே தமிழகத்தில்வாதாடினார்.

ஒட்டுமொத்த விவசாயத்தையும், வேளாண் வணிகத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கும் வேளாண்சட்டங்களையும், பொதுவிநியோகத்தை ஒழித்துக் கட்டும்அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்திற்கும், நாடாளுமன்றத்தில் ஆதரிவு தெரிவித்தது மட்டுமின்றி இதற்கு ஏதுவான சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. மேலும், இச்சட்டத்தால்விவசாயிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என கீறல் விழுந்த ரெக்காடு போல் அதிமுக அமைச்சர்களும், தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் அதிமுக கூச்சமின்றி துரோகம் இழைத்தது.

காஷ்மீர் மக்களின் உரிமையை பறிக்கும் வகையில்நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் பறிக்கும்வகையிலான சட்டத் திருத்தங்கள் மற்றும் உபா சட்டத் திருத்தம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் நிறைவேற்ற அதிமுக துணை போனது. தேசிய கல்விக் கொள்கைஅமலாக்கத்தின் மூலம் கல்வி உரிமையை ஒட்டுமொத்தமாக பாஜக அரசு பறித்துக் கொண்டுள்ளது.

கொரோனாவை விட கொடிய ஆட்சி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு தருவதாக முதலில் அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் எந்த மாநிலத்திற்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது என பாஜக அரசு கைவிரித்து விட்டது. மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் நீட் தேர்வை தமிழகத்தில் திணித்து சாதாரண ஏழை, நடுத்தர, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வியில் மண்ணை அள்ளி போட்டது. இதனால், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு உரிய மருத்துவ இடங்கள் மறுக்கப்பட்டு இதர மாநிலங்களைச் சார்ந்தவர்கள் நமது மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அனிதா உள்ளிட்ட பலர் தற்கொலையில் மாண்டனர்.மத்திய மோடி அரசு தமிழகத்திற்கு நியாயமாக வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு தொகை, உள்ளாட்சி மன்றங்களுக்கான உதவித் தொகை, இயற்கை பேரிடருக்கு வழங்கவேண்டிய பேரிடர் நிவாரண தொகை உள்ளிட்ட பல்வேறு நிதிகளை வழங்க மறுத்து தமிழகத்தை வஞ்சித்தது.

கொடுமையான கொரோனா நோய்த் தொற்றுக்கு இந்தியநாட்டு மக்களைப் போல தமிழக மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானபோது நோய்த் தொற்றை தடுக்கவும், மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட மத்திய அரசு மறுத்துவிட்டது. அனைத்திற்கும் மாநில அரசு கடன் வாங்கி செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது 2வது அலை நோய்த் தொற்றினால் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரிப்பது, மரணங்கள் அதிகரித்து வருவது, தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ படுக்கைகள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை என தமிழக மக்கள் உயிர் பயத்தினால் அஞ்சிக் கொண்டுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசுகளின் கையாலாகாத்தனத்தினால் இன்று தமிழகம் இத்தகைய அல்லலுக்குஆள்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடிநாதமாக அமைந்துள்ள சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்றவைகளில் கூட தமிழகத்தின் குரலை ஒலிப்பதற்கு மாறாக, பாஜகவின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்தது. ஒட்டுமொத்தத்தில் அதிமுக, பாஜகவின் எடுபிடி ஆட்சியாகவே மாறிப்போனது சோக வரலாறாகும்.

திவாலான தமிழக நிதி நிலை
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, மனித உரிமைகள், விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்துவது போன்ற அனைத்தையும் நாசப்படுத்திவிட்டது. பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. காவல் நிலைய சாவுகள் தொடர் கதையாகின. அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தமிழக அரசின் நடப்பாண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடி என்ற உச்சநிலையை அடைந்துள்ளது. தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. ஓராண்டிற்கு செலுத்தப்படும் வட்டி மட்டும்ரூ. 53,000 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. இதுபோகமாநில பொதுத்துறை வாங்கியுள்ள கடன், அவைகளுக்கான வட்டி அனைத்தையும் சேர்த்தால் மொத்த கடன்ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகம் என விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கும் - எதிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடின. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இத்தகைய ஊழல் - வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரே நோக்கில் பாஜகவிற்கு வெஞ்சாமரம் வீசுவதை புனிதக் கடமையாக அதிமுக நிறைவேற்றி வந்தது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி
தமிழ்நாட்டு நலனை காவு கொடுத்து, மத்திய பாஜகவிற்கு காவடி தூக்கும் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியை முறியடித்து தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக மக்களுடைய உரிமைகளுக்கான எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. அந்த போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்த்து களம் கண்டு வரலாற்று சாதனை படைக்கிற மகத்தான வெற்றி பெற்றது. தமிழக வாக்காளர்கள் ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதியைத் தவிர மீதமுள்ள 38 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து, அதிமுக - பாஜக - பாமக கூட்டணியை துடைத்தெறிந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியை முறியடிக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி களமிறங்கியது.

நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கோடு பாஜக - அதிமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. பல பிரமுகர்களுக்கு வலை விரித்து அவர்களை களமிறக்கி அதிமுக - பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்கள் கடைசி நேரத்தில் தப்பிவிட்டனர்.  எனினும் இக்கூட்டணியின் நோக்கத்திற்கு சிலர் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நிராகரிப்பதற்கில்லை. மதம் மற்றும் சாதிய அணிசேர்க்கையை உருவாக்கி அதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய வெற்றியை முறியடித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டி அதிமுக-பாஜக, பாமக கூட்டணி செயல்பட்டது.

தேர்தல்களில் சாதிய அணிதிரட்டல் அவ்வப்போது தலையெடுப்பது நடந்துள்ளது. ஆனால், மத்திய, மாநில ஆளுங்கட்சிகளாக உள்ள அதிமுக - பாஜக கூட்டணியே சாதிய அணி சேர்க்கைக்கு தலைமை தாங்கும் போக்கினை இத்தேர்தலில் மேற்கொண்டது வித்தியாசமான ஒன்றாகும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு 10.5 சதமான உள் இடஒதுக்கீட்டை வழங்குகிற சட்டத்திருத்தத்தை தமிழக சட்டப்பேரவையில் கடைசி நாளன்று அவசர கதியில் எடப்பாடி அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் பாமகவை தங்கள் கூட்டணியில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், வன்னியர் மக்களின் வாக்குகளை பெற வேண்டுமென்ற நோக்கோடு இது நிறைவேற்றப்பட்டது. அதேபோல,பட்டியலின வகுப்பில் உள்ள 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் பெயர்மாற்ற சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியதுடன், நீங்கள் தேவேந்திரர்கள், நான் நரேந்திரன் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டது இம்மக்களின் வாக்குகளை பெற வேண்டுமென்ற நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே ஆகும். உள் ஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் ஆகியவைகளில் உள்ள சமூக நியாயத்தைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. மாறாக, இவர்களது கவலையெல்லாம் இம்மக்களின் வாக்கு வங்கியை நோக்கியது என்பதே உண்மை.

சாதிய அணிதிரட்டல்
மேலும், பல சாதிய தலைவர்களை அணி திரட்டிட அவர்களது மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டது அம்மக்களின் வாக்குகளை பெறுவதற்கான நடவடிக்கையாகும். அதுமட்டுமின்றி, எந்தஅதிமுகவை பாஜக பிளவுபடுத்தியதோ அதே அதிமுகவின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைக்க வற்புறுத்தியதும் இந்த நோக்கிற்காகவே.அனைத்திற்கும் மேலாக இதுவரையில் தமிழக முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தங்களை ஒருசாதிய பின்புலத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இதற்குநேர் மாறாக எடப்பாடி பழனிசாமி தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதி என அடையாளப்படுத்திக் கொண்டதோடு அச்சமூகத்தின் வாக்குகளை அணி திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதும் இதில் அவர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
அதிமுக - பாஜக - பாமக கூட்டணியின் இத்தகைய சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டிய பெரும் கடமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எழுந்தது. தமிழகத்தில் மதவாத, சாதிய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்கும் போராட்டத்தினை உறுதியோடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மேற்கொண்டது. தமிழக வாக்காளர்கள் மத்திய, மாநில ஆட்சிகளின் தவறானநடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டவும், தமிழகத்தில் பாஜகவின் சதிகளுக்கு இடம்கொடுக்காமல் அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்கும் பெரும் பணிக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரியதாகும். பாஜகவின் பினாமியாகவே செயல்பட்ட அதிமுக அரசுஅகற்றப்பட்டு திமுக தலைமையில் புதிய அரசு அமைய இந்த தேர்தல் முடிவு வழிவகுத்துள்ளது. இதன்மூலம் மாநிலஉரிமைகள் உட்பட தமிழகம் இழந்ததை பெறுவதற்கான பெரும்போராட்டத்திற்கு மக்கள் பேராதரவு அளித்துள்ளனர்.

எதிர்காலத்திலும் அதிமுக - பாஜக - பாமக - மதவெறி, சாதிவெறி சக்திகளை புறந்தள்ளி தமிழகம் இழந்துள்ள உரிமைகளை மீட்டிடவும், மாநில உரிமைகளை பாதுகாத்திடவும், சமூக நீதி, கூட்டாட்சி கொள்கைகளை பேணிக் காத்திடவும் மகத்தான கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. மேலும், கொரோனா கொடுமைகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரும்பணியில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசும், மக்களும்இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. விவசாயிகளுடைய உரிமைகளை பறிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, நீட் தேர்வை ரத்து செய்வது, பறிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளை மீட்பது, பெண்கள்-குழந்தைகள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது, வேலைவாய்ப்புகளை பெருக்கி இளைஞர்களின் வாழ்வுக்கு வழிகாணுவது, தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக்கிட, தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக்கிட தாய்மொழி கல்விக்கு உரியஅங்கீகாரம் வழங்கிட உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற பணிகளை தொடர வேண்டியது அவசியமாகும்.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;