articles

img

ஒடுக்கப்பட்டவர்களுக்காக அயராது செயல்பட்டவர்....

மதிப்பு மிக்க வாழ்வின் நினைவுகளை மட்டும் மைதிலி விட்டுச் செல்லவில்லை.  தொழிலாளர்களின், பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வெளிச்சத்தையும், திசைவழியையும், விவேகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு வேலை அமைப்பை விட்டுச் சென்றுள்ளார். தொழிலாளர்களின், பெண்களின், அரசாங்கத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக சளைக்காது போராடியவர், மாதர்இயக்கத்திலும், தொழிலாளி வர்க்க இயக்கத்திலும் உள்ள பலரது அன்புத் தோழர், நண்பர் மற்றும் வழிகாட்டியான மைதிலி சிவராமன், மே 30, 2021 அன்றுதனது 82வது வயதில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு பலியானார்.  தனது வாழ்நாள் முழுவதும் ஒரு கம்யூனிஸ்டாக அவர் வாழ்ந்தார். 

மைதிலி சென்னையில் ஒரு வசதி படைத்த பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.  அவர் 1960களின் மத்தியில் அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக்கழகத்திற்கு தனது உயர்கல்விக்காகச் சென்றார்.  அப்போது வியட்நாம் போருக்கு எதிரானஇயக்கம் அங்கு உச்சகட்டத்தில் இருந்தது.  கருப்பினமக்களின் அரசியல் அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய காலமாகவும், பெண்ணியத்திற்கான புதிய அலை வலுப்பட்டுக் கொண்டிருந்த காலமாகவும் அது இருந்தது.  இப்பிரச்சனைகள் தொடர்பான விவாதங்களில், கலந்துரையாடல்களில், பிரச்சாரங்களில் ஆர்வத்தோடு பங்கேற்பவராக மைதிலி திகழ்ந்தார். 

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஐநா அமைப்பின் காலனி நாடுகளின் விடுதலைக்கான குழுவில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் அவர் பணியாற்றினார்.  காலனியாதிக்கம் மற்றும் நவீன-காலனியாதிக்கம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப்பற்றி இங்கு அவர் கற்றுணர்ந்தார்.  வாழ்நாள் முழுவதற்குமான, உணர்ச்சிமயமான அர்ப்பணிப்புடனான  ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களால் அவர்விரைவில் ஊக்குவிக்கப்பட்டார்.  மேலும், அவர் விதிமுறைக்கு மாறாக கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார்.  இந்தப் பயணம் ஒரு புதிய வகையிலான சமுதாயம் தோன்றி வருவதைப் பற்றிய அழிக்க முடியாததடத்தை அவரது மனதில் ஏற்படுத்தியது. உடனடியாக ஐநா அமைப்பில் தான் பார்த்து வந்த வேலையை துறந்த மைதிலி, தான் வேலை பார்க்கத் தக்க மக்களையும், அமைப்புகளையும் தேடி இந்தியாவிற்குத் திரும்பினார்.  அவரது தேடுதல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தலித் மக்களுக்காகச் செயல்பட்டு வந்த வினோபா பாவேயின் ஆதரவாளர்களான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜகன்நாதனை சந்திக்க வைத்தது.  

