articles

img

அரசுப் பள்ளிகளின் ஆற்றலை மீட்டெடுக்க வேண்டும்....

கல்வி வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வி உரிமையிலும் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறவர்கள் வரவேற்கத்தக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல. அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்” என நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் அறிவித்திருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் சவால் மிகுந்த பணி இது.

கொரோனா தொற்றுக் காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது கல்வி. தேசிய அளவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் 24.7 கோடி மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, அரசுப் பள்ளிகளில் நிலவும் சில பிரச்சனைகளைப் புரிந்துகொண்டாக வேண்டும்.கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. தேசிய கல்விக் கொள்கையின்படி அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றால், அத்தகைய பள்ளிகளை மூடிவிட்டுப் பல கிராமங்களுக்கு மையத்தில் பள்ளி வளாகத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதிமுக அரசும் அக்கொள்கையை ஏற்றுக்கொண்டது.

கொரோனா வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் வேலையிழந்து வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய விளிம்புநிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் சுயநிதிப் பள்ளிகளில் படித்துவரும் தங்கள் குழந்தைகளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதுவரையில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்ததுதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது. ஆனால், அரசுப் பள்ளிகளின் மேம்பட்ட தரம் என்ற அடிப்படையிலேயே அதிகமான மாணவர்கள் சேர்க்கப்படுகிற ஆக்கப்பூர்வமான நிலையை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையைத் தக்கவைப்பதோடு அதிகரிக்கவும் சமூகப் பார்வையோடு பல ஆசிரியர்கள் செயல்பட்டுவருகிறார்கள். அரசுப் பள்ளிகளை நாடி வருகிற, தனியார் சுயநிதிப் பள்ளிகளிலிருந்து விலகி வருகிற மாணவர்களைத் தக்கவைக்கவும், மேலும் மேலும் அதிகமானோரை ஈர்க்கவும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். அதற்குக் கல்வியாளர்களின் ஆலோசனை, முன்னுதாரணம் படைத்துள்ள ஆசிரியர்களின் அனுபவங்களை அரசு கேட்டுப்பெற்று, உருவாகியுள்ள புதிய வாய்ப்பைக் கையாள வேண்டும். அரசுப் பள்ளி எனும் அளப்பரிய ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்திட அது உதவும். மாணவர் எண்ணிக்கை அதிகரித்துவரும் பின்னணியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதற்கும் சில வெற்றிகரமான முன்னுதாரணங்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன.

‘குடி’மகன்களை வெளியேற்றிய முகப்பேர் பள்ளி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ‘அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி’ 1935-ல் தொடங்கப்பட்டது. 2009-ல் இப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 45. அவ்வாண்டு தலைமை ஆசிரியராக எஸ்.கிருஷ்ணவேணி பொறுப்பேற்றபோது, பள்ளி நிறைவடைந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வெளியேறும் முன்பாகவே சிலர் மது பாட்டில்களுடன் பள்ளிக்குள் ‘குடி’யேறிவந்தார்கள். ஆசிரியர்கள் அச்சத்தோடு வெளியேறினார்கள். அப்பகுதி சமூக ஆர்வலர்களைச் சந்தித்துத் தலைமையாசிரியர் நிலைமையை எடுத்துக்கூறினார். அவர்களது தலையீட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘குடி’மகன்கள் தடுக்கப்பட்டார்கள், பள்ளிக்குச் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.

ஆசிரியர்கள் செலவில் காலைச் சிற்றுண்டியும் சீருடையும் கொடுத்தனர். சில புரவலர்கள் மூலம் 100 நாற்காலிகளும் 12 மேஜைகளும் பெறப்பட்டன. பள்ளியின் தோற்றம் மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி தனியாக அளிக்கப்பட்டுவருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் மூலம் 6 மடிக்கணினிகள், 6 மேசைக்கணினிகளுடன் கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை அழைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது. புளியமரப் பள்ளி என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், தலைநிமிர்ந்த புளியமரம் என முகப்பேரின் அடையாளமாக, அனைவரும் தேடி வரும் பள்ளியாக இது உள்ளது. இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 110 ஆக உயர்ந்திருந்தது. கொரோனாவுக்குப் பிறகு மேலும் 90 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. 2017-ல் இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்தத் தொகை இன்னும் பள்ளிக்கு வந்துசேரவில்லை.

பெற்றோர் தேடி வரும் திருவெற்றியூர் பள்ளி
இராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி 1975-ல் தொடங்கப்பட்டது. 2013-ல் இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 203. அவ்வாண்டு தலைமையாசிரியராக ஆ.முத்துச்செல்வி பொறுப்பேற்றார். தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் கற்பிக்க ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு நாடகம், சிலம்பு, பறை போன்ற கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பள்ளியைச் சார்ந்த 7 மாணவர்கள் தேசியத் தகுதி - உதவித்தொகைத் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றார்கள்.

பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியால், 2020-ல் மாணவர்கள் எண்ணிக்கை 392ஆக உயர்ந்தது. தற்போது அப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 662. இப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர் தினமும் வருகிறார்கள். இடநெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் 3 புதிய வகுப்பறைகளை 2019-2020-ல் கட்டிக்கொடுத்திருக்கிறார். ஊராட்சி நிர்வாகமும் நிதியுதவி செய்தது. அதே நேரம், தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்வதோடு, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.முன்மாதிரியான மதரசா பள்ளிசென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில், அரசு மதரசா மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. 1849-ல் தொடங்கப்பட்ட பள்ளி இது. ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக ஆர்க்காடு நவாப் 23 ஏக்கர் பரப்பளவு இடத்தை இப்பள்ளிக்கு அளித்தார். 2017-ல் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 140. அதே நேரம், தலைமை ஆசிரியர் கே.சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இப்பள்ளியில் மிகப் பெரிய மைதானம் உள்ளது. மாணவர்களுக்குக் கால்பந்து, ஹாக்கி, தடகளச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. கொரோனாவுக்கு முன்பு இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 302. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 369ஆக உயர்ந்துள்ளது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள்.

இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து, கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மாநகரத்தின் மையமான பகுதியில் பெரும் பரப்பளவில் இயங்கிவரும் இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

நன்றி : இந்து தமிழ்திசை (26.8.21)

;