articles

img

சிவப்பு வங்கம் நிச்சயம் எழும்....

வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் மிருக பலத்தோடு வெற்றி பெற்று இருக்கிறது.பாஜக கணிசமான இடங்களை பெற்றிருக்கிறது. ஆனால் ஏன் திரிணாமுல் குண்டர்கள் பாஜகவை விட அதிகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணித் தோழர்கள் மீது பெரும் வன்முறையை கட்டமைக்கிறார்கள் என்பது மிக முக்கியமானது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்த 2011 ஆம் ஆண்டு துவக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணி யில் செயல்படும் பெண் தோழர்கள் மீது திரிணாமுல் குண்டர்கள் ஏவிய வன்முறைகள் சொல்லில் அடங்காதது. அதே போல இப்போது மீண்டும்  பெண் தோழர்களின் மீதான வன்முறை அதிகரிப்பது துவங்கி இருக்கிறது. 

வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழந்ததற்கும் மற்ற மாநிலங்களில் சில கட்சிகள் ஆட்சியில் இருந்து வீழ்த்தப்படுவதற்கும்  இடையே தெளிவான அரசியல் காரணங்கள் உண்டு. உலக முதலாளித்துவம் உற்று நோக்கி, எதிர்பார்த்து, இடதுசாரிகள் அதிகாரத்தில் இருந்துகீழிறக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக கருத்துருவாக்கம் நடைபெற்ற இடம் மேற்குவங்கம். கம்யூனிச அமைப்புகள் மீண்டும் உயிர் பெற்று வந்துவிடக் கூடாதுஎன்ற நோக்கத்தோடு ‘கம்யூனிஸ்டுகள் ஒழிந்தார்கள்’ என்கிற ஒற்றை கருத்துருவாக்கத்தின் பத்தாண்டு காலத் தாக்கமாகவே  2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. 

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்  இடது முன்னணி 179 இடங்களிலும் , காங்கிரஸ் 91 இடங்களிலும் , ஐஎஸ்எப் 34 இடங்களிலும் என ‘ஐக்கிய முன்னணி’ அமைத்துப் போட்டியிட்டன. அதில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் 138 இடங்களில் போட்டியிட்டது . மார்க்சிஸ்ட் கட்சி கடந்த காலங்களில் வங்கம் குறித்து விவாதித்து எடுத்த பல்வேறு முடிவுகளை அமலாக்குவதில் மிகத் தீவிரமாகஇருந்தது. அதில் குறிப்பிடத்தக்கது கட்சியின் வேட்பாளர்களின் சராசரி வயதில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார்கள். கடந்த கால தேர்தல்களின் ஒப்பீட்டளவில் இம்முறை பெரும்பான்மையான வேட்பாளர்கள் புதியவர்கள். அதுவரை வங்கத்து மார்க்சிஸ்ட் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என ஏளன விமர்சனம் செய்து வந்த வங்க ஊடகங்கள், கம்யூனிஸ்டுகள் பல இளைஞர்களைக் களமிறக்கியதும் மெளனமாகின.

கம்யூனிச எதிர்ப்பு  ஊடகங்களின் வெறி
 இன்னும் மிக முக்கியமான விஷயம் வங்கத்து மீடியாக்களின் சார்புத் தன்மை. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில் , மம்தாவின்  அடக்குமுறையில் இருந்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் எங்களால் மட்டுமே மக்களைக் காக்க முடியும் என்கிற பாஜகவின் பொய் நம்பிக்கைகளால் வங்கத்தில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளில் பாஜக வென்றது. ஆனால் அதன்பிறகு பாஜக கொண்டுவந்த தேசிய குடிமக்கள் பதிவேடும், விவசாய விரோதச் சட்டமும் அதன் முகமூடியை வங்கத்து மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது. இதனை மம்தா மிக நன்றாகவே உணர்ந்திருந்தார். 

இதன் பின்னணியில் இருந்தே இந்த தேர்தலுக்கான தங்களது தீர்க்கமான முடிவுகளுடன் தயாராக இருந்தன வங்க மற்றும் தேசிய ஊடகங்கள். வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பரப்பத் துவங்கின தேசிய ஊடகங்கள். ஆனால் அதனை தடுத்து நிறுத்தும் வாய்ப்பு இந்த முறையும் மம்தாவுக்கே அதிகம் என்கிற திட்டமிட்ட செய்தியைச் சேர்த்து பரப்பி தங்கள் உத்தியை தொடங்கின வங்கத்து மீடியாக்கள். இது துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய ‘ஐக்கிய முன்னணியின்’ அரசியல் ஈர்ப்பை குறைப்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சிகளில் மிக முக்கியமானது. மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் வங்கத்தில் நிலவக் கூடிய மற்றொரு பிரத்யோக சூழலில் ஒன்று , தேர்தல்களில்  மாறிச் செல்லக் கூடிய வெகுமக்களுடைய வாக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்பது தான். 

