articles

img

திரிணாமுல் ஆட்சியை வீழ்த்துவோம்.... பாஜகவைத் தனிமைப்படுத்துவோம்... டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா நேர்காணல்...

மேற்கு வங்கத்தின் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மைப் பாரம்பரியத்திற்கு திரிணாமுல்லும் பாஜக-வும் ஒரேமாதிரி களங்கம் விளைவித்துள்ள கொள்கையிலும் செயலிலும் எந்த வித்தியாசமும் இல்லாத அந்தக் கட்சிகள் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச்செயலாளரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா.இந்த இரண்டு கட்சிகளும் மக்கள் சந்திக்கிற உண்மையான பிரச்சனைகளை எடுத்துரைக்காமல் தவறான பிரச்சாரம் செய்து வாக்குகளைப் பெறுவதற்கான வேலையில்ஈடுபடுகின்றன. வெற்று வாக்குறுதிகளை அள்ளி இறைப்பதற்காக மம்தாவும் பாஜகவும் போட்டியிடுகின்றனர். வங்கத்தில் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் நடத்துகின்றன என்கிறார் அவர். அவரது நேர்காணல்:

கேள்வி :  மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் முந்தைய காலங்களிலிருந்து வித்தியாசமாக கடுமையான மதவாத பாசிஸ்ட் கட்சியாகிய  பாஜகவுக்கும் ஆளும் கட்சியாகிய திரிணாமுல்லுக்குமிடையேதான் போட்டி என்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. இடதுசாரிக் கட்சிகளாலும்  மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளாலும் மூன்றாவது மாற்றாக ஒரு வலுவான போட்டியைத் தரமுடியுமா?

சூர்யகாந்த மிஸ்ரா: ஊடகங்கள் திட்டமிட்டேஅவ்வாறு பிரச்சாரம் நடத்துகின்றன. மேற்கு வங்க மாநிலத்திற்குள் மட்டுமல்ல, தேசிய அளவிலும் ஊடகங்கள் இவ்விஷயத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கூறுவது போல் உண்மையான நிலைமை அதுவல்ல. முற்றிலும் ஒரு மூன்றாவது மாற்றாக வலுவான போராட்டத்தை இடதுசாரிகளும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் நடத்துகிறோம். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் மற்ற மதஅடிப்படைவாதிகளுக்கும் செல்வாக்கு உண்டாக்க உதவியது திரிணாமுல் கட்சியின் கொள்கைகளாகும். பாஜகவும் திரிணாமுல்லும் மத்தியில் கூட்டுச்சேர்ந்து ஆட்சி நடத்தியிருக்கின்றன. வங்கத்தில் இடது முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கு இந்த இரண்டு கூட்டாளிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டார்கள். இப்போது தங்கள் சுயநலத்திற்காக வேறுபட்டு மோதுகிறார்கள். அரசியல் சூழல் நிரந்தரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களாக மக்களின் கோரிக்கைகளுக்காக இடது முன்னணி நடத்திய போராட்டங்கள் பெரும் மாற்றங்களை உண்டாக்கின.

இடது முன்னணியிலிருந்து விலகி நின்றவர்கள் மீண்டும் நெருங்கி வருவதன் சான்றாக இருந்தது இந்தப் போராட்டங்களில் பெருமளவிலான மக்களின் பங்கேற்பு. இது நிச்சயமாக இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். வங்கத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்குப் பாடுபடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வகிக்கிற இடது முன்னணியும், மத ச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். மதப்பிளவு ஆபத்தான நிலைக்குச் செல்கிறது. பயங்கரவாத அமைப்புகளும், பெரும்பான்மை –- சிறுபான்மையினரில் உள்ள மதஅடிப்படைவாதிகளும் தங்கள் சக்தியை அதிகரிக்கிறார்கள். 2019 தேர்தலுக்குப் பிறகு பல மாநிலங்களிலும் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டதைக் காணலாம். அவர்கள் மீதான எதிர்ப்பு மக்களிடம் அதிகரித்துவருகிறது. அதுபோல் திரிணாமுல் கட்சியின் பெரும் ஊழல், மோசமான ஆட்சி, கொடூரமான எதேச்சதிகாரம் ஆகியவற்றால் மக்கள் பொறுமை இழந்துள்ளனர். இவையெல்லாம் சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

                                             *********************

கேள்வி : வெவ்வேறு கண்ணோட்டமும் கொள்கைகளும் உள்ள கட்சிகளை ஒன்றுபடுத்தித்தான் இடதுசாரி இயக்கம் ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கி போட்டியிட்டுள்ளது. இதனால் நன்மை ஏற்படுமா? 

சூர்யகாந்த மிஸ்ரா: வங்கத்தில் இடதுசாரிகளும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கியுள்ள ஐக்கிய முன்னணி வெறும் தேர்தலை நோக்கமாக வைத்துமட்டும் உருவாக்கிய முன்னணி அல்ல. மக்களின் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும், மதச்சார்பின்மையையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் மூலமாக உருவான முன்னணி இது. தேர்தலுக்குப் பிறகும் இந்த முன்னணி நீடிக்கும். மதவெறிமயத்திற்கும் மக்களைப் பிளவுபடுத்துவதற்கும் எதிரான போராட்ட மேடைதான் இந்த மதச்சார்பற்ற முன்னணி. ஜனநாயக விரோதமாக மக்களை பாஜக பிளவுபடுத்துவதையும், திரிணாமுல் கட்சியின் மக்கள் விரோத வன்முறைக் கொள்கைகளையும் இந்த முன்னணி எதிர்த்துப் போராடும்.

வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் வன்முறை வெறிபிடித்த எதேச்சதிகாரத்தையும், பாஜக-வின் மதவாதக் கொள்கையையும் காங்கிரஸ் வலுவாக எதிர்க்கிறது. வங்கத்தில் நிலவுகிற பிரத்தியேக சூழலில் அவர்களுடன் நாங்கள் ஒன்றுபடுவதற்கான காரணம் இதுதான். திரிணாமுல்லை அதிகாரத்திலிருந்து கீழே இறக்கி பாஜக-வைத் தனிமைப்படுத்துவதுதான் இப்போதைய அடிப்படைக் கடமை. இதில் ஒன்றுபட முன்வருகிற அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுடனும் தனிநபர்களுட
னும் ஒத்துழைப்போம். 2011-லும், 2016-லும் மம்தாவுடன் அணிசேர்ந்த பிரமுகர்கள் பலரும் இப்போது எந்தவிதத்திலாவது மம்தாவின் அரசை அதிகாரத்திலிருந்து கீழேஇறக்குவதற்கு முன்வருகிறார்கள். திரிணாமுல்லின் கூட்டுக் கட்சியாக அதிகாரத்தைப் பங்கிட்ட காங்கிரசே திரிணாமுல் கட்சியிடமிருந்து கடும் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதான் அவர்களை இடது முன்னணியுடன் ஒத்துழைக்கத் தூண்டியது.

இந்திய மதச்சார்பற்ற முன்னணி (இந்தியன் ஸெக்யூலர் ஃப்ரண்ட்) என்பது பிரத்யேகப் பிரிவினர்க்கு மட்டுமேயான அமைப்பு அல்ல. மதச்சிறுபான்மையினரும் ஆதிவாசிகளும் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளுக்காகச் செயல்படுகிற அமைப்பு இது. சில ஆண்டுகளாக இடதுசாரிகளுடன் போராட்டங்களில் பங்கேற்கிறது. சுயநலத்திற்காகச் சிறுபான்மையினரை ஏமாற்றுகிற மம்தாவின் கொள்கைகளை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மதவாதப் பாசிசக் கட்சியான பாஜக-வைத் தனிமைப்படுத்தி, ஊழல் கட்சியாகிய திரிணாமுல்லைத் துடைத்தெறிந்து வங்கத்தைக் காப்பாற்றுவதற்கான கடமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் சேர்ந்து மேற்கொண்டுள்ளன. ஒவ்வொரு நாளும் இதற்குக் கிடைக்கிற மக்களின் ஆதரவு எதிராளிகளை நடுக்கமுறச் செய்கிறது.

                                             *********************

கேள்வி :அரசை உருவாக்க முடிந்தால் என்னவெல்லாம் மாற்றுத் திட்டங்களை நிறைவேற்ற உத்தேசித்திருக்கிறீர்கள்?

சூர்யகாந்த மிஸ்ரா: மறுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மறுசீரமைப்பது, தகர்க்கப்படுகிற  மக்களின் ஒற்றுமையைப் பாதுகாப்பது ஆகிவை முக்கியக் கடமையாக உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மாநிலம் எதிர்கொள்கிற மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. விவசாய வளர்ச்சி, தொழில், சேவைத்துறை ஆகியவைதான் முக்கியமாக வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன. இவற்றை விரிவாக்குவது முக்கியம். வங்கத்தில் தொழில் நிலைமை மிக மோசமாக உள்ளது.  கடந்த பத்து ஆண்டுகளாக ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. லட்சக்கணக்கில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பூட்டிக் கிடக்கிற தொழில்களை மீண்டும் இயக்கவும், புதிய ஆலைகளைத் துவக்கவும் தேவையான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். அதுபோலவே விவசாய வளர்ச்சிக்கும் திட்டம் வகுக்க வேண்டும்.கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவாக்குவது, சுயஉதவிக் குழுக்களை விரிவுபடுத்துவது, நடுத்தர, சிறு,குறு தொழில் யூனிட்டுகளை விரிவாக்குவது ஆகியவைமூலமாக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதற்கான முழுமையான திட்டத்திற்கு வடிவம் தரவேண்டும்.

                                             *********************

கேள்வி : வங்கத்தின் பொருளாதார நிலைமை கவலையளிக்கும் விதத்தில் மோசமாக உள்ளதா?

சூர்யகாந்த மிஸ்ரா : மாநிலத்தின் வளங்களைத் திரட்டுவது மற்றும் பொருளாதார மேலாண்மை சம்பந்தப்பட்ட விஷயம் இது. இதற்கு விசேஷ கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். தேவையற்ற தாராளச் செலவுகள், ஊழல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் - தடுக்க வேண்டும். ஏராளமான நெருக்கடிகளைச் சந்தித்துத்தான் வங்கத்தில் இடதுமுன்னணி பிரபல அரசியல் இயக்கமானது. அது 34 ஆண்டுகள் மக்களின் பெரும் ஆதரவுடன் தொடர்ச்சியாக ஆட்சிசெய்தது. அதற்குப் பின்னர் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் கடந்து இடது முன்னணி வலுவாகத் திரும்பி வருவதை நிகழ்த்தும். அதற்கான பாதைகள்பளிச்சிடுகின்றன. இந்தத் தேர்தல் மக்களின் வாழ்க்கைப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான போராட்டமாகும். 

சந்திப்பு : கோபி 

நன்றி : தேசாபிமானி நாளிதழ் (16.3.2021)

தமிழில்: தி.வரதராசன்

;