articles

img

கேரள இடது ஜனநாயக முன்னணியின் இரண்டாம் வருகை....

இடது ஜனநாயக முன்னணி அரசு கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை உலகளாவிய முற்போக்காளர்கள் ஜனநாயக எண்ணம் கொண்டோர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.கேரளாவின் சமூக அரசியல் வரலாற்றை கவனிப்பவர்களுக்கு இரண்டாம் வருகை என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்திருக்கும். 

கேரள வரலாற்றில் அதிகாரம், நிலம்முதன்முறையாக உழைப்பாளி விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதை ஆளும் அதிகாரவட்டம் விரும்பவில்லை. கல்வியில் சாதி மத தலையீடுகளை தவிர்க்க இஎம்எஸ்  தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி அரசு  பெருமுயற்சி எடுத்ததை தனியார் கல்வி அதிபர்கள் விரும்பாமல் ‘விமோசன சமரத்தை’ முன்னெடுத்தார்கள்.இதை முறியடிப்பதற்காக  வர்க்க பலாபலத்தை புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  1979 ல் உருவாக்கியதுதான்  இடதுஜனநாயக முன்னணி. இதன் சூத்திரதாரி தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.கம்யூனிஸ்டுகள்  தலைமையிலான அரசை,இடது ஜனநாயக முன்னணி அரசை தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆள விடாமல் எத்தனை எத்தனை  சூழ்ச்சிகள் எத்தனை எத்தனை  தோழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள். 

கேரளாவில் வர்க்கப் போராட்டம் தீவிரமாக முடுக்கி விடப்பட்டது.விடப்பட்டும்  வருகிறது.இந்த சூட்சுமங்கள் எல்லாம் புரிந்து கொண்டமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,கேரள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், தேசிய காங்கிரஸ் கட்சி, அதன்தலைமை அதன் தோழர்கள், தோழர் பினராயி விஜயன் தலைமையில் வியூகங்களை புனரமைத்து மீண்டும் மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகு இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இரண்டாம் முறை தொடர்ந்து பொறுப்புக்கு வந்திருக்கிறது.

இதனை இரண்டாம் வருகை என்று கேரளா எளிமையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.இந்தக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக நம்முடைய தமிழக கேரள இந்திய அளவிலான இசைக்கலைஞர்கள் 50 பேர் இணையவெளியில் கலந்து கொண்ட ஒரு மாபெரும் கீதாஞ்சலி இசைநிகழ்வு  நடைபெற்றது. இரண்டாம் வருகையின் முதல் நிகழ்வு இந்த கீதாஞ்சலி இசை நிகழ்வு ஆகும்.தமிழ்நாட்டின் கேரளாவின்  உலகப் புகழ் பெற்ற கே.ஜே.ஜேசுதாஸ், ஏ.ஆர்.ரகுமான், டிரம்ஸ் சிவமணி,  சித்ரா , உன்னிகிருஷ்ணன், சுஜாதா திரைக்கலைஞர்கள் மம்முட்டி ,மோகன்லால், ஜெயராம் என 50 கலைஞர்கள்  இணையவழியில் கலந்து கொண்ட அந்த மாபெரும் இசை நிகழ்வு இரண்டாம் வருகை பதவி ஏற்பின் மாபெரும் இசைக் கோலமாக அமைந்தது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு போராடவும் தெரியும்; காலை இலக்கியங்களை கொண்டாடவும் தெரியும் என்பதற்கான சாட்சியம் இந்த கவிதாஞ்சலிநிகழ்வு. 

வயலார் ராமவர்மா,வள்ளத்தோள், ஒய்.என்.வி.க்ரூப் போன்ற மகாகவிகள் முதல் நவீனக்கவிகளின் கவிதை வரிகளை எடுத்துத் தொடுத்துப் பாடினார்கள். கேரளாவின் நிலம், வானம், சூழல், போராட்டம் என தொடக்கிமுதலாளித்துவத்தின் முன் மண்டியிட மாட்டோம்;எங்கள் போராட்டம் தொடரும் என இசைவேள்வி நிகழ்த்தியதை கவனித்துக் கொண்டிருந்த பிரபல இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் போல நாம் ஒவ்வொருவரும் புளகாங்கிதம் அடைந்தோம்.பினராயி விஜயன்  தலைமையிலான பதவிஏற்பு நிகழ்வை  பார்த்தவர்களுக்கு கேரளாவின்அரசியல் பண்பாட்டுத் தாக்கம் புரிந்திருக்கலாம்.

அமைச்சர்கள் தனித்தன்மை உடையவர்களாகஇருந்தார்கள். அமைச்சர்கள் பொறுப்பேற்க அழைக்கப்பட்டு மேடை ஏறி வந்தது விழாவுக்குவந்தவர்களைப் பார்த்து  வணக்கம் செலுத்தியதும் கரங்களை உயர்த்தி செவ்வணக்கம் சொல்லியதும் கேரளம் வழிகாட்டிய புதிய பண்பாட்டின் சுயமரியாதைத் தடம் துலங்கியதை காண முடிந்தது.பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிற முகமது ரியாஸ் பதவிகள் பதவியேற்பு மேடையில் முட்டியை உயர்த்தி செவ்வணக்கம்செலுத்தியது உணர்ச்சிகரமாக இருந்தது.விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே திருவனந்தபுரம் சென்ட்ரல்ஸ்டேடியம் வந்துவிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா தனிநபர் இடைவெளியில் அமர்ந்திருந்தவர்களை  ஒவ்வொருவராக நேரடியாக பார்த்து வணக்கம் செலுத்தினார். தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டுஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய Karunanidhi A life நூலை  கேரள முதல்வரிடம் கையளித்து கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு தங்கள்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

;