articles

img

மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.... சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்....

நடந்து முடிந்துள்ள மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன.  எல்லாவிதமான சச்சரவுகளையும் மீறி கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.  தமிழகத்தில் 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் திமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.  மேற்கு வங்கத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகிப் போன நேரத்தில், அசாமில் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது அக்கட்சிக்கு ஆறுதலான விஷயமாகும்.  இத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சிக்கான பிரதான இடத்தை கேள்விக்கு உள்ளாக்கக்கூடும். ஆட்சியதிகாரத்தில் உள்ள கூட்டணி, தேர்தல்களில் தோல்வியையே தழுவிடும் என்ற பொதுவான போக்கை முறியடித்து கேரள மாநிலத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் இடதுசாரிகளுக்கு இத்தேர்தல்கள் கலவையான ஒன்றாகும்.  எனினும், சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட இடதுசாரிகள் வெற்றி பெறத் தவறியது இதுவே முதல் முறையாகும்.  இத்தகைய தேர்தல் முடிவுகள் குறித்து ‘டெக்கான் ஹெரால்டு’ பத்திரிகைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்:

*    தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தி என்ன?

பாஜகவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாகும்.  தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க இயலாது என்ற மாயை தகர்க்கப்பட்டுள்ளது.  பணபலம், தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் செய்வது ஆகியவற்றின் மூலம் வெற்றி பெற பாஜகவால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன.  பாஜகவை மக்கள் உறுதியாக நிராகரித்துள்ளனர்.  மக்கள் இயக்கங்களையும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்பினை பாதுகாத்திடவும், மக்களின் வாழ்நிலையை பெருமளவில் முன்னேற்றுவதற்கான போராட்டங்களையும் இத்தேர்தல் முடிவுகள் வலுப்படுத்த வேண்டும்.

                                                      **************

*    கேரள மாநிலம் வரலாறு படைப்பதை நாம் கண்டு வருகிறோம்.  அம்மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியதிகாரத்திற்கு வந்து பொதுவான எண்ணப் போக்கை முறியடித்துள்ளது. இதுகுறித்து தங்களது கருத்து என்ன?

இதற்கு முன்னெப்போதும் இருந்திராத அளவில் இடது ஜனநாயக முன்னணியின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்கு கேரள மாநில மக்களுக்கு தலை வணங்குகிறேன்.  தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, கடந்த தேர்தலை விட கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று, பெருமளவிலான ஆதரவோடு அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான காலங்களுக்குப் பிறகு அங்கு தற்போது நடைபெற்றுள்ளது.  கடந்த ஐந்தாண்டுகளில் நேரிட்ட அனைத்து இயற்கைச் சீற்றங்களை கையாள்வதிலும், கோவிட்-19 பெருந்தொற்றை சமாளித்ததோடு கேரள முன்மாதிரியை உருவாக்கியதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதம் செய்திட பல்வேறு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தியதிலும், மிக முக்கியமாக இந்தியக் குடியரசின், கூட்டாட்சி தத்துவத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக அம்சத்தை உறுதியாகப் பாதுகாப்பதிலும் இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாடுகளை மக்கள் ஆதரித்துள்ளதை இது தெளிவாகக் காட்டுகிறது.  

                                                      **************

*    காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு குறித்து தங்களது கருத்து என்ன?  பிரதான எதிர்க்கட்சி என்ற முக்கிய நிலையை அக்கட்சி இழந்து வருகிறதா?

அனைத்து மாநிலங்களிலும் பாஜகவைத் தோற்கடிக்க சாத்தியமான வாய்ப்பைக் கொண்ட மாற்றை மக்கள் எதிர்நோக்கினர்.  அதனால்தான், கடந்த ஐந்தாண்டு காலத்தில் பல்வேறு சாதகமான விஷயங்களை நாங்கள் செய்தோம் என்பதோடு கேரளத்தில் பாஜகவிற்கு எதிரான சிறந்த தேர்வாக எங்களை மக்கள் கருதினர்.  அதைப் போலவே, மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மக்கள் பார்த்துள்ளனர்.  எனவே, அங்கு அது எங்களது தேர்தல் வெற்றியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  எனவே, அரசியல் கட்சிகளின் செயல்பாடு எத்தகையதாக உள்ளது என்பது மட்டுமே இந்தத் தேர்தல்களில் அளவுகோலாக இருக்கவில்லை;  மக்கள் நலனையும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கும் வலு யாரிடம் உள்ளது என்பதே அளவுகோலாக இருந்துள்ளது.  பாஜகவிற்கு மாற்றான வாய்ப்பாக கேரளத்தில் இடதுசாரிகளை பார்த்தனர்.  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியை மட்டுமே அத்தகைய மாற்றாக மக்கள் பார்த்துள்ளனர். 