கிழக்கு தஞ்சை மாவட்டத்தின் கீழ்வெண்மணியில் 44 தலித் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் நிலச்சுவான்தாரர்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய கொடூரத் தாக்குதல் நடைபெற்ற உடனேயே கிருஷ்ணம்மாளுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவருடனும் மைதிலி அங்கு சென்றார்.  அப்போது தீப்பிழம்புகள் இன்னமும் புகைந்து கொண்டிருந்தன.  “இந்த காட்சி விசித்திரமான ஒரு சுடுகாட்டை நினைவூட்டுவதாக இருந்தது.  பிணங்கள் வலிகள் ஏதுமற்ற தங்களது அழிவை தேடும் சாதாரண சுடுகாட்டைப் போல் அது இருக்கவில்லை.  ஆனால், மென்மையான குழந்தைப் பருவமும், கூச்சத்துடனான இளைஞர்களும், பாசம் மிகுந்த தாய்மையும் சந்தித்துக் கொண்ட ஒரு விநோதமான இடமாக அது இருந்தது.  ஒரு சிலவீட்டுச் சாமான்களும், உடைந்த பானைகளும், பளபளப்பான கண்ணாடி வளையல் துண்டுகளும் சிதறிக் கிடந்தன.  எரிந்த குடிசைக்கு வெளியே மயக்கமுற்ற நிலையில் இருப்பதைப் போன்று மெலிந்த உடலுடனான நாய் ஒன்று இன்னமும் கிடக்கிறது.  மற்றொரு நாயோ தரையை மோப்பம் பிடித்துக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் இருந்தது.  மெல்லிய, துக்கத்தில் கம்மிய, கண்ணீரில் மூச்சுத்திணறிய குரல்கள் கேட்டன.  இலக்கற்ற வெற்றுப்பார்வைகளோடு சில பெண்களும், குழந்தைகளும் இருப்பதைக் காண முடிந்தது” (மெயின்ஸ்ட்ரீம், 1969) என என்றென்றும் நினைவில் இருக்கத்தக்க வகையில் இச்சம்பவம் குறித்து மைதிலி எழுதினார்.மைதிலியின் இந்த எழுத்துக்களே கீழ்வெண்மணியின் பெயரை எதிரொலிக்கச் செய்தது.  

இதன் பின்னர் அப்பொழுதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மைதிலி, கிட்டத்தட்ட உடனேயே தொழிற்சங்க பணிகளில் மூழ்கினார்.  இருந்தபோதும், கிராமப்புறங்களில் உள்ள நிலமற்றதலித்துகளின் நிலை குறித்து தொடர்ந்து எழுதினார்.பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் மற்றவர்களின் துன்பங்களை உணர்தல் ஆகியவற்றிற்கான அரிதான எடுத்துக்காட்டுகளாக அவரது எழுத்துக்கள் இருந்தன.  சாதி ஒடுக்குமுறையை அவர் கூர்மையாக வெளிப்படுத்தும்போது அதில் அடங்கியுள்ளவர்க்க அம்சத்தை ஒருபோதும் பார்க்கத் தவறியதில்லை.  தீண்டாமை என்பது இந்து சமூகக் கட்டமைப்பிலும், இந்து மனோபாவத்திலும் ஆழமாக வேரூன்றிஉள்ளது.  அதன் சடங்குகளின் தோற்றுவாய் என்பதுசர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கலாம் என்றாலும்,தீண்டாமையைப் பற்றி சர்ச்சைக்கு சிறிதும் இடமில்லை (but there is very little else disputable about untouchability). தீண்டத்தகாதவர்களின் இந்து சமூகத்துடனான பாரம்பரிய உறவானது கொடூரமான இரட்டை மனப்போக்குடன் இருந்தது. 

