articles

img

காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்க அனுமதியோம்...

காவிரி-அர்காவதி சங்கமிக்கும் மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கும் உள்நோக்கத்தோடு கர்நாடக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில் பெங்களூரில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உண்மைக்குவிரோதமாக, “மேகதாது அணைத் திட்டப் பணி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீடு செய்த மனுவினை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,கர்நாடக அரசின் மனுவை ஏற்றுக் கொண்டு மேற்கண்டகுழுவை கலைத்து விசாரணையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் பெங்களூர் நகருக்கு குடிநீர் கிடைக்கவும், 4500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அடாவடியாக தெரிவித்துள்ளார்.

உண்மை என்னவெனில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற பணிகளை துவக்கியுள்ளது எனவும், இதற்காக மணல், கருங்கல் ஜல்லிகள் இந்த பகுதியில் குவிக்கப்படுவதாகவும் செய்திகளை பத்திரிகை வாயிலாக அறிந்த தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் (சென்னை) தானாகவே முன்வந்து வழக்கைப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட இடத்தில் அணை கட்டுவதற்கான துவக்க கட்ட பணிகள் நடைபெறுகிறதா? என்பதை விசாரித்து அறிக்கைதாக்கல் செய்யுமாறு 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதை எதிர்த்துத் தான், கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்ததேசிய பசுமைத் தீர்ப்பாயம் (புதுதில்லி), ஏற்கனவே மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசு 2018ம் ஆண்டு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது; மேலும், மத்திய நீர்வள குழுமம் அங்கு அணை கட்ட ஒரு ஆய்வு மேற்கொள்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது; இந்நிலையில் அங்கு அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை, தொடங்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறி விசாரணையை நிறுத்தி வைத்து அந்த குழுவையும் கலைத்துள்ளது. இதைத் தான், ஏதோ தேசிய பசுமை தீர்ப்பாயம் தங்களுக்கு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கிவிட்டதாக கர்நாடக முதலமைச்சர் மார் தட்டிக் கொண்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

கர்நாடக அரசின் அப்பட்டமான நாடகம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியை 2014ஆம் ஆண்டு முதலே கர்நாடகம்மேற்கொண்டு வருகிறது. அன்றைய மாநில நீர்வளத்துறைஅமைச்சர் எம்.பி. பாட்டீல் பெங்களூரு மக்கள் குடிநீருக்காகவும், மின்சாரத் தேவைக்காகவும் மேகதாதுவில் அணைகள் கட்ட இருப்பதாக அறிவித்தார். அது முதல் வந்துள்ள முதலமைச்சர்கள் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர்கள் இதனை வற்புறுத்தி வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது பாஜக முதலமைச்சர் எடியூரப்பாவும் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இத்திட்டத்திற்கு ரூ. 5912 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 9000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வதன் மூலம் காவிரி பிரச்சனையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகநடைபெற்றுள்ள சட்டப்போராட்டத்தையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் புரட்டிப்போட கர்நாடக அரசு விரும்புகிறது. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படவுள்ளது என கர்நாடக முதல்வர் கூறுவதும் அப்பட்டமான நாடகமாகும் என்பதை கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