                                                      **************

*    காங்கிரஸ்-இடதுசாரிகள்-ஐஎஸ்எப் இணைந்த ‘ஐக்கிய முன்னணி’ சிறந்த கூட்டணியாகவே கருதப்பட்டது.  அப்படியிருக்கையில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் முழுமையான தோல்விக்கு வேறு என்ன காரணங்கள் இருக்கக் கூடும்?

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவு எங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது.  பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற மக்களின் உந்துதலில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு புறம், பாஜக மறுபுறம் என்ற நிலை ஏற்பட்டது.  இந்நிலை காங்கிரஸ்-இடதுசாரி-ஐஎஸ்எப் கூட்டணியை தேர்தல் களத்திலிருந்து வெளியேற்றிவிட்டது.  அதுவே மேற்கு வங்கத்தில் நடைபெற்றது.  இத்தேர்தல்களிலிருந்து உரிய படிப்பினையைப் பெற்றிட இம்முடிவுகள் குறித்த உரிய பரிசீலனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும். 

                                                      **************

*    அப்படியானால், மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் அல்லது இதர சக்திகளுக்கு இனி வாய்ப்பில்லை என்று நீங்கள் கருதவில்லையா?  மேற்குவங்கத்தில் தற்போது இடதுசாரிகள் களத்தில் இல்லையா? 

அப்படி அல்ல. மக்கள் பிரச்சனைகள் தொடர்பான உண்மையான அரசியல் மேற்கு வங்கத்தில் தற்போது துவங்கிடும்.  இதுவரை, மக்களை வேறுபட்ட கோட்பாடுகளைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கும் வேலையை பாஜக செய்து வந்தது.  
தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. உண்மையான மக்கள் பிரச்சனைகள் தற்போது முன்னுக்கு வந்திடும்.  அப்போது இடதுசாரிகளும், இதர சக்திகளும் களத்தில் முன்னுக்கு வந்திடுவார்கள். 

                                                      **************

*    மேற்குவங்கத்தில் பாஜகவின் செயல்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பணபலம் இருந்தும், முறைகேடுகளில் ஈடுபட்ட போதும், பாஜக மேற்கு வங்கத்தில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. மதரீதியாக மக்களை பிரித்திடும் தத்துவத்தை மேற்கு வங்க மக்கள் தெளிவாக நிராகரித்துள்ளனர். 

                                                      **************

*    இத்தேர்தல்களில் காங்கிரஸ் பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கூட்டாட்சி முன்னணி குறித்த பேச்சு மீண்டும் துவங்கியுள்ளது.  அது குறித்து தங்களது கருத்து என்ன?  

கூட்டாட்சி முன்னணி குறித்த கருத்து அவ்வப்போது முன்னுக்கு வருகிறது. 2019 தேர்தல்களுக்கு முன்பும் கூட இத்தகைய கருத்து இருந்தது.  மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பு முறையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாஜக கடுமையாக சீர்குலைத்திடும்போது, பாஜகவிற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்திட வேண்டும்.  மத்திய அரசின் செயல்பாடின்மை காரணமாகவும், நோய்த் தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாலும் கோவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தி வரும் தற்போதைய சூழலில் இத்தகைய அணி சேர்க்கை மிகவும் அவசியமாகிறது.  பரந்துபட்ட ஒற்றுமைக்கான அவசியம் இருப்பதையே தேர்தல் முடிவுகளும் சுட்டிக் காட்டுகின்றன.  

                                                      **************
*    இத்தேர்தல் முடிவுகள் மத்தியில் உள்ள மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?  கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியை கையாண்டது குறித்த வாக்களிப்பாக இத்தேர்தல்கள் இருந்ததாக கருதுகிறீர்களா? 

கோவிட்-19 உயிர்க்கொல்லி நோயல்ல. இருந்தபோதும் இந்நோயால் ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.  இத்தேர்தல் முடிவுகள் மோடி அரசுக்கு வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல.  மோடி அரசின் கொள்கைகள் 5 மாநில மக்களால் உறுதியாக நிராகரிக்கப்பட்டுள்ளன.  அசாம் மாநிலத்தில் கூட, பாஜக அரசு ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றாலும், பாஜக வெற்றி பெற்ற இடங்களுக்கும், அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட கூட்டணி வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை.  மிக சிறிய அளவிலான வாக்கு விகிதத்திலேயே இந்த வெற்றி கூட இருக்கும் என்பது எனது மதிப்பீடாகும். 

சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

நன்றி: டெக்கான் ஹெரால்டு நாளிதழ்

தமிழில் – ராகினி

;