2011ல் மம்தாவிற்கு மாறிச் சென்ற வாக்குகள், மம்தாவின் மோசமான ஆட்சியில் இருந்து தப்பிக்க 2019 ல் பாஜவுக்கு மாறி, தற்போது மிகத்தீவிரமான மதரீதியிலான அணிதிரட்டலுக்கு உதவி இருக்கிறது.  கேரளம் அல்லது தமிழகத்தினை போன்று அல்லாமல் பெரும்பான்மையான வங்கம் கிராமப்புற பகுதியைச் சார்ந்தது.  இப்படியான கிராமப்புற மிகுதியான மாநிலங்கள் தான் பாஜகவின் இந்துத்துவ அணிதிரட்டலுக்கு கைமேல் பலன் அளிக்கிற மாநிலங்களாகவும் இருந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகவே,  பாஜக ஜெய் ஶ்ரீராம் என்றால், மம்தா ஜெய் ஶ்ரீகாளி என்ற கோஷத்தை முன்வைப்பது.  தான் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தோடு மம்தா மத அடிப்படையிலான ஏராளமான உத்திகளை இந்த முறை கையாண்டார். ஆனால்  மக்களிடையே மதரீதியிலான பிரிவினையினை தீவிரமாக்கி அதை இந்துத்துவ அணிதிரட்டலுக்கு அச்சாரமாக்கி இருக்கிறது பாஜக.   

சரிவிலிருந்து மீள்கிறோம்...
தில்லியில் இருந்து மேற்குவங்கத் தேர்தலை கவனித்து வந்த பத்திரிக்கையாளர் ஒருவரோடு பேசும் போது“வங்கம் தீவிரமாக மத அணி திரட்டலை நோக்கிச் செல்கிறது. அதைத் தடுக்க இன்னும் பெரும் முயற்சியிலானநகர்வுகள் தேவை. பாஜகவை தடுத்து நிறுத்த மம்தா தான் வழி என்கிற பிம்பம் மக்கள் முன் உருவாக்கப்பட்டு விட்டது. அதுவே இந்த வெற்றிக்கு காரணம்” என்கிறார். மேலும் இந்தியாவிலேயே கல்வி, வேலைவாய்ப்பு, சமூக மாற்றம் குறித்து அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தினை இன்னும் தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். நிச்சயம் அது பலனளிக்கும் என்கிறார் அந்தப் பத்திரிகையாளர். 

வங்கத் தேர்தலில் இடது முன்னணியும், அதன் தலைமையிலான ஐக்கிய முன்னணியும் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட138 இடங்களில் பெற்ற வாக்குகளின் சராசரி 10 விழுக்காட்டிற்கும் மேல். ஏறக்குறைய 70 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி  10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளது. கம்யூனிஸ்டுகள் அமைத்த அணி வங்கத்தேர்தல்களில் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 65 லட்சம். உண்மையில் கடந்த தேர்தல்களை விட,  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்குகளை பார்க்கும் போது பல தொகுதிகளில்  சரிவினை தடுத்து நிறுத்தி ஒரு படி முன்னேற்றத்தி னை நோக்கி நகர்ந்திருக்கிறது இடது முன்னணி. 

இதுகுறித்து வங்கதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளரும், இந்திய மாணவர் சங்க இணைச்செயலாளருமான தீப்சிதாவிடம் பேசும் போது, “மிகத் துல்லியமான மத அணிதிரட்டல் நடைபெற்று வாக்குகள் பிரிந்தன. பெரும்பகுதியான இஸ்லாமிய வாக்குகள் திரிணாமுலுக்கும், இந்து வாக்குகள் பாஜகவுக்கும் பிரிந்து சென்றன. ஆனால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான திரிணாமுல் மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெறத் துவங்கி இருக்கிறோம் ” என்றார். அவர் போட்டியிட்ட பால்லி தொகுதியில் கடந்த முறையை விட இந்த முறை மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறோம் என்கிறார். “தோல்வியினால் நான் கவலை அடையவோ அல்லது துவளவோ இல்லை ; மாறாக இன்னும் தீவிரமாக மக்கள் பணியில் நிற்கும் வலிமை பெற்றுள்ளேன். அதற்கு சான்றே நாங்கள் மேற்கொண்டு வரும் கொரோனா கால நிவாரணப் பணிகள்” என்கிறார். 