இம்மக்களைத் தொட்டாலே தீட்டு, இவர்களது பார்வை பட்டாலே சமயச் சடங்குகளில் கலப்படமின்றி இருப்பவர்களுக்கு தீட்டு, சாதி அடுக்கில் தங்களை விட மேலடுக்கில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் தங்களது மற்றும் தங்கள் முன்னோர்களின் பாவங்களுக்கு இவர்கள் பிராயச்சித்தம் தேடவேண்டும் என்ற புனித எழுத்துக்கள் மூலம் இவர்கள்சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர்.  வேறெந்த சமயச் சடங்குகள் அனுமதிக்கப்படுவதைப் போல இதுவும் ஒரு கொடூரமான சமூக-அரசியலை படிநிலையைக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. தவிர்க்க இயலாத நிலையிலான இவர்களது பொருளாதாரச் செயல்பாடானது இந்து சமூகத்துடனான தீண்டத்தகாதவர்களின் உறவு குறித்த இரண்டாவது மற்றும் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. (இவர்ஆசிரியராகச் செயல்பட்ட ரேடிகல் ரெவ்வியூ,1969).போர்க்குணத்தோடு தொழிற்சங்கம் இருந்தபோது, மாநிலஅரசால் தொழிலாளர்களின் உரிமைகள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்ட காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தின் தலைசிறந்த தலைவரான தோழர் வி.பி.சிந்தனோடு இணைந்து இந்திய தொழிற்சங்க இயக்கத்தில் மைதிலி செயலாற்றத் துவங்கினார்.  சிம்ஸன்ஸ், டிஐ சைக்கிள்ஸ், எம்ஆர்எஃப், மெட்டல் பாக்ஸ் போன்ற இதர பல மிகவும் வெற்றி
கரமான, சுரண்டல்தனம் மிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பல கட்டுரைகளை அவர் எழுதினார்.  எனினும், வாயிற்கூட்டங்களில் உரையாற்றுவது, நாட்கள் கடந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது, வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன இயக்கங்களை முன்னின்று நடத்துவது என இருந்த அவரதுதொழிற்சங்க நடவடிக்கைகளில் மேலே சொல்லப்பட்ட எழுத்துப்பணி என்பது ஒரு சிறிய பகுதி மட்டுமேயாகும்.  

இத்தருணத்தில் 1971ஆம் ஆண்டில் ரேடிகல் ரெவ்வியூ இதழுக்காக அவர் சாதி அல்லது வர்க்கப் போராட்டத்தில் பெரியாரின் பொருத்தப்பாடு என்ற அரிய கட்டுரையை எழுதினார்.  இக்கட்டுரையில், தேசவிடுதலைக்கு முந்தைய பிராமணீயத்தை எதிர்த்த இயக்கத்தின் வேர்களையும், வளர்ச்சியையும், அதில் மதராஸ் பிரெசிடென்சி மற்றும் பெரியார் ஆற்றிய பங்கு குறித்தும் அவர் கண்டறிந்தார்.  பெரியார் பகுத்தறிவு கோட்பாட்டைத் தீவிரமாக ஊக்குவிப்பையும், ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் மீதான சீற்றத்துடனான தாக்குதலையும், மிக முக்கியமாக பெண் உரிமைகளுக்காக அவர் நடத்திய புரட்சிகரமான போராட்டங்களையும், வஞ்சனையான ஆணாதிக்க விதிமுறைகளை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பியதையும் மைதிலி பாராட்டி, தனது ஒப்புதலையும் தெரிவித்தார்.  எனினும், பெரியாரின் புரிதலில்இருந்த போதாமைகளையும் அவர் விமர்சித்தார்.  

