articles

img

பத்திரிகையாளர் நல ஆணையம் அமையுமா?

தமிழக சட்டபேரவையில் செப்டம்பர் 7 அன்றுநடைபெற்ற செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பத்திரிகையாளர் நல வாரியம் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை வெளியிட்டார். உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட  உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்; பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர்,புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து தற்பொழுது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப ரூபாய் 3 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடும்பஉதவி நிதி ரூபாய் 3 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 

பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்ததொழில் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும்திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன்மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்; இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ளவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த இளம் பத்திரிகையாளர்களைத் தெரிவுசெய்து, இந்திய அளவில் புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஐ.ஐ.எம்.சி.),ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் (ஏ.சி.ஜே) போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்விபடிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும். 

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் “கலைஞர் எழுதுகோல் விருது” மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்ற 5 புதிய அறிவிப்புகளையும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே) வரவேற்கிறது.மேற்காணும் அறிவிப்புகளில் “பத்திரிகையாளர்கள் நலவாரியம்” என்பது ஏற்கனவே இருந்து வருகிற, அரசுஅளித்துள்ள முக்கிய சலுகைகளை உள்ளடக்கியதாக, தொடர்ந்து நீடிக்க வேண்டும்.முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதற்கு டி.யூ.ஜே. பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

ஓய்வூதியம்
அதேவேளையில், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களில் இதுவரை 232 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கி வருவதாகவும், 45 பேர் மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் அரசின் அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டம் அறிமுகமான 25ஆண்டுகளில் 232 பேர் மட்டுமே பலன் அடைந்துள்ளார்கள்; பல ஆயிரம் பேர் பலன் பெறவேண்டிய திட்டத்தில் 250ஐக் கூட எண்ணிக்கை தாண்டவில்லை.இதற்கு முட்டுக்கட்டையாக உள்ள ஓய்வூதியத் திட்டநிபந்தனைகளை தளர்த்தி, தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க கோருவதுடன்,  ஓய்வூதியம்பெற விண்ணப்பித்து, உயிரிழந்தோர்  குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்கவும், ஓய்வூதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கும்அறிவிப்பை இந்த கூட்டத்தொடரிலேயே அறிவிக்கவும் டியூஜே கோருகிறது.

ஆணையம்
பத்திரிகையாளர் ஊதிய விகிதம், பத்திரிகையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே எழும் பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், பத்திரிகையாளர்களுக்கான குழு காப்பீடு,ஓய்வூதியம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துதல், பத்திரிகையாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித்தருதல், பத்திரிகையாளர் குடும்பநல நிதியை உயர்த்தித் தருதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுக்க மூத்த பத்திரிகையாளர்கள், நிறுவன உரிமையாளர்கள், செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர் நலன் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

மேலும், நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் சிறப்பானதாக மாற்றி அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்; பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கும், சேதமுற்ற உபகரணங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்; மதுரை, திருச்சி, கோவை, சேலம்,நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிட பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் ஆணையத்தை விரைந்து அமைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறாமலேயே பதவி ஏற்றபின் முதல் அறிவிப்பாக பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்நிதி உதவி வழங்கி வருவதற்காக மீண்டும் முதல்வருக்கு டி.யூ.ஜே. நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும், இந்த உதவித்தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டுமென டி.யூ.ஜே. கேட்டுக்கொள்கிறது.

காப்பீட்டுத் திட்டம்
மேலும், அரசு அங்கீகார அட்டை பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில், வருமான வரம்பின்றி சிகிச்சை அளிக்கப்படும் என்ற அறிவிப்பால் சில நூறு குடும்பங்கள் மட்டுமே பயன்பெற உதவும். எனவே, இத்திட்டத்தை, மாநிலம் முழுவதிலும் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனத்தின் அடையாளஅட்டை பெற்றுள்ள தகுதிவாய்ந்த அனைத்து பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கட்டுரையாளர் : பி.எஸ்.டி புருஷோத்தமன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே)

;