articles

img

நூறு நாள் வேலைக்கு ஆள் எடுப்பா? ராணுவ சேவைக்கு ஆள் எடுப்பா?

ஏப்ரல் 19ஆம்தேதி ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மகாத்மா காந்திநூறுநாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய வருபவர் 55 வயதிற்கு மேம்பட்டவர்களுக்கு வேலை தர வேண்டாம். இது கொரோனா காலம். ஏற்கெனவே 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் நோயாளிகளாக இருப்பதினால் அவர்களுக்கு இந்த வேலையைத் தருவதன் மூலம் கொரோனா மிக வேகமாக பரவும்.

மற்றவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படவாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு நூறு நாள் வேலைகளைத் தரவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் 55வயதிற்கு கீழே உள்ள தொழிலாளிகள் (ஆண்-பெண்) யாராக இருந்தாலும் சளி,இருமல், காய்ச்சல், இதயநோய், மூச்சடைப்பு போன்றநோய் உள்ளவர்களும் வேலைக்கு சேர்க்கப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட நோய் உள்ளவர்கள் வேலையிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்படுவார்கள். இவர்கள் பணியிடங்களில் எச்சில் துப்பக்கூடாது. வெற்றிலை, புகையிலை உபயோகிக்கக்கூடாது. காய்ச்சல், இருமல், சளி உள்ள வேலையாட்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும். சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்டவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறக்கூடாது. தனித்தனியாக தண்ணீர் பாட்டில் கொண்டுவரவேண்டும்.  45 வயதிற்கு மேற்பட்ட வேலையாட்கள் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதம் கீழே வந்த அடுத்த வினாடியே எது நடந்ததோ, நடக்கவில்லையோ 55வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வேலையில்லை என்பது மட்டும் அமலாகிவிட்டது. தமிழக அரசின் சுகாதாரத்துறை செய்திருக்கக்கூடிய சிபாரிசின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தநடவடிக்கைகளில் மற்ற எந்தக் சிபாரிசும் அமலாக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கையினால் இந்த நாட்டில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் 20வயதிலேயே ஆணும் பெண்ணும் நோயாளிகளாகத்தான் உள்ளனர். நல்ல உணவில்லாமல், உரிய மருத்துவம் இல்லாமல், போதிய பரிசோதனைகள் இல்லாமல் நோயாளியாகவே இருக்கிறார்கள். குறிப்பாக கிராமப்புற கர்ப்பிணிப் பெண்களில் 60 சதவீதமான பேர் இரத்தச்சோகை நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கு உரிய உணவும், வேலையும், வருவாயும் இல்லாத காரணத்தினால்தான் இது நடக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையினால் இந்தமக்கள் இளம்வயதிலேயே நோயாளியாக மாற்றப்பட்டிருப்பது உலகறிந்த உண்மை. இதை மத்திய அரசும், மாநிலஅரசும் நமது நாட்டின் சுகாதாரத்துறையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை மாற்றி அந்த மக்களை அனைத்து வகையான வழிகளிலும் பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. 