“மதம் தொடர்பான தனது அணுகுமுறையைப் போலவே, பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படும் நிலையை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார நடைமுறையோடு தொடர்புபடுத்த பெரியார் தவறிவிட்டார்.  பெண்களின் இத்தகைய நிலைக்கு “ஆண்கள்”(manliness) மட்டுமே காரணம் எனக் குறிப்பிட்டார்.   இங்கு “ஆண்கள்” என்ற வார்த்தைக்கு அவரைப் பொறுத்தவரை ஆணின் அகம்பாவம் என்பதே பொருளாக இருந்தது.” என மைதிலி தனது கட்டுரையில் குறிப்பிட்டார். “பிராமணர் அல்லாத பட்டியல் சாதிகளை மையமாகக் கொண்டிருந்த பெரியாரின் இயக்கம், ஹரிஜன மக்களைப் பற்றி ஓரளவுக்கு மட்டுமே கவலை கொண்டிருந்தது.  1920களில் நடைபெற்ற வைக்கம்போராட்டத்தைத் தவிர, ஹரிஜன மக்களின் பிரதானமான பிரச்சனைகளை பெரியார் ஒருபோதும் முன்னெடுக்கவில்லை” என்ற உண்மை குறித்தும் மைதிலி மிகுந்த தெளிவுடன் இருந்தார்.ஆதிக்கம் செலுத்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே தமிழகத்தில்இன்று அடிக்கடி நடைபெறும் மூர்க்கத்தனமான மோதல்கள் குறித்து இது விளக்குகிறது. விமர்சனபூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருந்த போதும், தற்போதைய சமூக ஒழுங்கமைப்பில் பெரியார் ஆற்றிய பணிகள் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம் பற்றி இடதுசாரிகளிடையே பெரிய அளவிலான புரிதலை ஏற்படுத்த வலுவான காரணங்களை மைதிலி முன்வைத்தார்.  “பெரியாரியம் என்பது இன்னமும் காலாவதியான சக்தியல்ல” எனமிகுந்த தீர்க்கதரிசனத்துடன் அவர் எழுதினார்.  1971ஆம் ஆண்டில் மைதிலி எழுதியது இன்றைக்கும் உண்மையாகவே இருந்து வருகிறது.  “ஏன் பெரியார்?  தமிழகத்தில் சாதிகளின் குறிப்பான வளர்ச்சிப் போக்கு எத்தகையதாக இருந்தது?  பொருளாதார சக்திகளோடு இது எவ்வாறு தொடர்பு கொண்டதாக இருந்தது?  இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட்டுகளின் அணுகுமுறை எத்தகையதாக இருக்கவேண்டும்?” என்ற முக்கியமான கேள்விகளோடு மைதிலி தனது தோழர்களை அணுகினார். 

திமுக மற்றும் அதிமுக பற்றி 60களிலும், 70களிலும்தொடர்ச்சியாக கட்டுரைகளை மைதிலி எழுதிக் கொண்டிருந்தார்.  50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும் அப்போது அவர் எழுப்பிய கேள்விகளும், முன்வைத்த விமர்சனங்களும் இன்றைக்கும் பொருந்துபவையாகவே உள்ளன. அவசரகால நிலைக்குப் பிறகு, தமிழகத்தில் அப்போது வளர்ந்து வந்த மாதர் இயக்கத்தில் மைதிலிதீவிரமாக ஈடுபட ஆரம்பித்ததில் அவரது வாழ்க்கைப்பாதையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. மாநிலஅளவிலான ஜனநாயக மாதர் சங்கத்தில் செயல்பட்டுவந்த கே.பி. ஜானகியம்மாள் மற்றும் பாப்பா உமாநாத் ஆகிய இரண்டு தீரம் மிக்க ஆளுமைகளோடு நெருக்கமாக இருந்து மைதிலி செயல்பட்டார்.  மேலும், 1981ஆம் ஆண்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட போது அவர் அதில் ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். 

பெண்களின் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்வதிலும், தனது அமைப்பின் பத்திரிகைக்கும், இதரபத்திரிகைகளிலும் அந்த ஆய்வுகளைப் பற்றி எழுதுவதிலும், மாதர் சங்கத்தின் செயல்வீரர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வகுப்புகளை எடுப்பதிலும், ஆய்வுகள், பிரச்சாரங்கள் மற்றும் போராட்ட இயக்கங்களில் மைதிலி முழுமையாக ஈடுபட்டார்.  இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக அவர் கையிலெடுத்த பிரச்சனைகளில் பெண் கருக்கொலை, பாலியல் வன்முறை மற்றும் அரசின் வன்முறைகள் ஆகியன முக்கியமான பிரச்சனைகளாக இருந்தன. சந்தன கடத்தல் வீரப்பனின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி வாச்சாத்தி எனும் சிறிய, தொலைதூரஆதிவாசி மக்களின் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் மீது மனிதாபிமானமே இல்லாது வனத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறையை சார்ந்த அதிகாரிகள் நடத்திய கொடூரமான அட்டூழியங்கள் தொடர்பான ஒரு முக்கியமான வழக்கு, அதில் மைதிலியின் தலையீடு மிகவும் அவசியம் என்பதை நிரூபணம் செய்தது.  இச்சம்பவத்தில் குறைந்தது 18 ஆதிவாசிப்பெண்களும், இளம் பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