துப்பாக்கிச்சூடு
ஏப்ரல் 10 ஆம் தேதி வாக்குப்பதிவின்போது, சிட்டால்குசிஎன்னும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி யில் ஏற்பட்ட வன்முறையின் போது மத்தியப் படைகள் நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். அதற்கும் மம்தாவின் வெற்றிக்கும் பாஜக பெற்றிருக்கும் வாக்குகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அந்த சம்பவத்தில் மத்தியப் படையினரால் சுடப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். மத்தியப் படை இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி பாஜகவிற்கு வேலை செய்கிறது என்கிற மம்தாவின் குற்றச்சாட்டு  அவருக்கு பலனளித்தது; அதேகுற்றச்சாட்டு, பாஜகவிற்கான இந்து வாக்குகளை ஒருமுகப் படுத்துவதற்கும் பயன்பட்டது.நந்திகிராமில் தான் தாக்கப்பட்டதாக மம்தா குய்யோ முறையோ என கூப்பாடு போட்டதற்கும், சிட்டால்குசி வாக்குச்சாவடியில் ஏன் மத்தியப் படையினரால் மேற்படி 4பேர் சுடப்பட்டார்கள் என்பதை மம்தா மறைப்பதற்கும் இடையில் ‘அரசியல் ரகசியங்கள்’ ஒளிந்து கிடக்கின்றன. 

வங்கத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான அஜய்தாஸ் குப்தாவுடன் பேசும் போது, “ இந்த தேர்தலில் வாக்குகள் பெரும் பகுதி பிரிந்து சென்றன. அதற்கு சில காரணிகள் உள்ளன. ஆனால் கம்யூனிஸ்டுகள் அமைத்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் புதிய ஆதரவு உருவாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் மக்களிடம் இது குறித்து ஒரு சலசலப்பு உருவாகி உள்ளது. அது மிக முக்கியமானது. பல ஆண்டுகள் கழித்து பொதுவெளியில் மக்கள் மீண்டும் மார்க்சிஸ்டுகளை அங்கீகரிக்கும் விதத்தில் பேசத் துவங்கி இருக்கிறார்கள். இன்னொன்று மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மீனாட்சி முகர்ஜி குறித்தது.  நந்திகிராமில் அவர் போட்டியிட்டதற்கு பிறகு மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அனைவருமே இன்றும் திரிணாமுல் குண்டர்களால் கம்யூனிஸ்ட் தோழர்கள் தாக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அவர்களுக்கான நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என விவரிக்கிறார்.

பாஜக வரக்கூடாது என்பதே மக்கள் சிந்தனை 
கொல்கத்தாவில் உள்ள  அலியா பல்கலைக்கழகத்தின் முனைவர்பட்ட ஆய்வாளரான மீஜைனூரிடம் வங்கத் தேர்தல்களைப் பற்றி கேட்கும் போது, “இந்த முறை வடக்கு வங்கத்தில் வலுவாக இருந்த காங்கிரஸ் வாக்கு வங்கி பெரும்பகுதி திரிணாமுலுக்கு சென்று விட்டது. காங்கிரஸ்போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகள் வடக்கு வங்கத்தில் இருப்பவையே. அங்கே காங்கிரஸ் வசமிருந்த இஸ்லாமிய ஆதரவுத்தளமானது, பாஜக வரக்கூடாது என்கிற ஒற்றை நோக்கத்தோடு நேரடியாக திரிணாமுலுக்கு மாறிச்சென்றுவிட்டது. அதுவே இந்தமுறை காங்கிரஸ் குறைவான சதவிகிதத்தை பெற்றதற்கான காரணம்” என்கிறார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட பல்வேறு இடங்களில் திரிணாமுல் எதிர்ப்பு வாக்குகளை பெற்றிருக்கிறது. அது இந்த தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவை கொடுத்துள்ளது. ஏறக்குறைய 96 தொகுதிகளில் பத்தாயிரம் வாக்குகள் தான் அதிகபட்ச வித்தியாசமாக இருக்கிறது. என்னுடைய தொகுதியில் கூட கடந்த காலத்தை விட ஒரு பங்கு வாக்குகளை கூடுதலாக மார்க்சிஸ்ட் கட்சி பெற்றிருக்கிறது” என்கிறார். 