விவசாயத்திலும், தொழிலிலும்  வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் நவீன முறையில் இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களும் மத்திய, மாநில அரசுகளும் வேலைவாய்ப்புகள் இல்லாத நவீன உற்பத்தியை பெருக்கிஇருக்கிறார்கள். உயர்த்தப்பட்ட உற்பத்தியின் பலனை சாதாரண மக்கள் அனுபவிக்க முடியவில்லை. இதனால்தான் நகர்ப்புற - கிராமப்புற மக்கள் போதிய வருவாய் இல்லாமல் வாழ வழியில்லாமல் நோயாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இது அரசினுடைய கொள்கையினால் வந்த விளைவு. இந்நிலையில் இருக்கும் மக்களை எந்தவகையில் பாதுகாப்பது என்று ஆலோசிக்க வேண்டும். அதை இந்த அரசுகள் இதுவரை செய்யவில்லை, அதுபற்றி பரிசீலிக்கவும் இல்லை. இதற்கான குற்றவாளிகள் மத்தியஅரசும், மாநில அரசுகளும்தான். இப்போது கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளே இல்லாமல் விவசாயமும் பாழ்பட்டுப் போன சூழ்நிலையில் வருடத்தில் 50நாட்கள் கூட விவசாயத்தின் மூலம் வேலையில்லாத காரணத்தினால்தான்  மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் அமலாக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் ஓரளவு வேலை கிடைத்து வருகிறது. கிராமங்களைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளிகள் தற்காலிகமாக அதிலிருந்து தங்களைத் தவிர்த்துக் கொண்டு இந்தநூறுநாள் வேலைகளைச் செய்து வருகின்றனர். அரைவயிற்றுக் கஞ்சியுடன் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேலையும் நூறு நாட்களும் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் சராசரியாக 50 நாட்களே கிடைத்து வருகிறது என்று அரசின் அறிவிப்பில் உள்ளது. இப்போது சுனாமியை விட கொடூரமான கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கின்றது. அது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் மிக மோசமான அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு மனித உயிர்களோடு மிகப்பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இன்று கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு அரசினுடைய இந்த அறிவிப்புகள் எந்த வகையிலும் நம்பிக்கையூட்டக்கூடியதாக இல்லை. அவர்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வெறும் அறிவிப்புகளை மட்டும் அரசு வெளியிட்டுவிட்டு  செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது எந்த வகையிலும் அந்த மக்களை பாதுகாக்காது. 55 வயதல்ல, 70 வயதிலும் நூறுநாள் வேலைத்திட்டப் பணிகளைச் செய்வதற்கான உடல் தகுதியுள்ள ஏழைகள் இருக்கிறார்கள். 30, 40 வயதிலேயே வேலையே செய்யமுடியாத நிலையிலும் நோய்வாய்ப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இது தேசத்தின் சராசரி நிலைமை. இவைகள் எல்லாம் கணக்கில் கொண்டு ஒரு அரசு எந்தத் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும். 55வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் இருக்கத்தான் செய்யும், அவர்களுக்கு வேலை இல்லை என்று அறிவிப்பதும், 55 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் உடனே வேலைத்தளத்தில் இருந்து அப்புறப்படுத்துவது என்று சொல்வதன் மூலம் இந்த வேலைகளை நம்பிவாழ்ந்துகொண்டிருக்கின்ற விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பல கோடிப் பேர்களை  வறுமையில் சாகடிக்கக் கூடியதாக மாறுமே தவிர, எந்த வகையிலும் இந்த மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதாகவோ, அல்லது வறுமையிலிருந்து பாதுகாப்பதாகவோ அரசின் அறிவிப்பு இருக்காது.  தவறான முன்னுதாரணமாக மாறும், கிராமப்புறமக்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

அரசுநூறுநாள் வேலையைக் கொடுத்து அவர்களின் வயிற்றுப்பசியை போக்க வேண்டுமென்று கொண்டுவரப்பட்ட இந்ததிட்டத்தை ஏதோ ராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல் எல்லையைப் பாதுகாப்பதற்கான திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர்கள்தான் தேவை என்கிற தன்மையில் கணக்கீடு செய்து சுகாதாரத்துறை அறிவித்திருப்பது மிகவும் மோசமாக இருக்கிறது. அப்படித்தான் விபரம்தெரிந்தவர்கள் இதுபற்றி கருத்துக்களை வெளியிடுவார்கள். எனவே தமிழக அரசு  தன்னுடைய அறிவிப்புகளை வாபஸ் பெற்றுக்கொண்டு 60 வயது உள்ளவர்களுக்கு இந்த வேலையைத் தர வேண்டும். ஏற்கெனவே உள்ளமுடிவுகளை அமல்படுத்தவேண்டும். வேலை செய்யும்போது அவர்களுக்கு நோய் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் செய்து பாதுகாத்து மீண்டும் அவர்களுக்கு வேலை தருவது வருவாயை ஈட்டவும், வாழவும் முடியும். இதை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். 

கட்டுரையாளர் : ஏ.லாசர், தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

;