மைதிலியும், பாப்பா உமாநாத்தும்தான் அக்கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேட்டி எடுத்தனர்.  பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையத்தின் முன் இவ்வழக்கை சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களை மைதிலிதான் தொகுத்து, வடிவமைத்தார்.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயத்தை மறுப்பதில் மாநில அரசு பிடிவாதமாக இருந்தது.  ஆனால் மைதிலியும், மாதர் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்த அவரது தோழர்கள் நியாயத்திற்கான தங்களது போராட்டத்தில் உறுதியுடன் இருந்தனர்.  19 ஆண்டுகள் நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைக்குப் பின், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. 
மைதிலி ஒருபோதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததில்லை.  மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி மற்றும் இதர நோய்களாலும் அவர் சிரமப்பட்டார்.  எந்தக் கொள்கைக்காக அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாரோ அந்த கொள்கையின்பால் அவர் கொண்டிருந்த பிடிப்பு, அவரை வேகத்தோடு சிந்திக்கவும், எழுதவும், செயல்பட வைத்தது.  அது அவரது ஆரோக்கியத்தில் மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்தியது.  1990களில் தொடர்ச்சியான பணிகளுக்கும், நலிவுற்று வந்தஉடல்நிலைக்கும் இடையே, 11 வயதில் திருமணமாகி 14 வயதில் தாயான, தனது பாட்டி சுப்பலக்ஷ்மியின் வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறந்த புத்தகமாக அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.     

வரையறுத்துக் கொண்ட தனது வாழ்க்கையில், பொருளாதார ரீதியாக வளமான பின்னணியைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் இறுமாப்புடனான ஆணாதிக்கத்தால் தடுக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியப் பெண்களின் வாழ்க்கையை மைதிலி அடையாளம் கண்டார்.  வாழ்வின் துகள்கள் – ஒரு குடும்பத்தின் வரலாறு என்ற மைதிலியின் புத்தகம், அவரது பாட்டி மற்றும் அவரது சொந்த கடினமான புலமைக்கும், உறுதிப்பாட்டுக்குமான தொடர்ச்சியான, கடுமையான அஞ்சலியாகும். அல்சைமர் நோய் அவரைத் தாக்கத் தொடங்கியதால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகியிருக்க வேண்டிய கட்டாயத்தில் அவரது வாழ்வின் கடைசி 15 ஆண்டுகள் வெளியில் தெரியாத ஒன்றாக மறைந்திருந்தது.  அவர்களது திருமண வாழ்வின் துவக்க காலத்திலேயே திறமைகள் அதிகம் கொண்டவராக மைதிலி இருப்பதால் களத்தில் பணியாற்றுபவராக மைதிலி இருக்க, இதர வீட்டுப் பொறுப்புகளை தான் கவனித்துக் கொள்வது என முடிவெடுத்த அவரது கணவரும் தோழருமான கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி என அனைவரும் மைதிலியோடு வாழ்ந்தனர்.  

மைதிலி உடல் ஆரோக்கியத்தோடு இருந்த காலத்தில் அவரது வேலைகளிலும், முயற்சிகளிலும் அவர்கள் மூவரும் முழுமையாக ஈடுபட்டனர்.  மைதிலி நோய்வாய்ப்பட்டபோது, அவர்கள் அவளைஅன்போடும், உணர்வுப்பூர்வமாகவும் கவனித்துக் கொண்டனர்.மே 30ஆம் தேதியன்று மைதிலி நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றார்.  ஆனால், அவர் மதிப்பு மிகுந்த வாழ்க்கையின் நினைவுகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை.  மாறாக, அவர் தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருபவர்களும், இன்ன பலருக்கும் வெளிச்சத்தையும், திசைவழியையும், புலமையையும் அளிக்கிற குறிப்பிடத்தக்க பணியையும் ஆற்றிச் சென்றுள்ளார். 

கட்டுரையாளர் : சுபாஷினி அலி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழில் : எம்.கிரிஜா

;