articles

img

வெள்ளை அறிக்கையும் மின்சாரத் துறையும்....

தமிழக  நிதியமைச்சர் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிலவியநிதிநிலை  தொடர்பான வெள்ளை அறிக்கையை  ஆகஸ்ட் 9 அன்று வெளியிட்டுள்ளார்.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)சொந்த வரி வருவாய் விகிதத்தில் அனைத்து மாநிலங்களின் சராசரி வீழ்ச்சியை விட தமிழ்நாட்டில் பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான கடன் சுமை உட்பட ஒட்டு மொத்தமாக கடன்கள் 2022 மார்ச் மாதத்தில் ரூ.1,70,189 கோடியாக இருக்கும்; அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் போன்ற செலவுகளைக்கூட கடன்கள் பெற்று பூர்த்தி செய்ய வேண்டியநிலையில் அரசு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் மின்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றின் கடன், எச்சரிக்கை மிகுந்த சூழலில் உள்ளது.மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு மட்டும் ரூ.2லட்சம் கோடிக்கு அதிகமான கடன்கள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மின் வாரியத்திற்கு மட்டும் அரசு ரூ.1,34,000 கோடிகடன் பாக்கி வைத்துள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர்கட்டணங்களுக்காக உள்ளாட்சி அமைப்புகள் ரூ.1743 கோடி பாக்கி வைத்துள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் தினசரி இழப்பு ரூ.15 கோடி என்றும் அரசு பேருந்துகள் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.59.15 இழப்பை சந்திக்கின்றன; அதாவது,இயக்கச் செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.96.75 என கணக்கிடப்பட்டு கட்டண வசூல் கிலோ மீட்டர்  ஒன்றுக்கு ரூ.37.60 ஆக இருப்பதால் போக்குவரத்துக் கழகத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.அதேபோல மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்சாரம் வழங்குவதற்கு சராசரி செலவினம் ரூ.9.06 என்ற நிலையில், சராசரி வசூல் யூனிட் ஒன்றுக்கு 6.70 ரூபாயாகும். எனவே 2.36 ரூபாய்இழப்பு ஏற்படுகிறது.

பொதுவான இந்த இருதுறைகளின் மீதும் இழப்புக்கான காரணங்களை கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்:

# அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்து; சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்காதது;

#    மின் கட்டணத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக உயர்த்தாமல் இருப்பது;

#    குறைந்த விலை மற்றும் 100 யூனிட் இலவசம்மூலம் வீடுகளுக்காக வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு ஏற்பட்ட இழப்பு 18735 கோடி ரூபாய்.

#    பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுவதே முக்கிய காரணம்.

#    அதே போல போக்குவரத்திலும் கட்டண உயர்வு இல்லாமல் இருந்தது.

#    உதிரிபாகங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்தது,- இவை தான் பிரதான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்க காரணம் அதில் பணியாற்றும் பணியாளர்கள் அல்ல என்பதை முதலில் தமிழக நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். 

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கிய மின்சாரத்திற்கான கட்டணமும் மின்வாரியம் உற்பத்தி செய்த கட்டணத்தையும் சேர்த்து சராசரி செலவினம் ரூ.9.06 என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் சரியல்ல. அதிக விலைக்கு நீண்ட கால கொள்முதல் மூலம் வாங்கியது தான் இதற்கு காரணம்.

கடந்த 10 ஆண்டுகளாக, ஏன் தற்போதும் கூட மின் வாரியத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து முழுவீச்சில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தடையாக இருப்பது எது என்பது அனைவருக்கும் தெரியும்.மின்வாரியம் பங்குதாரராக உள்ள மின் உற்பத்திநிலையங்களிலிருந்து கூட மின்சாரத்தை கொள்முதல்செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் இந்த கடன் சுமை ஏற்பட்டது.மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் நீண்ட கால ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்தாலே இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். மேலும் மின்உற்பத்தி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்தாலே கடனிலிருந்து தப்ப முடியும். திட்ட மதிப்பீடு காலங்களை தாண்டி பலஆண்டுகளாக நீடித்து பணிகள் நடைபெற்று வருவதும்கடன் சுமை அதிகரிக்க காரணம்.தரமற்ற தளவாடப் பொருள்கள், உதய்திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் இணைந்து கடன் சுமையை அதிகரித்ததும் ஒரு காரணம்.ஊழல் (corruption), தரகு (commission), வசூல்(collection) ஆகிய இந்த மூன்று  வழிகளில்  தான்அரசினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி கடன் சுமையில் வீழ்கின்றன.

பணியாற்றும் ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கும் நிதியால் எந்த இழப்பும் இல்லை. மொத்த வருவாயில் 16 சதம் கூடஇதற்கு செலவு ஆவதில்லை. எனவே பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தான் மிகப்பெரிய சுமை என்று சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்காது. 

மின்வாரியத்தில் 42000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களும், போக்குவரத்தில் சுமார்  20,000 க்கும்மேற்பட்ட காலிப்பணியிடங்களும் உள்ளன.  காலிப்பணியிடங்களில்  உள்ள வேலைகளை  இருக்கின்றபணியாளர்கள்தான்  கூடுதல் பனிச் சுமையோடு செய்து அரசுக்கு லாபத்தைத் தான் ஈட்டித் தந்துள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தாமல்  இருப்பது தான் இதற்கு காரணம் என குறிப்பிட்டிருப்பதும், டீசல்விலை உயர்வுக்கேற்ப போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தது தான் காரணம் என்பதும் சரியல்ல.    வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கியதும் நல்ல அம்சங்களே.அதே வேளையில், மாநில அரசு அறிவித்த இந்ததிட்டங்களுக்கான நிதியை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாதந்தோறும் வழங்கினாலே கடன் சுமை குறையும்.

கட்டுரையாளர் : எஸ்.ராஜேந்திரன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

;