நெடிய சட்டப்போராட்டம்

தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை கர்நாடக அரசுதொடர்ந்து மறுத்து வந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க ஒன்றிய அரசை தமிழக அரசு கோரியது. உரிய காலத்தில் ஒன்றிய அரசு தன் கடமையை நிறைவேற்றவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிய அடிப்படையில் ஜூன் மாதம் 2 அன்று 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் தனது தீர்ப்பினை பிப்ரவரி 5, 2007ம் ஆண்டு வழங்கியது. நடுவர் மன்றத்தின் ஆணையின் மீது மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16ந் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் காவிரி மேம்பாட்டு ஆணையம் 2018 ஜூனில் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகியமாநிலங்களுக்கு கிடைக்கும் தண்ணீரை பகிர்ந்தளித்து காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நீரை பகிர்ந்தளிக்கும்போது அந்தந்த மாநிலத்தினுடைய பாசனத் தேவை, தொழிற்சாலைகளுக்கு தேவை, குடிநீர் தேவை இவை மூன்றையும் கணக்கில் கொண்டு காவிரி நதியில் கிடைக்கும் தண்ணீரை அதற்கு ஏற்ப பகிர்ந்தளித்தது. இந்த பகிர்வுக்கான அனைத்து விபரங்களையும் மிகத் தெளிவாக நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் கர்நாடக மாநிலத்திற்கு தேவையான பாசனம் மற்றும் தொழிற்சாலை மற்றும் பெங்களூரு குடிநீர் தேவை இவைகளையெல்லாம் மிக விபரமாக கணக்கிட்டு நீர் பங்கீட்டு விகிதாச்சாரத்தை தெரிவித்துள்ளது. ஒவ்வொருமாநிலத்திற்கும் காவிரி நீரை பகிர்ந்தளிக்கும் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு 192 டி.எம்.சி. தண்ணீரை பில்லுக்குண்டுலுவில் வழங்கிட வேண்டுமென தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் மாநிலங்களின் பாசனத் தேவை, குடிநீர் தேவை, தொழிற்சாலை தேவையைக் கணக்கில் கொண்டு நடுவர் மன்றம் அளித்த நீர் பகிர்வினை திருத்தியளித்துள்ளது. இதன்படி, பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய அளவு தண்ணீரை விட 14.75 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கர்நாடகத்திற்கு வழங்கிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கேற்ப தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை 14.75 டி.எம்.சிகுறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை பில்லுக்குண்டுலுவிலிருந்து கர்நாடக அரசு வழங்கிட வேண்டுமென தனது இறுதி தீர்ப்பில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மீது தமிழகத்திற்கு ஆட்சேபணைகள் பல உண்டு. அதாவது, தமிழ்நாட்டில் நிலத்தில் உள்ள நிலத்தடி நீர் பயன்பாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கான நீர் அளவை குறைத்த உச்சநீதிமன்றம், கர்நாடக மாநிலத்தின் நிலத்தடி நீர் பயன்பாட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை போன்ற பல விமர்சனங்கள் இருந்த போதிலும், உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இறுதியானது என்ற அடிப்படையில் அமைதி காத்து வருகிறது.

ஆக, நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் பெங்களூரு நகரத்திற்கான நீண்ட கால குடிநீர் தேவையைகணக்கில் எடுத்து கொண்டு தான் தனது இறுதி தீர்ப்பில் நீர் பங்கீட்டை திருத்தி வழங்கியுள்ளது. இப்போது மீண்டும்பெங்களூர் நகரத்தின் குடிநீர் பிரச்சனையை காரணம்காட்டி மேகதாதுவில் அணை கட்டுவது என்பது உச்சநீதிமன்றத்தினுடைய இறுதி தீர்ப்புக்கு விரோதமானதாகும்.மேலும், பெங்களூர் குடிநீர் தேவை 14.25 டி.எம்.சி. என்று கூறும் கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சொல்வதன் நோக்கம், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துவது தான் என்பதையும் அவ்வாறு அணைகட்டி தண்ணீர் நிறுத்தப்பட்டால் காவிரி பாசனப் பகுதி பாலைவனமாகி விடும் என்பதையும் விளக்காமலேயே விளங்கிக் கொள்ளமுடியும்.

காவிரி மேம்பாட்டு ஆணையம்


உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேம்பாட்டு ஆணையம் என்பது காவிரி நதி நீர் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாகும். ஆணையத்தின் முடிவின் மீது உயர்நீதிமன்றங்களோ, உச்சநீதிமன்றமோ கூட தலையிட முடியாது. காவிரியில் அணை கட்டுவது, நீரை பங்கிட்டுக்கொள்வது போன்றவைகளை காவிரி ஆணையம் மட்டுமே தீர்மானிக்க முடியும். இதற்கேற்பவே காவிரி ஆணையத்தில் சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் அதிகாரிகளும் இடம் பெறும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முடிவும் ஆணையத்தின் பெரும்பான்மை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