“மம்தாவிற்கு இந்த முறை மக்கள் வாக்களித்தது திரிணாமுல் வெற்றிபெற வேண்டும் என்ற காரணமல்ல; பாஜக வென்று விடக் கூடாது என்பதே. தேர்தலுக்கு பின்னே நடைபெற்ற வன்முறைகளுக்குப் பிறகும் , தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் எனக்குத் தெரிந்தவர்களும் , என் பகுதி மக்களும் இவ்வளவு வாக்குகளை மார்க்சிஸ்ட் கட்சி வாங்கும் எனத் தெரிந்திருந்தால் நாங்களும் வாக்கைச் செலுத்தி இருப்போம் என்று கூறினார்கள்.ஆனால் இதில் ஊடகங்களுக்கு இருந்த பங்கு மிக முக்கியமானது. மீண்டும் கம்யூனிஸ்டுகள் வந்து விடக்கூடாது என்பதில் ஊடகங்கள் மிகமிகத் தீவிரமாக இருந்தன. அதில் ஊடகக் கம்பெனிகள் வென்றுள்ளன என்பதே உண்மை. ஏனெனில் 2019 ல் கம்யூனிஸ்டுகள் ஒரு இடம் கூட வெல்லாததை குறிப்பிட்டு இனி கம்யூனிஸ்டுகளும் - காங்கிரசும் வெல்லவே முடியாது என்கிற கருத்தாக்கத்தை திட்டமிட்டு உருவாக்குவதில் பெரும் பங்கினை ஆற்றின முதலாளித்துவ ஊடகங்கள்” என விவரிக்கிறார் மீஜைனூர். 

மேலும், திரிணாமுல் சார்பாக வெற்றிபெற்ற 14 பேர் தீவிரமான ஆர் எஸ் எஸ் செயல்பட்டாளர்கள் என்கிறார் ஆய்வாளர் மீஜைனூர்.“தேர்தலுக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் முன்னைவிட கொடூரமாகத் தாக்கப்படு
வதற்கு காரணம் மீண்டும் கம்யூனிஸ்டுகளை நோக்கி மக்கள் செல்லத் துவங்கி இருக்கிறார்கள் என்பதை மம்தா உணர்ந்துவிட்டார்; அதனால் தான் இப்போது பெரும் வன்முறைகள் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன. தேர்தல் பணிகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களாக இளைய தோழர்கள் போட்டியிட்ட இடங்களில் சிறப்பானபணியினையும், மக்களின் மனதையும் கவர்ந்திருக் கிறார்கள் என்பது தான். குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி கடந்த சில ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களுக்கு ஒரு மதிப்புவங்கத்தில் உருவாகியுள்ளது” என்றும் அவர் கூறுகிறார். 

13ஆயிரம் கோடி செலவிட்ட பாஜக
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  ராபின் தேவ் அவர்களோடு வங்கத் தேர்தல்கள் குறித்து பேசும் போது அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தன.  “வங்கத்தில் வாக்குகள் மதரீதியில் பிளவுபட்டாலும் இந்த முறையைப் போல் பணம் அதிகளவு வேறெப்போதும் செலவழிக்கப்பட்டதில்லை. மம்தா , பாஜக இருவருமே ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கத்து அரசியலில் கரைய விட்டிருக்கிறார்கள். ஆனால் மம்தா பிரச்சாரத்தில் பாஜக தேர்தலுக்காக 13000 கோடி வங்கத்துக்காக செலவிட்டுள்ளது என விமர்சிப்பதில் முந்திக்கொண்டார். அவரும் செலவில் சளைக்கவில்லை என்பதே உண்மை” என்கிறார் அவர்.

“ நாங்கள் ஒவ்வொரு முறையும் எங்களது சிறந்த செயல்பாட்டினை தர முயற்சி செய்கிறோம். இந்த முறை இளம் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் சிறப்பான பணியினை செய்தார்கள். எதிர்த்தரப்பினர் பணபலம், அதிகார பலம், ஊடக பலம் மூன்றும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்றையும் பயன்படுத்தி எங்கள் தோழர்கள் மீது தீவிர வன்முறையையும் , பல பொய் வழக்குகளையும் தொடுத்zகள் . அதையும் தாண்டி நாங்கள் நடத்திய மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டங்களினால் மக்களை நெருங்கி உள்ளோம். அவை பயனளித்துள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் நேர் எதிரான ஆட்சிகள் நடந்து கொண்டிருப்பது எங்களுக்கு  பின்னடைவை உருவாக்குவதாக இருக்கிறது” என்றும் அவர் கூறினார். 

