articles

img

வணக்கத்துக்குரிய கதாநாயகர்கள்...

‘‘சமூகத்தில் அடுக்குகிற மூட்டைகளில் அடி மூட்டைகளான ‘மயான’ ஊழியர்களும் முன்கள பணியாளர்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது’’இது வரவேற்கக் கூடியதாகும்.தமிழ்நாட்டில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று தரம் பிரித்து 148 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன.மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன.

இந்தப் பகுதிகள் முழுவதும் கொரோனாதொற்றால் இறந்தவர்கள் உடலை தனியார் மற்றும் அரசு மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. நேராக மயானத்திற்குதான் கொண்டு செல்லப்படுகிறது. ‘‘வீடுவரை உறவு’’.. திரைப்படப் பாடலின் ‘‘கடைசிவரை யாரோ’’ என்பதில் இணைக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்.இரண்டாவது அலையின் கோரத் தாண்டவத்தில் மாண்டவர்களின் சடலங்கள் மாநிலம் முழுக்க தகன மேடைகளுக்கு அதிகம் வந்து கொண்டே இருந்ததால் நீண்ட வரிசையில் கிடத்தி வைத்து ஓய்வின்றி இரவும் பகலுமாக பணியாற்றும் நிலைக்குத் மயான ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உணவு இடைவேளைகூட இல்லாமல் சில நேரங்களில், பிணங்களின் மத்தியில் உணவருந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டபோதும் இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான மயான ஊழியர்கள் ஒருபோதும் சங்கடப்படுவதில்லை. மின்தகன மேடைகளி லும், விறகு அடுப்பின் வெப்பத்தில் தணிந்து கொண்டும் தங்களது உடலை வருத்திக் கொள்கின்றனர்.

அளப்பரிய பணி...
இத்தோடு அவர்களின் பணி முடிந்து போய்விடவில்லை. கொரோனா தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்து, பரிசோதனைக் கருவிகள், முழுகவச உடை, கையுறை, முகக் கவசங்களை  தகனமேடைக்கு அருகில் மூட்டை மூட்டையாகக் கொட்டி எரியூட்டி வருகின்றனர்.அதிலிருந்து வெளியேறும் புகையால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்கிற அபாயத்தையும் புறம் தள்ளிவிட்டு, தங்களது உயிரைவிட கடமையே கண்ணாகக் கொண்டு, இந்தப் போர்க்களத்தில் சிப்பாய்களாகவும், படைத் தளபதிகளாகவும் வீரப் போர் புரிந்து வரும் ‘மயான’ ஊழியர்களின் அளப்பரிய பணியை பாராட்டாமல் இருக்கவே முடியாது. காரணம், கொரோனா என்கிற ஒரு வைரஸ்இன்றளவும் தனது கொடூரத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. அச்சத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் பலரும் உறைந்து கிடக்கும் நிலையில், மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக மடிந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் உலகமே விழி பிதுங்கி நின்றது.

இக்கட்டான இக்கால கட்டத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களை கைகளால் தொட்டு மீட்டெடுப்பதுடன் உயிர் குடிக்கும் கொரோனாவை நேருக்கு நேராக சந்தித்து வருவது மருத்துவர்களும், செவிலியர்களும், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களும், சுகாதாரத் துறை ஊழியர்களுமே!மறுபுறம், வாட்டி வதைக்கும் கோடையில் பருத்தி ஆடை அணிய அறிவுறுத்தும் நமது மருத்துவர்களே பிபிஇ வகை கிட், பாலித்தீன்ஆடைகள் அணிந்தனர். பணி முடியும்வரை இயற்கை உபாதைகளுக்கும், உணவருந்தவும், தாகத்துக்கு தண்ணீர் குடிக்கவும் முடியாமல் தவிழ்த்து மிரட்டும் சவாலுடன் பணி செய்கின்றனர். 

சலியா நெஞ்சம்...
மனைவி, கணவன், குழந்தைகளுடன் நெருக்கம் காட்ட முடியாமல் தங்களை தாங்களே ஒதுக்கிக் கொண்டு, தன்னுயிரை பெரிதாக கருதாமல் மகத்தான மக்கள் சேவையில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். கொரோனா வைரஸால் தங்களது இன்னுயிருக்கு தீங்கு நேரிடும் என்பதை அறிந்தும் “ஆக்குகிறவர் சலித்தால் அடுப்பு பாழ்” என மனதைத் தளரவிடாமல் பணியாற்றும் அனைவரும் பாராட்டுக்குஉரியவர்களே.கால் நூற்றாண்டு காலம்  அனுபவமிக்க மயான ஊழியர் ஒருவரிடம் பேசினோம். சமூகத்தில் பாவப்பட்ட ஒரு தொழில் என்றால் அது வெட்டியான்தான். ஆண்டாண்டு காலமாக இந்த வேலையை ஊருக்கு ஆறேழு குடும்பங்கள் அதிலும் குறிப்பாக ஒரு சாதியை சார்ந்தவர்களே செய்து வருகிறார்கள். 

நகரம், மாநகரம் என்று வளர்ச்சி அடைந்தும்‘வெட்டியான்’ வேலைக்கு முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவரும் வறுமையின் பிடியில் வாழ்பவர்கள்தான் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.சென்னை போன்ற சில மாநகராட்சிகளில் மட்டுமே வெட்டியானை ‘மயான’ ஊழியர்களாக அரசு அறிவித்துள்ளது. அதுவும் இரண்டுமூன்று பேர் மட்டுமே. அவர்களும் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் தரப்படுகிறது.இந்த பணியைக்கூட தற்போது, மாநகரங்கள்தொடங்கி நகரங்கள் வரைக்கும் அரசின் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்களே ஆட்களை வேலைக்கு சேர்த்து வருகின்றன.

ஒளியேற்றப்படுமா? 
இந்த சூழ்நிலையில்தான், முன்கள பணியாளர்களாக கருதுவதால், மயான ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை யும் செய்து கொடுப்போம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.வேலைப் பளு, மன அழுத்தத்தால் மாநிலம் முழுவதும் மயானப் பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தலைநகர் என்பதால் இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சென்னை பெசன்ட்நகர்,எழும்பூர், அரும்பாக்கம், வில்லிவாக்கம், வேலங்காடு என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அதன் பிறகுதான், சென்னையில் உள்ள 70 சுடுகாடுகளிலும் பணி நேரத்தை முறைப்படுத்தி சீருடை வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

தனியார் நிறுவனங்களுக்கு விடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளமயானப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து சமூகத்தில் உரிய அந்தஸ்து வழங்கி தங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிடவேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட போதும், அரசு ஊழியர் என்ற பட்டியலில் இல்லாமல் போனாலும் கூட விடுமுறையே இல்லாமல் மாநிலம் முழுவதும் அனைத்து சுடுகாடுகளிலும் நிற்க நேரமின்றி உழைப்பவர்களான இந்தமயான ஊழியர்களும் ‘‘நிஜ ஹீரோக்கள்தான்’’.

கட்டுரையாளர் : சி. ஸ்ரீராமுலு

;