இச்சூழலில் காவிரி ஆணையத்தின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவது சாத்தியமில்லை என்பதை அறியாதவர் அல்ல கர்நாடக முதலமைச்சர். ஒன்றிய பாஜக ஆட்சியை பயன்படுத்தி கர்நாடகத்தில் தங்களது அரசியல் ஆதாயத்தை நிலைநிறுத்திக் கொள்ள மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு ஒன்றிய பாஜக அரசும் துணைபோவதாகவே கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்டத்திற்கான “சாத்தியக்கூறு அறிக்கை” தயாரித்து ஒன்றிய நீர்வளக் குழுமத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த அறிக்கையை மத்திய நீர்வளக்குழு நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு ஆட்சேபணை செய்திருந்த போதிலும், மத்திய நீர்வள குழுமம் இத்திட்டத்திற்கான “விரிவான அறிக்கையை” தயாரிக்க கர்நாடகாவின் காவிரி நீராவாரி நிகம் நிறுவனத்திற்கு அனுமதியளித்தது. இவ்வாறு உத்தரவிடுவதற்கு மத்திய நீர்வளகுழுமத்திற்கு அதிகாரம் இல்லை என்பது மட்டுமல்லாமல் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானதாகும். காவிரி நடுவர் மன்றத்தின் அதிகார எல்லைக்குள் மூக்கை நுழைப்பதாகும்.எனவே, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேற்கண்ட மத்திய நீர்வள குழுமத்தினுடைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அதை திரும்பப் பெற வேண்டுமெனவும் மத்திய நீர்வள குழுமத்தின் திட்ட இயக்குநர் மற்றும் கர்நாடக நீர்வள ஆதாரத்துறை செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல்செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

வனவிலங்குகளின் வாழ்விடம்

இருப்பினும், கர்நாடக அரசு தானடித்த மூப்பாக மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு கர்நாடகத்திலேயே எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. கர்நாடகத்தில் கனகபுரா வட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் பகுதியானது சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டு சுமார் 12500 ஏக்கர்நிலத்தில் நீர்ப்பிடிப்பு உருவாக்கப்படுமானால் இங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான வன விலங்குகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் பல்லாயிரம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் என கர்நாடக மாநிலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் கர்நாடகஅரசு இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஒன்றுபட்டு குரலெழுப்புவோம்

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளதோடு, கர்நாடக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் இதனை தெளிவாக வற்புறுத்தியுள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புதுதில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் இதனை அழுத்தமாக வற்புறுத்தியுள்ளார். மேற்கண்ட அழுத்தமான வற்புறுத்தல்களை மத்திய அரசிடம் வற்புறுத்தும் அதேநேரத்தில், தமிழக அரசு காவிரி மேம்பாட்டு ஆணையத்திடம் இதனை வற்புறுத்த வேண்டும். ஒன்றிய அரசை விட காவிரியில் அணை கட்டுவது அல்லது தடை விதிப்பதற்கான முழுமையான அதிகாரம் படைத்த அமைப்பு மேம்பாட்டு ஆணையமாகும்.காவிரியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசு சட்டப் போராட்டத்தை நடத்தி நமது உரிமைகளை நிலைநாட்ட முடிந்துள்ளது. இதனை நீர்த்துப்போக வைக்கும் வகையில் இப்போதும் கர்நாடக அரசு மேம்பாட்டு ஆணையத்தின் முடிவின் அடிப்படையில் தமிழகத்திற்கு நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான தண்ணீர் அளிக்க மறுத்து வருகிறது. மேலும், மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்தி காவிரி பாசன பகுதியை பாலைவனமாக்க முயற்சித்து வருகிறது. இரண்டு மாநில மக்களின் சகோதரத்துவ உறவை பாதுகாத்துக் கொண்டே, தமிழகத்தின் தண்ணீர் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபட்டு குரலெழுப்புவோம்.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;