articles

img

மக்கள் பிரிகேட்... (மேற்கு வங்க அரசியல் களம்)

சோம்நாத் மஜூம்தார். 22 வயதே ஆன இளைஞன். 

வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் சாந்திப்பூர் பகுதியை சேர்ந்தவர். தீவிரமான பாஜக ஆதரவாளர், கடந்தாண்டு மார்ச் மாதம் வரை. 2021 பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தனது ஊரிலிருந்து கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதானம் நோக்கி புறப்பட்டுவிட்டார். 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஒரு மதுக்கடை பாரில் கூலி வேலை செய்து கொண்டிருந்த சோம்நாத் மஜூம்தார், திடீரென, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட கொரோனா ஊரடங்கு அறிவிப்பால் நிலைகுலைந்து போன பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களில் ஒருவர். 

“வேலையிழந்துவிட்டேன். கையில் காசு இல்லை. எப்படியோ ஊர் வந்து சேர்ந்தேன். கொரோனா காலம் முழுவதும் நான் உயிர் வாழ்ந்ததே பெரிய விஷயம். உள்ளூரில் படாடோபமாக திரிந்த சில பாஜக பிரமுகர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எங்கு செல்வது என்று தெரியவில்லை. பசியால் துடித்த என்னை, கையைப் பிடித்து சில இளைஞர்கள் அழைத்துச் சென்றார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள். 

அவர்கள் நடத்திக் கொண்டிருந்த சமூக சமையல் கூடங்கள் தான் எனது உயிரைக் காப்பாற்றின.வங்கம் முழுவதும் 650க்கும் மேற்பட்ட சமூக சமையல் கூடங்களை அமைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு தினந்தோறும் உணவளித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும். இந்த சமையல் கூடங்கள் இல்லையென்றால் கொரோனா பிடியிலும், பசியின் பிடியிலும் சிக்கி வங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்திருப்பார்கள். கண்கள் விரிய, பிரிகேட் பரேடு மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்த பரவசத்தோடு மேற்கண்ட விவரங்களை டெலிகிராப் ஏட்டின் செய்தியாளர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார் சோம்நாத் மஜூம்தார். 

சோம்நாத்தை போலவே அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவலம் நிறைந்த ஊரடங்கு கால அனுபவங்கள் கிடைத்திருந்தன. மோடி மீதும் பாஜக மீதும் ஏதோ ஒரு வகையில் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஈர்ப்பில் இருந்தவர்கள் கொரோனா ஊரடங்கால், மோடி அரசு தங்களை புழுக்களைப் போல வீதியில் தூக்கியெறிந்த பயங்கரத்தால், துடித்தவர்கள். சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு கம்யூனிஸ்ட்டுகளின் களப்பணியை பார்த்து பிரமித்தவர்கள். சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஏதேனும் ஒரு விதத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக தவித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களை மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் வாரி அணைத்துக் கொண்டன.எங்கெங்கு திரும்பினும் மனிதத் தலைகளால் நிரம்பியிருந்தது பிரிகேட் பரேடு மைதானம். பத்து லட்சம் பேர். இடது முன்னணியைத் தவிர எவராலும் இந்த மைதானத்தை இதுவரை நிரப்ப முடியவில்லை. 

“பிரிகேட் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவது என்பது மிகவும் சவாலானது. பாஜகவும், திரிணாமுல் கட்சியும் அதை முயற்சித்துப் பார்த்து படுதோல்வி அடைந்துவிட்டார்கள். அதற்கு பிறகு அவர்கள் பிரிகேட் மைதானத்தின் பக்கமே வருவதில்லை” என்கிறார் சிரித்துக் கொண்டே மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியை ஏந்தியிருந்த ஒரு தோழர். பிப்ரவரி 28 ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு பொதுக்கூட்டம் துவங்கியது. முன்னதாக காலையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், இடது முன்னணியின் தலைவருமான பிமன்பாசு, “இதுவரை கிடைத்த தகவல்களின்படி சுமார் எட்டு லட்சம் பேர் - எங்கள் தோழர்கள், பிரிகேட் மைதானத்தை நிறைத்திருக்கிறார்கள்; காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி அமைப்பினரும், ஓரிரு லட்சங்கள் வந்திருக்கிறார்கள்” என்றார்.

பிரிகேட் மைதானத்தில் இடது முன்னணி கடைசியாக 2019 மக்களவைத் தேர்தலின் போது, இதே போன்றதொரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தியது. அதற்கு முன்பு 2015 இறுதியில் கொல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஸ்தாபன சிறப்பு மாநாடு (பிளீனம்) நிறைவாக பிரிகேட் பேரணியை நடத்தியது. ஆனால் முதன்முதலாக இடது முன்னணி, காங்கிரசுடனும், இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனும் - வங்கத்தில் மம்தாவின் கொடிய ஆட்சியை ஒழிக்கும் நோக்கத்துடன் - பாஜகவை எந்த விதத்திலும் வங்கத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்ற உறுதியுடன் இணைந்து பிரிகேட் பேரணியை தற்போது நடத்தியிருக்கிறது. முதன் முதலாக இடதுசாரிகளும், காங்கிரசும் ஒரு பொது அரசியல் நோக்கத்திற்காக கைகோர்த்து நின்றார்கள். 

“எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவையும், திரிணாமுல் காங்கிரசையும் வீழ்த்துவற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேர்தல் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளும்” - என்று 2020 அக்டோபர் 30, 31 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூடி நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருந்தது.அந்த அடிப்படையில் வங்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேர்தல் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொண்டு, எழுச்சிமிகு பிரச்சாரத்தை பிரிகேட் பரேடு மைதானத்திலிருந்து துவக்கியுள்ளது. 

இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் வங்கத்தில் இடதுசாரி தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி பேசியிருக்கிறார்கள். அது ஒரு மாபெரும் வரலாறு. 1955ஆம் ஆண்டு நடந்தது. நாடு விடுதலையடைந்த பிறகு, 1955 நவம்பரில் முதல் முறையாக சோவியத் ஒன்றியத்தின் தலைவர்கள் நிக்கோலாய் புல்கானின், நிகிதா குருசேவ் ஆகியோர் இந்தியாவுக்கு வந்தார்கள். கொல்கத்தாவில் இதே பிரிகேட் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 20 லட்சம் பேர் கூடினார்கள். மைதானம் நிரம்பி வழிந்து கொல்கத்தா மாநகரமே திணறியது. பிரிகேட் மேடையில் சோவியத் தலைவர்களை பிரதமர் ஜவஹர்லால் நேருவும், வங்க மக்களின் மகத்தான தலைவர் தோழர் ஜோதிபாசுவும் கூட்டாகச் சேர்ந்து வரவேற்றார்கள். 

இப்போது பிரிகேட் மேடையில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, பிமன்பாசு, டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா, முகமது சலீம் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களோடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான அதிர் ரஞ்சன் சௌத்ரி, சத்தீஷ்கர் முதலமைச்சரான காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் தலைவர் அப்பாஸ் சித்திக் ஆகியோரும் பங்கேற்றனர். 

இந்த கூட்டணியின் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை தலைவர்களின் பேச்சு உணர்த்தியது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மிக அழகாகச் சொன்னார்: “இந்தியாவை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அடிமைப்படுத்தியது. இப்போது நரேந்திர மோடி அரசு, ரயில்வே நிலையங்கள் முதல் விமான நிலையங்கள் வரை இந்த நாட்டில் ஒரு சொத்து கூட பாக்கியில்லாமல் இரண்டே இரண்டு பெரும் கார்ப்பரேட் முதலைகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது; கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை அடிமைப்படுத்தியது என்றால், பாஜக என்கிற ‘மேற்கு இந்திய கம்பெனி’ இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கிறது.”“தனக்கு எதிராக யார் பேசினாலும் அவரை தேச விரோதி என்கிறார் நரேந்திர மோடி; இங்கு வங்கத்திலோ தனக்கு எதிராக யார் குரல் உயர்த்தினாலும் அவரை அரசாங்க விரோதி, சமூக விரோதி என்கிறார் மம்தா பானர்ஜி” என்றார் பூபேஷ் பாகெல். அதிர் ரஞ்சன் சௌத்ரி இன்னும் உரத்த குரலில் முழங்கினார்: “வங்கத்தை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வங்கத்தின் எதிர்காலம் பாஜகவிடமோ, திரிணாமுல் கட்சியிடமோ இல்லை. வங்கத்தை மீட்பதற்காக இந்த மகா கூட்டணி உதயமாகியிருக்கிறது. இந்த கூட்டணி நிச்சயம் வங்கத்தை மம்தாவிடமிருந்து மீட்கும். பாஜகவிடமிருந்து காக்கும்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய எழுச்சிமிகு உரை, ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டிப்போட்டது. “வங்கத்தின் இந்த மகா கூட்டணி - இடதுசாரிகளும், மதச்சார்பற்ற சக்திகளும் ஒருங்கிணைந்து கைகோர்த்துள்ள கூட்டணி - ஊழல் திரிணாமுல்லையும், மதவெறி பாஜகவையும் விரட்டியடிப்பதற்கான அணி மட்டுமல்ல; ஒரு சிறந்த வங்கத்தை உருவாக்குவதற்கான அணியுமாகும்” என்றார் அவர். “இடதுசாரி - காங்கிரஸ் - மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி ஒருபுறம்; மம்தா கட்சி மறுபுறம்; பாஜக இன்னொரு புறம் என மும்முனைப் போட்டி நடக்கிறதே, தொங்கு சட்டமன்றம் உருவாகிவிட்டால் என்னாகும் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் நிச்சயம் பதவிவெறிக்காக, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பாஜகவுடன் எவ்வித கூச்சநாச்சமுமில்லாமல் கைகோர்ப்பது உறுதி. அந்த நிலை ஏற்படவிடக்கூடாது. வங்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மதவெறியின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால் அந்த இரண்டு கட்சிகளையும் இந்த தேர்தலில் துடைத்தெறிய வேண்டும். இடதுசாரிகள் - காங்கிரஸ் - மதச்சார்பற்ற அணியின் அடிப்படை நோக்கம் இதுதான்” என்றும் சீத்தாராம் யெச்சூரி விவரித்தார். 

பிரிகேட் மைதானத்தில் துவங்கியுள்ள இந்த எழுச்சி வங்கத்தை மம்தாவின் பிடியிலிருந்து நிச்சயம் மீட்கும். மதவெறியர்கள் காலூன்ற விடாமல் உறுதியாக காக்கும்.

கட்டுரையாளர் ; எஸ்.பி.ராஜேந்திரன்

;