இப்போதும் களத்தில்  1 லட்சம் தோழர்கள்
 “கடந்த ஓராண்டுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் வங்கத்தில் நடத்தப்படாத நிலை இருக்கிறது. அதில் உறுதியான வெற்றியை பெறுவதற் கான நிலைகளில் நாங்கள் முன்னேறுவோம். அதே போல ஊடகங்களில் காட்டப்படும் ‘இருமுனை போட்டி’ என்ற கருத்தாக்கத்தை தகர்ப்போம். அதேபோல தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய தாக்குதல்கள் மிகத் தீவிரமானவையாக இருக்கின்றன. மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட குழு எங்கள் தோழர்கள் தாக்கப்பட்ட ஒரு இடத்தினைக் கூட பார்க்கவில்லை” என்று விமர்சித்த ராபின் தேவ், “தேர்தல் முடிந்த மறுகணம் முதல் கோவிட் தொற்றில் இருந்து வங்கத்து மக்களை காக்க செந்தொண்டர்களாக மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் தினமும் இரவு பகல் பாராது பணி செய்கிறார்கள். செந்தொண்டர்களாக வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி வங்கத்து தோழர்கள் மீது எப்போதும் உளமாற அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற பல மாநிலத் தோழர்களின் அளவுகடந்த நேசமும் தார்மீக ஆதரவுமே எங்களை இந்த காலத்தில் முன்னோக்கி செலுத்துகிறது” என்றும் நெகிழ்ச்சியோடு கூறுகிறார். 

13 ஆண்டுகளில் 800 பேரை இழந்த இயக்கம்
வங்கத்தில் மம்தா அரசியல் சக்தியாக அடையாளம் பெறத்துவங்கிய 2007 முதல் 2020 வரை 13 ஆண்டுகளில்சுமார் 800 கம்யூனிஸ்டுகளை நரவேட்டை ஆடியுள்ளார். அந்த வரலாறு பயங்கரமானது. இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சி தவிர வேறு எந்த ஒரு இயக்கமும் தங்களது கிளை வரை அதிகாரத்துவத்தினால் இப்படியான பாதிப்பை சந்திக்க நேர்ந்திருந்தால்  அந்த அமைப்பு நீடித்திருக்குமா? நம்மால் அதை உணர முடிகிறதா? வங்கம் நாம் நினைப்பது போல் அல்ல. கம்யூனிஸ்டுகளின் வாழ்வு பறிக்கப்பட்டு, அந்த  அமைப்புகளின் அடிக்கட்டுமானம் அசைக்கப்பட்டு பெரும் இன்னல்கள் உருவாக்கப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கு மேலாக நேரடியான பொருள் மற்றும் உயிரிழப்புகளை மட்டுமே எதிர்கொண்டவர்கள் வங்கத்து தோழர்கள். வங்கத்தை மற்ற வடமாநிலங்களோடு ஒப்பிடுவதும் மிக அவசியமானது. கிளை வரை வன்முறைக்கு ஆளான தோழர்கள் இப்போது எதிர்த்து நிற்க துவங்கி இருக்கிறார்கள்.மக்களை அணிதிரட்டத் துவங்கியிருக்கிறார்கள்.  

இந்த முறையும் கூட முஸ்தபிஜிர் ரஹ்மான் என்கிற வாலிபர் சங்கத் தலைவர் 80442 வாக்குகளை பெற்றுள்ளார்.மதரீதியிலான வாக்குப் பிரிவிலும் கூட மார்க்சிஸ்ட் வேட்பாளர்களில் 20 தோழர்கள் 35000 க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்டோர் பதிவான வாக்குகளில் 10 சதவிகிதத்தைப் பெற்றுள்ளனர். இரட்டை அணிகளை மட்டுமே ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட  5 இடங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில், இடது முன்னணியின் தொகுதிகளை விட கூடுதலான வாக்குகளை பெற்றது.  இந்த முறை காங்கிரசை விட கம்யூனிஸ்டுகள் போட்டியிட்ட இடங்களில் திரிணாமுல் எதிர்ப்பு வாக்குகளையும், அதே போல வாக்குபலத்தில் குறிப்பிட்ட அளவு உயர்வையும் அதிகரித்துள்ளது.

மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கொள்கைகளை எதிர்த்துப் போராடியும், வன்முறையை எதிர்கொண்டு முறியடித்தும் வளரும் மேற்கு வங்க இடதுசாரி இயக்கம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி, நிச்சம் மீண்டும் எழும். இந்திய இடதுசாரி இயக்கத்த்திற்கு அது நிச்சயம் ஒரு ஈர்ப்பு சக்தியாக நிலைத்து நிற்கும்.

கட்டுரையாளர் : எஸ்.கார்த்திக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர். 

இந்த கட்டுரைத்  தொகுப்பு 4 ஆம் பக்கத்தில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தலையங்கத்தின் கீழ் பகுதியில் கடைசி பத்தி தொடர்ச்சி என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது.  தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே பகுதியில்  கட்டுரைத் தொகுப்பு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.  

;