articles

img

நீர்நிலைகளை பாதுகாக்கும் பனை மரங்களை காப்போம்....

இயற்கை மருத்துவ குணம்கொண்ட பனை மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் பண்டைய காலத்திலிருந்து பனை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வந்தன. இந்தப் பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனங்கிழங்குபோன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதாக உள்ளது. அதோடு பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவைகள்அனைத்தும் உடலுக்கு வலுசேர்த்து நீண்ட ஆயுளைத் தருவதாக உள்ளது.அதுமட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களைச் சாப்பிட்டுதிடகாத்திரமாக வயல்வெளிகளில் வேலை பார்த்து வந்தனர். (பனை ஓலைகளால்) கூரைவீடுகள் மற்றும் ஓட்டுவீடுகள் கட்டுவதற்கும் பனை மரத்தைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். முதிர்ந்த பனை மட்டைகளை வீடு மற்றும் கொள்ளைப்புறங்களை பாதுகாக்க வேலியாகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆறு,வாய்க்கால், குளம் குட்டைகளின் கரைகள் வலுப்பெற பனங்கொட்டைகளை விதைத்து மரம் வளர்த்து நீர் நிலைகளை பாதுகாத்து வந்தனர் நம் முன்னோர்கள்.இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய பனைமரங்களை தற்போது செங்கல் சூளைக்குள் அடுப்பு எரிக்க பயன்படுத்துவதற்காக பெரும் அளவில் வெட்டப்படுகின்றன. 

இதனால் நீண்டகாலம் ஆயுளுடன் இருக்கும் இந்த மரங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. சில இடங்களில் விவசாயிகள் பனைமரத்தால் ஏற்படும் நன்மைகள் கருதி அதனை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். கோடைக் காலங்களில் விவசாயத்தொழிலாளர்கள் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சாலையோரங் களிலில் உள்ள பனை மரங்களில் வளர்ந்துள்ள பனங்குலைகளை வெட்டி நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். கோடை காலங்களில் இளநீரை விட குளிர்ச்சி தரும் நுங்கை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பல இடங்களில் வீட்டின் தோட்டத்தில் பனை கொட்டைகளை விதைத்து அது வளர்ந்து பனங் கிழங்காக விற்பனை செய்வதும் பனந் தோப்புகளைஉருவாக்கும் பணிகளிலும் விவசாயத் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் பனை மர அழிப்பு வணிகம் மிக வேகமாக நடந்து கொண்டுள்ளது. இதில் குறிப்பாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வு உள்ள அமைப்புகள் பனை அழிப்பு வேட்டைகாரர்களின் நடவடிக்கையை  தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த எதிர்ப்பும் இல்லையென்றால் செங்கல் சூளைக்காக பனை மரங்களை வெட்டி அழிக்கும் பணிகள் கிராமப்புறங்களில் பரவலாக தொடர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

குறிப்பாக பனைமரங்களை பாதுகாப்பதற்கு தண்ணீர் ஊற்றுவதோ, வேலியமைத்து பாதுகாப்பதோ தேவையில்லை. தானாகவே வளர்ந்து பொதுமக்களுக்கு பயன்தரும் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக இது உள்ளது. வீட்டுக்கு ஒருவர் பனங்கன்றை விதைப்பு செய்தால் அது நமது குழந்தைகளுக்கும் பயன்தரும். ஆனால் தற்போது அது நடைபெறுவது என்பது மிகவும் குறைந்து வருகிறது.  கடந்த 2018 நவம்பர்-15 அன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய போது தென்னை மரங்கள் மற்றும் இதர மரங்கள் 5 இலட்சத்திற்கும் மேல் அழிந்துவிட்டன. இதில் எந்த இடத்திலும் பனை மரங்கள் புயல் பாதிப்பில்  சாய்ந்து அழிந்ததாக தகவல் இல்லை. 

அந்தளவிற்கு பனைமரத்தின் தன்மையும் அதனுடைய  வலுவும் மற்ற மரங்களை விட பாதுகாப்பு அரண்கொண்டதாகவே உள்ளது. இந்நிலையில் இந்த இயற்கை மருத்துவ குணம்கொண்ட பனை மரங்களை உரிய முறையில் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் 2018-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியாவில் 9கோடிபனை மரங்கள் இருப்பதாகவும் அதில் 5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இன்று 2 கோடி பனை மரங்கள் தான் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.          

பனைமர பாதுகாப்புக்கு சட்டம் இயற்றுக!

தமிழகத்தின் அடையாள சின்னம் பனைமரம் ஆகும். வேர் தொடங்கி பனைமட்டைஇலை நுனிவரை பயன்படும் மரம் பனைமரத்தை தவிர வேறு எதுவுமில்லை. நம்முடைய பழைய இலக்கியங் களை பதிய வைத்து பாதுகாத்து தந்தது பனை ஓலைகள் தான். ஆனால் இங்கு என்ன பிரச்சனை யென்றால் தென்னந்தோப்புகளை வளர்க்கிறோம் பனந்தோப்புகளை யாரும் வளர்ப்பதில்லை. பழைய மரங்கள், தானே முளைத்த மரங்கள் ஆர்வலர்கள் ஆங்காங்கே விதைத்த மரங்கள் என பனைமரங்கள் வளர்கின்றன. இந்நிலையில் அவற்றை அழித்து விடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இன்னும் கூடுதலான பொறுப்பு  தமிழக அரசுக்கு உண்டு. எனவே பனை மரங்கள் பாதுகாப்புக் கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும். அதில் சிறை தண்டனை உள்ளிட்ட பிரிவுகளும் சேர்க்க வேண்டும். அத்துடன் பனை பாதுகாப்பு பனை வளர்ப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட அம்சங்களையும் அரசு பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

கட்டுரையாளர் : ஆரூரான்

 

;